சாதிவாரி கணக்கெடுப்பு: உயர் சாதியினருக்கு இந்த கேள்விகள் சங்கடம் தருவது ஏன்?

பீகாரில் நடந்த கணக்கெடுப்பு
படக்குறிப்பு, சில இடங்களில் கணக்கெடுப்பாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மக்கள் தயங்கினர்.
    • எழுதியவர், சந்தன் குமார் ஜாஜ்வாடே
    • பதவி, பிபிசி நியூஸ்

பிகார் மாநிலத்தில் நடக்கும் சாதிவாரி ஆய்வுக்கு (Caste Based Survey) அம்மாநிலத்தில் உயர்சாதியினரிடையே கோபமும் அதிருப்தியும் ஏற்படுத்தியிருக்கிறது. பலர் ஆய்வு செய்யச் சென்ற கணக்கெடுப்பாளர்களிடம் தங்கள் தகவல்களைச் சொல்ல மறுத்துவிட்டனர்.

முன்னர், இந்த ஆய்வினை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் பதிலளித்த பிகார் அரசு, இது சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (Caste Based Census) அல்ல, சாதிவாரி ஆய்வு (Caste Based Survey) மட்டுமே என பதிலளித்திருந்தது.

மேலும், சென்சஸ் கணக்கெடுப்பைப்போல, இந்த ஆய்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மக்கள் கட்டாயம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதல்ல, இது விருப்பத்தின் பேரிலேயே நடத்தப்படுகிறது என்றும் கூறியிருந்தது. இந்த ஆய்வு நடத்தப்படுவதன் நோக்கம், மாநிலத்தின் சமூகப் பொருளாதார நலத்திட்டங்கள் மக்களுக்குச் சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்பதே, எனவும் பிகார் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள பிபிசி களத்திற்குச் சென்றது.

பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள கன்கர்பாக்கில் வசித்து வரும் பிகே சிங், அம்மாநில அரசு ஏன் சாதிவாரி ஆய்வை நடத்துகிறது என கோபத்தில் ஆழ்ந்துள்ளார்.

அவருடைய வேலை, இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கணக்கெடுக்கும் குழுவினருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கணக்கெடுக்கும் குழுவினர் வீட்டுக்கு வந்ததும், கதவைத் திறந்த பிகே சிங், அக்குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களுடன் ஒரு மோதல் போக்கைக் கடைபிடித்தார். முதலமைச்சர் நிதிஷ் குமார் உயர் சாதியினருக்கு எந்த வேலைவாய்ப்பையும் அளிக்கவில்லை என குற்றம்சாட்டுகிறார்.

"உயர் சாதியினரிடையே பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் இல்லையா? எங்களுடைய பொருளாதார நிலை என்ன என்றும் இந்த கணக்கெடுப்பாளர்கள் கேட்கின்றனர். எனக்கு பாட்னாவில் ஒரு வீடு உள்ளது. அதே போல் கிராமத்திலும் ஒரு வீடு உள்ளது. நிதிஷ்குமார் என்னவெல்லாம் செய்தாரோ, அது அவருடைய சாதிக்காக மட்டுமே செய்துள்ளார்," என்கிறார் பிகே சிங்.

களத்தில் வீடு வீடாகச் சென்று தகவல்களைத் திரட்டும் கணக்கெடுப்பாளர்களிடம் பொதுமக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை ஆழமாகக் கவனிக்கும் போது, உயர் சாதியினர் சாதிவாரி ஆய்வை விரும்பவில்லை என்பது தெரியவருகிறது. இது போன்ற குடும்பங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தபோதிலும், சில குடும்பத்தினர் அவர்களைப் பற்றிய எந்த விவரங்களையும் கணக்கெடுப்பாளர்களுக்குக் கொடுக்கவில்லை.

பொதுவாக கணக்கெடுப்பாளர்களிடம் அவர்கள் கேட்கும் விவரங்களை அனைவரும் எந்த வித தயக்கமும் இன்றி அளிப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், கல்வித் தகுதி, சொத்து விவரங்கள் போன்ற தகவல்களை அளிப்பதில் சிலர் அசௌகரியங்களையும் எதிர்கொண்டனர்.

இந்த கணக்கெடுப்பின் போது, எது மாதிரியான கேள்விகளுக்கு பொதுமக்கள் எளிதில் பதில் அளித்தனர் என்றும், எந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலை இருந்தது என்பதையும் கண்டுபிடிக்க பிபிசி முயன்றது.

பீகாரில் நடந்த கணக்கெடுப்பு
படக்குறிப்பு, சாதிவாரியான விவரங்கள் இருந்தால் தான் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என மாநில அரசு கூறுகிறது.

கணக்கெடுப்புக்கு எதிராக எழுந்த குரல்கள்

கன்கர்பார்க்கில் கோதி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டுக்கு கணக்கெடுப்பாளர்கள் சென்ற போது, சாதிவாரி ஆய்விற்காக கேட்கப்பட்டிருந்த கேள்விகள் தவறானவை என அவருடைய குடும்பத்தினர் நேரடியாகக் குற்றம் சாட்டினர்.

அப்பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம், எந்த ஒரு விவரத்தையும் கணக்கெடுப்பாளர்களிடம் அளிக்க மறுத்துவிட்டது. எங்களிடம் பேசவும் அக்குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இது போன்ற ஆய்வு நடத்தும் போது அங்கே அரசின் நோக்கம் தவறானது என அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவர் ஒரு உயர் சாதிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கணக்கெடுப்பாளர் குழுக்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு அரசு அளித்துள்ள கேள்விகளுக்கான பதில்களைப் பெறுவது ஒரு முக்கியக் கடமை எனத்தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் முதல் கட்டப் பணிகள் கடந்த ஜனவரியில் நடந்தபோது, வீடுகளின் எண்ணிக்கையும் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த ஆய்வின், ஒவ்வொரு குடும்பமும் வசித்து வரும் வீடுகளுக்கு ஒரு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

பீகாரில் நடந்த கணக்கெடுப்பு
படக்குறிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பின் போது, அதற்குச் சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் பொதுமக்கள் விமர்சித்துள்ளனர்.

பிகார் அரசின் சாதிவாரி ஆய்வில், 2 கோடியே 59 லட்சம் குடும்பங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆய்வின் இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி மே மாத இறுதியில் முடிவடைய இருந்தன. ஆனால், மே மாத முதல் வாரத்தில் ஆய்வுப் பணிகளுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் தடைவிதித்துவிட்டது.

பின்னர் இம்மாதம் முதல் தேதியன்று இந்தத் தடை அகற்றப்பட்டு மீண்டும்ஆய்வுப் பணிகள் வேகமெடுத்தன.

இரண்டாம் கட்டப் பணிகளின் போது, ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றிய விவரங்களைக் கேட்கும் விதமாக 17 கேள்விகள் அடங்கிய படிவங்களை அரசு வெளியிட்டது. இதில் சாதிவாரியான தகவல்களையும் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பணிகளின் போது, மாநிலம் முழுவதும் அனைத்து குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு, களப்பணிகள் முழுமையாக நிறைவுபெற்றன. நீதிமன்றத் தடை இல்லாமலிருந்திருந்தால் இந்த மாதத்துக்குள் அனைத்து குடும்பங்களைப் பற்றிய விவரங்களும் முழுமையாக பதிவேற்றப்பட்டு அப்பணிகள் முடிக்கப்பட்டிருக்கும்.

இருப்பினும் இந்தக் கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான அனைத்து மனுக்களையும் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் 7-ம் தேதியன்று அறிவித்தது.

பீகாரில் நடந்த கணக்கெடுப்பு
படக்குறிப்பு, இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் போது ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள 17 கேள்விகளை அரசு எழுப்பியிருந்தது.

சாதிவாரி கணக்கெடுப்பின் போது கேட்கப்பட்ட கேள்விகள்

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பின் போது, விவரங்களை சேகரிப்பதில் மக்களிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள் இவைதான்:

  • குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்கள்
  • ஒவ்வொரு உறுப்பினரின் வயது, பாலினம், மதம், மற்றும் சாதி
  • குடும்பத்தில் எந்த உறுப்பினர் எந்த அளவிற்கு கல்வி கற்றுள்ளார்
  • குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்? வணிகம், வேலை அல்லது படிப்பு போன்றவை.
  • குடும்பத்தில் யாருடைய பெயரில் வீடு அல்லது நிலம் எங்கெல்லாம் உள்ளது
  • குடும்பத்தில் யாருடைய பெயரிலாவது விவசாய நிலம் இருக்கிறதா, இல்லையா?
  • நிலம் அல்லது வீடு இருந்தால், அதன் முழுமையான விவரங்கள்
  • குடும்ப உறுப்பினர்களிடம் மடிக்கணினி அல்லது கணினி இருந்தால் அதுபற்றிய விவரங்கள்
  • வீட்டில் இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் இருந்தால் அது பற்றிய விவரங்கள்
  • குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் அனைத்து வருவாய் ஆதாரங்களிலிருந்தும் மொத்த வருமானம் என்ன?

உண்மையில், இதுபோன்ற கேள்விகள் மூலம், சாதி குறித்த தகவல்களை சேகரிக்க மட்டுமே அரசு விரும்புகிறது.

பொருளாதாரம், கல்வி மற்றும் பிற தகவல்களைப் பெறுவது அரசின் கொள்கைகளை வகுப்பதில் உதவும் என்று அரசு கூறுகிறது.

மேலும், மாநிலத்தின் மக்கள் தொகை குறித்த முழுமையான தகவல்களை வைத்திருப்பது அரசின் திட்டங்களின் பலன்களை ஏழைகளுக்கு எடுத்துச் செல்ல உதவும் என்றும் அரசால் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போதைய நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வியின் அரசு இந்த புள்ளிவிவரங்களை சாதி அடிப்படையிலான அணி திரட்டலுக்குப் பயன்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பீகார் தேர்தல் அரசியலில் சாதி அடையாளம் இன்னும் வலுவாக உள்ளது.

அரசு தனது திட்டங்களுக்கு முக்கியமானதாகக் கருதும் சில கேள்விகளை, மக்கள் எளிதில் அடையாளம் கண்டுள்ளனர் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

சங்கடத்தை ஏற்படுத்தும் சில கேள்விகள்

இந்த ஆய்வின் போது, ஒரு குடும்பத்திற்கு மொத்தமாக எவ்வளவு சொத்து உள்ளது அல்லது அவர்களின் வருமானம் போன்ற தகவல்களை கொடுக்க சிலர் தயாராக இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

இது தவிர, பல சந்தர்ப்பங்களில் மக்கள் தங்கள் கல்வி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. சாதிவாரி ஆய்வில் ஏன் இத்தனை கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பது பாட்னாவின் நந்த் ஷியாம் சர்மாவின் கேள்வியாக உள்ளது.

அவர் பாட்னாவில் ஒரு பெரிய வீட்டில் வசிக்கிறார். ஆய்வு நடத்தும் குழுவினரின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அவர் முதல் மாடியில் இருந்து கீழே வந்தார். அவரது வேலை அல்லது தொழிலைப் பற்றி கேட்டபோது, ​​​​அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க அவர் மிகவும் சங்கடப்பட்டார்.

வீட்டு வாடகையிலும் ஓரளவு வருமானம் கிடைக்கிறது. ஆனால், இது தொடர்பான கேள்விகளை எதிர்கொள்வதில் அவருக்கு போதுமான ஆர்வம் இல்லை. இருப்பினும் அவர் அளித்த பதில்களைக் கேட்டதும், கணக்கெடுப்பு குழுவினர் அதில் திருப்தி அடைந்தனர் என்பது மட்டும் தெரிந்தது.

இது தவிர, கல்வித் தகுதி தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளித்த போதும், அவர் சற்று சங்கடமாக இருந்தார். சாதி பற்றிய தகவல்களை சேகரிக்க ஒரு ஆய்வு நடத்தப்படும்போது, ​​​​மீதமுள்ள கேள்விகளின் தேவை என்ன என்பதே பொதுமக்களின் கேள்வியாக இருந்தது.

பீகாரில் நடந்த கணக்கெடுப்பு
படக்குறிப்பு, மாநிலம் முழுவதும் பெரும்பாலான மக்கள் சாதிவாரி ஆய்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்

சாதிவாரி ஆய்வுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு

சாதிவாரி ஆய்வுக்கு வந்த குழுவுடன் சுற்றித் திரிந்தபோது, ​​பெரும்பாலான மக்கள் இந்த ஆய்வை வரவேற்றது தெரியவந்தது.

பாட்னாவில் உள்ள சுதா குமாரியின் வீட்டிற்கும் ஆய்வுக் குழு ஒன்று வந்துள்ளது. உண்மையில், இந்த குழு ஒரு நாள் முன்னதாகவே அவரது வீட்டிற்கு வந்தது, ஆனால் வீட்டில் பலர் இல்லாததால் இரண்டாவது முறையாக மீண்டும் அக்குழு வந்ததால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆய்வு செய்ய வந்த அரசு ஊழியர்களை வீட்டுக்குள் உட்கார வைத்து, சுதா குமாரியின் குடும்பத்தினர் ஒவ்வொரு கேள்விக்கும் விரிவாகப் பதிலளித்தனர். உண்மையில், அவரது கணவரும் ஒரு வேலையில் இருக்கிறார். சுதா குமாரியும் ஒரு வேலையில் இருக்கும் நிலையில், அவரது வருமானமும் கணக்கெடுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டது.

இது குறித்து சுதா கூறுகையில், “எங்களுக்கு எந்தக் கேள்வியும் பிரச்னையாக இல்லை. கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் சரியானவை என்பது மட்டுமல்ல, சாதி பற்றிய தகவல்களை வழங்குவதிலும் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நாம் யார் என்பது அனைவருக்கும் தெரியும். அக்கம்பக்கத்தினரிடமும், உறவினர்களிடமும் மீண்டும் கூறுவதால் என்ன பாதிப்பு,” எனக்கேட்டார்.

பீகாரில் நடந்த கணக்கெடுப்பு
படக்குறிப்பு, குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், கல்வித்தகுதி, வேலை - தொழில் பற்றிய விவரங்களைக் கேட்கும் கேள்விகளும் ஆய்வில் இடம்பெற்றிருந்தன.

பாட்னாவைச் சேர்ந்த பிரபாத் குமார் என்பவரும் சாதிவாரி ஆய்வையும், கணக்கெடுப்பின் போது கேட்கப்பட்ட கேள்விகளையும் ஆதரிக்கிறார். அவர் கூறும்போது, ​​“எந்தக் கேள்வியிலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டில் எந்த சாதி மக்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை அறிவது மிகவும் அவசியம்," என்றார்.

மேலும், "வீடு, குடும்பம், வேலை, வருமானம் என எதைக் கேட்டாலும் அதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன்," என்றார்.

இதற்கிடையே, சாதிவாரி ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், தனது பெயரை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசிய போது,"உண்மையில் யாராவது ஒருவர் அவரைப் பற்றி அல்லது அவரது குடும்பத்தைப் பற்றிய விவரங்களைத் தர முன்வரவில்லை என்றால் அது அவருக்கும், அவரது குடுமபத்துக்கும் தான் இழப்பை ஏற்படுத்தும்," என்று கூறினார்.

எந்த வகுப்பினரையோ, சாதியையோ பற்றிய சரியான புள்ளி விவரங்கள் அரசிடம் இல்லையென்றால், மக்கள் நலத்திட்டங்களை உருவாக்குவதில் அரசுக்கு சிரமம் ஏற்படும் என்றார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: