'பீர்' உடலுக்கு குளிர்ச்சியா? மிதமாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா? உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி செய்தியாளர்
மனிதர்களால் நீண்ட காலமாக பருகப்பட்டு வரும் மதுபான வகைகளில் பீருக்கு முக்கிய இடம் உண்டு. பிற மது வகைகளால் விஸ்கி, ரம், பிராந்தி, ஜின், வோட்கா, வைன் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பீரில் குறைந்த சதவீதமே ஆல்கஹால் உள்ளதால் அதனால் உடலுக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை என்று பலரும் நம்புகின்றனர்.
பீர் குறித்த மக்களிடம் நிலவும் இதுபோன்ற பொதுவான புரிதல்களையும் அவற்றின் உண்மை நிலையையும் பார்க்கலாம்.
பீர் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியா?
வெயில் காலத்தில் பீர் குடிப்பதால் உடல் சூட்டை தணித்துக்கொள்ளலாம் என்றும் பீர் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி என்றும் ஒரு புரிதல் நிலவுகிறது. இது தவறான புரிதல் என்கிறார் கல்லீரல் மற்றும் குடல் சிகிச்சை சிறப்பு நிபுணரான மருத்துவர் எஸ். அருள்பிரகாஷ்.
“பீர் உள்ளிட்ட அனைத்து மதுபானங்களிலும் ஆல்கஹால்தான் உள்ளது. ஆல்கஹாலை குளிர்ச்சியாக எடுத்துக்கொண்டாலும், அறைவெப்பநிலையில் எடுத்துக்கொண்டாலும் பாதிப்பு ஒன்றுதான். பீர் குடிப்பதால் சூடு தணியும் என்று அறிவியல்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை” என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லதா?
மிதமான அளவில் பீர் குடிப்பதால் இதயத்துக்கு நல்லது என்று ஆய்வு முடிவுகள் கூறுவதாக பலரும் நம்புகின்றனர். ஆனால், இது உண்மையல்ல என்கிறார் ஓமந்தூரார் தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இருதயவியல் நிபுணரான மருத்துவர் நவீன்ராஜா.
“பீர் என்றல்ல, எந்த வகையான மதுபானங்களை குடித்தாலும் உடலுக்கு பாதிப்புதான். மிதமான அளவில் மதுவை எடுத்துக்கொண்டால் அது இதயத்தை பாதுகாக்கும் என்று ஏற்கனவே ஒருசில ஆய்வுகள் கூறின. ஆனால், அதற்கு பின்னர் வந்த ஆய்வுகள் எல்லாம், எந்த அளவில் மதுவை எடுத்துக்கொண்டாலும் அதனால் இதயத்துக்கு பாதிப்புதான் என்று கூறுகின்றன” என்றார்.
பீர் உள்ளிட்ட மதுபானங்களை அருந்துவதால் இதயத்துக்கு நல்லதற்கு பதிலாக தீங்கே ஏற்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். “மதுவை ஒருவர் அருந்தினாலே அவரது இதயத்துடிப்பு அதிகமாகும், ரத்தக்கொதிப்பு அதிகமாகும். ஏற்கனவே இருதய நோய் உள்ளவர்கள் மது அருந்தினால் பக்க விளைவுகள் ஏற்படும்.
அதேபோல், ஒருசிலர் வார விடுமுறை, சுற்றுலா செல்வது போன்ற நாட்களில் சிலர் அதிகமாக மது அருந்துவார்கள் இதனை பிஞ்ச் மதுப்பழக்கம் (binge alcohol consumption) என்று அழைக்கின்றனர். இவ்வாறு அதிகளவில் மதுவை அருந்தும்போது இதயத்துடிப்பு சீரற்றதாக மாறிவிடுகிறது. இதய படபடப்பு, மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன. இதனை ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம் என்று அழைக்கின்றனர்.
நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து மதுவை அருந்தி வருபவர்களுக்கு ஆல்கஹாலிக் கார்டியோமையோபதி (Alcoholic cardiomyopathy) என்ற பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் இதயத்தின் அறைகள் விரிவடைந்து இதய செயலிழப்பு ஏற்படுகிறது. ” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
பீர் குடிப்பது சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்றுமா?
குருகிராமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரிஸ்டின் கேர் என்ற சுகாதார நிறுவனம் சிறுநீரகம் தொடர்பாக இந்தியர்களிடம் நிலவும் நம்பிக்கைகள் தொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மூன்றில் ஒருவர் பீர் குடிப்பதால் சிறுசீரகத்தில் உள்ள கற்கள் குறையும் என்று நம்புவது தெரியவந்தது.
ஆனால், இது உண்மையல்ல என்று சீறுநீரக மருத்துவர்கள் கூறுகின்றனர். மது குடிப்பதால் சிறு நீரகத்துக்கு நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை, அதேபோல் நன்மையும் இல்லை என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
பீர் குடிப்பதால் உடல் பருமன் ஆகுமா?
ஒல்லியாக இருப்பவர்கள் பீர் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் பலர் நம்புகின்றனர். பீர் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கும் என்பது உண்மைதான் ஆனால், அவை ஆரோக்கியமான உடல் எடை அல்ல என்கிறார் ஊட்டச்சத்து நிபுணரான மீனாக்ஷி பஜாஜ்.
“ ஒரு கிராம் ஆல்கஹால் 7 கலோரியை வழங்குகிறது. அப்படியிருக்கும்போது பீர் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கத் தான் செய்யும். ஆனால், அவை ஆரோக்கியமான உடல் எடை இல்லை. தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு அதிகமாக மதுவை குடித்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்” என அவர் கூறுகிறார்.
உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் பால், வாழைப்பழ மில்க்ஷேக், வேர்க்கடலை, பாதம் போன்றவை சாப்பிடலாமே? ஏன் ஆரோக்கியமற்ற முறையில் ஆரோக்கியமற்ற உடல் எடையை கூட்ட வேண்டும் என அவர் கேள்வி எழுப்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பீரை தலையில் தடவுவது மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்குமா?
பீரை ஷாம்பு போன்று தலையில் தடவுவது மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது. இதனை பரிந்துரைக்கும் வீடியோக்களையும் நாம் பார்க்க முடிகிறது. இது எந்த அளவு உண்மை என்று இந்திய சருமநோய், பால் வினை நோய் மற்றும் தொழுநோய் மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள மருத்துவர் தினேஷ் குமாரிடம் பேசினோம்.
“முடி என்பது இறந்துபோன செல்களை கொண்டது. அதனால்தான் முடிவை வெட்டும்போது, நமக்கு வலி ஏற்படுவதில்லை. எனவே, இறந்துபோன செல்களின் மீது பீர் ஆகட்டும் அல்லது ஷாம்பு ஆகட்டும் நீங்கள் தடவுவது மூலம் வளர்ச்சி ஏற்படாது.
இதேபோல், ஒருசிலர் எலுமிச்சை, முட்டை போன்றவற்றை முடிகளில் தடவுவார்கள் இதன் மூலமும் ஒரு பயனும் கிடையாது. முடியின் ஆரோக்கியம் என்பது வேரில் இருந்து வருவது. நீங்கள் மயிர்கால்களில் இவற்றை தடவுவது மூலம் முடி ஆரோக்கியமடையும், வளர்ச்சி அடையும் என்று அறிவியல் கூறவில்லை. எண்ணெய்யை பொறுத்தவரை நீங்கள் அதை முடியில் தடவுவது முடிக்கு பொலிவை தருமே தவிர அதன் மூலம் வளர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்காது. ” என்று விளக்கம் அளித்தார்.
அதேநேரத்தில், மதுவை அதிகம் அருந்துவதன் மூலம் கல்லீரல் பாதிக்கப்பட்டு வைட்டமின் குறைபாடு போன்றவை ஏற்பட்டு முடி கொட்ட வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
குறைவாக பீர் குடிப்பதால் உடலுக்கு எதுவும் ஆகாதா?
கடந்த ஜனவரி மாதம் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட குறிப்பில், ‘எந்த அளவிலும் மது அருந்துவது நம் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது அல்ல’ என்று தெரிவித்திருந்தது. குறைந்தபட்சம் 7 விதமான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு மது காரணமாக இருப்பதாகவும் கூறியிருந்தது.
இதனை மேற்கோள் காட்டும் மருத்துவர் அருள் பிரகாஷ், “விஷத்தை எந்த அளவில் அருந்தினாலும் விஷம்தான். அதுபோல்தான் மதுவும். ஒருசிலர் பீரில் குறைந்த அளவே ஆல்கஹால் இருப்பதால் அதனை குடிப்பதால் எதுவும் பாதிப்பு ஏற்படாது என்று நினைக்கிறார்கள். எந்த அளவில் குடித்தாலும் மது ஆபத்துதான் என்று உலக சுகாதார நிறுவனமே கூறுகிறது. மேலும், ஒருவர் மிதமான அளவில்தான் மது அருந்துகிறார் என்று எப்படி வரையறுப்பது? மற்ற மது வகைகளை அருந்துபவர்களுக்கு 5 ஆண்டுகளில் கல்லீரல் பாதிப்பு வருகிறது என்றால் பீர் குடித்தால் பத்து ஆண்டுகளில் அந்த பாதிப்பு ஏற்படும்” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












