டெல்லி மீதான அதிகாரம்: அம்பேத்கர், நேருவை ஆதரவுக்கு இழுத்த அமித் ஷா - மக்களவையில் என்ன நடந்தது?

நாடாளுமன்றத்தில் அமித் ஷா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களே டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை விரும்பவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசினார்.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட 'டெல்லி சேவைகள் மசோதா' குறித்து இன்று மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேரு, பட்டேல், அம்பேத்கர், ராஜாஜி உள்ளிட்டோரே டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார்.

தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவுக்கு ஆதரவாக பேசிய அமித் ஷா, “ஆங்கிலேயர் ஆட்சிக் காலமான 1911ஆம் ஆண்டு டெல்லி நிறுவப்பட்டது. அப்போது, பஞ்சாப் மாகாணத்தில் இருந்து டெல்லி மற்றும் மெஹ்ராலி ஆகிய இரண்டு தாலுக்காக்கள் பிரிக்கப்பட்டு ஒரு மாகாணமாக டெல்லி உருவாக்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகு பட்டாபி சீதாராமையா கமிட்டி சார்பில் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க பரிந்துரைக்கப்பட்டது. அந்தப் பரிந்துரை அவையில் முன்வைக்கப்பட்டபோது, நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜாஜி (ராஜகோபாலாச்சாரி), ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர் உள்ளிட்டோர் அதை எதிர்த்தனர். டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவது பொருத்தமானதாக இருக்காது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அமித் ஷா, அந்த விவாதத்தின்போது நேரு ஆற்றிய உரையை வாசித்துக் காண்பிக்க விரும்புவதாகக் கூறினார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாடாளுமன்றத்தின் சார்பில் சீதாராமையா கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த அறிக்கை வந்துள்ளபோது உலகம் மாறியுள்ளது.

டெல்லியும் பெருமளவிற்கு மாறியுள்ளது. இந்த மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாத கமிட்டியின் இந்தப் பரிந்துரையை ஏற்க முடியாது,” என நேரு பேசியதாக இன்று நடந்த விவாதத்தில் அமித் ஷா வாசித்துக் காண்பித்தார்.

பின்னணி என்ன ?

மோடியும் அரவிந்த் கேஜ்ரிவாலும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குத்தான் அதிகாரிகளை நியமிப்பது மற்றும் இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் இருப்பதாகத் தீர்ப்பளித்தது

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே தங்களுக்குள்ளான அதிகாரம் தொர்பான மோதல் தொடர்ந்து இருந்தது.

இந்நிலையில், டெல்லி நிர்வாகத்தில் இருக்கும் அரசு அதிகாரிகளின் நியமனம், மாறுதல்கள் தொடர்பான அதிகாரப் போட்டி உச்சத்திற்குச் சென்றது.

இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குத்தான் அதிகாரிகளை நியமிப்பது, இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் இருப்பதாகத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ள மத்திய அரசு, தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. அந்த அவசர சட்டத்தின்படி, டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் ஆகிய விஷயங்களில் மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு.

இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மூவும் ஒப்புதல் அளித்தார், இது தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால், அவசரச் சட்டம் கொண்டுவந்து ஆறு மாதங்களில், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, அது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட வேண்டும் என்பது நாடாளுமன்ற மரபு.

ஆனால், இந்த அவசரச் சட்டத்திற்கும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு கோரியதுடன், இந்த மசோதாவிற்கு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்ய வலியுறுத்தினார்.

இந்நிலையில், டெல்லி சேவைகள் மசோதா கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 1) அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லிக்கான சட்டங்களை இயற்ற அரசமைப்பு அனுமதிக்கிறது: அமித் ஷா

டெல்லிக்கான சட்டங்களை இயற்ற அரசியலமைப்பு அனுமதிக்கிறது: அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த மசோதா டெல்லி அரசின் உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகக் கூறினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைநகர் டெல்லி (திருத்தம்) மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போது, எதிர்க்கட்சிகள், அதை ‘ஜனநாயகத்தின் கொலை’ என அழைத்தனர். அதற்குப் பதிலளித்த அமித் ஷா, "இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை" என்றார்.

மக்களவையில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த மசோதா டெல்லி அரசின் உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகக் கூறினார். திரிணாமுல் உறுப்பினர் சௌகதா ராய் பேசுகையில், "உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்து பேசிய அமித் ஷா, “டெல்லிக்கான சட்டங்களை நாடாளுமன்றத்தில் இயற்ற அரசமைப்பு அனுமதிக்கிறது. இந்த மசோதாவுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பும் அரசமைப்பு அடிப்படையில் இல்லை, இவை அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. நாடாளுமன்ற நடைமுறைகளை மேற்கோள் காட்ட எதிர்க்கட்சிகளால் முடியவில்லை,” என்றார்.

கேஜ்ரிவால் வியூகம் என்ன ஆனது?

கேஜ்ரிவால் வியூகம் என்ன ஆனது ?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மசோதாவுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பல்வேறு கட்சி தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

மக்களவையில் பெரும்பான்மை இல்லை என்பதால், மாநிலங்கள் அவையில் எதிர்க்கட்சிகளின் முழு பலத்தையும் காட்டி, மசோதாவை நிறைவேற்றாமல் தடுத்துவிடலாம் என எதிர்க்கட்சியினர் நம்பியிருந்தனர்.

ஆனால், மசோதா தாக்கல் செய்யப்பபட்ட செவ்வாய்க்கிழமையன்று, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சியும், இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதனால், தற்போது எதிர்க்கட்சியினர் கொண்டிருந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் பிஜேடிக்கும் மாநிலங்களவையில் தலா ஒன்பது எம்பிக்கள் உள்ளனர். மக்களவையில் தற்போது 238 உறுப்பினர்கள் உள்ளனர். மசோதா நிறைவேற்ற, அவையின் மொத்த பலத்தில் பாதி, அதாவது 119 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். பாரத் ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தால், 110 பேருக்கும் குறைவான எம்.பி.க்களின் ஆதரவே இருக்கும்.

இந்த மசோதாவுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பல்வேறு கட்சி தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். ஆனால் இப்போது உருவாக்கப்படும் புள்ளிவிவரங்களின் சமன்பாடு கேஜ்ரிவால் அரசுக்கு சாதகமாக இல்லை.

மாநிலங்களவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பலம்

மாநிலங்களவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பலம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தற்போது வரையிலான கணிப்பின்படி மோதி அரசுக்கான ஆதரவு எண்ணிக்கை 121 ஆக உள்ளது.

மாநிலங்களவையில் பாஜகவுக்கு 92 எம்.பி.க்கள் உள்ளனர், அவர்களில் ஐந்து பேர் நியமன உறுப்பினர்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மொத்தம் 103 எம்பிக்கள் உள்ளனர். அதிமுகவில் நான்கு எம்பிக்கள் உள்ளனர்.

ஆர்பிஐ (அத்வாலே), அசாம் கண பரிஷத், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), தேசிய மக்கள் கட்சி, மிசோ தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்) ஆகியவற்றுக்கு தலா 1 எம்பிக்கள் உள்ளனர்.

பிஜேடி மற்றும் ஒய்எஸ்ஆருக்கு தலா 9 உறுப்பினர்கள் உள்ளனர், அதாவது பாஜகவுக்கு 18 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

தற்போது வரையிலான கணக்கின்படி,இந்த மசோதா தொடர்பாக மோதி அரசுக்கான ஆதரவு எண்ணிக்கை 121 ஆக உள்ளது.

தலா ஒரு உறுப்பினர் வைத்திருக்கும் பிஎஸ்பி, தெலுங்கு தேசம், ஜேடிஎஸ் ஆகியவையும் அரசுக்கு ஆதரவளிக்கலாம்.

எதிர்க்கட்சிகள் எத்தனை உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியும்?

அதிகபட்சமாக எதிர்க்கட்சி 105 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற முடியும்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அதிகபட்சமாக எதிர்க்கட்சிகள் 105 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற முடியும்
  • எதிர்கட்சிகளின் கூட்டணியில் உள்ள 26 கட்சிகளுக்கு மொத்தம் 98 உறுப்பினர்கள் சபையில் உள்ளனர். காங்கிரசுக்கு மட்டும் 31 எம்பிக்கள் உள்ளனர்.
  • ஆம் ஆத்மி கட்சிக்கு 10 உறுப்பினர்களும், திமுகவுக்கு 10 உறுப்பினர்களும் உள்ளனர்.
  • டிஎம்சி 13 மற்றும் ஆர்ஜேடி 6 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • சிபிஐ(எம்) மற்றும் ஜேடியு தலா 5 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.
  • என்சிபிக்கு நான்கு எம்பிக்களும், சிவசேனாவுக்கு (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) மூன்று எம்பிக்களும் உள்ளனர்.
  • ஜேஎம்எம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 எம்பிக்கள் உள்ளனர்.
  • ஐயுஎம்எல், கேரள காங்கிரஸ் (எம்), ஆர்எல்டி மற்றும் ம.தி.மு.க.வுக்கு தலா 1 எம்.பி.
  • பிஆர்எஸ் இந்தியா கூட்டணியில் இல்லை, ஆனால் அதுவும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்களித்தால், எதிர்க்கட்சிகள் மேலும் 7 வாக்குகளைப் பெறலாம். அதாவது, அதிகபட்சமாக எதிர்க்கட்சி 105 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: