பத்திரப்பதிவுக் கட்டணம்: எந்த சேவைக்கு எவ்வளவு கட்டண உயர்வு? பாகப் பிரிவினைக்கு எவ்வளவு செலவாகும்?

பட மூலாதாரம், Empics
தமிழ் நாடு பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்டுள்ள கட்டணம், ஜூலை 10ம் தேதி முதல் அமலில் உள்ளது. புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள பதிவுக்கட்டணத்தால் எதற்கெல்லாம் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன ? அதனால், யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படும் ?
பின்னணி என்ன ?
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் கடந்த ஜுலை 8ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை எனக் கூறினர்.
அதனால், பதிவுத்துறையில் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு மற்றும் பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளை பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக கூறினர்.
அதன்படி, பதிவுத்துறை சார்பில் அளிக்கப்பட்டு வரும் சேவையில் 20 சேவைகளுக்கான கட்டண வீதங்களும், சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டண வீதங்களும் திருத்தியமைத்தனர். திருத்தப்பட்ட கட்டண உயர்வு ஜுலை 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
எந்தெந்த சேவைக்கு எவ்வளவு கட்டணம் ?
பதிவுத்துறை அறிவித்துள்ளதன்படி, குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000 இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தியுள்ளது. இதற்கான அதிகபட்ச முத்திரைத்தாள் தீர்வை அதிகபட்சமாக ரூ.25,000 இருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபாேல, குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு (Power of attorney) பதிவுக் கட்டணம் ரூ.10,000 ஆக இருந்ததை சொத்தின் சந்தை மதிப்பில் ஒரு சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் ரசீதுக்காக பதிவு செய்யும் ஆவணத்திற்கான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200 இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படும் ?
குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்கு வழங்கப்படும் பொது அதிகார ஆவணத்தை(Power of Attorney) பதிவு செய்ய இதுவரை 1000 ரூபாயாக இருந்ததை தற்போது சந்தை மதிப்பில் 1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் கட்டட அமைப்பாளர்கள் (Builders) மூலம் வாங்கப்படும் தனி வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்களில் உள்ள வீடுகளின் விலை உயரும் என்கிறார் ரியல் எஸ்டேட் கமிட்டியின் மாநில தலைவர் கர்ணபூபதி.
இதுகுறித்து பிபிசியிடம் விரிவாக பேசிய அவர், “கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ள யாரும் சொந்தமாக தங்களின் நிலத்தில் வீடு கட்டி விற்பனை செய்யப்போவதில்லை. கட்டுமானத்தாெழிலில் உள்ள அனைவரும் வீடு கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றாமல், அதற்கு பொது அதிகார ஆவணம் மட்டும் பெற்று, பதிவு செய்து, வீடு கட்டி முடித்த பின்னர், அந்த வீட்டுமனைையை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்வார்கள். இதுதான் தற்போது உள்ள நடைமுறை.
இந்த நடைமுறையில் பதிவுக்கட்டணம் உயர்வுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்களுக்கும் கட்டட அமைப்பாளர்களுக்கும் பொது அதிகார அவணத்திற்கு அதிகபட்ச செலவே ரூ. 10,000 தான். ஆனால், தற்போது பொது அதிகாரத்திற்கே சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் செலவு செய்ய வேண்டும். அப்படி செலவு செய்தால், அந்த செலவும் வீடு கட்டுமானத்திற்கான செலவுடன் சேர்க்கப்பட்டு, அது வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் வசூல் செய்யப்படும்,” என்றார்.
“தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ள இந்த கட்டணத்தால், சராசரியாக ரூ 50 லட்சத்திற்கு வீடு வாங்குவோருக்கு ரூ 1.25 லட்சம் முதல் 1.50 வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இதனால், வீடு விற்பனையிலும் கட்டுமானப்பணிகளிலும் தொய்வு ஏற்படும்,” என்றார் கர்ணபூபதி.

அதிகார ஆவணம்: வேறு யாருக்கெல்லாம் பாதிப்பு ?
இந்த பொது அதிகார ஆவணக்கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் முதியவர்களும், வெளிநாடுகளிலிருந்து அவசரத்திற்கு தங்களின் சொத்தை விற்பனை செய்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறுகிறார் பத்திரப்பதிவு எழுத்தர் ரஞ்சித்.
கடந்த 15 ஆண்டுகளாக பத்திரப்பதிவு எழுத்தராக உள்ள ரஞ்சித், பிபிசியிடம் பேசுகையில், “தனியாக வாழும் முதியவர் ஒருவர் உடல் நலம் குன்றியிருந்தால், அவரால், அவர் பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்யும் நேரத்தில் பதிவுத்துறை அலுவலகம் வர முடியாமல் போகும் என்ற சூழலில் சிலர் தங்களின் சொத்து மீதான அதிகாரத்தை நம்பிக்கையான ஆட்களிடம் கொடுப்பர்.
அதேபோல, வெளிநாடுகளில் பணிக்கு செல்வோர் அங்கேயே குடியேற நினைத்தாலோ அல்லது நீண்ட காலம் அங்கேயே தங்கியிருக்க நினைத்தாலோ தங்கள் சொத்தின் மீதான அதிகாரத்தை பிறருக்கு வழங்குவர்.
இப்படி அதிகம் பேர் தங்களின் சொத்தின் மீதான அதிகாரத்தை வேறு ஒருவருக்கு கொடுத்துதான் விற்பனை செய்கின்றனர். தற்போது அதிகரித்துள்ள பதிவுக்கட்டணத்தால், இனி வரும் காலங்களில் இவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்,”என்றார்.

குடும்பச் சொத்தை பிரிப்பதிலும் அதிக செலவு ?
அதேபாேல, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், தங்கள் சொத்தை தனித்தனியாக பிரித்து பதிவு செய்து கொண்டாலும், சொத்தில் பங்கு வேண்டாம் என விடுதலை பத்திரம் பதிவு செய்தாலும் அதற்கான கட்டணமும் ரூ 4,000 இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தியுள்ளது. அதற்காக வாங்க வேண்டி முத்திரைத்தாளின் அதிகபட்ச மதிப்பு ரூ.25,000 இருந்து ரூ.40,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பத்திரப்பதிவு எழுத்தர் பார்த்திபக் குமார், “தங்களின் சொத்தை தங்களுக்குள்ளேயே பிரித்து எழுதுவதற்கு பதிவுக்கட்டணம் உயர்த்தப்பட்டது கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால், முத்திரைத்தாளுக்கு ரூ 25,000 இருந்து ரூ 40,000 ஆக உயர்த்தப்பட்டது ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தால் ஏற்க முடியாது.
இதில், அவர்களுக்கான செலவு என்பது வெறும் பதிவுக்கட்டணம் மற்றும் முத்திரைத்தாளுக்கான கட்டணத்துடன் முடிவடையப்போவதில்லை. இந்தக் கட்டண உயர்வால், இதர கட்டணங்களான பாகம் பிரிப்பதற்கான பொறியாளர் கட்டணம், பிரித்து எழுதுவதற்கான எழுத்தர் கட்டணம் என அனைத்தும் உயரும். இதனால், ஒருவர் தங்களிடமே உள்ள சொத்தை தங்கள் குடும்பங்களுக்கு உள்ளே பிரித்து எழுதுவதற்கு குறைந்தது ரூ 50,000 முதல் ரூ 1 லட்சம் வரை செலவாகும்,” என்றார்.

பத்திரப்பதிவின் மூலம் உயர்ந்துள்ள அரசு வருவாய் எவ்வளவு ?
தமிழ் நாட்டில் மொத்தம் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. அனைத்து அலுவலகங்களிலும் வீடு, நிலம், தொழில், கடன் உள்ளிட்டவை தாெடர்பாக ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
தமிழ் நாடு பதிவுத்துறை ஆவணங்களின்படி, 2013-14ல் ரூ 8,055.74 கோடியும், 2014-2015ல் ரூ 8,279.64 கோடியும், 2015-16ல் ரூ 8,562.38 கோடியும், 2016-17ல் ரூ 7,007.74 கோடியும், 2017-18ல் ரூ 9,121.53 கோடியும், 2018-2019ல் ரூ 11,071.02 கோடியும், 2019-20ல் ரூ 11,028.23 கோடியும் வருவாயாக பெற்றுள்ளது.
2020-21ம் ஆண்டில், கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால், பதிவுத்துறை சார்பில் நிர்ணயித்திருந்த வருவாய் இலக்கான ரூ 13,000 கோடியை எட்டமுடியவில்லை. அந்த ஆண்டு, பதிவுத்துறையின் வருவாய் ரூ 10,643 கோடியாக இருந்தது.
அதன் பிறகு, 2021-22ல் ரூ 13,913.65 கோடியும், 2022-23ல் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ரூ 17,296.84 கோடியும் வருவாயாக அரசுக்கு கிடைத்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












