சென்னையில் தாய்ப்பால் வங்கி - 700 பெண்கள் தரும் பாலை 500 குழந்தைகளுக்கு வழங்குவது எப்படி?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உகந்த உணவு என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், தாய்ப்பால் சுரக்காத பல தாய்மார்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?
ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும் அவர் உடலில் தாய்ப்பால் சுரக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தாயான பிறகு உடல் மற்றும் மனரீதியான அழுத்தங்களால் பால் சுரக்காமல் போகும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
அப்படி தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பால் தேவையைப் பூர்த்தி செய்யத் தாய்ப்பால் வங்கியை நாடுகிறார்கள். ஆனால், அதனாலேயே அவர்கள் பல சமூக அழுத்தங்களையும் விமர்சனங்களையும் கூட எதிர்கொள்கின்றனர்.
தாய்ப்பால் வங்கி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? அங்கு தாய்ப்பாலை தானமாகப் பெறுவது எப்படி? தாய்ப்பாலை தானமாக வழங்குவோருக்கு பால் சுரப்பது நின்றுவிடுமா?
இப்படிப் பல கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை விடையளிக்கிறது.
தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்காக அதைத் தானமாகப் பெறுகிறார்கள். செயற்கைப் பால் எனப்படும் பவுடர் பால் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பதால், அவர்கள் தாய்ப்பாலை தானமாகப் பெறுகிறார்கள்.

தாய்ப்பால் வங்கியைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த அணுகுமுறை அவர்களது குழந்தைகளின் பசியைப் போக்க, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவினாலும், தாய்ப்பாலை தானமாகப் பெறுவதால் அவர்கள் சமூக புறக்கணிப்புக்கு ஆளாவதாகவும் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் 2014இல் தொடங்கப்பட்ட முதல் தாய்ப்பால் வங்கி சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றது.
அந்த வங்கியில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 700க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தானமாக வழங்கும் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு, சுமார் 400 முதல் 500 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
தாய்ப்பால் வாரத்தின் ஒரு பகுதியாக பிபிசி தமிழ் தமிழ்நாட்டின் முதல் தாய்ப்பால் வங்கிக்குச் சென்றபோது, அதைப் பயன்படுத்தும் தாய்மார்களைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் பலரும், தாய்ப்பால் சுரக்காத நேரத்தில், மோசமான வசைகளை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர்.
தாய்ப்பால் சுரக்காததால் விமர்சனம்

கடந்த ஜூலை மாதம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார் 34 வயதான பீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
அவரது ஒரு குழந்தை இறந்துவிடவே, மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்தார். உயிர் பிழைத்த குழந்தைக்கு பாலூட்ட அவரால் முடியவில்லை. அவருக்கும் பால் சுரப்பு முற்றிலுமாக நின்றுவிட்டது.
''ஒரு குழந்தையை இழந்த அதீத கவலை என்னை வாட்டியது. பால் சுரக்கவில்லை என்பதால் இரண்டாவது குழந்தையையும் இழந்துவிடுவேனோ என அஞ்சினேன்.
குழந்தைகள் நல மருத்துவமனையில் இருக்கும் தாய்ப்பால் வங்கியில் பாலைப் பெற்று குழந்தைக்கு கொடுக்கலாம் என மருத்துவர் ஆலோசனை வழங்கினார். ஆகையால் இங்கு கடந்த 20 நாட்களாகத் தங்கியிருக்கிறேன். தாய்ப்பால் வங்கியால்தான் என் குழந்தை பிழைத்துள்ளது,'' என்கிறார் பீனா.
இருப்பினும் தனக்கு பால் சுரக்கவில்லை என்பதாலும் தாய்ப்பால் வங்கி மூலமாகப் பால் பெறுவதாலும், உறவினர்கள் பலரும் தன்னை மோசமாகப் பேசியதாகக் கூறுகிறார் பீனா.
ஆனால், தாய்ப்பால் வங்கியின் தேவையை உணர்ந்து அந்த விமர்சனங்களை பீனா புறக்கணித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
''நான் குழந்தை பெற்றுக்கொள்ளத் தகுதி இல்லாதவள் என்றும் எனக்கு பால் சுரக்கவில்லை என்பதற்கு நான் தவறு செய்தததே காரணம் என்றும் பலவிதமாகப் பேசியிருக்கிறார்கள்.
நான் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். தாய்ப்பால் வங்கியை பயன்படுத்துவது பற்றித் தெரியவந்தபோது, என்னைக் கேலி செய்தார்கள்.
ஆனால் எனக்கு இந்த வங்கி மூலமாகக் கிடைத்த பாலைக்கொண்டு குழந்தையை தேற்றியிருக்கிறேன். அதைப் பார்த்த என் கணவரும் அம்மாவும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள்," என்று தாய்ப்பால் வங்கி அளித்த நம்பிக்கை குறித்துப் பேசினார் பீனா.
பிற்போக்கு வசைகளை எதிர்கொண்ட தாய்
தனக்குப் பிறந்த நான்கு குழந்தைகளுக்கும் பாலூட்டிய அனுபவம் கொண்டவர் மும்தாஜ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆனால், ஐந்தாவது குழந்தைக்கு அவரால் பாலூட்ட முடியவில்லை.
''எனக்கு சுத்தமாக பால் சுரக்கவில்லை. நான்கு குழந்தைகளுக்கும் பாலூட்டினேன். இந்த முறை என்ன பிரச்னை என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
முதல் 10 நாட்கள் வலியுடன் முயன்ற அளவுக்கு பால் கொடுத்தேன். ஆனால் பால் சுரக்கவில்லை, குழந்தை எடை படிப்படியாகக் குறைந்து, இளைத்துப் போவதைப் பார்த்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்துவிட்டேன்.
இங்குதான் எனக்கு குழந்தை பிறந்தது. இங்குள்ள தாய்ப்பால் வங்கியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் சொன்னபோதுதான் எனக்கு தைரியம் வந்தது,'' என்கிறார் மும்தாஜ்.
தன்னை துரதிர்ஷ்டசாலி என்றும் தான் பாவம் செய்துள்ளதாலேயே பால் சுரக்கவில்லை எனவும் பிற்போக்கு வசைகளை மும்தாஜ் எதிர்கொண்டார். ஆனால், அவற்றுக்கு பதில் தர அவர் விரும்பவில்லை.
''பலரும் என்னை இகழ்ந்தார்கள். என்னுடைய வலியை என்னைப் போன்ற பால் சுரக்காத பெண்களால்தான் அறியமுடியும். இங்கு தினமும் சுமார் 200 மில்லிட்டர் வரை தாய்ப்பால் வங்கியில் இருந்து பெற்று என் குழந்தைக்குப் புகட்டுகிறேன்.
சாதி, மதம் என்ற பேதம் எதுவும் இங்கில்லை. பாலூட்டும் தாய்மார்களுக்கு எல்லா குழந்தைகளும் தன் குழந்தை போலத்தான் என்ற எண்ணத்தில் வந்து அதிகமாக சுரக்கும் பாலை தானமாக கொடுக்கிறார்கள். அது எங்களைப் போன்ற தாய்மார்களுக்குப் பேருதவியாக இருக்கிறது," என்கிறார் மும்தாஜ்.
தாய்ப்பால் வங்கி செயல்படுவது எப்படி?

தனது குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரக்கும் பாலை தாய்மார்கள் தாய்ப்பால் வங்கியில் தனமாகக் கொடுக்கிறார்கள். இந்த வங்கியில் தாய்ப்பால் தானம் செய்ய திரையிடப்பட்ட அறைகள் உள்ளன. இங்கு பால் எடுக்கும் பம்ப் வைக்கப்பட்டுள்ளது.
தூய்மையான முறையில் சேகரிக்கப்படும் பால், கிருமி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது என்பதை நாம் நேரில் பார்த்தோம்.
தாய்ப்பால் வங்கியில் பணியாற்றும் செவிலியர் சாந்தி பேசுகையில், ''தாய்ப்பால் தானம் கொடுக்கும் நபருக்கு ரத்த அளவு, வியாதிகள் உள்ளனவா என சோதனைகள் செய்யப்படும். அவர்கள் கொடுக்கும் பாலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நுண்கிருமிகள் உள்ளனவா என்று சோதிக்கப்படும்.
கிருமி நீக்கம் செய்யப்பட்டு, குளிர்சாதனப் பெட்டியில் பால் வைக்கப்படும். பின்னர், மீண்டும் 63 டிகிரி அளவில் கொதிக்க வைக்கப்பட்டு, பின்னர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்குத் தரப்படும்,'' என்றார்.
தானம் பெறும் தாய்மார்கள் பலருக்கும் உணவு மற்றும் மன அழுத்த பிரச்னைகளை எதிர்கொள்வது குறித்து விழிப்புணர்வு தரப்படுவதாக செவிலியர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
''இந்த வங்கியில் பாலைப் பெற்று பயன்படுத்தும் தாய்மார்களை பால்சுரப்பு குறித்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்குபெறச் செய்கிறோம். ஒரு கட்டத்தில், சில தாய்மார்கள் மன அழுத்தம் குறைந்து, அவர்கள் முழுமையாக வங்கியை நம்பியிருக்கும் நிலை மாறி, அவர்களும் தாய்ப்பால் தானம் கொடுக்கும் நிகழ்வுகளும் இங்கு நடந்துள்ளன,'' என்கிறார் செவிலியர் சாந்தி.
எடை குறைந்த குழந்தைகள், அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட குழந்தைகள், முற்றிலுமாக தாய்ப்பால் சுரக்காத தாயின் குழந்தைகள் எனப் பலருக்கும் இங்குள்ள வங்கி மூலமாக பால் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது என்றும் தெரிந்துகொண்டோம்.
தாய்ப்பால் தானம் செய்தால் பால் சுரப்பது குறைந்துவிடுமா?
பிபிசி தமிழிடம் பேசிய தாய்ப்பால் வங்கியின் மருத்துவ அதிகாரி சங்கீதா, இந்த தாய்ப்பால் வங்கியில் ஒரு மாதத்தில் சுமார் 60 லிட்டர் வரை தாய்ப்பால் சேகரிக்கப்படுவதாகக் கூறினார்.
மேலும், 60 லிட்டர் என்பது எப்போதும் இந்த வங்கியில் இருப்பு வைக்கப்படும் அளவு என்றும் அவசர காலத்தில்கூட குழந்தைகளுக்குப் பால் கிடைப்பது உறுதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
''கொரோனா காலத்திலும், பல தன்னார்வலர்கள் தானம் செய்த பாலை சோதனைக்கு உட்படுத்தி, இந்த வங்கி மூலம் பல குழந்தைகளுக்கு உதவ முடிந்தது,'' என்றார்.

மேலும் தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் சங்கீதா.
''ஒரு தாய் தனக்கு ஆரம்ப நாட்களில் பால் சுரக்கவில்லை என்பதை பிரச்னையாகப் பார்க்கவேண்டியதில்லை. இது எல்லா தாய்மார்களும் கடந்து வரும் சிக்கல்தான்.
ஒரு சிலருக்கு குழந்தை பிறந்த முதல் வாரம் அல்லது 10 நாட்கள் அல்லது முதல் மாத இறுதி வரை சிரமமாக இருக்கும், பின்னர் பால் சுரக்கும். வெகு சிலருக்கு முழுவதும் சுரக்காமல் போகும் நிலையும் ஏற்படும். அதனால், பால் அதிகம் சுரக்கும் தாய்மார்கள் முன்வந்து தானம் கொடுப்பது அவசியம்,'' என்கிறார் அவர்.
தாய்ப்பால் தானம் குறித்த கற்பிதங்கள் குறித்து விளக்கிய அவர், ''நாம் தாய்ப்பால் தானம் செய்தால் நம் குழந்தைக்கு பால் கிடைக்காமல் போய்விடும். அல்லது சேர்த்து வைத்து நம் குழந்தைக்கு நாம் கொடுக்கலாம் என்று நினைப்பார்கள்.
உண்மையில், தாய்ப்பால் சுரப்பது என்பது கிணற்றில் நீர் எடுப்பது போலத்தான். நீங்கள் எடுக்க எடுக்க நீர் சுரப்பது போல தாய்ப்பால் சுரக்கும். அதனால், தாய்ப்பால் தானம் செய்பவர்களுக்கு மேலும் சுரக்கும் என்ற செய்தியை பாலூட்டும் தாய்மார்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவேண்டும்,'' என்றார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













