மணிப்பூர் வன்முறை: கேரளாவில் கிறிஸ்தவர்கள் பா.ஜ.க.வை தொடர்ந்து ஆதரிப்பார்களா?

மணிப்பூர், கேரளா, பா.ஜ.க., கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள்

பட மூலாதாரம், A S SATHEESH

படக்குறிப்பு, மணிப்பூரில் தேவாலயங்கள் எரிக்கப்பட்டதற்கு எதிராக, கேரளாவில் பாதிரியார்கள் தலைமையில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக, பெங்களூருவிலிருந்து

மணிப்பூரில் கடந்த 13 வாரங்களாக நடந்துவரும் கட்டுக்கடங்காத வன்முறை நாடு முழுவதும் எத்தகைய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இன்னும் மதிப்பிடப்படவில்லை.

இருப்பினும், இது தென் மாநிலமான கேரளாவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது, அங்கு பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) கிறிஸ்தவ சமூகத்தின் ஆதரவைப் பெற முயற்சித்து வருகிறது.

பா.ஜ.க.வுடன் வெளிப்படையாகவே நெருக்கமாக இருந்த உயர்மட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும், பாதிரியார்களும் திடீரென அமைதியாகிவிட்டனர். மேலும் விளிம்பு நிலையில் இருந்தவர்களும், சிறுபான்மையினருக்கு பா.ஜ.க.வுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சமூகத் தலைவர்கள் கூறியபோது அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லாமல் இருந்தவர்களும் இப்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளனர்.

கேரள கிறிஸ்தவர்களிடையே கொந்தளிப்பு

கடந்த சில வாரங்களாக கேரளாவில், மணிப்பூரில் நடந்த படுகொலைகள், தாக்குதல்கள் மற்றும் தேவாலயங்கள் எரிக்கப்பட்டதற்கு எதிராக, கேரளாவில் பாதிரியார்கள் தலைமையில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

மாநிலத்தில் உள்ள தேவாலயங்களை நிர்வகிக்கும் உச்ச அமைப்பான கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் (KCBC), ‘பிரதமர் நரேந்திர மோதி ஏன் மௌனம் சாதிக்கிறார்?’ என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

“மணிப்பூர் மக்கள் இந்தியக் குடிமக்கள். அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன, அவர்கள் இந்தியர்கள் என்பதைக் காட்ட எந்தப் பதிவும் அவர்களிடம் இல்லை. அவர்கள் தங்கள் அடையாளத்தை எவ்வாறு நிரூபிப்பார்கள்? எங்கள் சொந்த நிலங்களில், நாங்கள் அந்நியர்களாக்கப்பட்டுவிட்டோம்,'' என்று KCBC-யின் செய்தித் தொடர்பாளர் ஜேக்கப் பாலக்கப்பில்லி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கிறிஸ்தவச் சமூகத்தின் மீது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (UDF) பிடியை உடைக்க பா.ஜ.க.வின் திட்டத்திற்கு, இப்போது நிலவும் கிறிஸ்தவ சமூகத்தின் மனநிலை ‘பெரிய பின்னடைவாக’ இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர்.

கேரளாவின் மக்கள் தொகையில் சிறுபான்மையினர் 46%க்கும் சற்று அதிகமாக உள்ளனர். இவர்களில் 26.56% பேர் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் 18.38% பேர் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) இந்த இரு சமூகங்களிலிருந்தும் வாக்குகளைத் திரட்டிய சமயங்கள் உண்டு. ஆனால் கிறிஸ்தவச் சமூக வாக்குகள் பெரும்பாலும் UDF-க்குத்தான். சிறுபான்மையினரின் வாக்குகள் உடைந்தால் அது பாஜகவுக்கு ஊக்கமளிக்கும்.

“கிறிஸ்தவர்களின் வாக்குகளைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பா.ஜ.கவுக்கு மணிப்பூர் கலவரத்தின் விளைவுகள் நிச்சயமாக பின்னடைவாகும். சில காலமாக அவர்கள் அதைக் கணிசமான அளவு வெற்றியுடன் செய்து வருகின்றனர்,” என்று அரசியல் விமர்சகர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

மணிப்பூர், கேரளா, பா.ஜ.க., கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள்

பட மூலாதாரம், A S SATHEESH

கிறிஸ்தவர்கள்-பா.ஜ.க உறவில் விழுந்த விரிசல்

மேலும் பேசிய எம்.ஜி.ராதாகிருஷ்ணன், “கடந்த ஈஸ்டர் தினத்தன்று, கார்டினல் ஜார்ஜ் ஆலஞ்சேரி, பா.ஜ.க எவ்வளவு நல்ல கட்சி என்றும், சிறுபான்மையினருக்கு அக்கட்சியில் எப்பிரச்சனையும் இல்லை என்றும் பகிரங்கமாக கூறியிருந்தார். அதற்கு முன் மற்றொரு பிஷப், ரப்பருக்கு சரியான விலையை மத்திய அரசு உறுதி செய்தால், பா.ஜ.க.வுக்கு கேரளாவில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை உறுதி செய்ய முடியும் என்று கூறியிருந்தார். ‘லவ் ஜிகாத்’ போன்ற இஸ்லாம் வெறுப்புப் பிரச்சாரம் கிறிஸ்தவச் சமூகத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் ஒர் பொதுவான புள்ளியாகிவிட்டது,” என்று கூறினார்.

கிறிஸ்தவச் சமூகத்தைக் கவர்ந்ததில், பிரதமர் மோதியே முன்னிலை வகித்துள்ளார். போப் பிரான்சிஸை இந்தியாவிற்கு அழைப்பது, மலங்கரா தேவாலயத்தில் 400 ஆண்டுகால சர்ச்சையை தீர்க்க முயற்சிகள் எடுப்பது போன்ற செயல்களால். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேரளாவில் இரவு உணவிற்கு அழைக்கப்பட்ட எட்டு முக்கிய தேவாலயங்களின் தலைவர்களுடன் இரவு விருந்து உட்கொண்டார். இந்த விருந்தில்தான் இந்தியாவின் மிகப் பெரிய சிரிய-மலபார் தேவாலயத்தின் தலைவர் கார்டினல் ஆலஞ்சேரி மோதியைப் பாராட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஒரு பிஷப் சில சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டார். ஒரு பிஷப் கிறிஸ்தவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறும், ‘போதைப்பொருள்- பயங்கரவாதத்திற்கு' இரையாகாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். மற்றொருவர் ‘லவ் ஜிஹாத்’ பற்றிப் பேசினார். ரப்பருக்கு அதிக விலை கிடைப்பதை உறுதி செய்தால், கேரளாவில் இருந்து பாஜக தனது முதல் நாடாளுமன்ற உறுப்பினரை பெற முடியும் என்று மற்றொரு பிஷப் பேசினார்.

இதை ஜேக்கப் பாலக்கப்பிள்ளி இப்படி விளக்கினார்: “ரப்பரின் விலையை உயர்த்த யாரும் முயற்சி எடுக்காததால் மக்கள் விரக்தியடைந்திருக்கின்றனர். அதனாலேயே இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டது. இதுதான் பிஷப்பை அப்படி பேச வைத்தது. UDF மற்றும் LDF-இன் உள்ளூர் தலைவர்கள் இதை அதிகம் பேசவில்லை. இந்த அறிக்கைக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.”

ஆனால் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், “இதுவரை, பொதுவாகக் கேரளக் கிறிஸ்தவச் சமூகத்திற்குள் பா.ஜ.க.வுக்கு ஆதரவான மனப்பான்மையே இருந்து வந்திருக்கிறது. இஸ்லாம் வெறுப்பு குறித்த சமூக ஊடகப் பிரச்சாரங்கள், குறிப்பாக சமூகத்தில் உள்ள உயரடுக்கினரிடையே நடந்து வருகிறது, மேலும் பொது மக்களிடையே பா.ஜ.க.வுக்குச் சாதகமான ஒரு நல்லெண்ணம் இருப்பது தெரிகிறது,” என்றார்.

“சுருக்கமாகச் சொன்னால், பி.ஜே.பி கேரளத்துக் கிறிஸ்தவர்களிடையே நல்லெண்ணத்தைப் பெற்றிருந்தது. ஆனால் இப்போது மணிப்பூர் விஷயத்துக்குப்பின், ஆளும் கட்சிக்கு எதிராக தேவாலயங்கள் மிகக் கடுமையாகக் களமிறங்கியுள்ளன. இந்த உறவு பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது,” என்றார் எம்.ஜி.ராதாகிருஷ்ணன்.

மணிப்பூர், கேரளா, பா.ஜ.க., கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதுவரை கேரளக் கிறிஸ்தவச் சமூகத்தைக் கவர்ந்ததில், மோதியே முன்னிலை வகித்துள்ளார்

‘அரசியல் சந்தர்ப்பவாதத்திற்குப் பின்னடைவு’

அரசியல் விமர்சகர் கே.ஜே.ஜேக்கப், பிபிசி இந்தியிடம் இவ்வாறு கூறினார்: “வெளிப்படையாகப் பார்த்தால், கிறிஸ்தவச் சமூகத்தில் பா.ஜ.க.வின் பரவல் இந்தத் தருணத்தில் நிறுத்தப்படலாம். ஏனெனில் கிறிஸ்தவத் தலைமைகள் இனி பா.ஜ.க.வை பகிரங்கமாக ஆதரிக்க எந்தவொரு காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாது.”

“மணிப்பூர் வன்முறைக்குப் பிறகு ஒரு முக்கியமான தருணம் எழுந்துள்ளது. பா.ஜ.க பக்கம் சாய்ந்த ஒரு தற்காலிக குழு இருந்தது. பா.ஜ.க.வுடன் இருக்கிறதா இல்லையா என்பதை அக்குழு இப்போது தீர்மானிக்க வேண்டும். தொடர்ந்து ஆதரிப்போம் என்று கூறும் பிரிவு, பா.ஜ.க.வுக்கு லாபமாக அமையும்,'' என்றார் ஜேக்கப்.

எம்.ஜி.ராதாகிருஷ்ணன் இதை வேறு விதமாகக் கூறுகிறார். “தேவாலயங்கள் எப்போதும் கடைப்பிடித்து வந்த அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இது ஒரு தற்காலிகப் பின்னடைவாக அமையும். ஆனால், இப்போதைக்கு இது பெரும் பின்னடைவு தான்,” என்கிறார்.

எம்.ஜி.ராதாகிருஷ்ணனின் கருத்தை எழுத்தாளரும் கல்வியாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்துகிறார்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கிறிஸ்தவச் சமூகம் அரசியல் எந்தவொரு அமைப்புக்கோ அல்லது சித்தாந்தத்திற்கோ நிரந்தர விசுவாசத்துடன் இருந்ததில்லை என்கிறார். “கிறிஸ்தவர்கள் தங்கள் நலன்கள் சார்ந்தே சிந்திக்கிறார்கள். பா.ஜ.க.வை தங்களின் நலம் விரும்பி என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் விசுவாசத்துடன் ஆமோதிப்பார்கள். அவர்களுக்கு சாதகமாக இருந்தால் பாஜகவுடன் இருப்பார்கள்,” என்றார்.

மேலும் பேசிய அவர், “கேரளக் கிறிஸ்தவச் சமூகம் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆகிய இரு கட்சிகளையும் ஆதரித்துள்ளது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரசில் சேரவில்லை,'' என்றார்.

மணிப்பூரின் பிரச்னைக்கும் கிறிஸ்தவச் சமூகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். “இது இரு குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல். இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல. மற்ற வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், நாகாலாந்து போன்றவற்றிலும் இதேதான் நடந்தது,” என்கிறார்.

கிறிஸ்தவ சமூகத்தில் பிளவை ஏற்படுத்த பாஜக என்ன திட்டங்களை வகுத்துள்ளது?

கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரனைத் தொடர்பு கொண்டபோது அவர் இக்கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை. அவர் ஒரு மீட்டிங்கில் இருப்பதாகவும், திரும்ப அழைப்பதாகவும் கூறினார். அவரை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அவருடைய பதில் கிடைத்தவுடன் இக்கட்டுரையில் சேர்க்கப்படும்.

மணிப்பூர், கேரளா, பா.ஜ.க., கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதுவரை, பொதுவாகக் கேரளக் கிறிஸ்தவச் சமூகத்திற்குள் பா.ஜ.க.வுக்கு ஆதரவான மனப்பான்மையே இருந்து வந்திருக்கிறது

காங்கிரஸ் என்ன செய்கிறது?

“மணிப்பூருக்குப் பிறகு, பா.ஜ.க.வை ஆதரித்தச் சில கிறிஸ்தவத் தலைவர்கள், சிறுபான்மையினர் மீதான அந்தக் கட்சியின் அடிப்படை அணுகுமுறை இதுதான் என்பதைப் புரிந்துகொண்டார்கள்,” என்கிறார் எர்ணாகுளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன்.

2024ல் மாற்றம் வருமா?

இராஜதந்திர ரீதியாக, கிறிஸ்தவச் சமூகத்தில் உள்ள பா.ஜ.க ஆதரவாளர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பார்கள், என்கிறார் எம். ஜி.ராதாகிருஷ்ணன். “மணிப்பூர் பிரச்சினை ஓய்ந்தவுடன் அவர்கள் பா.ஜ.க.வுக்குச் செல்வதற்கு வேறு காரணங்களைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் 2024-க்கு நிலமையைச் சரிசெய்ய அதிக நேரம் இல்லாததால் இது கடினமாக இருக்கும். எனவே, பகிரங்கமாக அவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் இருக்கலாம்,” என்றார்.

பாதிரியர் ஜேக்கப் பலகப்பில்லி இவ்வாறு கூறினார்: “மணிப்பூரின் நிலைமை குறித்து நாங்கள் மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் ஆறுதல் கூறவில்லை. இந்நிலையில் ஆறுதலுக்காக யாரிடம் செல்வோம்?”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: