சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?

சந்திரயான்-3 திட்டம்
படக்குறிப்பு, சிவன், முன்னாள் தலைவர், இஸ்ரோ
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

வரும் ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்தத் திட்டத்தின் பின்னணி, முந்தைய தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவை குறித்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தலைமையகத்தில் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் இஸ்ரோவின் முன்னாள் தலைவரான டாக்டர் கே. சிவன். பேட்டியிலிருந்து:

கே. இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் சந்திரயான் - 3ன் முக்கியத்துவம் என்ன?

ப. சந்திரயான் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் இந்தத் தொழில்நுட்பத்தை நிகழ்த்திப் பார்ப்பது. இது மிகப் புதிய தொழில்நுட்பம். நாம் இஸ்ரோவைத் துவங்கியபோது நம்மிடம் இருந்த தொழில்நுட்பம் மிகச் சிறியது. ஆனால், தற்போது நிறைய தொழில்நுட்பங்களை உருவாக்கியிருக்கிறோம். சந்திரயான் திட்டத்தின் முக்கிய நோக்கம், சந்திரனில் போய் தரையிறங்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதைச் செயல்படுத்திப் பார்ப்பதுதான்.

கே. புவிசார் அரசியலிலும் தனிப்பட்ட முறையிலும் இந்தத் திட்டம் எவ்வளவு முக்கியமானது?

ப. இஸ்ரோவைப் பொறுத்தவரை, இது ஒரு புதிய சோதனை, புதிய முயற்சி, புதிய தொழில்நுட்பம்.

சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம், TWITTER/ISRO

கே. சந்திரயான் 1, 2ல் நமக்குக் கிடைத்த படிப்பினைகள் என்ன? அந்தப் படிப்பினைகள் இந்தத் திட்டத்திற்கு எந்த விதத்தில் உதவும்?

ப. சந்திரயான் -1ஐப் பொருத்தவரை, சந்திரனைச் சுற்றும்படி ஒரு விண்கலத்தை ஏவுவதுதான் அதன் நோக்கம். அது தவிர, Moon Impact probe என்று பெயரிடப்பட்ட சிறிய சோதனை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஒரு சிறிய பொருள் சந்திரனில் தரையிறக்கிப் (crash landing) பார்க்கப்பட்டது. இதுதான் அந்தத் திட்டத்தின் முழுமையான நோக்கம்.

சந்திரயான் - 2ஐப் பொறுத்தவரை 3 நோக்கங்கள் இருந்தன. முதலாவதாக, சந்திரனைச் சுற்றிவரும் ஒரு செயற்கைக்கோளை ஏவுவது. அது சந்திரனைச் சுற்றிவந்து, சில அறிவியல் தகவல்களை அளிக்கும். இரண்டாவதாக, அந்த விண்கலத்தில் இருந்து ஒரு பகுதி பிரிந்து தரையிறங்க வேண்டும். அது லேண்டர் என்று அழைக்கப்படும். மூன்றாவதாக அந்த லேண்டரில் இருந்து ஒரு ரோவர் தரையிறங்கி, நிலவை ஆராய வேண்டும்.

இதில் முதலாவது கட்டம் சரியாக நிறைவேறி செயற்கைக்கோள் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது. இரண்டாவது கட்டத்தில், லேண்டர் மெதுவாக தரையிறங்குவதற்குப் பதிலாக வேகமாகத் தரையிறங்கி, நொறுங்கியது. இதனால், அதிலிருந்து கிடைக்க வேண்டிய சமிக்ஞைகள் கிடைக்கவில்லை.

சந்திரயான் 3ஐப் பொறுத்தவரை, சந்திரயான் -2ல் தோல்வியடைந்த பகுதியைச் சரிசெய்திருக்கிறார்கள்.

சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம், TWITTER/ISRO

கே. முந்தைய சந்திரயான் திட்டத்தில் எந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், லேண்டர் வேகமாகத் தரையிறங்கி மோதியது? இப்போது அது எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது அல்லது சரிசெய்யப்பட்டிருக்கிறது?

ப. சந்திரயான் 2ல் இருந்த லேண்டர் வேகமாக தரையிறங்கி மோதியபோது, அதிலிருந்து கிடைத்த தகவல்கள் ஆராயப்பட்டன. அதில் என்ன தவறு நடந்தது என்பதை அறிந்து, இப்போது அதனைச் சரிசெய்திருக்கிறார்கள்.

கே. முந்தைய திட்டத்தில் விக்ரம் லாண்டர் தரையிறங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. அது ஏன் என்பது கண்டறியப்பட்டதா?

ப. அதில் இரண்டு, மூன்று பிரச்சனைகள் இருந்தன. ராக்கெட்டின் உந்துவிசை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் செயல்பட வேண்டும். இதை propulsion band என்று சொல்வார்கள். போன முறை இந்த உந்துவிசை குறிப்பிட்ட அளவைத் தாண்டி செயல்பட்டது. அதனால், அந்த அளவு வேகத்தைக் கையாளும் திறன் வழிகாட்டும் அமைப்புக்கு இல்லை. இதனைக் கட்டுப்படுத்தும் அமைப்புக்கும் ஒரு வரையறை உண்டு. அந்த வரையறையையும் தாண்டி அது செயல்பட்டது. இந்தக் குறைபாடுகளையெல்லாம் இந்தத் திட்டத்தில் சரிசெய்திருக்கிறார்கள்.

கே. 1960களிலேயே அமெரிக்கா போன்ற நாடுகள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பியிருக்கின்றன. ஆட்களே சென்றுவந்து இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் ஆளில்லாத ரோவர்களை நாம் அனுப்புவது அவசியம்தானா?

ப. நம்முடைய விண்வெளித் திட்டத்தில் 1960களில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆரம்பித்தோம். அதன் பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். அதுபோலவே, இப்போது நாம் செய்யும் முயற்சிகள் பிற்காலச் சந்ததிகளுக்குப் பயன்தரும். அதில் ஒரு திட்டம்தான் சந்திரயான் திட்டம்.

கே. அடுத்ததாக இஸ்ரோ ஆதித்யா எல் - 1 என்ற பெயரில் சூரியனுக்கு ஆய்வுக் கோளை அனுப்பவிருக்கிறது. அதன் முக்கியத்துவம் என்ன?

ப. சூரியன் பூமிக்கு மிக முக்கியமானது. பூமியின் வாழ்வைக் கட்டுப்படுத்துவது சூரியன்தான். ஆனால், சூரியனைப் பற்றி அறிய வேண்டியது நிறைய இருக்கிறது. உதாரணமாக, அதன் வெளிப்பகுதியின் வெப்பநிலை 5,700 டிகிரிதான் தான் இருக்கும். ஆனால், சூழலின் வெப்ப நிலை மிகப் அதிகமாக இருக்கும். அது ஏன் என்பதற்கான விடை கிடைக்கவில்லை. சூரியனின் நடக்கும் மாற்றத்தால் பூமியில் ஏற்படும் சூழல் மாற்றம் பற்றியும் அறிந்துகொள்ளவே ஆய்வுக் கோளை அனுப்புகிறோம்.

சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம், NASA

கே. 2025ல் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது.. இதில் எந்தக் கட்டத்தில் ஆபத்து இருக்கும்?

ப. விண்ணுக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு விண்கலத்தில் 450 கி.மீ. உயரத்திற்கு மனிதனை அனுப்புவார்கள். பிறகு, மீண்டும் அவரைப் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைத்து வருவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். மனிதனை சுமந்து செல்லும் ராக்கெட்டைப் பொறுத்தவரை, செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் ராக்கெட்களைவிட கூடுதல் செயல்திறனை, நம்பகத்தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஆகவே தற்போதைய ராக்கெட்டுகளை அதற்கேற்றபடி மாற்ற வேண்டும். அடுத்தபடியாக, மனிதர்கள் பூமியில் இருக்கும்போது என்னவிதமான சூழலில் இருந்தார்களோ அதேபோன்ற சூழலில் விண்ணிலும் இருப்பதற்கேற்றபடி சிறு அறைகளை (module) உருவாக்கவேண்டும். Environment Controlled Life support System என்று இதை அழைப்பார்கள்.

மனிதர்களை திரும்ப அழைத்துவரும்போது, பல கட்ட வெப்ப மாறுபாட்டை விண்கலம் எதிர்கொள்ள வேண்டும். அதற்கேற்றபடி அந்த விண்கலத்தை வடிவமைக்க வேண்டும். அதேபோல, திரும்பிவரும் விண்கலம் நாம் நினைத்த இடத்தில் துல்லியமாக தரையிறங்க வேண்டும். அதற்கும் சில தொழில்நுட்பங்கள் தேவைப்படும். இதுதொடர்பான சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அடுத்ததாக சோதனை ஓட்டம் நடைபெறும். இதற்குப் பிறகு மனிதர் இல்லாத ரோபோக்களைக் கொண்ட ராக்கெட் அனுப்பப்படும். இப்படியான இரண்டு - மூன்று சோதனைகளுக்குப் பிறகு மனிதர்கள் விண்கலத்தில் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள்.

சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம், TWITTER/ISRO

கே. அடுத்ததாக, செவ்வாய் கோளுக்கு விண்கலத்தை அனுப்புவதற்கான சுக்ரயான் திட்டத்திலும் இஸ்ரோ ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது... வேறு எந்தெந்த கிரகங்களையெல்லாம் அடைய இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது? அதனால், என்ன பலன் கிடைக்கும்?

ப. அடுத்ததாக செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்பும் திட்டம் தயாராகிவருகிறது. அதற்கடுத்து வெள்ளி கிரகத்திற்கு ஆளை அனுப்பும் திட்டம் இருக்கிறது. ஆனால், அது அனுமதி பெறும் கட்டத்தில்தான் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் துவக்கம், பூமியின் துவக்கம் ஆகியவற்றை அறிவதுதான் இந்தத் திட்டங்களின் நோக்கம். விண்வெளித் திட்டங்களைப் பொறுத்தவரை அதற்குப் பல்வேறு பலன்கள் இருக்கும். ஒன்று மக்களுக்கு நேரடியாகப் பலனளிக்கும் திட்டங்கள். மற்றொன்று, வேறு கட்டமைப்புக்கு உதவும் தகவல்களைத் தரும் திட்டங்கள். மூன்றாவதாக, முழுக்க முழுக்க விண்வெளி அறிவியலுக்கு உதவும் திட்டங்கள். இந்தத் திட்டம் அதுபோன்ற ஒரு திட்டம்தான்.

கே. சந்திரயான் 1 ஏவப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்துவிட்டன. அந்தத் திட்டத்திற்குப் பிறகு நம்முடைய விண்வெளித் திட்டம் எந்த அளவுக்கு மாற்றமடைந்திருக்கிறது...?

ப. சந்திரயான் திட்டத்திற்கும் விண்வெளி வளர்ச்சிக்கும் இடையில் பெரிய தொடர்பு கிடையாது. இது ஒரு காலகட்டத்தைக் குறிக்கிறது, அவ்வளவுதான். ஆனால் இந்த காலகட்டத்தில் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறோம். கிரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய செயற்கைக்கோள்கள் உருவாகியிருக்கின்றன.

சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரோ நுழைவு வாயில்

கே. சீனாவும் ரஷ்யாவும் இணைந்து நிலவில் ஒரு ஆய்வு நிறுவனத்தைக் கட்ட நினைக்கின்றன. இந்தியா இது போன்ற திட்டங்களில் ஈடுபட எவ்வளவு காலம் பிடிக்கும்?

ப. இந்தியா இப்போதுதான் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு வேண்டுமானால், இதுபோன்ற திட்டங்களைப் பற்றி யோசிக்கலாம்.

கே.. இஸ்ரோவின் திட்டங்கள் அனைத்தும் மிகக் குறைந்த செலவில் செய்யப்படுகின்றன. இஸ்ரோவைப் பற்றித் திரைப்படம் எடுப்பதைவிட குறைவான செலவில் இஸ்ரோ ராக்கெட்களை அனுப்புவதாகக்கூட வேடிக்கையாகச் சொல்வார்கள்.. இது எப்படி சாத்தியமாகிறது?

ப. குறைந்த செலவு என்பது ஒரு ஒப்பீட்டுப் பார்வைதான். நாம் சிறப்பு முயற்சி எதையும் அதற்காக மேற்கொள்வதில்லை. விண்வெளித் திட்டங்களுக்கான பொருட்களையும் கருவிகளையும் நாம் நம்முடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இங்கேயே உருவாக்குவதால் செலவு குறைவாக இருக்கிறது. இதனை வெளிநாடுகளில் வாங்கினால், விலை அதிகமாக இருக்கும். செலவு குறைவாக இருக்க அது ஒரு காரணம். அதேபோல, இங்கே தயாரிப்புச் செலவு, தொழிலாளர்களுக்கான ஊதியம் போன்றவை குறைவு. மற்றபடி, இதற்கென சிறப்பு முயற்சிகள் எதையும் இஸ்ரோ செய்வதில்லை.

கே. சந்திரயான் - 3 ஏவப்பட்டு எத்தனை நாட்களுக்குப் பிறகு, இந்தத் திட்டம் முழுமையான வெற்றி பெற்றுவிட்டதாக சொல்ல முடியும்?

ப. இந்தத் திட்டம் முழுமையடைய 45 நாட்களாகும். சந்திரயான் ஏவப்பட்ட பிறகு, 45 நாட்களுக்குப் பிறகுதான் லாண்டர் சந்திரனில் தரையிறங்கும். ஜூலை மாத மத்தியில் சந்திரயான் ஏவப்பட்டால் ஆகஸ்ட் மாத இறுதியில் லாண்டர் தரையிறங்கும். அதற்குப் பிறகுதான் அந்தத் திட்டம் முழுமையடையும்.

கே. விண்வெளி ஆய்வுத் துறையில் நாம் மேலும் திறன்களை வளர்த்தெடுக்க என்ன செய்ய வேண்டும்?

ப. விண்வெளித் துறையில் தேவைகள் அதிகரித்துவருகின்றன. வெளிநாட்டு சந்தையைக் கைப்பற்ற வேண்டுமென்றால் நம் நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும். இந்திய அரசைப் பொறுத்தவரை 2021ல் விண்வெளித் துறை தனியாருக்கும் திறக்கப்பட்டது. இப்போது தனியாரும் விண்வெளித் திட்டங்களை நிறைவேற்ற முடியும். நிறைய ஆரம்ப நிலை நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபடுகின்றன. நிறைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திலும் நாம் ஈடுபட வேண்டும். அதற்கு இஸ்ரோ தயாராகிக்கொண்டிருக்கிறது.

கே. இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டுக்கு, காலநிலைகளை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள், ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்கள் போன்ற ஆய்வு கோள்களைத் தவிர மங்கள்யான், சந்திரயான், ககன்யான் போன்ற திட்டங்கள் தேவையா என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறதே?

ப. காலநிலை கண்காணிப்பு, ரிமோட் சென்சிங் எல்லாம் தேவை என இப்போது சொல்கிறார்கள். ஆனால், 1960களில் இஸ்ரோ தனது ஆய்வுகளைத் துவங்கியபோது, இதெல்லாம் தேவையா என்றுதான் சொன்னார்கள். ஆனால், அப்போது துவங்கியதன் பலன்களைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். அதேபோல இப்போது சந்திரயான் போன்ற திட்டங்களைத் துவங்கினால்தான், அதன் பலன்களை வரும் சந்ததியினர் அனுபவிப்பார்கள். தொழில்நுட்பத்தை நாம் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும்.

சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம், TWITTER/ISRO

கே. நிலவுக்கு ஆட்களை அனுப்பும் திட்டம் ஏதும் இஸ்ரோவுக்கு உள்ளதா, அது சாத்தியமா?

ப. இப்போதைக்கு அப்படித் திட்டம் ஏதும் இல்லை. பிற்காலத்தில் நடக்கலாம்.

கே. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, ராக்கெட்களை ஏவுவது என்பது உச்சபட்ச தொழில்நுட்பங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இருந்தபோதும், அம்மாதிரி நிகழ்வுகளுக்கு முன்பாக விஞ்ஞானிகள் வழிபாட்டுத் தலங்களுக்குப் போகிறீர்கள்.. ராக்கெட் மாதிரிகளை வைத்து பூஜை செய்கிறீர்கள்... அறிவியலும் நம்பிக்கையும் எந்த இடத்தில் சந்திக்கின்றன?

ப. இதெல்லாம் தனி நபர்களின் நம்பிக்கை. அதில் சொல்வதற்கு ஏதுமில்லை. ராக்கெட்களைப் பொறுத்தவரை, எத்தனையோ பிரச்சனைகள் வரலாம். இம்மாதிரி பிரச்சனை வரலாம் என்பதே முதலில் புரியாது. அம்மாதிரி நிலையில், சிலர் வழிபடுகிறார்கள். அவ்வளவுதான்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: