சிறைக்கு சென்று வந்ததால் 4 ஆண்டுகளாக ஊருக்குள் அனுமதிக்கப்படாத குடும்பம்

சிறைக்கு சென்று வந்ததால் ஊரை விட்டு குடும்பத்துடன் ஒதுக்கி வைப்பு
படக்குறிப்பு, சிறைக்கு சென்று வந்ததால் ஊரை விட்டு குடும்பத்துடன் ஒதுக்கி வைக்கப்பட்டனர்
    • எழுதியவர், சுஜாதா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சிறைக்கு சென்று வந்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பங்கள் 4 ஆண்டுகளாக ஊருக்கு வெளியே வசித்த அவல நிலை வேலூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்காவில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். ஒடுக்கத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சி சுமார் 48 கிராமங்களை உள்ளடக்கியது.

இந்த ஊராட்சியில் உள்ள சின்ன எட்டிப்பட்டி ஊரை சேர்ந்த சின்னசாமி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதே ஊரை சேர்ந்த முத்து மற்றும் பொன்னுசாமி 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தனர். வழக்கின் விசாரணையில் இரண்டு பேரும் குற்றமற்றவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்கள் இருவரையும் விடுதலை செய்தது.

சிறைக்கு சென்று வந்த காரணத்தினால் நீதிமன்றம் விடுதலை செய்த பிறகும், அவர்களும் அவர்களின் குடும்பங்களும் ஊர் உத்தரவின் படி கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்கு சென்று வந்த இரண்டு பேர் உட்பட ஐந்து பேரின் குடும்பங்களை சார்ந்த 20 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க உத்தரவிட்டுள்ளார் சின்ன எட்டிப்பட்டியின் ‘ஊரான்’ என்றழைக்கப்படும் ஊர்த்தலைவர் பழனி.

தவறு செய்யவில்லை என்று நீதிமன்றமே கூறிய பிறகும், ஏன் தங்களை ஊரை விட்டு தள்ளி வைக்கிறீர்கள் என ஊரானிடம் கேட்டதாக முத்து மற்றும் பொன்னுசாமி தெரிவிக்கின்றனர். அப்போது “உங்களை ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் குடும்பத்திற்கு ஒரு லட்சம் வீதம் 5 குடும்பத்திற்கு அபராதம் கட்டிவிட்டு நீங்கள் ஊரில் இருக்கலாம் என்று கூறிவிட்டார்” என ஊரான் கூறியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நான்கு வருடங்களாக ஊருக்கு வெளியில் குடும்பம்

சிறைக்கு சென்று வந்ததால் ஊரை விட்டு குடும்பத்துடன் ஒதுக்கி வைப்பு
படக்குறிப்பு, ஊருக்குள் சேர்த்துக் கொள்ள பணம் கேட்டதாக ஊர் தலைவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

அதன் பிறகு அவர்கள் ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள அவர்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தை சார்ந்த சுந்தரேசனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியபோது நான்கு வருட காலங்களாக அவர்கள் பட்ட இன்னல்கள் குறித்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

“செய்யாத குற்றத்தை சுமத்தி என்னுடைய மாமா ,முத்து மற்றும் அப்பா,பொன்னுசாமி ஆகியோரை சிறைக்கு அனுப்பினார்கள். எங்கள் உறவினர்களையும் சேர்த்து குடும்பத்தோடு நான்கு ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். அதன் பிறகும் எங்களுடைய குடும்பங்களை ஊரில் நடக்கக்கூடிய எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள இதுவரை அனுமதிக்கவில்லை. ஒரு சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை தேடி வாழ்ந்து வருகின்றனர் ” என்றார் சுந்தரேசன்.

ஊருக்குள் சேர்க்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஊர் தலைவர் மீது காவல்துறையில் புகார்

இந்நிலையில் முத்து மற்றும் பொன்னுசாமி உட்பட ஐந்து குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வேப்பங்குப்பம் காவல் துறையில் புகார் அளித்தனர்.

அவர்களின் புகார் மனுவில், “ கடந்த ஆறு வருடங்களாக ஊருக்குள் அனுமதிக்காமல் பணத்தைக் கேட்டு ஊரான் பழனி மிரட்டல் விடுகிறார். நாங்கள் செல்லும் வழிகளில் கொடிய முள் போட்டு வழிமறிப்பதோடு, குடிநீர் குழாய்களையும் உடைத்து விட்டார். ஊருக்குள் செல்ல அனுமதி மறுத்து துன்புறுத்தி வருகிறார். பணம் கேட்டு மிரட்டும் ஊரானை கைது செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறை விசாரித்து அவர்களை சமாதானம் செய்து ஊருக்குள் அனுப்பி வைத்தனர்.

புகாருக்கு பின் ஊருக்குள் அனுமதி

“தவறு செய்தவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது வழக்கம் தான். இது நான் தனித்து எடுத்த முடிவல்ல, கிராமமாக ஒன்றாக எடுத்த முடிவாகும்.” என்று ஊர் தலைவர் பழனி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். காவல் நிலையத்தில் அழைத்து பேசிய பிறகு, தற்போது ஊருக்குள் அனுமதித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பீஞ்ச மந்தை ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தன் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில்தான் தனக்கு தெரிய வந்ததாக கூறினார். “ஊரில் மற்றவர்கள் யாரும் இந்த தவறுகளை செய்யக்கூடாது என்பதற்காகவே அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர் ஊரான் பழனி மீது நான்கு வருடம் கழித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் மலைவாழ் மக்கள் அவர்களுக்குள்ளாக பேசி முடித்துக் கொள்வார்கள் அதையும் மீறி ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தை சார்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தது இதுவே முதன்முறையாகும்” என்றார்.

காவல் நிலையத்தில் சமாதானம்

ஊர் தலைவர் ஒதுக்கிவைத்தார் என்று காவல் துறையில் புகார் அளித்த போதும், முத்து மற்றும் பொன்னுசாமி குடும்பங்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டனர் என்கிறார் வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் நாகராஜ்.

“இந்த மலை கிராமத்தில் சிறை சென்று வந்தவர்களை தண்ணீர் ஊற்றி ஊருக்குள் அழைத்து கொள்வது வழக்கம். அப்போது, அவர்களிடம் ஆயிரம் இரண்டாயிரம் பணத்தை பெற்றுக் கொள்வார்கள். பொன்னுசாமி மற்றும் முத்துவின் குடும்பங்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை யாரும் ஒதுக்கி வைக்கவில்லை. மீண்டும் ஊருக்குள் செல்ல அவர்கள் விரும்பவே, அதற்கான பேச்சுவார்த்தைகள் ஊருடன் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறை தலையிட்டு இரு தரப்பினரையும் சேர்த்து வைத்துள்ளோம். ஊர்த்தலைவர் அவர்களிடம் பணம் கேட்கவில்லை. இனி யாராவது பணம் கேட்டாலோ, ஊருக்குள் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தாலோ அவர்கள் மீது வழக்கு பதியப்படும் என்று எச்சரித்துள்ளோம்” என்றார்.

ஊர் வழக்கத்தில் தான் தலையிட முடியாது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலர் ராமச்சந்திரன் தெரிவித்தார். “மலை கிராமங்களில் மலைவாழ் மக்கள் ஏதேனும் தவறு செய்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் வழக்கம் அவர்களுக்குள்ளேயே உள்ளது. அது ஊர் வழக்கம். அதில் நான் தலையிட முடியாது. மேலும் இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் துறைக்கு மனு அளித்தால் நாங்கள் நேரில் சென்று ஆய்வு செய்து குற்றத்தின் அடிப்படையில் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை மற்றும் ஆர் டி ஓ விற்கு பரிந்துரை செய்வோம்” என்று அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: