மணிப்பூரில் 75 பேருக்கு ஒரு பாதுகாப்பு வீரர் பணியில் இருந்தும் வன்முறைகள் இன்னும் தொடருவது ஏன்?

மணிப்பூர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகின் பார்வையே தற்போது மணிப்பூரின் மீது பதிந்துள்ளது.
    • எழுதியவர், தீபக் மண்டல்
    • பதவி, பிபிசி நியூஸ்

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தொடங்கிய வன்முறைகளைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை வீரர்கள் 40,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள், அஸ்ஸாம் ரைஃபிள் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர் உள்ளிட்ட பல்வேறு படைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மணிப்பூரின் மொத்த மக்கள் தொகை சுமார் 33 லட்சம். சராசரியாகப் பார்த்தால் 70 முதல் 75 பேருக்கு ஒரு பாதுகாப்புப் படை வீரர் என்ற எண்ணிக்கையில் அவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது போல் அதிக எண்ணிக்கையிலான படையினர் பயன்படுத்தப்பட்டும் வன்முறைகள் முடிவுக்கு வந்தபாடில்லை.

கடந்த இரண்டு - மூன்று நாட்களில் நடந்த புதிய வன்முறைகளில் மட்டும் 6 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய புதிய வன்முறைகளில் விஷ்ணுப்பூர் அருகே உள்ள க்வாட்டாவில் மெய்தேய் இனத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையாளர்கள் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தாக்கிக்கொள்கின்றனர். இது போன்ற ஆயுதங்கள் அங்குள்ள காவல் தலைமை அலுவலகத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டுவர 40,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்புக்கு இடையே, தாக்குதல்தாரிகள் பள்ளத்தாக்கிலும், மலைப்பகுதியிலும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குகின்றனர்.

இந்தியா மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகின் பார்வையே தற்போது மணிப்பூரின் மீது பதிந்துள்ளது. மணிப்பூரில் நடந்துவரும் இனக்கலவரம் தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் ஏராளமாக எழுதப்பட்டு வருகிறது.

இரண்டு பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டது தொடர்பாக ஜுலை 19-ம் பயங்கர வீடியோ காட்சிகள் வெளியான பின்னர் சர்வதேச ஊடகங்களின் மணிப்பூர் குறித்த கவலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்து தான் பிரதமர் நரேந்திர மோதி மணிப்பூர் வன்முறைகள் குறித்து முதன்முதலாக ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

அப்போது அவர், "இந்த நாட்டுக்கு அவமானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் எந்த நிலையிலும் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பமுடியாது," என்று தெரிவித்தார்.

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதமேந்திய குகி சமூகத்தினரும் இருப்பதே தற்போதைய வன்முறைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. மூ

இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 160 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், அவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோரின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

பல முறை ரத்தம் சிந்தப்பட்ட நிலையிலும் வன்முறைகள் முடிவுக்கு வருவது போல் தோன்றவில்லை. வெள்ளிக்கிழமையன்று விஷ்ணுப்பூர் அருகே உள்ள க்வாட்டா பகுதியில் மெய்தேய் இனத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டபின்னர் இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கடந்தும் வன்முறைச் சம்பவங்கள் இன்னும் ஏன் தொடர்கின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.

மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த இந்த மக்கள் மீது வாள்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களுடைய தலைகள் துண்டிக்கப்பட்டன. பின்னர் அவர்களுடைய உடல்கள் எரிக்கப்பட்டன.

இருசமூகத்தினரின் பகுதிகளுக்கு இடையே ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அப்பகுதியில் மெய்தேய் மற்றும் குகி சமூக மக்கள் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதைக் குறைக்கும் முயற்சிகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் மணிப்பூரில் மனித உரிமைச் செயல்பாட்டாளரான கே.கே. ஓ'நெயில், "குகி சமூகத்தினர் வசிக்கும் மலைப்பகுதிகளைத் தவிர்த்துவிட்டு பள்ளத்தாக்கில் இந்த பாதுகாப்பு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன," எனத்தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த பாதுகாப்பு மண்டலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான நிலப்பகுதிகள் அடங்கியுள்ளது ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அந்த நிலங்களில் நெற்பயிர்கள் விளைந்துள்ளன. அந்த நிலப்பரப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அங்கே அறுவடை செய்ய முடியாமல் மெய்தேய் மக்கள் தவிக்கின்றனர்.

அந்த நிலப்பரப்பில் குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுக்குளும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இந்த நிலப்பரப்பிலும் தற்போது வன்முறைகள் வெடித்துள்ளன. இது தான் தற்போதைய கலவரங்களுக்குக் காரணமாக உள்ளது.

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே வன்முறைகள் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.

இது குறித்து மனித உரிமைச் செயல்பாட்டாளரான ஓ'நெயிலிடம், 33 லட்சம் பேர் வாழும் ஒரு மாநிலத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டும் ஏன் வன்முறைகள் தொடர்கின்றன என நாங்கள் கேட்டபோது, "உண்மையில் அரசியலில் இருந்து பிரிக்கப்படும் வரை, இந்த வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது 40 ஆயிரம் என்பதைவிட ஒரு லட்சம் பாதுகாப்புப் படையினரைக் குவித்தாலும் வன்முறைகள் கட்டுக்குள் வராது," எனத் தெரிவித்தார்.

ஆனால், அமைதியை ஏற்படுத்த மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏன் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை?

இதற்குப் பதில் அளித்த ஓ'நெயில், "அரசியல் தலைவர்களை மாற்றுவதன் மூலம் அமைதி கிடைக்கும் என்பதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை. அமைதியை நிலைநாட்டுவதற்கு தற்போதைய அரசு ஒரு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் பலவீனமானவையாக இருக்கின்றன. வன்முறைகளைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் முடிவெடுக்கத் தெரியாதர்களும் இடம்பெற்றுள்ளனர்," என்றார்.

முதலமைச்சர் பதவியிலிருந்து பைரென் சிங்கை அகற்றினால் தான் இந்த வன்முறைகள் முடிவுக்கு வருமா?

இதற்குப் பதில் அளித்த ஓ'நெயில், "மாநிலத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்தும் தேவை உள்ளது. இதைத் தவிர வேறு வழிகள் இல்லை. மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினரிடையே வன்முறைகளைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கவேண்டும்," என்றார்.

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமவெளியும், மலைப்பகுதியும் வெறும் ஒன்றரை கிலோ மீட்டர் நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டுள்ளன.

மணிப்பூர் வன்முறைகள் குறித்து பிபிசி செய்தியாளர் நிதின் ஸ்ரீவஸ்தவா களத்திலிருந்து நேரடியாக தகவல்களை அளித்துவருகிறார்.

நாங்கள் அவரிடம் இதே கேள்வியை முன்வைத்து, பாதுகாப்புப் படையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஏன் வன்முறைகள் தொடர்கின்றன எனக்கேட்டோம்.

இதற்குப் பதில் அளித்த அவர், "இதற்குப் பதில் வேண்டுமென்றால், முதலில் மணிப்பூரின் புவியியலை நன்கு புரிந்துகொள்ளவேண்டும். மாநிலத்தின் மலை மற்றும் சமவெளிப்பகுதிகளில் குகி மற்றும் மெய்தேய் மக்கள் வாழும் நிலையில், இந்த இரண்டு நிலப்பரப்புகளும் அருகருகே அமைந்துள்ளன. மலைப்பகுதியில் குகி சமூகத்தினர் வாழ்ந்து வந்த நிலையில், சமவெளிப்பகுதியில் மெய்தேய் சமூகத்தினர் வாழ்ந்துவந்தனர். ஆனால் தற்போது இருபகுதிகளிலும் இரு சமூகத்தினரும் கலந்து வாழ்ந்துவருகின்றனர். மேலும் வெறும் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருசமூகத்தினரின் நிலப்பரப்பும் பிரிக்கப்பட்டுள்ளது. இரு பகுதிகளும் அருகருகே அமைந்துள்ளன. வன்முறைகள் முடிவுக்கு வராததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது," என்றார்.

வன்முறைகளைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினருக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளன. ஆனால் அவர்களால் அதைச் செய்யமுடியவில்லையே?

இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த நிதின் ஸ்ரீவஸ்தவா, "கடந்த ஒன்றரை மாதங்களாக வன்முறைக் கும்பல்கள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்துவதில்லை. தடிகள் மற்றும் அதைப் போன்ற சில பொருட்களை எடுத்து வருகின்றனர். அந்த கும்பல்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா என்றால் அப்படியில்லை. எப்போதெல்லாம் பாதுகாப்புப் படையினரின் கண் முன் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றனவோ, எப்போதெல்லாம் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றனவோ, எப்போதெல்லாம் பயங்கர கொள்ளை மற்றும் சூறையாடல்கள் நடக்கின்றனவோ அப்போது மட்டுமே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்த முடியும்," என்றார்.

மணிப்பூர் மாநில அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர ஏன் மாநில அரசால் முடியவில்லை?

இந்த கேள்விகளுக்குப் பதில் அளித்த போது, "இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர மணிப்பூர் அரசு எடுத்த நடவடிக்கைகள் ஏன் பலவீனமாக இருக்கின்றன என்பதை நாம் உற்றுநோக்கவேண்டும். வன்முறை வெடித்த போதே, அரசுப் பணிகளில் இருந்த மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினர் அவர்களுடைய பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். முஸ்லிம் மெய்தேய், நாகா மற்றும் தமிழர்கள் மட்டுமே தற்போது மணிப்பூர் அரசின் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். அதாவது அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளும் நிலை தற்போது இல்லை என்றே சொல்லவேண்டும்," என ஸ்ரீவஸ்தவா பதில் அளித்தார்.

"அரசு நிர்வாகப் பணிகள் உறுதியாக மேற்கொள்ளப்படும் வரை அமைதியை நிலைநாட்டுவது மிகவும் கடினமான பணியாகவே இருக்கும். மாநில அரசின் நிர்வாகம் உறுதியான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் போது தான் பாதுகாப்புப் படையினர் முழுமையாகச் செயல்படமுடியும்."

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூன்று மாதங்களைக் கடந்தும் ஏன் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த வன்முறைகள் எப்படித் தொடங்கின?

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், மெய்தேய் மற்றும் குகி இனத்தவரிடையே நிலவும் பிரச்சினை என்பது பல தசாப்தங்களைக் கடந்தது. ஆனால், இரு சமுகங்களுக்கும் சொந்தமான நிலங்களை வாங்குவது குறித்த உரிமை தொடர்பாக அண்மைக்காலங்களில் இருதரப்புக்கும் இடையே புதிய பிரச்னைகள் எழுந்தன.

கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம், மலைப்பகுதியில் உள்ள சுரசந்த்பூர் மற்றும் நோனி மாவட்டங்களில் 38 கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக முதலமைச்சர் பைரென் சிங்கின் அரசு அறிவித்தது. இது குகி சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உரிய முன்னறிவிப்பின்றி அவர்களுடைய கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது அரசின் மாபெரும் தவறு என குகி சமூகத்தினர் வாதிட்டனர். இதற்கிடையே, இப்படி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பாப்பி எனப்படும் போதைப் பொருள் தயாரிக்க உதவும் பயிர்களை இந்த ஆண்டு மார்ச் மாதம் மாநில அரசு அழித்தது.

இந்நிலையில், மெய்தேய் சமூக மக்கள் தங்களை பழங்குடியின மக்களாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் ஏப்ரல் 14-ம் தேதி மணிப்பூர் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில், மெய்தேய் மக்களின் கோரிக்கையைப் பரிசீலனை செய்ய மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவும் குகி கமூகத்தினரிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த உத்தரவின் படி, மெய்தேய் மக்களை பழங்குடியின மக்களாக அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகளை 4 வாரங்களுக்குள் மாநில அரசு மேற்கொள்ளவேண்டும்.

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மணிப்பூர் வன்முறையால் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு செய்தியில், வன்முறைகள் தொடங்கிய மே 3-ம் தேதிக்கு முன்னரே, அதாவது கடந்த ஏப்ரல் 27-ம் தேதி சுரசந்த்பூரில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை ஒரு கும்பல் தீ வைத்துக் கொளுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உடற்பயிற்சிக் கூடத்தை அடுத்த நாள் முதலமைச்சர் பைரென் சிங் தொடங்கி வைக்கத் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், ஏப்ரல் 28-ம் தேதியன்று, நில ஆக்கிரமிப்பு அகற்றும் அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து குகி சமூகத்தினர் வனத்துறை அலுவலகத்துக்கு தீ வைத்தனர்.

அதன் பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மலைப்பகுதி கிராமங்களில் குகி சமூகத்தினரால் பேரணிகள் நடத்தப்பட்டன. அப்போது மெய்தேய் சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக்கூடாது என குகி சமூகத்தினர் வலியுறுத்தினர்.

ஆனால், அதையடுத்து மெய்தேய் சமூகத்தினரின் தீவிரச் செயல்பாட்டுக் குழுவான லிபுன் தரப்பிலும் பேரணிகளும், போராட்டங்களும் நடத்தப்பட்டன.

அதன் பின்னர் தான் மே 3-ம் தேதி முதல் இந்த வன்முறைகள் கட்டுக்கு அடங்காமல் பரவி, இந்த அளவுக்கு ரத்தவெறி கொண்ட தாக்குதல்களாக மாறின. இதில் இதுவரை 160 பேர் உயிரிழந்தனர். வன்முறைகளை இன்னும் கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம், Getty Images

மே 3-ம் தேதி நடைபெற்ற பேரணியின் போது, இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. டார்பங் மற்றும கங்வாய் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக அந்த புகார்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நாளில் மதியத்துக்குப் பின்னர் மெய்தேய் மக்கள் வசிக்கும் பகுதியான விஷ்னுபூரில் தேவாலயங்கள் கொளுத்தப்பட்டதாக புகார்கள் வரத் தொடங்கின.

அன்று மாலை மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினரிடையே பல பகுதிகளிலும் தாக்குதல்கள் தொடங்கின. அதன் பின்னர் மிகப்பெரிய கும்பல்கள், காவல் நிலையங்களில் இருந்து ஆயுதங்களைச் சூறையாடுதல் உள்ளிட்ட சம்பவங்களை சுரசந்த்பூர் மற்றும் சுற்றுப் புறங்களில் அரங்கேற்றின.

இதைத் தொடர்ந்து நள்ளிரவில் இரு தரப்பு மக்களும் ஒருவரது வீட்டுக்கு ஒருவர் தீ வைத்து கொளுத்த ஆரம்பித்தனர்.

மேலும் அப்போது, மெய்தேய் சமூக பெண்களை குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக வதந்திகள் பரவின. இதன் பின்னர் இரத்தக்களரி மேலும் அதிகரித்தது மற்றும் நிலைமை காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறியது.

மாநிலத்தில் கடந்த மே 3ஆம் தேதி தொடங்கிய இந்த வன்முறை, இன்று 160 பேர் உயிரிழந்த பின்னரும் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து நீடித்துவருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: