தமிழகத்தில் முதல் பெண் ஜெனரல்: மு.க.ஸ்டாலின் வாழ்த்திய பிறகு இந்திய ராணுவம் ட்வீட்டை நீக்கியது ஏன்?

பட மூலாதாரம், @HQ_IDS_India
தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலாஸ் புளோரா ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த அவர், 38 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாட்டிலிருந்து முப்படைகளுக்கும் தலைமையாக விளங்கும் ராணுவத்தின் செவிலியர் பிரிவில் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்திருக்கும் முதல் பெண் இக்னேசியஸ் டெலாஸ் புளோரஸ் ஆவார்.
தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண்

பட மூலாதாரம், @NorthernComd_IA
இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய பிரிவு இந்தத் தகவலை நேற்று ட்விட்டரில் பதிவிட்டு அவருக்குப் பாராட்டும் தெரிவித்திருந்தது.
“அயராத அர்ப்பணிப்பின் அசாதாரணமான வெளிப்பாடு. இந்திய ராணுவத்தின் மதிப்புமிக்க ராணுவ செவிலிய சேவைகளின் மேஜர் ஜெனரலாக உயர்ந்துள்ள இக்னேசியஸ் டெலாஸ் புளோராவை துருவா கமாண்ட் பாராட்டுகிறது,” என இந்திய ராணுவம் தனது பதிவில் தெரிவித்திருந்தது.
மேலும் அந்தப் பதிவில், “கன்னியாகுமரி, தமிழ்நாட்டிலிருந்து இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கும் முதல் பெண் இவர். பெண்களின் முன்னேற்றுத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.
கொரோனா காலத்தின் சேவை உட்பட அவரது 38 ஆண்டு பணி செவிலியப் பணியில் அவருக்கு உள்ள நாட்டத்தையும், நாட்டு சேவையாற்றுவதற்கான உள்ளார்ந்த விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது,” என்று அவரை வாழ்த்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

பட மூலாதாரம், @mkstalin
இந்த ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இக்னேசியஸ் டெலாஸ் புளோரா மேஜர் ஜெனரலாக பதவி உயர்ந்திருப்பது சிறப்பான மைல்கல்லாகும் எனப் பாராட்டி நேற்று ட்வீட் செய்திருந்தார்.
மேலும் அவர், பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை மேற்கோள் காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியிருந்தார்.
“பெண்களால் முன்னேறக்கூடும்-நம் வண் தமிழ் நாடும் எந்நாடும்” என அவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக உயர்ந்திருப்பது சிறப்பான மைல்கல் எனக் குறிப்பிட்ட முதல்வர், அவரது அபாரமான பணிக்கும் சேவைக்கும் ஆர்வத்துக்கும் வணக்கங்கள் என்றும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
பதிவை நீக்கிய ராணுவம்

பட மூலாதாரம், @KanimozhiDmk
இக்னேசியஸ் டெலாஸ் புளோராவை வாழ்த்தி முதல்வர் ட்வீட் செய்த பிறகு, இந்திய ராணுவம் தனது வாழ்த்துப் பதிவை ட்விட்டரிலிருந்து எந்த காரணமும் இல்லாமல் நீக்கிவிட்டது.
முதல்வர் ட்வீட் செய்த பிறகு, இந்திய ராணுவம் ஏன் தனது பதிவை நீக்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ்நாடு முதல்வர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்தியம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியர் என்பதே பெருமை – முன்னாள் ராணுவத்தினர் சங்கம்
இந்திய முன்னாள் ராணுவத்தினர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் இதுகுறித்து பிபிசி தமிழிடம் கூறுகையில், “ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் பிராந்தியம், மொழி, மதம் போன்ற அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது," என்று தெரிவித்தார்.
"ராணுவத்தில் இணைந்த பிறகு இந்தியர் என்ற உணர்வு மட்டுமே இருக்க வேண்டும். மணிப்பூரில் கலவரம் போன்ற நெருக்கடிகள் நிலவும் இந்தச் சூழலில் ராணுவத்தினர் எல்லோருக்கும் பொதுவானவர்கள் என்று மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்,” என்றார்.
“அதே ட்வீட் மீண்டும் பதிவிடப்படும்” - இந்திய ராணுவம் விளக்கம்

பட மூலாதாரம், @HQ_IDS_India
இந்நிலையில், இந்திய ராணுவம் தனது ட்வீட்டை நீக்கியதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய இந்திய ராணுவத்தின் செய்தித்தொடர்புத் துறை அதிகாரி, “இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்தியத்தின் கீழ் இக்னேசியஸ் டெலாஸ் புளோரா ஜூலை 31ஆம் தேதி வரை பணியில் இருந்தார். ஆகஸ்ட் 1 முதல் டெல்லியில் உள்ள ஆர் அண்ட் ஆர் ராணுவ மருத்துவமனையில் பணிபுரிகிறார்.
எனவே அவர் ஐடிஎஸ் (Indian Defence Staff) எனும் இந்திய பாதுகாப்பு ஊழியர் பிரிவின் கீழ் இனி பணிபுரிகிறார். ஆகவே, அவரது பதவி உயர்வு குறித்த தகவலை ஐடிஎஸ் தான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். நீக்கப்பட்ட அதே வார்த்தைகள் கொண்ட ட்வீட் மீண்டும் ஐடிஎஸ் பிரிவினரால் பதிவிடப்படும்,” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய ராணுவத்தின் ஐடிஎஸ் பிரிவினர் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக இக்னேசியஸ் டெலாஸ் புளோராவுக்கான வாழ்த்து ட்வீட்டை பதிவு செய்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












