யார் இந்த ஃபகத் ஃபாசில்?

பட மூலாதாரம், FAHADFASSIL
- எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற மாமன்னன் திரைப்படத்தில், சாதிய வன்மம் நிறைந்த வில்லன் கதாபாத்திரமான ரத்னவேலு தோன்றும் காட்சிகளில், சாதிப் பெருமை பேசும் பாடல்களை இணைத்து, நெட்டிசன்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தனர்.
ஏற்கெனவே தமிழ் சினிமாவில் பிரபலமாகி இருந்த ஃபகத்ஃபாசில் இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.
யார் இந்த ஃபகத் ஃபாசில்?

பட மூலாதாரம், Getty Images
”வருஷம் 16”, “பூவே பூச்சூட வா”, “காதலுக்கு மரியாதை” உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஃபாசிலின் மகன் தான் ஃபகத் ஃபாசில்.
பெரிய இயக்குநரின் மகன் என்பதாலேயே சினிமா ஃபகத் ஃபாசிலுக்கு சாதகமாக அமைந்து விடவில்லை. சினிமாவை உற்று நோக்கினால் ஒன்று புரியும். வாரிசு நடிகர்கள் என்பதால் மட்டுமே ரசிகர்கள் அவர்கள் கொண்டாடிவிடுவதில்லை. சினிமாவில் நடித்து ரசிகர்களின் மனதை வெல்ல வேண்டுமானால், அந்த நடிகன், நம்பகத் தன்மையுடனும், நேர்மையாகவும் நடித்து ரசிகனுக்கு மிக அருகில் செல்ல வேண்டும். அது அத்தனை சுலபமாக அமைந்து விடாது.
மலையாள சினிமா தாண்டி இன்று இந்திய அளவில் அறியப்பட்டிருக்கும் ஃபகத் ஃபாசில் ஒரு மிகப் பெரிய தோல்விப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், ஃபகத்தின் அப்பா ஃபாசில் தனது மகன் ஃபகத்தினை ”கையெத்தும் தூரத்து” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.
அத்திரைப்படம், விமர்சகர்களால் படு மோசமாக விமர்சிக்கப்பட்டது. மிகப் பெரிய இயக்குநரின் மகனுக்கு நடிப்பு வரவில்லை என பல பத்திரிகைகள் அவரை அவமானப்படுத்தியது. ஃபகத்தால் அந்த தோல்வியிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இதனையடுத்து, ஃபகத் உயர் கல்வி பயில அமெரிக்கா சென்று விட்டார்.
ஏழு வருட படிப்பிற்கு பிறகு, மீண்டும் 2009- ஆம் ஆண்டு ”கேரளா கஃபே” என்ற குறும் பட த்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த ஃபகத் ஃபாசில், படிப்படியாக முன்னேறினார்.

பட மூலாதாரம், SOCIAL MEDIA / RED GIANT MOVIES
சிறு வேடங்களிலும் நடிக்கத் தொடங்கிய ஃபகத் ஃபாசில்

பட மூலாதாரம், MARISELVARAJ/TWITTER
”கேரளா கஃபே” திரைப்பத்திற்குப் பிறகு, ஹீரோ, வில்லன் என எந்தவொரு பாரபட்சமுமின்றி, கிடைத்த வாய்ப்புகளில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த ஃபகத் ஃபாசில் 2010 ஆம் ஆண்டு முதல் பல இயக்குநர்களுடனும் கை கோர்த்தார்.
ஒளிப்பதிவாளர் ஷமீர் தாஹிர் 2011-ஆம் ஆண்டில் முதன் முதலாக இயக்கிய “சாப்பா குரிசு” திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களால் பாரட்டப்பட்டதுடன், விமர்சன ரீதியாக மிகப் பெரிய பாராட்டினையும் பெற்றது. ”சாப்பா குரிசு” திரைப்படத்தைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில் மிகப் பெரிய நடிகரானார் என்றே கூறலாம். ஆஷிக் அபுவின் “22 ஃபீமேல் கோட்டய” திரைப்படமும், ஜோஸின் ”டைமண்ட் நெக்லஸ்” திரைப்படமும் அவருக்கு கை கொடுத்தன.
இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியும் ஃபகத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது எனவே கூறலாம். அதுவரை நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஃபகத்திற்கு அழகான காதல் கதைகள் சிக்கின. அதில், பிரபல ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவி இயக்குநராக அறிமுகமான ”அன்னயும் ரசூலும்” திரைப்படம் மிக முக்கியமான ஒன்று.
ஃபகத் ஃபாசிலின் பெரிய கண்கள் காதல் உணர்வினை வெளிப்படுத்திய விதம் ரசிகர்கள் அவரை கொண்டாட வைத்தது. பல இயக்குநர்களும் ஃபகத்தின் கண்களையும், அவர் வெளிப்படுத்திய உணர்வுகளையும் கண்டு சிலாகித்தனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இயக்குனர் ஆஷிக் அபு, நடிகர் ஃபகத்தின் கண்களை கேமரா வழியாகப் பார்க்கும்போது மிகப் பெரிய பிரம்மிப்பை உண்டு பண்ணுவதாக நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
மேலும், அவர் இயக்கிய “மாயநதி” திரைப்படத்தில் டோவினோ தாமஸிற்குப் பதிலாக ஃபகத் ஃபாசில் நடித்திருந்தால் திரைப்படம் இன்னும் அட்டகாசமாக வந்திருக்குமென வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
மலையாள சினிமாவின் வித்தகனாக மாறிய ஃபகத் ஃபாசில்

பட மூலாதாரம், nazriyafahadh/ Instagram
நடிகர் ஃபகத் ஃபாசில் “சிவப்பு ஒயின்”, ”ஆமென்”, “இம்மானுவேல்”, ”அகம்”, “5 சுந்தரிகள்”, ஹராம்”,“மகேஷிண்ட பிரதிகாரம்”, “மாலிக்” என மளமளவென 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றார். மலையாள சினிமா மட்டுமல்லாமல், “சூப்பர் டீலக்ஸ்”, “விக்ரம்”, “மாமன்னன்” உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும், “புஷ்பா” போன்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து பான் இந்தியா நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.
சினிமாவை பொறுத்தவரையில் யாருடைய கற்பனைத் திறன் ரசிகர்களை ஆராவாரப்படுத்தும் என்றே தெரியாது. ஆனால், இயல்புக்கு நெருக்கமாக, உண்மைத்தன்மையுடன் இருக்கும் படைப்புகளை அவர்கள் கொண்டாடினார்கள்.
மாலிவுட் சினிமாவைப் பொறுத்தவரையில், மிகச் சொற்பமான நடிகர்களையே ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலை மட்டுமே தொடர்ந்து மனதுக்கு நெருக்கமாக உணர்ந்தவர்கள், பின்னாட்களில் ஃபகத் ஃபாசிலின் அகண்ட கண்களையும், அவரது இயல்புக்கு நெருக்கமான நடிப்பினையும் கண்டு அசந்து போனார்கள்.
காதல், நகைச்சுவை, ஃபேண்டசி, பீரியட் டாராமா, கேங்ஸ்டர் என எந்தவகைத் திரைப்படமாக இருந்தாலும் அதில் தனது அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் ஃபகத் ஃபாசில் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞரானார்.
தேசிய அளவில் முக்கிய நடிகராக அறியப்பட்ட நடிகர் ஃபகத் பாசில்
மலையாள இயக்குநரான மது. சி. நாராயணின் ”கும்பலாங்கி நைட்ஸ்”, தமிழ் இயக்குநரான தியாக ராஜா குமார ராஜாவின் ”சூப்பர் டீலக்ஸ்” திரைப்படங்கள் நடிகர் ஃபகத் ஃபாசிலை தேசிய அளவில் சிறந்த நடிகராக அடையாளப்படுத்தியது.
நடிகர் ஃபகத் ஃபாசில் ஒரு முறை தேசிய விருதும், நான்கு முறை கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதினையும், பல தொலைகாட்சி விருதுகளையும் பெற்றுள்ளார்.
நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க வந்தபோது வயது 19. மேலே குறிப்பிட்டபடி, முதல் திரைப்படத்திலேயே படு தோல்வியை சந்தித்த ஃபகத் ஃபாசில், இன்று மலையாள சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து விட்டு, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார்.
இந்தி நடிகர் இர்ஃபான் கானின் மறைவின்போது, நடிகர் ஃபகத் ஃபாசில் மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றினை எழுதினார். அதில், “ கடந்த 10 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் எனவும் கூறலாம். நான் நடிகர் இர்ஃபான் கானை சந்தித்ததில்லை. நேரில் ஒரு முறை கூட பார்த்ததில்லை என்றும் கூட கூறலாம். என் திரை வாழ்க்கைக்காக நான் அவருக்காக கடன்பட்டிருக்கிறேன் எனக் கூடக் கூறலாம். அமெரிக்காவில் நான் படித்துக் கொண்டிருந்தபோது, அவர் நடித்த படத்தை டிவிடி வழியே பார்க்காமல் போயிருந்தால், அவர் என் வாழ்க்கையை மாற்றாமல் போயிருந்தால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. நன்றி சார்…!” எனக் கூறியிருந்தார்.
இதுவரை ஏன் ஃபகத் ஃபாசில் இந்தியில் நடிக்கவில்லை எனக் கேட்டதற்கு அவர், “இந்தி அவருக்குத் தெரியாது எனவும், ஒரு காட்சியை உள் வாங்கி நடிப்பதற்கு மொழி ஒரு கருவி” எனவும் அவர் கூறியிருக்கிறார்.
அதேபோல, மலையாள சினிமா ஓடிடி தளங்களை ஏற்றுக் கொள்ளாத கால கட்டத்தில், காலத்தின் மாற்றத்திற்கேற்ப மாறிக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்த ஃபகத் ஃபாசில், பல திரைப்படங்களை ஓடிடி-யில் ரிலீஸ் செய்வதற்கு உதவினார்.
சினிமாவைப் பொறுத்தவரையும் நடிப்பினையோ, வெற்றியினையோ, ரசிகர்களின் மனதையோ இது தான் என வரையறுக்க முடியாது. இது போன்ற ஒரு சூழலில், முதல் படத்திலேயே, மிக மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகி, இன்று மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோ, வில்லன் என எந்தப் பாரபட்சமும் பார்க்காமல் நடித்து வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கிறார் ஃபகத் ஃபாசில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












