தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை மரணம் - யார் தவறு?

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கடந்த மாதம் கை அகற்றப்பட்ட நிலையில், தற்போது அக்குழந்தை உயிரிழந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலையில் குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் தாயார் அஜிஸா,

“மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடைய அலட்சியத்தின் காரணமாகத்தான் எனது குழந்தையின் கை அழுகி பின் அகற்றப்பட்டது. கை அகற்றப்பட்டதற்கு நீதி வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்திருந்தேன். ஆனால் அதற்கான தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. ஒரு வாரமாக குழந்தைக்கு சுயநினைவே இல்லை. ஐசியூவில் இருந்த மூன்று நாட்களில் அவனுக்கு மூளை வேலை செய்யவில்லை” என கூறினார்.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

அரசு மருத்துவமனை விளக்கம்

இந்நிலையில், குழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கம் அளித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "குறை பிரசவத்தின் பிறந்த குழந்தைக்கு மூளையில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தையின் தலை அளவு அதிகரிக்க ஆரம்பித்தது. எனவே, தலையில் இருக்கும் நீரை வெளியேற்ற குழாய் பொருத்தப்பட்டது. குழந்தைக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்திறன் குறைபாடும் இருந்தது.

குழந்தைக்குப் பொருத்தப்பட்ட குழாய் வெளியேறியதால் மே 25ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே மாற்று குழாய் பொருத்தப்பட்டது. குழந்தையில் வலது கை அழுகிய நிலையில், உயிரை காப்பாற்றும் பொருட்டு கடந்த ஜூலை 2ஆம் தேதி குழந்தையின் கை அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து, குழந்தை தீவிர சிகிச்சை நிபுணர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபுணர், வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தக்கசிவு நிபுணர், வாத நோய் நிபுணர், இருதயநோய் நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர், மரபியல் நிபுணர் மற்றும் கதிரியக்க நிபுணர் ஆகியோர் அடங்கிய பல்துறை மருத்துவர் குழுவால் குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிக அளவு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இருந்தபோதிலும், குழந்தைக்கு தொடர்ந்து தொற்று இருந்தது. ரிவிஷன் ஷன்ட், செயற்கை சுவாசம் போன்றவைக்கு சிகிச்சை குழுவினர் பரிந்துரை அளித்தபோதும் பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். மருத்துவ குழுவினரால் தீவிரமாக கண்காணித்தபோதும் ஆகஸ்ட் 6ஆம் தேதி அதிகாலை 5.42 மணிக்கு குழந்தை உயிரிழந்துவிட்டது` என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷன்ட் தொற்று, குறைப்பிரசவம், வைட்டமின் டி குறைபாடு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, ஹைப்போ தைராய்டிசம் உள்ளிட்டவை காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

பின்னணி என்ன?

தஸ்தகீர் - அஜிஸா தம்பதிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை ஒன்று பிறந்தது. 40 வாரங்களில் பிறப்பதற்குப் பதிலாக 32 வாரங்களிலேயே பிறந்த அந்தக் குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்ததால் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் தலை அளவு அதிகரிக்க ஆரம்பித்தது. சராசரியாக 37 செ.மீ. இருக்க வேண்டிய தலையின் சுற்றளவு 61 செ.மீ. அளவுக்கு அதிகரித்தது.

இதனால், கடந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அந்தக் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதன் பெற்றோர் சேர்த்தனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் அந்தக் குழந்தை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

அங்கு, தலையில் இருக்கும் நீரை வெளியேற்ற தலையிலிருந்து வயிற்றுக்கு ஒரு குழாய் பொருத்தப்பட்டது. தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு பெற்றோர் வீடு திரும்பினர்.

குழந்தைக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்பட்டதால், பெற்றோர் ராமநாதபுரத்திற்குத் திரும்பாமல், சென்னையிலேயே தங்கிவிட்டனர்.

இந்த நிலையில், குழந்தைக்குப் பொருத்தப்பட்ட குழாய், குழந்தையின் ஆசனவாய் வழியாக வெளியேறிவிட்டது. இதையடுத்து குழந்தை மே 29ஆம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழாய் பொருத்தப்பட்டது.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

இதற்குப் பிறகு குழந்தைக்கு மருந்தும் திரவ உணவும் ஏற்றுவதற்காக அதன் வலது கையில் பொறுத்தப்பட்ட ஊசியின் காரணமாக, கை அழுக ஆரம்பித்ததாகவும் செவிலியர்கள் அலட்சியமாக ஊசியை பொருத்தியதாலேயே இந்த நிலை ஏற்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய குழந்தையின் தந்தை தஸ்தகீர், "வியாழக்கிழமையன்று (மே 29) அந்த ஊசி பொருத்தப்பட்ட பிறகு குழந்தை ரொம்பவும் அழ ஆரம்பித்தது. அது வலியால் அழுகிறது என பெற்ற தாய்க்குத் தெரியாதா?

இதனால், என் மனைவி திரும்பத் திரும்ப செவிலியர்களிடம் சென்று குழந்தை வலியால் அழுவதாகக் கூறினார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இதனால், நான்காவது முறையாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றே காட்டினாள். அப்போது, இந்த ஊசியை அகற்றிவிட்டால் குழந்தைக்கு எப்படி மருந்தைச் செலுத்துவது என்று கேட்டார்கள். பிறகு, என் மனைவி வலியுறுத்தியதால் ஊசியை அகற்றினார்கள்.

பிறகு குழந்தையின் கை கொஞ்சம் கொஞ்சமாக கருக்க ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமை காலையில் வந்த மருத்துவரிடம் அதைச் சொன்னோம். அவர் ஒரு மருந்தை வாங்கித் தேய்க்கச் சொன்னார். அதைத் தேய்த்தோம். பிறகு யாரும் வரவில்லை. சனிக்கிழமையன்று விரல் நுனியில் தோல் உரிய ஆரம்பித்துவிட்டது. அப்போது வந்த மருத்துவர்களிடம் அதைக் காட்டினோம்.

பிறகு 11 மணிக்கு மேல் குழந்தையை ஸ்கேன் செய்தார்கள். அந்த ஸ்கேன் முடிவுகளைப் பார்த்த பிறகு, குழந்தையின் கையில் ரத்த ஓட்டம் இல்லாமல் போய்விட்டது. அதனால் கையை எடுக்க வேண்டும் என்றார்கள். இது முழுக்க முழுக்க செவிலியர்களின் தவறால்தான் ஏற்பட்டது," என்று குற்றம் சாட்டினார்.

இதை தொடர்ந்து குழந்தையின் வலது கை அகற்றப்பட்டது. மருத்துவர்களின் தவறால்தான் தனது குழந்தையின் கை பறிபோனதாக தாயார் அஜிஸா புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து , மருத்துவத்துறை சார்பில், சிகிச்சையில் தவறு நடந்திருக்கிறதா என்பதை விசாரணை செய்ய மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு
படக்குறிப்பு, குழந்தையுடன் தாய் அஜிஸா

இந்த குழு வெளியிட்ட அறிக்கையில், “ஜூன் 29ஆம் தேதி குழந்தையின் வலதுகையில் சிவப்பு நிறம் மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் தாய் அதனை பணியிலிருந்த செவிலியருக்குத் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ மாணவரும் அன்று இரவு குழந்தையை பரிசோதனை செய்துள்ளார்.

ஜூன் 30ஆம் தேதி உதவி மருத்துவர் மற்றும் பேராசிரியர் குழந்தையைப் பரிசோதனைசெய்து Thrombophlebitis (சிரை நாளங்களின் அழற்சி) என்று முடிவு செய்து அதற்கான சிகிச்சையை அளித்துள்ளார்கள்.

ஜூலை ஒன்றாம் தேதி நிற மாற்றம் அதிகரித்து, கை அசைவு குறைந்துவிட்டதால் மருத்துவர் பரிசோதனை செய்து இரத்த ஓட்டத்தில் குறைவு என்பதை உணர்ந்து, இரத்தநாளப் பிரிவு மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெற்றுள்ளனர்.

Doppler பரிசோதனை மூலம் இரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதை உறுதி செய்யப்பட்டது. இரத்தநாள அடைப்பினால் கையின் தசைககள் முற்றிலும் செயலிழந்து விட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வலதுகையை காப்பாற்றுவது கடினம் மற்றும் உடனடியாக அதை அகற்றாவிட்டால் உயிர் பாதிப்பு ஏற்படும் என்பதால் அன்று மாலையே குழந்தை எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, செயலிழந்த கை அகற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: