கட்டபொம்மனுடன் நேருக்கு நேர் சமர் செய்த எட்டப்பனை 'காட்டிக் கொடுத்த துரோகி' என்று வரலாறு பதிவு செய்தது எப்படி?

கட்டபொம்மன்

பட மூலாதாரம், Tamil nadu Tourism Development Corporation)

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயரைக் கேட்டாலே நம்மை அறியாமல் எட்டப்பன் என்ற பெயரும் நினைவுக்கு வந்துவிடுகிறது. எட்டப்பன் என்றாலே துரோகம் என்ற ஒரு பிம்பம் நிலை பெற்று விட்டது.

யூதாஸ், புரூட்டஸ், வரிசையில் எட்டப்பன் என்ற சொல்லும் காட்டிக் கொடுப்பவர்களுக்கான பட்டமாக மாறிவிட்டது.

எட்டப்பன் என்றால் யார்? அந்த பெயர் எப்படி வந்தது? கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தது எட்டப்பன் தானா? போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சி தான் இந்தக் கட்டுரை.

எட்டப்பன் என்ற பெயர் வந்தது எப்படி?

மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் கே. கருணாகரப் பாண்டியனிடம் எட்டப்பன் என்ற பெயரின் தோற்றம் குறித்து கேட்ட போது,

“நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்கள் எட்டப்ப மன்னர்கள். இவர்களின் முன்னோர் ஆந்திராவின் சந்திரகிரியை விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சி செய்தனர்," என்றார்.

"இம்மன்னர்களில் ஒருவரான நல்லம நாயக்கர் என்பவர் விஜயநகரப் பேரரசின் சாம்பு மகாராஜாவை தரிசிக்க சென்ற போது, அங்கு காவலுக்கு இருந்த மாவீரன் சோமனை வணங்கி விட்டு தான் மகாராஜாவை தரிசிக்க வேண்டுமென்ற வழக்கத்தை பின்பற்ற மறுத்து, சோமனோடு சண்டையிட்டு அவனது தலையைக் கொய்தார்." என்றார்.

மேலும் பேசிய அவர், "நல்லம நாயக்கரின் வீரத்தைப் பார்த்து வியந்த மகாராஜா அவருக்கு பல பரிசுகளையும் தங்கத்தால் செய்யப்பட்ட சோமன் தலை விருதும் அளித்தார். அந்த விருது இப்போதும் எட்டயபுர மன்னர் வாரிசுகளிடம் உள்ளது. எட்டப்ப ராஜாவின் முடிசூட்டு விழாவின் போது அதை இடது கணுக்காலில் அணிந்து முடிசூட்டிக் கொள்ளும் வழக்கத்தை அவர்கள் இன்றும் கடைபிடித்து வருகிறார்கள்.

"இந்த நிகழ்விற்குப் பிறகு ஆதரவற்று நின்ற சோமனின் எட்டு தம்பிகளை நல்லம நாயக்கர் தத்தெடுத்து அவர்களுக்கு அப்பாவாக இருந்ததால், அவருக்கு எட்டப்ப நாயக்கர் என்ற பெயர் வந்தது. அவருக்கு பின் இந்த பரம்பரையில் வந்த மன்னர்கள் அனைவரும் எட்டப்பன் என்ற பெயராலே அழைக்கப்பட்டனர். இன்றும் எட்டப்ப ராஜா மீது எட்டயபுர மக்களுக்கு பெரும் அன்பும் மதிப்பும் உள்ளது,” என்று கூறுகிறார்.

இவர்கள் எவ்வாறு தமிழ்நாட்டிற்கு வந்தனர் என்பதை ஆய்வாளர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள், 1946 இல் வெளியான தனது “தமிழகம் ஊரும் பேரும்” எனும் நூலில், குலமும் கோவும் என்ற அத்தியாயத்தில் பின்வருமாறு கூறுகிறார்:

“விஜயநகரப்‌ பெரு மன்னரது ஆட்சி நிலைகுலைந்த பின்பு ஆந்திர நாட்டில்‌ அச்சமும்‌ குழப்பமும்‌ ஏற்பட்டன. ஆந்திரத்‌ தலைவர்‌ பலர்‌ தம்‌ பரிவாரங்களோடு தமிழ்‌ நாட்டிலே குடியேறி வாழத்‌ தலைப்பட்டார்கள்‌. இங்ஙனம்‌ தென்னாட்டிற்‌ போந்த வடுகத்‌ தலைவர்களில்‌ ஒருவர்‌ எட்டப்ப நாயக்கர்‌. அவர்‌ பெயரால்‌ அமைந்த ஊர்‌ எட்டயபுரம்‌ ஆகும்‌”

கட்டபொம்மன்
படக்குறிப்பு, எட்டயபுர அரண்மனையின் தற்போதைய தோற்றம்

எட்டப்ப பரம்பரைக்கும் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்திற்கும் இடையே இருந்த முன்பகை

1881-இல் மதராஸ் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட, ராபர்ட் கால்டுவெல் எழுதிய 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலில் கட்டபொம்மனுக்கும் எட்டயபுர பாளையத்திற்கும் இருந்த கசப்பான உறவை பற்றி ஏழாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எட்டயபுரம் பாளையத்திற்கு மிக முக்கியமான எதிரிகளாக திகழ்ந்தவர்கள் அதன் அருகிலேயே இருந்த பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தார்களே," என்று அவர் எழுதியுள்ளார்.

பில் கலெக்டர்கள் எனப்படும், பாளையங்களிடம் வரி வசூல் செய்ய ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் வரி செலுத்த மறுத்தவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர். இதை கால்டுவேல், தனது நூலில் இவ்வாறு எழுதுகிறார், “ஆங்கில அரசின் ஆட்சிக் காலத்தில் புலித் தேவர் நடந்து கொண்டது போலவே, கட்டபொம்மனும் ராஜ விசுவாசமின்மைக்கும், முறையற்ற ஆட்சிக்கும் முதன்மையானவராக விளங்கினார்”.

இங்கு ராஜ விசுவாசமின்மை, முறையற்ற ஆட்சி என்பது வரி கட்ட மறுத்ததையும், ஆங்கில அரசுக்கு எதிராக புரட்சி செய்ததையும் அவர் மேற்கோள் காட்டி கூறுகிறார். மேலும், ஆங்கிலேய அரசுக்கு வரியை சரியாக செலுத்தி வந்த பாளையங்களின் மீதும் அரசாங்க கிராமங்களின் மீதும் வீரபாண்டியக் கட்டபொம்மன் படையெடுத்து சென்று அவற்றை சூறையாடியதாக கால்டுவெல் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

கட்டபொம்மன்

பட மூலாதாரம், Tamil nadu Tourism Development Corporation

படக்குறிப்பு, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

பகைக்கு முன்காரணமே ஆங்கிலேயர்கள் தான்

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் வே. மாணிக்கம் எழுதிய 'வீரபாண்டியக் கட்டபொம்மு விவாத மேடை' என்ற நூலில் எட்டயபுர மன்னர்களுக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் முன்பகை இருந்தது உண்மை தான் என்றாலும் அதற்கு மூல காரணமே ஆங்கிலயேர்கள் தான் என்று கூறுகிறார்.

ஆங்கிலேயர்களுக்கு வரி கட்டுவதை தீவிரமாக எதிர்த்து வந்தார் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மன். அதே சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு முறையாக வரி கட்டி வந்த பாளையங்களில் ஒன்று எட்டயபுரப் பாளையம்.

பாளையங்கள் மக்களை வருத்தி வரி வசூல் செய்து ஆங்கிலேய அரசுக்கு செலுத்துவதை விரும்பாத கட்டபொம்மன் அவர்கள் மீது படையெடுத்தார் என்று கூறுகிறார் வே. மாணிக்கம். அவ்வாறு படையெடுக்கப்பட்ட பாளையங்களில் ஒன்று எட்டயபுர பாளையம். இதன் மூலமே எட்டயபுர பாளையத்திற்கும் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்திற்கும் இடையே பகை மூண்டது என்று வரலாற்று நூலாசிரியர்களும் கூறுகிறார்கள்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, படையெடுப்புக்கு பின் எட்டயபுரப் பிரபுவும், எட்டயபுரத்தைச் சேர்ந்த சிலரும் ஆங்கிலேய அதிகாரியான கலெக்டர் ஜாக்சனிடம் சென்று முறையிட்டதாக அரசு கீழ்த்திசைக் கையெழுத்துப் பிரதி நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் தொகுக்கப்பட்டு வெளியான 'கட்டபொம்மன் வரலாறு' என்ற நூலில் வரும் கட்டபொம்மன் கும்மிப்பாடலில் எட்டையாபுரத்தார் பிராது கூறுதல் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

கட்டபொம்மன் - எட்டப்பன்

பட மூலாதாரம், Tamil digital library

படக்குறிப்பு, எட்டையபுரத்தார் பிராது தொடர்பான கும்மி பாடல்

தொல்லியல் துறையின் கீழ் உள்ள அரசு கீழ்த்திசை கையெழுத்துப் பிரதி நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் 1869 முதலே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளை தான் பலர் திரித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் ஒரு கொள்ளையன் என்று பொய்யாக பரப்புகிறார்கள் என்று தனது 'வீரபாண்டியக் கட்டபொம்மு விவாத மேடை' நூலில் கூறுகிறார் வே. மாணிக்கம். மேலும் ஆங்கிலேயர்கள் அருங்குளம், சுப்பலாபுரம் எனும் இரு பகுதிகளை கட்டபொம்மனிடமிருந்து பறித்து அதை எட்டயபுர பாளையத்தாருக்கு கொடுத்ததால், சினம் கொண்டு கட்டபொம்மனே அங்கும் வரி வசூல் செய்தார். அதுவும் படையெடுப்புக்கு ஒரு காரணமாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

இதையே ஆய்வாளர் கோ. கேசவன் எழுதிய 'கதைப்பாடல்களும் சமூகமும்' எனும் நூலில், "கட்டபொம்மன் தனது ஆங்கிலேய எதிர்ப்பு உணர்ச்சியை வெளிப்படுத்த தான் அரசு நிலங்களிலும், அவர்களுக்கு ஆதரவாக இருந்த பாளையங்களிலும் அத்து மீறிப் புகுந்து உழுது பயிரிட்டு, எதிர்த்த இடங்களைச் சூறையாடினார். இதைத் தடுத்தவர்களை பணயக் கைதிகளாக கொண்டு சென்றார். இவை வெள்ளையர் எதிர்ப்புச் செயல்களாகும் கொள்ளை ஆகாது,” என கூறுகிறார்.

எனவே ஆங்கிலேயருக்கு வரி கட்டும் விஷயத்தால் எட்டயபுரப் பாளையத்திற்கும் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்திற்கும் இடையே பகை மூண்டது உறுதியாகிறது. இதன் காரணமாக தான் எட்டப்ப மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தாரா என்ற சந்தேகம் பலருக்கு எழலாம்.

கட்டபொம்மன் - எட்டப்பன்

பட மூலாதாரம், Internet Archive Digital Library

படக்குறிப்பு, மேஜர் பானர்மேன்

எட்டப்ப மன்னர் ஆங்கிலேயருக்கு செய்த உதவி

“1799, செப்டம்பர் மாதம், மேஜர் பானர்மேன் தனது படையினருடன் சென்று பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிடுகிறார். முதல் நாள் போரில் கட்டபொம்மன் வெற்றி பெறுகிறார், ஆங்கிலேய படையினருக்கு பலத்த சேதம் ஏற்படுகிறது.

"பின்னர், மேஜர் பானர்மேன் பாளையங்கோட்டையில் இருந்து பீரங்கிப் படையை உதவிக்கு அழைத்தார். பீரங்கிப் படை வந்தால் தனது கோட்டைக்கு பலத்த சேதம் ஏற்படும் மற்றும் பல வீரர்கள், மக்கள் தங்கள் உயிரை இழக்க நேரிடும் என்பதால் கோட்டையை விட்டு வெளியேறினார் கட்டபொம்மன்,” என்று கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர் முனைவர் கே. கருணாகரப் பாண்டியன்.

இதை பேராசிரியர் வே. மாணிக்கம் மற்றும் ராபர்ட் கால்டுவெல்லும் தங்களது நூல்களில் உறுதி செய்கின்றனர்.

மேலும் அவர் தொடர்ந்து கூறியது, “அவ்வாறு வெளியேறிய கட்டபொம்மன் மற்றும் அவரது சகாக்கள் கோல்வார்பட்டியில் உள்ள அரண்மனையில் தஞ்சம் அடைந்தார்கள். இதை அறிந்து கொண்ட எட்டப்ப மன்னர், மேஜர் பானேர்மேனிடம் கட்டபொம்மனை பிடிக்க தனக்கு கூடுதல் படைகள் வேண்டுமென கேட்டுள்ளார். பின்னர் அந்த படைகளுடன் சென்று கட்டபொம்மன் மீது தாக்குதல் நடத்தினார்.”

மேஜர் பானர்மேன் கவர்னர் ஜெனெரலுக்கு எழுதிய கடிதத்தில், (திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு, பக்கம் 184), “கட்டபொம்மன் தப்பித்து விட்டதை அனைத்து பாளையங்களுக்கும் முக்கியமாக அவனது எதிரி பாளையங்களுக்கு தெரிவித்தேன். அவர்களிடம் முழு படைபலத்தையும் பிரயோகித்து கட்டபொம்மனை எப்படியாவது பிடித்தே தீர வேண்டும் என உத்தரவிட்டேன்.

நான் தலைமை படையுடன் மேற்கு நோக்கி செல்ல தொடங்கிய போது, எட்டயபுரத்தில் இருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. கட்டபொம்மனை பிடிக்க ஒரு படையை ஏற்பாடு செய்திருப்பதாகவும், கூடுதலாக சில சிப்பாய்களை அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும் எனவும் எட்டயபுரம் பாளையத்தார்கள் கோரிக்கை வைத்தார்கள்,” என குறிப்பிடுகிறார்.

மேலும் மேஜர் பானர்மேன் தனது கடிதத்தில், “படைகளுடன் கோல்வார்பட்டி சென்ற எட்டப்ப மன்னருக்கும் கட்டபொம்மனுக்கும் ஒரு சிறிய போர் நடந்துள்ளது. இருதரப்புக்கும் இதில் சேதம் ஏற்பட்டது. முடிவில் கட்டபொம்மனின் மந்திரி தானாதிபதி பிள்ளை உட்பட கட்டபொம்மனின் படையை சேர்ந்த 34 பேர் பிடிபட்டனர்.

கைதிகளை எனது கூடாரத்திற்கு வரவழைத்தேன். பின்னர் தானாதிபதி பிள்ளையை நாகலாபுரத்தில் தூக்கிலிட்டு அவரது தலையைக் கொய்து பாஞ்சாலங்குறிச்சி அனுப்ப உத்தரவிட்டேன்” என்று கூறுகிறார்.

கட்டபொம்மன்

பட மூலாதாரம், Tamil digital library

படக்குறிப்பு, தொண்டைமான் குறித்த கும்மி

கட்டபொம்மனை பிடிக்க சென்ற எட்டயபுரத்து மன்னர் நேரிடையாகவே அவரை எதிர்த்து சண்டையிட்டார் என்பது இங்கு தெளிவாகிறது. மேலும் கோல்வார்பட்டி தாக்குதலுக்கு பிறகு எட்டயபுர மன்னரும் கட்டபொம்மனும் வேறு எங்காவது சந்தித்து சண்டையிட்டார்களா என்பது குறித்த சான்றுகள் ஏதும் இல்லை.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டப்ப மன்னர் எதிரியாக இருந்தார், ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் துரோகம் செய்தார் என்பதற்கோ அல்லது ஏதேனும் சதி செய்து கட்டபொம்மனை காட்டிக் கொடுத்ததற்கோ எந்த தெளிவான ஆதாரமும் கிடைக்கவில்லை.

வீரபாண்டியக் கட்டபொம்மன் எவ்வாறு பிடிபட்டார்?

கோல்வார்பட்டி தாக்குதலுக்கு பிறகு கட்டபொம்மன் உட்பட சிலர் மட்டும் தப்பித்து புதுக்கோட்டை தொண்டைமான் ராஜாவிடம் உதவி கேட்டு சென்றதாகவும், அப்போது ராஜாவின் எல்லைக்குட்பட்ட திருக்களம்பூர் குமரப்பட்டி காட்டில் அவர்கள் பதுங்கி இருந்த போது, கட்டபொம்மன் உட்பட சிலர் தொண்டைமான் ராஜாவால் சிறைப்படுத்தப்பட்டு மேஜர் பானர்மேனிடம் அனுப்பி வைக்கப்பட்டனர், எனவும் 1917 இல் வெளியிடப்பட்ட மெட்ராஸ் டிஸ்ட்ரிக்ட் கெசட்டில் (திருநெல்வேலி) பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராபர்ட் கால்டுவேல் எழுதிய நூலிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. (திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு, பக்கம் 183)

கட்டபொம்மன்
படக்குறிப்பு, எட்டயபுரம் அரண்மனை

1960 இல் வெளியான “கட்டபொம்மன் வரலாறு” என்ற நூலில் இது குறித்த கும்மிப்பாடல் இடம்பெற்றுள்ளது.

கட்டபொம்மனை பிடித்து கொடுத்த புதுக்கோட்டை தொண்டைமான் ராஜாவை பாராட்டி கவர்னர் கிளைவ் லண்டனிலுள்ள இயக்குநர்களுக்கு கடிதம் எழுதியதாகவும், இயக்குனர்கள் அரசரைப் பாராட்டிச் சால்வை, ஒரு குதிரை, இரண்டாயிரம் பொற்காசுகள் வழங்கியதாகவும் “புதுக்கோட்டையின் பொது வரலாறு” நூலில் ராதாகிருஷ்ண அய்யர் எழுதியுள்ளதை மேற்கோள் காட்டுகிறார் வே. மாணிக்கம் (“வீரபாண்டியக் கட்டபொம்மு விவாத மேடை”, பக்கம் 71)

“கட்டபொம்மன் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்த ஆயுதங்களை தொண்டைமானின் தளபதியாக இருந்த முத்து வைரவனின் வாரிசுகள் இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆயுத பூஜையின் போதும் அதை வழிபடுகின்றனர்.

"தொண்டைமானின் இந்த செயலுக்கு காரணம் ஆங்கிலேய அரசின் வெறித்தனமான பீரங்கி தாக்குதலால் தனது நாட்டு மக்களுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்ற எண்ணமே. ஆனால் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பன் என எவ்வாறு பதிவு செய்தார்கள் என புரியவில்லை. அது ஒரு வரலாற்றுப் பிழை,” எனக் கூறி முடித்தார் முனைவர் கே. கருணாகரப் பாண்டியன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: