சந்திரயான் 3: நிலாவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த விண்கலம் - அடுத்து என்ன செய்யும்? முழு விவரம்

பட மூலாதாரம், ISRO
சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் சனிக்கிழமை அன்று நுழைந்துவிட்டதைக் குறிக்கும் வகையில் நிலாவின் முதல் படங்களை அது இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளது.
அந்தப் படங்களைத் தற்போது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விண்கலம் நெருங்கிச் செல்லும்போது நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் பெரிதாகத் தெரிவதைப் படங்கள் காட்டுகின்றன.
சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகிய பாகங்கள், ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது.
நிலவில் மென்மையாகவும் வெற்றிகரமாகவும் தரையிறங்கியதில், அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.
ஆனால், இந்த முயற்சி வெற்றி பெற்றால், நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கும் முதல் நாடாக இந்தியா இருக்கும்.
சுமார் 10 நாட்கள் இந்த விண்கலம் பூமியைச் சுற்றி வந்த நிலையில், கடந்த செவ்வாயன்று நிலவின் சுற்றுப்பாதைக்குள் அது அனுப்பப்பட்டது. தற்போது வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ISRO
சந்திரயான் 3 தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும்
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோமீட்டர் தொலைவை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக பூமியின் வட்டப்பாதையில் கொண்டு சேர்த்தது.
இரண்டாவது சுற்றுப்பாதைக்கு விண்கலம் உயர்த்தும் பணி முடிந்த பிறகு விண்கலம் 41,603 கி.மீ. x 226 கி.மீ. வட்டப் பாதையில் பூமியைச் சுற்றத் தொடங்கியது.
மேலும் படிப்படியாக உயர்த்தப்பட்டு பின்னர் நிலாவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
சந்திரயான் 3 விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாகத் தூரத்தை அதிகரித்து தொலைவாகச் சென்றது.
ஒவ்வொரு முறை சுற்றுவட்டப் பாதையில் புவிக்கு நெருக்கமான தொலைவுக்கு வரும்போதும் ராக்கெட்டை தொடர்ந்து எரித்து உந்துவிசை கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
பின்னர் அங்கிருந்து உந்துவிசை கொடுத்து விண்கலத்தைத் தள்ளிவிடுவதன் மூலம், அதுவரைக்கும் புவியின் ஈர்ப்புவிசைப் பிடியில் இருந்த விண்கலம் அதிலிருந்து விடுபட்டு, நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் சென்றது.

பட மூலாதாரம், ISRO
நிலவுக்கான பயணம் வெற்றிகரமாகத் தொடக்கம்
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பிரமாண்டமான முயற்சியின் தொடக்கப்புள்ளியாக ஜூலை 14 மதியம் 2:35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து செல்லும் எல்விஎம்3 எம்4 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படுவதைக் காண பெருந்திரளான மக்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் திரண்டிருந்தனர்.
ராக்கெட் விண்ணை நோக்கிப் பறக்க ஆரம்பித்ததும் மக்கள் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், சந்திரயான் திட்டத்தின் பின்னணியில் உள்ள இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சோம்நாத், 'எல்விஎம் 3-எம்4 ராக்கெட் சந்திரயான் 3 விண்கலத்தை துல்லியமான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எல்விஎம் 3-எம்4 ராக்கெட்டின் மூன்று அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்ததையடுத்து, நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தொடங்கியது.

பட மூலாதாரம், ISRO
சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர்

பட மூலாதாரம், ISRO
சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும் பேசிய வீரமுத்துவேல், விண்கலம் மிக நுணுக்கமான சுற்றுவட்டப் பாதையில் சரியாக செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.
மேலும் பேசிய அவர், விண்கலம் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
“நிலவுக்கு நமது பயணம் இப்போது துவங்கியுள்ளது,” என்றார்.
இஸ்ரோவின் பெங்களூரு கண்காணிப்பு மையத்திலிருந்து விண்கலத்தைக் கூர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போவதாகக் கூறினார்.
“திட்டத்தின் மிக முக்கியமான கட்டங்கள் அடுத்து வரவிருக்கின்றன. விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்,” என்றார்.
சந்திரயான் - 1 சாதித்தது என்ன?

பட மூலாதாரம், ISRO/Twitter
சந்திரயான்-1 ஏவப்பட்ட போது, இஸ்ரோ ஆர்பிட்டரை மட்டுமே ஏவியதாக முதலில் கருதப்பட்டது. ஆனால், அப்போது ஆர்பிட்டருடன், மூன் இம்பாக்ட் ப்ரோப் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணம் (Moon Impact Probe) ஒன்றும் ஏவப்பட்டது.
சந்திரயான்-1 நிலவின் மேற்பரப்புக்கு 'நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணத்தை' அனுப்பி அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கச் செய்தது.
நிலவின் மேற்பரப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், நிலவில் தண்ணீர் இருப்பதாக இஸ்ரோ 2009 செப்டம்பர் 25 அன்று அறிவித்தது. நிலவின் மேற்பரப்பில் அங்கு தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்தன.
இந்தியாவில் இஸ்ரோ பெரிய அளவில் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கியதற்கு முன்பே, 1969 இல் அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி அங்கிருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்தது.
அதன் பிறகு 1972 வரை நாசா 12 விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அமெரிக்கா உட்பட வேறு எந்த நாடும் நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் சந்திரயான் 1 மூலம் இஸ்ரோ ஏவிய, 'நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உபகரணம்' அந்த சாதனையைப் படைத்தது.

பட மூலாதாரம், ISRO
சந்திரயான் -2 திட்டத்தில் என்ன நடந்தது?
சந்திரயான் வெற்றிக்குப் பிறகு, இஸ்ரோ ஜிஎஸ்எல்வி எம்கே 3 என்ற ராக்கெட்டை உருவாக்கியது. இது சுமார் நான்கு டன் எடையை விண்ணில் செலுத்தும் திறன் கொண்டது.
அதன் பிறகு, அந்த ராக்கெட்டின் உதவியுடன் 2019-ம் ஆண்டு சந்திரயான்-2 ஏவப்பட்டது. இந்த முயற்சியின் போது விக்ரம் என்ற லேண்டரும், பிரக்யான் என்ற உலவியும் அனுப்பப்பட்டன.
அதன் பின் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் -2ன் சுற்றுக் கலன் (ஆர்பிட்டர்) வெற்றிகரமாக சுற்றி வருகிறது. இதுவரை இந்த ஆர்பிட்டர் நிலவின் மேற்பரப்பின் பெரும்பகுதியை படம் பிடித்துள்ளது. இந்த படங்களில் இருந்து மிகவும் முக்கியமான தகவல்கள் பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஏழரை ஆண்டுகள் என்று அப்போது இஸ்ரோ அறிவித்திருந்தது. இதுவரை மூன்று ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்களுக்கும் மேலாக இந்த ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது.
அதுமட்டுமின்றி ஆர்பிட்டர் திறமையாக செயல்படுவதால் சந்திரயான்-3 திட்டத்தில் ஆர்பிட்டர் அனுப்பப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரயான்-2ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டரே இத்திட்டத்துக்கும் பயன்படுத்தப்படும்.
இதனால் சந்திரயான்-3 விண்கலம் செலவு குறைந்தது என்று கருதப்படுகிறது. சந்திரயான்-2 விண்கலத்தின் செலவு ரூ.978 கோடியாக இருந்தது. ஆனால், சந்திரயான்-3 விண்கலத்திற்கான செலவு ரூ. 615 கோடி மட்டுமே.
விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் என்ன சிக்கல் ஏற்பட்டது?
இஸ்ரோவின் முன்னாள் இயக்குநரான சிவன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், “ராக்கெட்டின் உந்துவிசை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் செயல்பட வேண்டும். இதை propulsion band என்று சொல்வார்கள். போன முறை இந்த உந்துவிசை குறிப்பிட்ட அளவைத் தாண்டி செயல்பட்டது. அதனால், அந்த அளவு வேகத்தைக் கையாளும் திறன் வழிகாட்டும் அமைப்புக்கு இல்லை. இதனைக் கட்டுப்படுத்தும் அமைப்புக்கும் ஒரு வரையறை உண்டு. அந்த வரையறையையும் தாண்டி அது செயல்பட்டது” என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சந்திரயான் 3 திட்டத்தின் சிறப்பு என்ன?
சந்திரயான் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் இந்தத் தொழில்நுட்பத்தை நிகழ்த்திப் பார்ப்பது என்று சிவன் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டிருந்தார். மேலும், “இது மிகப் புதிய தொழில்நுட்பம். நாம் இஸ்ரோவைத் துவங்கியபோது நம்மிடம் இருந்த தொழில்நுட்பம் மிகச் சிறியது. ஆனால், தற்போது நிறைய தொழில்நுட்பங்களை உருவாக்கியிருக்கிறோம். சந்திரயான் திட்டத்தின் முக்கிய நோக்கம், நிலவில் போய் தரையிறங்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதைச் செயல்படுத்திப் பார்ப்பதுதான்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சந்திரயான்-3, இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது. நிலவின் சுற்றுப்பாதையில் லேண்டர் மற்றும் ரோவர் வைக்கப்பட்டிருக்கும் அலகை எடுத்துச் செல்வது ஒரு கூறு. பின்னர் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் மற்றும் ரோவர் தொகுதியை பாதுகாப்பாக தரையிறக்கப் பயன்படும் ஒருங்கிணைந்த தொகுதி மற்றொரு கூறு.
லேண்டர் தொகுதி, அதிலிருந்து பிரிந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கும். அது பாதுகாப்பாக இறங்கிய பின், ரோவர் வெளியேறுவதற்கான சாய்வான அமைப்பு மெதுவாக வெளியேறும். அதன் பின் ரோவர் (உலவி) வெளியே வரும்.
இந்த ரோவர் நிலவின் நிலப்பரப்பில் சுற்றி, அதை பகுப்பாய்வு செய்யும். இதில் கிடைக்கும் தகவல்கள் ரோவரிலிருந்து லேண்டருக்கு அனுப்பிவைக்கப்படும். இந்தத் தரவுகள் நிலவிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கும் சந்திரயான் -2 ஆர்பிட்டருக்கு அனுப்பப்படும்.
அங்கிருந்து தரையிலுள்ள இஸ்ரோவுக்கு இந்தத் தரவுகள் வந்தடையும்.

பட மூலாதாரம், ISRO
சந்திரயான் 3 சவால்கள் என்ன?
சந்திரயான் -3 இல் அனுப்பிவைக்கப்படும் லேண்டரும் ரோவரும் நிறைய பரிசோதனைகளைச் செய்து சில குறிப்பிட்ட முக்கிய தரவுகளைப் பெறவேண்டும்.
அவற்றுள், நிலவின் மேற்புற ஆராய்ச்சி, நிலவின் மேற்பரப்பில் உள்ள தாதுக்களைக் கண்டுபிடிப்பது, அங்கு தனிமங்கள் உள்ளதா எனத் தேடுதல், நிலவின் வளிமண்டலத்தைக் கண்காணிப்பது, நீர் மற்றும் பனி வடிவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது, நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து அனுப்புவது, மேற்பரப்பின் வேதிப்பகுப்பாய்வு மற்றும் அவற்றில் உள்ள தனிமங்களின் அடிப்படையில் நிலா எப்படி உருவானது என்ற ரகசியத்தைக் கண்டறிய முயற்சிப்பது, அதன் அடிப்படையில் 3D வரைபடங்களை உருவாக்குதல் என ஏராளமான பணிகளை இவை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
சந்திரயான் 3 இல், நிலவில் தரையிறங்கும் லேண்டரில் இருந்து வெளிவரும் ரோவரில் இரண்டு முக்கிய சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று லேசர் கதிர்களைப் பயன்படுத்தி நிலவின் மேற்பரப்பில் உள்ள தாதுக்கள் மற்றும் தனிமங்கள் பற்றி ஆராய்வது. இந்த உபகரணம் சுருக்கமாக லிப்ஸ் (LIB - Laser Induced Breakdown Spectroscopy) என அழைக்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் ரோவர் தரையிறங்கிய பின், இந்த சாதனத்தில் பொருத்தப்பட்டுள்ள லேசர் கதிர்கள் நிலவின் மேற்பரப்பில் பாய்ச்சப்படுகின்றன.
இதனால் அங்குள்ள மண் அதிக வெப்பநிலைக்கு உள்ளாகி பற்றி எரியும். இதையடுத்து அந்த மண்ணிலிருந்து வாயுக்கள் வெளியேறும். அந்த வாயுக்களை நிறமாலை பகுப்பாய்வு செய்வதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் உள்ள தனிமங்கள் குறித்த விவரங்கள் கிடைக்கும்.
இது போன்ற நிலவரங்களை அறிந்து, எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வசிக்க ஏற்ற சூழ்நிலைகள் குறித்து ஆய்வு நடத்துவது மட்டுமின்றி, நிலவின் பிறப்பு குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ISRO
சந்திரயான் 3 எப்போது நிலாவை சென்று அடையும்?
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படவுள்ள சந்திரயான் -3 விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் ஆகும். ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் சந்திரயான் 3, சூழலைப் பொறுத்து ஆகஸ்ட் 23ஆம் தேதியோ அல்லது ஆகஸ்ட் 24ஆம் தேதியோ நிலவில் லேண்டரை செலுத்தும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.
நிலவில் தரையிறங்குவதற்கு சாதகமான சூழல் இருந்தால் மட்டுமே ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறக்கப்படும் என்றும் இல்லையென்றால் ஒரு மாதம் கழித்து தரையிறக்க முயற்சி செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏனெனில் நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை வேலை செய்ய மின்சாரம் தேவை.
லேண்டர்கள் மற்றும் ரோவர்கள் அந்த மின்சாரத்தை சூரிய ஒளித் தகடுகளில் இருந்து மட்டுமே பெற முடியும். அதாவது லேண்டர் தரையிறங்கும் நேரத்தில் சூரிய ஒளி இருக்க வேண்டும். நிலவில் பகல் நேரத்தில் தரையிறக்கம் நடக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
நிலாவில் சந்திரயான் 3 எப்படி தரையிறங்கும்?
நிலாவில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்குவதற்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால், அந்தப் பதினைந்து நிமிடங்களில்தான் இந்த முழு திட்டமும் வெற்றி பெறுமா இல்லையா என்பதே அடங்கியுள்ளது.
இருப்பதிலேயே மிகவும் கடினமான அம்சம் இதுதான். கடந்த முறை சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததும் இந்த இடத்தில்தான்.இதற்காக, தரையிறங்கி கலத்தின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, தரையிறங்கி கலத்தை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும்.இந்தத் திட்டத்தின் இறுதிக்கட்டமாக, தரையிறங்கி கலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலாவின் தரையில் இயக்கவேண்டும். அதற்கு, தரையிறங்கி கலம் நிலவின் தரையில் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும்.
அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு இறங்கி நிலவின் தரையில் தடம் பதிக்கும் ஊர்திக்கலம், தனது வேலையைத் தொடங்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












