தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் யாரால் வந்தது? - அமித்ஷா கேள்விக்கு திமுக 'புது' விளக்கம் - உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை வழக்கம் போல் அரசியல் ரீதியாக பல்வேறு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் பலவித யூகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெல்ல வேண்டும் என்ற அவரது பேச்சு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி குறித்த யூகங்களை எழுப்பியுள்ள அதே வேளையில், எய்ம்ஸ் குறித்த அமித்ஷாவின் கேள்வியும், அதற்கு திமுக அளித்த பதிலும் புதிய கேள்விகளுக்கு வித்திட்டிருக்கிறது.
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு தேசிய அளவில் 'அரசியல் சாணக்கியர்' என்று பெயர் பெற்றுவிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதன் பிறகு இந்தியாவின் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அங்கே அரசியல் பூகம்பங்கள் வெடிப்பது வாடிக்கை. தமிழ்நாட்டிற்கு அவரது வருகையும் அவர் டெல்லி திரும்பிய பிறகும் கூட எப்போதும் ஏதாவதொரு வகையில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். அந்த வரிசையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேசிய அளவில் கட்சிகள் இப்போதே தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், அமித்ஷாவின் ஒவ்வொரு நகர்வுமே அரசியல் பார்வையாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. ஏனெனில், அரசு நிகழ்ச்சிக்காக என்றாலும் கூட அமித்ஷாவின் ஒவ்வொரு வருகையும் மறைமுகமாக ஏதாவது ஒரு அரசியல் நோக்கங்களை கொண்டிருக்கும் என்பதே அவர்களின் கணிப்பு.
தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வருகை தந்த அமித்ஷா, சென்னை விமான நிலையத்திற்கு வெளியே வரும் போதே மின்சாரம் தடைபட்டது. ஆனாலும், அமித் ஷா காரிலிருந்து இறங்கி தொண்டர்களைச் சந்தித்தார். இதையடுத்து அங்கிருந்து அமித் ஷா புறப்பட, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் விமான நிலையத்துக்கு வெளியே சாலையின் இருபுறமும் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே மின்சாரத்தை தடை செய்துவிட்டது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
இவ்வாறு, சர்ச்சையில் தொடங்கிய அமித்ஷா பயணம் பல்வேறு யூகங்களையும் கேள்விகளையும் இங்கே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது.
மதுரை எய்ம்ஸ் - திமுகவுக்கு அமித்ஷா கேள்வி
வேலூரில், பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்த சிறப்புத் திட்டங்களை பட்டியலிட முடியுமா? என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்தார்.
"9 ஆண்டு கால மோதி ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. சிஆர்பிஎஃப் தேர்வாகட்டும், நீட், சிவில் சர்விஸ் போன்ற தேர்வாகட்டும் தமிழ் மக்கள் தமிழ் மொழியில் அந்த தேர்வை எழுத முடியாத நிலை இருந்தது. மோதி ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழில் தேர்வு எழுத முடிகிறது. 9 ஆண்டுகால நரேந்திர மோதி ஆட்சியில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் இன்னும் ஏன் திறக்கப்படவில்லை என்று என்னிடம் கேள்வி கேட்டனர் . ஆனால் நான் இந்த கேள்வியை திமுகவினரை நோக்கி கேட்க விரும்புகிறேன். 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தும் ஒரு எய்ம்ஸை கூட திறக்க வேண்டும் என திமுகவிற்கு ஏன் தோன்றவில்லை" என்றார் அவர்.
உரையைத் தொடர்ந்த அவர், "இன்று காலையில் கட்சியின் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநில தலைவர் அண்ணாமலை அதை வழிநடத்துவதை பார்த்து எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளுக்கும் மேலாக பாஜக வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்தது." என்று கூறினார்.

பட மூலாதாரம், TWITTER/AMIT SHA
"தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் திமுகவால்தான் வந்தது"
அமித்ஷா திமுக மீது முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து, குறிப்பாக எய்ம்ஸ் பற்றி திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
"தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்தியில் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்த போதுதான் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. 2000 முதல் 2004 வரையிலான கால கட்டத்தில், மத்திய அமைச்சரவையில் ஆ.ராசா சுகாதாரத்துறை இணையமைச்சராக பதவி வகித்த போதுதான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. அதனை சென்னையில் அமைப்பதா அல்லது தஞ்சையில் அமைப்பதா என்பது மட்டுமே தீர்மானிக்கப்படாமல் இருந்தது. ஆனால், திமுகவின் முயற்சிகளுக்கு அன்றைய தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக ஒத்துழைக்கவில்லை.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அடுத்து வந்த, இன்றைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், எய்ம்ஸ் மருத்துவமனையை சேலத்தில் அமைக்க முயற்சி செய்தார். இதுதான் வரலாறு. இப்படித்தான், அது தாமதமானது. இப்போது, பா.ஜ.க. ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? மதுரை எய்ம்ஸ் மருத்துவனை ஏன் இன்னும் அமையவில்லை? ஆகவே, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைய திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பா.ஜ.க.தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு அதனை செயல்படுத்தாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது." என்று அவர் பதிலளித்தார்.
மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாததை முன்னிறுத்தி கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒற்றைச் செங்கல்லைக் காட்டி திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் செய்த பிரசாரம் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது, மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்விக்கு திமுக அளித்து விளக்கம், தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை யாரால் வந்தது? என்ற கேள்விக்கான விடையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.

பட மூலாதாரம், TKS ELANGOVAN
2 தமிழர்கள் பிரதமராவதை திமுக தடுத்ததா?
வேலூர் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழ்நாட்டில் இருந்து 2 பிரதமர்கள் உருவாவதை திமுக தடுத்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக கட்சியினர் உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.
பா.ஜ.க. சார்பில் வெளிப்படையாக அப்படியான ஒரு கருத்து வரவில்லை என்ற போதிலும், ஊடகங்களில் கூறப்படுவது போல் அவர் பேசியிருப்பாரானால் இதுவே எனது பதில் என்று கூறி அவர் தொடர்ந்தார்.
"அமித்ஷா சொல்ல வருவது காமராஜர், மூப்பனார் ஆகிய இருவர் குறித்தும் என்ற ஊகத்தின் அடிப்படையில் இதனைச் சொல்கிறேன். காமராஜர் பிரதமராக விரும்பியிருந்தால் அவரை யாராலும் தடுத்திருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்த அவர், தாமாகவே முன்வந்து இந்திராகாந்தியை பிரதமராக்கினார். மூப்பனார் விஷயத்தில் இதுபோன்ற ஊகங்கள் அப்போதே ஊடகங்களில் வெளியான போது 'நான் பிரதமராக விரும்பவில்லை. அதுகுறித்து யாரிடமும் பேசவும் இல்லை. கேட்கவும் இல்லை. ஆகவே, தேவையின்றி இதுகுறித்து மேற்கொண்டு பேச வேண்டாம்' என்று அவரே விளக்கம் கொடுத்துவிட்டார்.
பசுவைக் காப்பாற்றுவதற்காக காமராஜரை கொல்ல முயன்ற இயக்கத்தினர் இன்று அவருக்காக பரிந்து பேசுவதும், எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததற்காக 1998-ம் ஆண்டு எங்களை விட்டு மூப்பனார் விலகிப் போனாரோ அவருக்கு ஆதரவாகவே அதே கட்சி பேசுவதும் கேட்பதற்கு விசித்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. காரணம், இப்போதாவது தமிழர்கள் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்களே" என்று கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் முடித்துக் கொண்டார்.
தமிழ்நாடு பா.ஜ.க. என்ன சொல்கிறது?
2 தமிழர்கள் பிரதமராவதை திமுக தடுத்துவிட்டதாக வெளியான ஊடக செய்தி குறித்து தமிழ்நாடு பாஜ.க. தலைவர்களின் கருத்தை அறிய முயன்றோம். "2 பிரதமர்கள் உருவாவதை திமுக தடுத்துவிட்டது என்று அமித்ஷா பேசியதாக யார் சொன்னது? ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. அதேநேரத்தில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து வெளிப்படையாக பேசவும் முடியாது" என்று பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

பட மூலாதாரம், TWITTER/KARU.NAGARAN
இதேபோல், நம்மிடம் பேசிய அக்கட்சியின் மற்றொரு துணைத் தலைவர் கரு.நாகராஜனும், "அமித்ஷா அவ்வாறு பேசியதாக நான் கேள்விப்படவில்லை. அண்மையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது அவரை சந்தித்திருந்த நான், இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆகவே அதுகுறித்து நான் ஏதும் கூற இயலாது" என்று கூறினார்.
அதேநேரத்தில், வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க. சார்பில் 25 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பேசியிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாட்டில் பா.ஜ.க. சார்பில் 25 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை எங்களது மாநிலத் தலைவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அது மீண்டும் ஒருமுறை அமித்ஷாவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது அதிமுக கூட்டணியிலா? அல்லது தனித்தா? என்பதை இப்போதே கூற முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய அவகாசம் இருக்கிறது." என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் போட்டியிட மோதி திட்டமா?
அமித்ஷாவின் சுற்றுப்பயணம் தமிழ்நாடு அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். 2 தமிழர்கள் பிரதமராவதை திமுக தடுத்துவிட்டது, தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக பாடுபடுங்கள் என்று பா.ஜ.க. நிர்வாகிகளிடையே அமித்ஷா பேசியதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து கருத்துக் கூறிய அவர்,
"காமராஜர் பிரதமராவதை திமுக தடுத்தது என்று என்ன அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், 1996-ம் ஆண்டு மூப்பனார் பிரமராகும் வாய்ப்பு கனிந்து வந்த போது திமுக தடுத்துவிட்டது என்பது போன்ற குற்றச்சாட்டு உண்டு. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும் என்று எதன் அடிப்படையில் அவர் பேசியிருப்பார். தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க.வுக்கு பேர் சொல்லும் வகையில் ஒரு தலைவர் கூட இல்லையே. ஒருவேளை வாரணாசியுடன் சேர்த்து, தமிழ்நாட்டிலும் ஒரு தொகுதியில் மோதி போட்டியிடுவார் என்ற அடிப்படையில் அவர் அதனை சொல்லியிருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும், கடந்த தேர்தலில் ராகுல்காந்தி எதிர்கொண்ட அதே விமர்சனங்களை மோதியும் சந்திக்க நேரிடும். தோல்வி பயத்தால்தான் மோதி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய வசதியாய் போய்விடும். அதேநேரத்தில், ராமநாதபுரத்தில் மோதி போட்டியிடுவார் என்ற பேச்சு தொடர்ந்து இருந்தே வருகிறது." என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Karthikeyan
25 தொகுதிகளில் பா.ஜ.க. வெல்லும் என்ற அமித்ஷா பேச்சு குறித்து கருத்து தெரிவித்த கார்த்திகேயன், "தமிழ்நாட்டில் அதற்கான செல்வாக்கு பா.ஜ.க.வுக்கு கொஞ்சமும் கிடையாது. 2014-ம் ஆண்டு திமுக, அதிமுக கூட்டணி இல்லாமல் கன்னியாகுமரி தொகுதியில் வென்ற பா.ஜ.க.வால் அதன் பிறகு 2019-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக துணையிருந்தும் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. காரணம், மோதி பிரதமரான பிறகு அவர் மீதிருந்த எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதால், தமிழ்நாட்டில் அவர் மீது அதிருப்தி அதிகமாகிவிட்டது.
பலவீனமாக இருக்கும் அதிமுக தலைமையை அச்சுறுத்தி, ஓபிஎஸ், தினகரன், ஏ,சி,சண்முகம், கிருஷ்ணசாமி ஆகியோரை பா.ஜ.க. வசம் வைத்துக் கொண்டு 25 தொகுதிகளை வாங்க வாய்ப்பு இருக்கிறது. அவர்களை பா.ஜ.க சின்னத்தில் போட்டியிடச் செய்வது என்ற திட்டத்தின் பேரில் அமித்ஷா அவ்வாறு கூறியிருக்கலாம்.
ஆனாலும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பார்க்கையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. மீது அதிக அளவில் அதிருப்தியே நிலவுகிறது. திமுக அரசு மீது அதிருப்தி தலை தூக்கியிருந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எதிர் முகாமில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற வலுவான தலைவர் இல்லை. அத்துடன், பா.ஜ.க. மீதான மக்களின் அதிருப்தியும் சேர்ந்து கொள்ள அந்த அணி தோல்வியடையவே வாய்ப்பு அதிகம்" என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












