பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்துக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரியங்கா ஜா
- பதவி, பிபிசி நியூஸ்
மத்தியப் பிரதேசம் போபாலில் செவ்வாய் அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ஒரு சில அரசியல் கட்சிகள் பொது சிவில் சட்டத்தைக் காரணம் காட்டி இஸ்லாமியர்களை தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டினார்.
இந்திய தேர்தல் அரசியலில், பொது சிவில் சட்டம் என்பது மதக்கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது.
அதே நேரம், முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தப்பட்ட பின், பெண்கள் மீதான சுரண்டல் மேலும் அதிகரித்துள்ளதாக மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
அதே நேரத்தில், பொது சிவில் சட்டத்தின் நோக்கம் நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்குமான தனி சட்டத்தை பாலினம், சாதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் வகையில் மாற்றி அமைப்பதே ஆகும் என மத்திய அரசு வாதிடுகிறது.
இஸ்லாமியர்களைக் குறிவைத்து தான் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை இயற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இஸ்லாமியத் தலைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களை மட்டும்தான் பாதிக்குமா?
பிரதமர் மோதி என்ன சொன்னார்?
இந்தியாவில், வெவ்வேறு சமூகங்களில் அவர்களின் மதம், நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் தனித்தனியான சட்டங்கள் உள்ளன.
ஆனால் பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டால், நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் சாதி, மதம், பாலின பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான சட்டம் பின்பற்றப்படும்.

பட மூலாதாரம், ANI
நாடு முழுவதும் இது போல் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இயற்றப்படுவது அவசியம் எனப் பேசிய பிரதமர், 'ஒரே குடும்பத்தில் உள்ள இருவருக்கு தனித்தனியான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் அந்த குடும்பம் எப்படி இயங்க முடியும்` எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோதி, "பொது சிவில் சட்டம் இயற்றப்படவேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. அந்த சட்டம் தேவை என்ற ஒற்றை இலக்கிலேயே உச்ச நீதிமன்றம் எப்போதும் கருத்துக்களை முன்வைத்து வருகிறது. இருப்பினும், வாக்கு வங்கி அரசியல் பசியில் உள்ளவர்கள் அதற்குத் தடையாக இருக்கிறார்கள். ஆனால் பாஜக எப்போதும் `எல்லோருடனும், எல்லோருக்காகவும்` என்பதை கடைபிடித்து வருகிறது," என்றார்.
மேலும் பேசிய அவர், "முத்தலாக்கை ஆதரித்து வாதிடுபவர்கள் வாக்கு வங்கி அரசியல் பசியால் இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு நாடு முழுவதும் அநீதி இழைக்கிறார்கள். முத்தலாக் என்பது பெண்களை மட்டுமே பாதிக்கிறது என நாம் கருத முடியாது. மாறாக அது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கிறது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வாழ விரும்பும் பெண் ஒருவர் முத்தலாக் மூலம் எளிதில் வீட்டை விட்டு விரட்டப்படுகிறார். இது அந்த பெண்ணுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது,'' என்றார்.
"சிலர் இஸ்லாமிய மகள்களின் தலைக்கு மேல் 'முத்தலாக்' என்ற தூக்குக் கயிற்றைத் தொங்கவிட விரும்புகிறார்கள். இது இஸ்லாமிய பெண்கள் தொடர்ந்து சுரண்டப்படுவதற்கு கிடைக்கும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது."

பட மூலாதாரம், Getty Images
இந்துக்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?
ஒரு நாட்டில் அனைத்து மக்களுக்கும் சமமான சட்டம் வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் நீண்ட காலமாக கோரி வருகின்றன.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோரிக்கை இந்துக்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?
இந்தக் கேள்விக்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஷாருக் ஆலம், “என்ன மாதிரியான சட்டம் வரப் போகிறது என்பதற்கேற்றவாறு தான் இதற்குப் பதில் அளிக்க முடியும்,” என்கிறார்.
ஓவைசி இது தொடர்பாக பேசும்போது கூட, பிரதமர் மோதி பேசுவது பொது சிவில் சட்டம் குறித்து அல்ல மாறாக இந்து சிவில் சட்டம் குறித்து என்றார்.
"இந்து தனிநபர் சட்டத்தில் இதுவரை பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் முஸ்லீம் தனிநபர் சட்டத்தில் அது போல் திருத்தங்கள் ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை," என்று ஷாருக் ஆலம், நம்புகிறார்.
உதாரணமாக, 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்து குடும்பச் சட்டத்தின் கீழ், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கப்பட்டது.
இது போன்ற சில அம்சங்களை மட்டும் கருத்தில் கொண்டு, இந்து குடும்பச் சட்டத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை இயற்ற முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
இதுபற்றி ஷாருக் ஆலம் கூறிய போது, “இந்து திருமணச் சட்டத்தின்படி, திருமணத்தில் பிரச்னை ஏற்படும் போதுதான் கணவரிடமிருந்து விவாகரத்து பெற முடியும். எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணத்திலிருந்து வெளியேற கணவனுக்கோ, மனைவிக்கோ எந்த உரிமையும் இல்லை. ஒன்று இருவருக்கும் இடையில் பரஸ்பர உடன்பாடு உள்ளது அல்லது ஏதாவது சிக்கலைக் காரணமாக வைத்து மணமுறிவுக்கு விண்ணப்பிக்கலாம். இப்படி ஒரு நிலை ஏற்பட்ட பின் மக்கள் பல பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அதன் மூலம் மணமுறிவு கோரும் கட்டாயத்தில் உள்ளனர்,” என்றார்.
பெங்களூருவில் உள்ள 'நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டியில்' கற்பிக்கும் சர்சு தாமஸ், பொது சிவில் சட்டத்தால் இந்துக்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை பட்டியலிட்டுள்ளார்.
பொது சிவில் சட்டம் அறிமுகமானால், இந்து கூட்டுக் குடும்பம் (HUF) என்ற பாரம்பரியம் முடிவுக்கு வரும் என்று அவர் கூறுகிறார். அசாதுதீன் ஓவைசியும் இதே போன்ற ஒரு கருத்தை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளார். அப்போது கேள்வி எழுப்பிய ஒவைசி, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் போது இந்து கூட்டுக் குடும்ப முறை ஒழிக்கப்படுமா எனக் கேட்டார்.
இது போன்ற ஒரு நிலையின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் நாட்டுக்கு இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
இந்து சட்டத்தின்படி, ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் இணைந்து ஒரு கூட்டுக்குடும்பத்தை (HUF) உருவாக்கலாம்.
வருமான வரிச் சட்டத்தின் கீழ் இந்த கூட்டுக் குடும்பம் (HUF) ஒரு தனி வருமானவரி கணக்கில் கொண்டுவரப்படுகிறது. இப்படிக் கொண்டுவருவதன் மூலம் குடும்பச் சொத்தில் மகள்களுக்கும் பங்கு இருக்கிறது.
மேலும் இதன் கீழ் அவர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்தும் சில விலக்குகள் கிடைக்கும்.
"பொது சிவில் சட்டத்தினால் தீமைகள் ஏற்படும் என்பது உறுதி"
புதிய பொது சிவில் சட்டத்தில் என்ன மாதிரியான நடைமுறைகள் மாற்றியமைக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது என்றும், ஆனால், இந்துக்களின் திருமணம் குறித்த வெவ்வேறு பழக்கவழக்கங்களை மாற்றவேண்டியிருக்கும் என்றும் சர்சு தாமஸ் கூறினார்.
உதாரணமாக, தென்னிந்தியாவில் உறவினர்களுக்கு இடையே திருமணங்கள் நடத்தப்படும் வழக்கம் நிலவி வந்தாலும், இந்த பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் போது, இது போன்ற பழக்கவழக்கங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் ரோஹித் குமார் பொது சிவில் சட்டம் குறித்து வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார்.
பொதுவாக ஏதாவது மாற்றங்களை அமல்படுத்தும் போது எதிர்ப்புகள் இருக்கும் என்றும், ஆனால் என்ன மாற்றங்கள் நிகழும் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில் அதைப்பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இனமுறையிலான சட்டம் பற்றிய விவாதம் வரும்போதெல்லாம் இந்து, முஸ்லீம் மதங்கள் குறித்தே பெரிதும் விவாதிக்கப்படுகிறது என்று தெரிவித்த அவர், இந்த இரண்டு சமூகத்தினரும் நாட்டில் பெரும்பான்மையாக இருப்பதால் இது நடக்கிறது என்றார்.

பட மூலாதாரம், Getty Images
பழங்குடி சமூகத்தினருக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
பிரதமர் நரேந்திர மோதியின் பேச்சுக்குப் பதிலளித்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் பழங்குடியினரின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றார்.
இது குறித்து சந்தேகம் எழுப்பிய முதல்வர் பாகேல், "பொது சிவில் சட்டம் என்றாலே நீங்கள் (பாஜக) ஏன் எப்போதும் இந்து-முஸ்லிம் கண்ணோட்டத்திலேயே எதையும் பார்க்கிறீர்கள்? சத்தீஸ்கரில் பல்வேறு பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, சட்டதிட்டங்கள் அனைத்தும் அவர்களின் வழக்கமான மரபுகளின் படி உள்ளன. அவர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள். இப்போது நாம் ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்கினால், நமது பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் என்னவாகும்?" என கேள்வி எழுப்பினார்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பழங்குடியினர் அமைப்புகளும், சட்ட ஆணையத்தின் முன் பொது சிவில் சட்டம் குறித்த யோசனையைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளன.
பொது சிவில் சட்டம் காரணமாக, பழங்குடியினரின் அடையாளத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று இந்த பழங்குடி மக்கள் அஞ்சுகின்றனர்.
ஜூன் 14 ஆம் தேதியே பொது மக்கள் மற்றும் மத அமைப்புகளிடம் பொது சிவில் சட்டம் குறித்த கருத்தை சட்ட ஆணையம் கேட்டிருந்தது.
ஆதிவாசி சமன்வாய் சமிதி (ASS) என்ற பெயரின் கீழ், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் 30 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் பிரதிநிதிகள் ஒரு கூட்டத்தை நடத்தி பொது சிவில் சட்டம் குறித்து விவாதித்தது என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆதிவாசி ஜன் பரிஷத் தலைவர் பிரேம் சாஹி முண்டா பேசுகையில், பழங்குடியினர் தங்கள் நிலத்துடன் ஆழமான தொடர்பு கொண்டுள்ளனர் என்றார்.
அவர் பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய போது, "பொது சிவில் சட்டம் காரணமாக சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் மற்றும் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் ஆகிய இரண்டு பழங்குடியினச் சட்டங்கள் பாதிக்கப்படும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். இந்த இரண்டு சட்டங்களும் பழங்குடியினரின் நிலத்திற்குப் பாதுகாப்பு அளிக்கின்றன," என்றார்.
"எங்களது பாரம்பரிய சட்டங்களின்படி, திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் உரிமை கிடைப்பதில்லை. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், இந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும்," என்றார்.
மேலும், திருமணம், விவாகரத்து உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பல பாரம்பரிய சட்டங்கள் பழங்குடியினர் மத்தியில் நடைமுறையில் உள்ளன என்ற நிலையில், பொது சிவில் சட்டத்தால் அவற்றிற்கும் பாதிப்புக்கள் ஏற்படும் என்றார்.
இதற்கிடையே, பழங்குடியினரின் தனிப்பட்ட சட்ட திட்டங்கள் இன்னும் ஆவணப்படுத்தப்படவில்லை என்ற நிலையில், பொது சிவில் சட்டம் அவற்றை அப்படியே அழித்துவிடும் என்றார் சரசு தாமஸ்.
இப்படியான சூழ்நிலையில் அவர்களின் நிலங்களுக்கு என்ன பாதிப்பு, சொத்துக்கள் என்னவாகும், சிலருக்கு தனிப்பட்ட முறையில் சொந்தம் இல்லாத சமுதாயச் சொத்துக்களின் நிலை என்ன, அவற்றிற்கு அந்தச் சூழ்நிலையில் என்ன நடக்கும் என்று கூட யாருக்கும் எதுவும் தெரியாது என்றும் அவர்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன.

பட மூலாதாரம், ANI
வடகிழக்கில் போராட்டங்கள் ஏன் நடக்கின்றன?
பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களின் பிரச்சினை மட்டுமல்ல, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் எதிர்க்கப்படும் என்று 2016ஆம் ஆண்டு அசாதுதீன் ஓவைசி கூறியிருந்தார்.
ஒவைசியின் இந்தக் கருத்துக்குப் பின்னால் ஒரு பெரிய கணக்கு உள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாகாலாந்தில் 86.46%, மேகாலயாவில் 86.15% மற்றும் திரிபுராவில் 31.76% பேர் பட்டியல் பழங்குடியினர்.
இந்த புள்ளிவிவரங்கள் இந்த வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியின மக்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.
ஜார்கண்ட் மாநிலத்திற்கு முன்னதாக, கடந்த சனிக்கிழமை, மேகாலயாவில் உள்ள பழங்குடியினர் கவுன்சில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
தி ஹிந்துவில் வெளியான ஒரு அறிக்கையின்படி , இந்த முன்மொழிவை முன்வைத்த போது, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் காசி(Khasi) சமூகத்தின் பழக்கவழக்கங்கள், மரபுகள், நம்பிக்கைகள், பாரம்பரியம், திருமணம் தொடர்பான சுதந்திரம் மற்றும் மத விஷயங்களில் நேரடி பாதிப்பு ஏற்படும் என காசி ஹில்ஸ் தன்னாட்சி பெற்ற மாவட்ட கவுன்சில் அச்சம் தெரிவித்திருந்தது.
காசி சமூகம் தாய்வழி விதிகளைப் பின்பற்றுகிறது. இந்தச் சமூகத்தில், குடும்பத்தின் இளைய மகள், சொத்தின் பாதுகாவலராகக் கருதப்பட்டு, குழந்தைகளின் பெயர்களுடன் தாயின் குடும்பப்பெயரும் எடுக்கப்படுகிறது. அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் இந்த சமூகத்திற்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தவிர, நாகாலாந்து பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் (என்பிசிசி) மற்றும் நாகாலாந்து பழங்குடி கவுன்சில் (என்டிசி) ஆகியவையும் பொது சிவில் சட்டம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது சிறுபான்மையினரின் மதங்களைப் பின்பற்றும் அடிப்படை உரிமை பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், AFP
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் என்ன கூறியது?
பிரதமர் மோடி அனைத்து சமூகங்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம் தேவை எனப் பேசிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக ஒரு வரைவு ஆவணத்தைத் தயாரிப்பது குறித்து விவாதித்தது.
அப்போது செய்தி நிறுவனமான பிடிஐ உடன் உரையாடிய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் காலித் ரஷீத் ஃபராங்கி மஹாலி, பொது சிவில் சட்டத்தின் மீதான ஆட்சேபனை குறித்த வரைவு ஆவணம் தயாரிப்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றும், ஆனால் இந்த வழக்கமான சந்திப்பை பிரதமர் மோடியின் உரையுடன் இணைத்துப் பார்க்கக்கூடாது என்றும் கூறினார்.
"இந்தியா பல மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் நாடு. எனவே பொது சிவில் சட்டம், முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள், யூதர்கள், பார்சிகள் மற்றும் பிற சிறுபான்மையினரையும் பாதிக்கும்," என்று அவர் கூறினார்.
ஜூலை 14-ம் தேதிக்கு முன், பொது சிவில் சட்டத்தின் மீதான ஆட்சேபனை சட்ட ஆணையத்தில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தாக்கல் செய்யும் என்று அவர் கூறினார்.
அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் என்பது தனிநபர் சட்ட விஷயங்களில் முஸ்லிம்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசு சாரா அமைப்பாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












