நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பெயரில் போலி கையெழுத்தா? ஆம் ஆத்மிக்கு சிக்கல் - தம்பிதுரை என்ன செய்தார்?

பட மூலாதாரம், Getty Images
டெல்லி நிர்வாக சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அப்போது, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சதா ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
அவர் போலி கையெழுத்து போட்டதாக 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் அவர் மீது குற்றம் சாட்டி சிறப்பு உரிமை மீறல் புகார் அளித்தனர்.
உண்மையில், இந்த மசோதாவைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் முன்மொழிவை ராகவ் சாதா கொண்டு வந்திருந்தார். இந்த முன்மொழிவில் 5 உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த முன்மொழிவில் தாம் கையொப்பமிடவில்லை என்றும் அந்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டுள்ளார்.
எம்.பி.க்களின் 'போலி கையெழுத்து' குறித்து எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, "இது தொடர்பாக உரிமை மீறல் எனக்கு நோட்டீஸ் அனுப்பட்டும். நான் அக்குழுவுக்கு எனது பதிலை அளிப்பேன்," என்று சதா கூறினார்.
டெல்லி நிர்வாக சீர்திருத்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் ராகவ் சதாவின் முன்மொழிவு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.
இந்த மசோதா மூலம், மோதி அரசு மே 19-ம் தேதி பிரகடனப்படுத்திய அவசரச் சட்டத்தை ஒரு சட்டமாக்குகிறது. புதிதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவின் படி, டெல்லியில் அதிகாரிகளை பணியமர்த்துவதற்கு அல்லது இடமாற்றம் செய்வதற்கான இறுதி அதிகாரம் துணைநிலை ஆளுநரிடம் இருக்கும்.
இந்த முன்மொழிவில் தாங்கள் கையெழுத்திடவில்லை என்று கூறிய 5 எம்பிக்களில் பாஜக எம்பிக்கள் சுதன்ஷு திரிவேதி, நர்ஹரி அமீன், பி கொன்யாக், பிஜேடி எம்பி சஸ்மித் பத்ரா மற்றும் அதிமுக எம்பி தம்பி துரை ஆகியோர் அடங்குவர்.
திங்கள் கிழமை இரவு அவையில் என்ன நடந்தது?
டெல்லி நிர்வாக சீர்திருத்த மசோதா மீது திங்கள் கிழமையன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப, அக்குழுவிற்கான உறுப்பினர்களாக ஐந்து பேரின் பெயர்களுடன் ஆம் ஆத்மி கட்சி ஒரு முன்மொழிவை அளித்தது.
முன்மொழிவு மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் அவையின் துணைத் தலைவர், முன்மொழிவில் இடம்பெற்றிருந்த பெயர்களைப் படித்தார்.
ஆனால் முன்மொழிவில் இடம்பெற்றிருந்த 5 உறுப்பினர்களின் ஒப்புதல் பெறாமலேயே அவர்களுடைய பெயர்களை ஆம் ஆத்மி கட்சி சேர்த்துக்கொண்டதாகவும், அந்த முன்மொழிவில் 5 உறுப்பினர்களும் கையெழுத்திடவில்லை என்றும் அவர்களிடம் இருந்து புகார் எழுந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்குத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவது அவையின் உரிமைகளை மீறுவதாகத் தெரிவித்த அமித் ஷா, இந்த விஷயம் அவையின் உரிமைக்குழுவுக்கு அனுப்பப்படவேண்டும் என வலியுறுத்தினார்.
"இந்த உறுப்பினர்களுக்காக யார் கையொப்பமிட்டது? இது விசாரிக்கப்படவேண்டிய ஒரு விஷயம்," என்றார் அமித் ஷா,
புகார் தெரிவித்த உறுப்பினர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும் அவையின் துணைத் தலைவரிடம் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது ஒரு ஏமாற்றுவேலை. இதுபோன்ற தவறை இழைத்தவர் மீது நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்றார்.
யார் என்ன பேசினார்கள்?
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் விஜய் சாய் ரெட்டியும், அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரின் சம்மதம் இல்லாமல் அவருடைய பெயர் முன்மொழிவில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
"ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ராகவ் சதா எங்களிடம் சில விஷயங்கள் குறித்துப் பேசினார். அவருக்கு நாங்கள் பதில் அளித்தோம். ஆனால் முன்மொழிவில் உறுப்பினர்களின் பெயர்களைப் பயன்படுத்தியதற்கு முன்பு அவர்களின் சம்மதத்தை அவர் பெற்றிருக்கவேண்டும்," என்றார் அவர்.
"ஆனால் ராகவ் சதா தனது முன்மொழிவில் எங்கள் கட்சி உறுப்பினர் ஒருவரின் பெயரையும் சேர்த்துள்ளார். ஆனால் சதா அவரிடம் ஆலோசிக்காமலேயே அவரது பெயரைப் பயன்படுத்தியுள்ளார்," என்றார் ரெட்டி.
இதனால் சதாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வர அந்த உறுப்பினர்கள் முடிவெடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய பிஜு ஜனதா தள உறுப்பினர் சாஸ்மித் பத்ரா, "டெல்லி நிர்வாக சீர்திருத்த மசோதா நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் விவாதிக்கப்பட்டபோது, ராகவ் சதாவின் முன்மொழிவு ஒன்றில் எனது பெயர் சேர்க்கப்பட்டிருந்தது எனக்குத் தெரிந்தது. என்னுடைய அனுமதி இல்லாமல் அவர் எப்படி எனது பெயரை அவரது முன்மொழிவில் சேர்க்க முடியும்? இது தொடர்பாக நாங்கள் அனைவரும் தனித்தனியாக புகார் அளித்திருக்கிறோம். மாநிலங்களவை அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்றார்.
பாஜக எம்பி நர்ஹரி அமீன் கூறுகையில், “மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது தொடர்பான முன்மொழிவில் எனது பெயரையும் ராகவ் சதா சேர்த்துள்ளார், ஆனால் அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை என்பது மட்டுமல்ல, அதுபோன்ற எதற்கும் நான் ஒப்புதல் அளிக்கவில்லை. அதில் நான் கையெழுத்து போடவும் இல்லை," என்றார்.
அதிமுக உறுப்பினர் தம்பி துரை பேசிய போது, அவர் ஏற்கெனவே மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
"மாநிலங்களவைத் தலைவருக்கு நான் இது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த விவகாரத்தை உரிமை மீறல் குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி அவரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். எனது அனுமதியின்றி எனது பெயர் எப்படி அதில் சேர்க்கப்பட்டது? எனது கையெழுத்து போலியாகப் போடப்பட்டுள்ளதா?" எனக்கேட்டார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், “போலி கையெழுத்து போடுபவர்களை ஆதரிக்கிறார்களா என்று காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்க விரும்புகிறேன். இது குறித்து கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்றார்.
தேர்வுக் குழுவில் பெயர் சேர்க்க உறுப்பினர்களின் ஒப்புதல் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்பி சக்தி சிங் கோஹில் கூறினாலும், ஒருவர் குழுவில் சேர விரும்பவில்லை என்றால், அவரது பெயர் தானாகவே குழுவிலிருந்து நீக்கப்படும் என்றார்.
அவர், “தேர்வுக் குழுவுக்கு மசோதாவை அனுப்ப முன்வரும் போது, அந்தத் தேர்வுக்குழுவில் உறுப்பினர்களைச் சேர்க்க, அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை. அக்குழுவில் எந்த உறுப்பினரும் நீடிக்க விரும்பவில்லை என்றால், அவரது பெயர் தானாகவே நீக்கப்படும். முன்மொழிவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினரின் கையொப்பத்தைக் கண்டிப்பாகப் பெறவேண்டும் என எந்தச் சட்டமும் கூறவில்லை,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
131 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறிய மசோதா
திங்கள் கிழமையன்று டெல்லி நிர்வாகத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 131 பேர் வாக்களித்த நிலையில் எதிராக 102 பேர் வாக்களித்தனர். நான்கு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
மசோதா நிறைவேறிய பின் டிவிட்டரில் பதிவிட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "நாடாளுமன்றத்துக்கு உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் டெல்லி மக்களுக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு டெல்லியில் வசிக்கும் இரண்டு கோடி மக்கள் சார்பாக இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
"குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நிலை சரியில்லாத போதும் நாடாளுமன்றத்துக்கு வந்த ஜேஎம்எம் தலைவர் சிபுசோரன் ஆகியோருக்கு டெல்லி மக்களின் சார்பாக ஏராளமான நன்றிகள்," என அப்பதிவில் தெரிவித்தார்.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் மோதி அரசுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு தனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகள் ஆதரவளித்தன.
இந்த மசோதாவுக்கு எதிராகப் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சதா, அடல் பிகாரி வாஜ்பேய், எல்.கே. அத்வானி போன்றோர் டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கவேண்டும் எனப் பேசியதை பாஜக தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் டெல்லி அரசு நீதிமன்றத்தை நாடும் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம், இந்த மசோதாவை அறிமுகப்படுத்த சட்டப்படியும், தார்மீக அடிப்படையிலும் பாஜகவுக்கு உரிமை இல்லை என்றார்.
"நீங்கள் 25 ஆண்டுகளுக்கு முன் டெல்லி தேர்தலில் வெற்றிபெற்றீர்கள். இப்போது டெல்லியின் மீது உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? இந்த மசோதா டெல்லிக்கானதாக இருக்கவேண்டும். ஆனால் ஜம்மு&காஷ்மீருக்கானதாக இருக்கிறது," என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக இருக்கிறதா இந்தச் சட்டம்?
இந்த ஆண்டு மே மாதம் 11-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, டெல்லியில் முக்கிய அதிகாரிகளை நியமிக்கும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது என கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக ஒரு உத்தரவை வெளியிட்டது.
சட்டம் ஒழுங்கு, காவல் உள்ளிட்ட சில விஷயங்களைத் தவிர, அதிகாரிகளை நியமிப்பது, அவர்களை பணியிட மாற்றம் செய்வது போன்ற அனைத்து அதிகாரங்களும் டெல்லி அரசிடம் தான் இருக்கவேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த அரசியல் சாசன அமர்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஷா, கிருஷ்ணா முராரி, ஹிமா கோஹ்லி, மற்றும் நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
உத்தரவு வெளியான ஒரு வாரத்துக்குப் பின், மே 19-ம் தேதியன்று, தலைநகர் நிர்வாகம் தொடர்பாக அரசமைப்புச் சட்டப்பிரிவு 239ஏஏவின் படி, மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது. இந்த சட்டத்தின் படி, டெல்லியில் பணியாற்றும் மாநில அரசின் அதிகாரிகளை நியமிப்பது, மாற்றம் செய்வது போன்ற செயல்களில் மீண்டும் துணை நிலை ஆளுநருக்கு இறுதி அதிகாரம் அளிக்கப்படுகிறது.
தேசியத் தலைநகர் டெல்லியின் நிர்வாகம் குறித்த 2023-ம் ஆண்டின் அவசர சட்டத்திருத்தத்தில் குரூப் ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விஷயங்களைக் கவனித்து கொள்ள என்.சி.பி.எஸ்.ஏ. என்ற பெயரில் தேசியத் தலைநகர் நிர்வாக அதிகாரக் குழு ஒன்று அமைக்கப்படும்.
குழுவில், டெல்லி முதலமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் இருப்பார்கள். இக்குழுவினர் எடுக்கும் முடிவுக்கு துணை நிலை ஆளுனரின் ஒப்புதலைப் பெறவேண்டும்.
இந்த சட்டம் டெல்லி, அந்தமான்&நிக்கோபர் தீவுகள், லட்சத் தீவுகள், டாமன் மற்றும் தாத்ரா தீவுகளுக்கும் பொருந்தும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












