நம்பிக்கை இல்லா தீர்மானம்: 'மோதி ஆட்சியை' அசைத்துப் பார்க்குமா? எதிர்க்கட்சிகளின் ரகசிய வியூகம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்கு தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லாதபோதும், புதன்கிழமை (ஜூலை 26) எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தேசிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசும் அரசியல் ஆய்வாளர்கள், இது மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு என்கிறார்கள். அதேநேரம், இதுகுறித்து பேசும் எதிர்க்கட்சியினர், இது மோடி அரசின் ஆணவத்தையும் அகங்காரத்தையும் வீழ்த்துவதற்கான ஆயுதம் என்கிறார்கள்
என்ன நடந்தது ?

பட மூலாதாரம், Getty Images
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என நான்கு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நான்கு நாட்களும் இரு அவைகளும் முடங்கின.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்ட வர எதிர்க்கட்சிகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகருக்கு நம்பிக்கையில்லாத் தீர்மனம் அனுப்பப்பட்டது.
வழக்கமாக. காலை 10 மணிக்கு முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் சென்றால், அன்றைய தினமே அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, விவாதிப்பதற்கான தேதி பின்னர் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆணவத்தையும் அகங்காரத்தையும் வீழ்த்துவோம்

பட மூலாதாரம், ANI
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிபிசியிடம் பேசிய மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், இந்த தீர்மானம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவத்தையும் அகங்காரத்தையும் வீழ்த்தும் ஆயுதம் என்றார்.
“மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேச வேண்டிய பிரதமர் மோடி, பொது இடங்களில் பேசுகிறார், நாடாளுமன்ற வளாகத்தில் அவர்கள் கட்சி எம்பி.,க்களுடன் பேசுகிறார், அறிக்கை விடுகிறார், ஆனால், நாடாளுமன்ற அவையில் மட்டும் பேச மறுக்கிறார். அவரை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காகத்தான் இந்த தீர்மானம்,” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “தற்போது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அவர் கண்டிப்பாக அவைக்கு வந்துதான் ஆக வேண்டும். அவரின் ஆணவத்தையும் அகங்காரத்தையும் வீழ்த்துவதற்காகத்தான் இந்த தீர்மானம், ஆட்சியை வீழ்த்துவதற்காக அல்ல.”
குஜராத்தைப்போல மணிப்பூரையும் வேடிக்கை பார்க்கிறார் பிரதமர்

பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மணிப்பூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா, எதிர்க்கட்சிகளின் இந்த தலையீடு அவசியம் என்றார்.
இவ்விவகாரம் குறித்து பேசிய இரோம் ஷர்மிளா, “எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடியைக் கொடுக்கும். அந்த நெருக்கடியின் மூலம் அவர் மணிப்பூர் பிரச்னை குறித்து பேச வாய்ப்புள்ளது.
அவர் முதலில், மணிப்பூரை இந்தியாவின் ஒரு அங்கமாக கருதுகிறாரா என தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். குஜராத் கலவரத்தின்போது வேடிக்கை பார்த்ததுபோலவே, அவர் மணிப்பூர் கலவரத்தையும் வேடிக்கை பார்க்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் பிரச்னைகளுக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு பிறகாவது அவர் மணிப்பூர் விசயத்தில் கவனம் தெலுத்தி இரு தரப்பு மக்களிடையே சுமூகமான சூழல் உருவாக பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த பேச்சு வார்த்தையில் அனைத்து தரப்பினரும் இருக்க வேண்டும். அந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிரதிபலிக்கும்
ஆளும் கட்சிக்கு இப்படியான நெருக்கடிகளை கொடுப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக ஒரு பிரச்னையை கையாள்கிறார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படும் என்கிறார் அரசியர் ஆய்வாளர் எம். சத்தியமூர்த்தி.
“பிரதமர் பேச வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. ஆனால், பிரதமர் இப்படி செய்தால்தான் பேசுவார் என்றால், அப்படித்தான் செய்ய வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்த செயல்பாட்டின் மூலம் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒர் அணியில் நிற்கிறார்கள் என மக்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர். தேர்தல் நேரத்தில் இப்படியான ஒருங்கிணைப்பும் நம்பிக்கையளிப்பதும் அவசியம்,” என்றார் சத்தியமூர்த்தி.
எதிர்க்கட்சிகளின் கூட்டுச்சதி - பாஜக

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இந்த விவகாரத்தில் சம்பவம் நடந்து 75 நாட்களுக்கு பிறகு நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது எதிர்க்கட்சிகளின் கூட்டுச்சதி என குற்றம் சாட்டுகிறார் பாஜக.,வின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன்.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ இது எதிர்க்கட்சிகளின் வீண் பிடிவாதம். நாடாளுமன்றத்தில் இதற்கு பொறுப்பான உள்துறை அமைச்சர் விளக்கமளிப்பதாக சொல்கிறார். அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்படும் என்கிறோம். ஆனால், பிரதமர்தான் பேச வேண்டும் என சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.
மேலும், தற்போது அங்கு எந்த பதற்றமான சூழலும் இல்லை. பிரச்னை நடந்து 75 நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் அதை பேச வேண்டுமா என்ற கேள்வியும் உள்ளது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மணிப்பூரில் பாஜக., ஆட்சிக்கு வந்த பின்தான் அமைதி நிலவியதாக தெரிவித்தார்.
“காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நடந்தது. அப்போது மாநிலமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ராணுவனத்தினர் மணிப்பூர் பெண்களை சித்ரவதை செய்கிறார்கள் என்ற செய்தி தினம்தோறும் வந்து கொண்டிருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில்தான் ராணுவத்தையும், சிஆர்பிஎப் படையினரையும் திரும்பப்பெற்று அமைதியான சூழலில் இருந்தார்கள். இந்த பிரச்னை என்பது தற்காலிகமானது. அதுவும் தற்போது சரி செய்யப்பட்டு, மணிப்பூர் அமைதி நிலைக்கு திரும்பியுள்ளது,” என்றார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்
- நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 50 எம்.பி.,க்கள் ஆதரவு இருந்தால், சபாநாயகர் நேரம் மற்றும் தேதியை நிர்ணயம் செய்வார்.
- எந்த ஒரு மக்களவை உறுப்பினரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கலாம். ஆனால், அவருக்கு ஆதரவாக 50 மக்களவை உறுப்பினர்களின் கையெழுத்து இருக்க வேண்டும்.
- மக்களவை விதி 198ன் படி, எம்.பி.க்கள், பகல் 10 மணிக்கு முன் எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும், மேலும் சபாநாயகர் இந்த அறிவிப்பை அவையில் படிக்க வேண்டும்.
- அறிவிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 நாட்களுக்குள் தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அவையில் பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியவில்லை என்றால், அந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.
- மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது இது முதல் முறையல்ல, ஆனால் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சியில் இதுவே முதல் முறை.
- முன்னதாக ஜூலை 20, 2018 அன்று மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது மொத்தம் 325 எம்பிக்கள் உள்ளனர், அவர்களில், 301 எம்பிக்கள் பாஜக.,வினர்.
- 2018ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
- ஜூலை 2018 இல், 11 மணி நேர விவாதம் நடந்து இறுதியாக மோடி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
- வாக்கெடுப்பின் பின்னர், அவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் 325 வாக்குகளுக்கு எதிராக 126 வாக்குகளால் வீழ்ந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












