ஹென்ஹிட்டா லாக்ஸ்: இறந்து 70 ஆண்டுகள் கடந்தும் பல லட்சம் பேரை வாழ வைக்கும் இவர் யார்? என்ன செய்தார்?

புற்றுநோய் செல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புற்றுநோய்க்கு இரையான புகையிலை விவசாயி ஹென்ஹிட்டா லாக்ஸ், 1951 இல் வர்ஜீனியாவில் ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டார்

எழுபது ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சைக்குச் சென்ற பெண் 'சாகாவரம்' பெற்று இன்றும் பல லட்சம் பேரை வாழ வைக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இதைக் கேட்க நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், உண்மை. அறிவியல் உலகில் புதைந்திருக்கும் பல அதிசயங்களில் இந்தப் பெண்ணும் ஒரு தவிர்க்க முடியாத உலக அதிசயம் என்று கூறலாம்.

ஆராய்ச்சியாளராகவோ, கல்வியாளராகவோ இருக்கும் ஒருவரின் பெயர் அவர் சார்ந்த துறையால் அங்கீகரிக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை. ஆனால், இப்படி எந்த அடையாளமும் இல்லாத சாதாரண ஒரு பெண்ணின் பெயர் இன்று உயிரி அறிவியல் துறையில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

எழுபது ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் அவரது உடல் இறந்தாலும், அவரது உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட செல்கள் பல ஆண்டுகளுக்குப் பின்பும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது உடலின் செல்கள், உலகம் முழுவதும் பல லட்சம் பேரின் உயிரை காப்பாற்றி வருகிறது. அதுதான், இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தப் பெண்ணின் பெயர் பரபரப்பாகப் பேசப்படுவதற்கு காரணம்.

புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான புகையிலை விவசாயி

ஆப்பிரிக்க -அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர் ஹென்ஹிட்டா லாக்ஸ். புகையிலை விவசாயியான அவரது உடல் செல்களை அவரது அனுமதி இல்லாமலேயே மருத்துவர்கள் பிரித்தெடுத்தனர். அத்துடன் உயிரி தொழில்நுட்பத் துறையில் எண்ணற்ற புதிய மருந்துகளை கண்டுபிடிக்கவும், பல்வேறு புதிய ஆராய்ச்சிகளுக்கும் லாக்ஸின் உடற்செல்களை அவர்கள் பயன்படுத்தினர்.

புற்றுநோய் காரணமாக, ஹென்ஹிட்டா லாக்ஸ் கடந்த 1951 இல், அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அவரது உடல் செல்களின் மாதிரிகளை மருத்துவர்கள் ஆய்வகத்துக்கு அனுப்பினர். அப்போது தான் அந்த செல்கள் காலவரையின்றி பல்கி பெருக்கப்படலாம் என்பதை கண்டறிந்தனர்.

உயிரி அறிவியல் துறையில் முக்கிய திருப்புமுனையாக கருதப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, எண்ணற்ற மருத்துவ சிகிச்சைகள் மற்றும் புதிய மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வழிவகுத்தது.

புற்றுநோய் செல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்துக்கு உட்பட்ட பால்டிமோரில் உள்ள லாக்சின் பேரக்குழந்தை ஒருவரின் வீட்டில் இருக்கும் அவரது உருவப்படம்

வழக்கு தொடர்ந்த லாக்ஸ் குடும்பத்தினர்

ஆனால், நவீன மருத்துவத்திற்கு ஹென்ஹிட்டா லாக்ஸ் ஆற்றிய அரிய இந்தப் பங்களிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளி உலகிற்கு தெரிய வரவில்லை. அத்துடன் அவரது உடல் செல்களை கொண்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக, லாக்ஸ் குடும்பத்தினருக்கு ஒருபோதும் பொருளாதார உதவிகள் கிடைக்கப்பெறவில்லை.

இதுதொடர்பாக லாக்சின் குடும்பத்தினர், தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 2021-இல் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். ‘மாசசூசெட்ஸ் என்ற இடத்தில் இருந்து செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், லாக்சின் உடற்செல்களை தனது மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக, பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளது. அதன் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி உள்ளது’ என்று அந்நிறுவனம் மீதான வழக்கில் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

சில ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்கு பிறகு, லாக்ஸ் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் கடந்த திங்கட்கிழமை சமரச தீர்வை முன்னெடுத்துள்ளனர்.

ஆனால், ஒருவரின் உடல் செல்களை அவரது அனுமதியின்றி எடுத்து, மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததில் உள்ள நெறிமுறை மீறல்கள் மற்றும் மருத்துவ அறிவியலில் இந்த செல்களுக்கான அதீத முக்கியத்துவத்தின் காரணமாக, ஹென்றிட்டா லாக்ஸ், உலகம் முழுவதும் ஊடகங்களில் தற்போது மீண்டும் தலைப்புச் செய்தி ஆக பேசப்படுகிறார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து இங்கு காண்போம்.

புற்றுநோய் ஆராய்ச்சி

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்துக்கு உட்பட்ட பால்டிமோர் நகருக்கு அருகே, தனது குடும்பத்தினருடன் லாக்ஸ் வசித்துவந்தார். அவரின் வசிப்பிடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் டாக்டர் ஜார்ஜ் கிரேவின் ஆய்வகம் அமைந்திருந்தது.

அங்கு அவர், புற்றுநோயை குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தார். இந்த ஆராய்ச்சியின் முக்கிய அம்சமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடல் திசுக்கள், உயிருடன் உள்ள கோழியின் இதயத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்துடன் கலக்கப்பட்டது.

இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள் உயிர்பெற்று, புதிய செல்களை உற்பத்தி செய்யும் என்று கிரே உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நம்பினர். அத்துடன், ஒருவரின் உடலுக்கு வெளியே இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு மாறாக, அந்தச் செல்கள் செயலிழந்தன.

ஹென்ஹிட்டா லாக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இன்றும் வளர்ந்துகொண்டிருக்கும் ஹென்ஹிட்டா லாக்ஸின் செல்கள்

புற்றுநோய் பாதிப்பு

இந்த நிலையில் தான், கடுமையான வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு காரணமாக லாக்ஸ், 1951 பிப்ரவரி 1ஆம் தேதி மேரிலேண்டில் இருந்த ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு மாதவிடாய் பிரச்னை இருக்கலாம் என்று மருத்துவர்கள் எண்ணினர். ஆனால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வேறுவிதமாக இருந்தன.

“லெக்ஸுக்கு கருப்பைவாய் புற்றுநோய் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஊதா நிறத்தில் இருந்த புற்றுநோய் கட்டி, தொட்டால் ரத்தம் வடியும்படி இருந்தது” என்று அவருக்கு சிகிச்சை அளித்த மகப்பேறு மருத்துவர் ஹோவர்ட் ஜோன்ஸ், 1997 இல் பிபிசியின் ஆடம் கர்ட்டிஸிடம் கூறியிருந்தார்.

“லெக்ஸுக்கு இருந்த அரிய வகை புற்றுநோய் கட்டியை போன்று, தான் அதற்கு முன்பும், பின்பும் பார்த்தில்லை” என்றும் ஜோன்ஸ் கூறினார்.

பிரித்தெடுக்கப்பட்ட செல்கள்

புற்றுநோய் சிகிச்சை பலன் அளிக்காமல் 1951 அக்டோபர் மாதம் ஹென்ஹிட்டா லாக்ஸ் உயிரிழந்தார்.

அவரது உடல், அவர் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு அருகே புதைக்கப்பட்டது.

ஆனால், லென்ஸின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட புற்றுநோய் திசுக்களின் ஒரு கூறு, அவரின் குடும்பத்தினருக்கு தெரியாமல், டாக்டர் கிரே மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

புற்றுநோய் செல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹென்ஹிட்டா லாக்சின் கொள்ளுப் பேத்தியான வெரோனிகா ஸ்பென்சர், மார்ச் 28, 2017 அன்று தனது வீட்டில், கொள்ளுப் பாட்டியின் உருவப்படத்துடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.

அழியாத செல்கள்

பல ஆண்டுகளாக தாம் ஆய்வு செய்த புற்றுநோய் செல்களை போல் இல்லாமல், லாக்சின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட செல்கள் இறக்காமல் இருந்ததை கண்டு வியந்தார் மருத்துவர் கிரே.

இதுபோன்றதொரு செல்லை பெறுவதற்காகத்தான் அவர் பல ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். தனது நீண்ட நாள் ஆய்வுக்கு பலன் கிடைத்ததாக கருதிய கிரே, தான் கண்டுபிடித்த செல்லுக்கு,ஹென்ஹிட்டா லாக்ஸ் என்ற பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை சேர்த்து HeLa என்று பெயரிட்டார்.

HeLa 24 மணி நேரத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்ததுடன், தனது உற்பத்தியையும் நிறுத்தவில்லை.

ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட முதல் அழியாத மனித செல்கள் என்ற பெருமையை HeLa பெற்றது. இதைக் கொண்டு, பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை மருத்துவ விஞ்ஞானிகள் பெற்றனர்.

போலியோ தடுப்பு மருந்து ஆய்வில் HeLa செல்களின் பங்கு

“போலியோ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம். தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிக்கு. ஆய்வகத்தில் வைரஸ் வளர்க்கப்பட வேண்டியதானது. அதன் வளர்ச்சிக்கு மனித செல்கள் தேவைப்பட்டன” என்று பிரிட்டனின் நியூ கேஸ்டில் உள்ள மரபியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜான் பர்ன், 2017 இல் பிபிசியிடம் விளக்கினார்.

போலியோ தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிக்கு HeLa செல்கள் மிகவும் பொருத்தமானதாக அமைந்தன. அதன் பயனாக தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பு மருந்தின் மூலம் லட்சக்கணக்கானோரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

விண்வெளி ஆராய்ச்சியில் HeLa செல்கள்

போலியோ தடுப்பூசிக்கான ஆராய்ச்சிக்கு மட்டுமின்றி, பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் HeLa செல்கள் பயன்படுத்தப்பட்டன. அத்துடன் விண்வெளி ஆராய்ச்சியிலும் இந்த செல்கள் பயன்படுத்தப்பட்டன. அதாவது , பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் இருக்கும் போது மனித உடலில் என்ன நிகழ்கிறது என்பது குறித்து ஆராயவும், அணுசக்தி சோதனைகளிலும் தனித்துவம் வாய்ந்த இச்செல்கள் பயன்படுத்தப்பட்டன.

மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆய்வகங்களால் வாங்கப்பட்டு, அங்கெல்லாம் பயணித்த முதல் மனித செல்கள் என்ற பெருமையை HeLa செல்கள் பெற்றிருந்தன. இவற்றில் சில செல்கள், அழகு சாதன பொருட்கள் தொடர்பான சோதனைகளுக்கு பயன்படுத்தப்பட்டன.

“கடந்த 1940, 1950 களில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட புற்றுநோய் கட்டிகள் அல்லது திசுக்கள் முற்றிலும் கைவிடப்பட்டவையாகவே கருதப்பட்டன. எனவே, அவற்றை ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த, உரிமையாளரின் அனுமதி தேவையா என்பது குறித்து, அப்போது யாருக்கும் தெளிவாக தெரியாமல் இருந்தது” என்கிறார் பேராசிரியர் ஜான் பர்ன்.

சட்டப் போராட்டத்தில் இறங்கிய லாக்ஸ் குடும்பம்

கடந்த 1951 இல்,புற்றுநோயால் லாக்ஸ் இறந்த பின் பல ஆண்டுகளாக அவரது உடற்செல்கள் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், 1973 இல் தான் அச்செல்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதை லாக்ஸின் குடும்பத்தினர் முதன்முறையாக அறிந்தனர்.

புற்றுநோய் சிகிச்சைக்கான மரபணு ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, லாக்ஸ் குடும்பத்தினரின் மரபணுக்களை சோதனை செய்ய அவர்களை நிபுணர் குழு தேடியது.

“என் தாயின் அனைத்து பிள்ளைகளிடம் இருந்தும் ரத்த மாதிரிகளை எடுத்து, அதன் மூலம் எங்களுக்கு அவரின் மரபு பண்புகள் இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறோம்” என்று நிபுணர் குழு தன்னிடம் கூறியதாக, 1997இல் பிபிசியிடம் தெரிவித்தார் டேவிட் லாக்ஸ்.

அப்போது தான், தங்களது தாயின் உடல் செல்களை வைத்து நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்து லாக்சின் பிள்ளைகள் அறிந்தனர்.

இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து, லாக்சின் வாரிசுகள் என்ற முறையில் தாங்கள் ஏதேனும் பணம் பெற முடியுமா என்று வழக்கறிஞர்களை சந்தித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது தொடங்கிய சட்டப் போராட்டத்தில் லாக்ஸ் குடும்பத்தினர் வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்தனர்.

புற்றுநோய் செல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போலியோ தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட HeLa செல்கள்

மருத்துவத் துறையில் இனவெறி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த லாக்ஸின் உடலில் இருந்து செல்களை மருத்துவர்கள் எடுத்த செயல், வாழ்வின் முடிவில் அவருக்கு வலியை கொடுத்தது என்று தெர்மோ ஃபிஷர் நிறுவனத்துடனான சமரச பேச்சுவார்த்தையில் லாக்ஸ் குடும்பத்தினர் சார்பில் பங்கேற்ற மனித உரிமைகள் வழக்கறிஞரான பென் க்ரம்ப் கூறினார்.

“மருத்துவ சிகிச்சை என்ற பேரில், ஹென்ஹிட்டா லாக்ஸ் சுரண்டப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர் சந்திக்கும் இந்த துன்பம், அவர்களின் வாழ்க்கை வரலாறு முழுவதும் நிரம்பி உள்ளது” என்று திங்கள்கிழமை நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையின்போது வேதனையுடன் கூறினார் பென்.

“அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை என்பது அநேகமாக மருத்துவ இனவெறியாக இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

லாக்சின் உடல் செல்களை பயன்படுத்தி வந்ததற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமரச தீர்வில் இருதரப்பினரும் திருப்தி அடைந்துள்ளனர். லாக்சின் 103ஆவது பிறந்தநாளில் இந்த சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார் பென் க்ரம்ப்.

அப்போது, “ஹென்ஹிட்டா லாக்ஸுக்காக, அவரது குடும்பத்தினருக்கு கொஞ்சம் மரியாதை, கண்ணியம் மற்றும் நியாயத்தை பெற்றுத் தருவதை விட சிறந்த பரிசை என்னால் எண்ணிப் பார்க்க முடியாது” என்று உணர்ச்சி ததும்ப கூறினார் க்ரம்ப்.

லாக்ஸ் குடும்பத்தினர் தொடுத்துள்ள வழக்கு, மிகவும் கால தாமதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என தொடர்ந்து கூறி வந்த தெர்மோ ஃபிஷர் நிறுவனம், இதனடிப்படையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரி வந்தது.

ஆனால், HeLa செல்களின் பயன்பாடு இன்றும் மருத்துவ துறையில் பிரதிபலித்து கொண்டுதான் இருக்கிறது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது என்று லாக்ஸ் குடும்ப தரப்பு வழக்கறிஞர் வாதிட்டு வந்தார்.

புற்றுநோய் செல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாக்ஸ் குடும்பத்தினர், தெர்மோ ஃபிஷர் நிறுவனத்துடன் திங்கள்கிழமை ஒரு உடன்பாட்டை எட்டினர். ஆனால் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை

மரணத்திற்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம்

பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் சாத்தியமானதற்கு வழிவகுத்த லாக்ஸை நினைவுகூரும் வகையில், உலக சுகாதார நிறுவனம் , 2021 இல் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஓர் சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

“மனித உடலின் நிறத்தை அடிப்படைக் கொண்டு, அறிவியல் அவர்களை தவறாக பயன்படுத்தி உள்ளது. அவர்களில் ஒருவர் தான் ஹென்ஹிட்டா லாக்ஸ். சிகிச்சையின்போது அவர் சுரண்டப்பட்டார். அவருக்கு தவறு இழைப்பட்டுள்ளது” என்று அந்த விழாவில் , உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க அரசின் உயரிய தங்கப் பதக்கத்தை, மரணத்திற்கு பிந்தைய விருதாக ஹென்ஹிட்டா லாக்ஸுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மேரிலேண்ட் மாகாணத்தைச் சேர்ந்த, அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் கடந்த வாரம் சபையில் மசோதா ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.

“நவீன மருத்துவத்தின் போக்கை ஹென்ஹிட்டா லாக்ஸ் மாற்றியுள்ளார். அவரது உடல் செல்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளின் பலனாக, உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. எனவே, நவீன மருத்துவத்தில் லாக்ஸ் ஆற்றியுள்ள பங்களிப்பை அங்கீகரிக்கும் நேரம் இது” என்று அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கிறிஸ் வான் ஹோலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: