டைட்டன் நீர்மூழ்கியின் மீட்கப்பட்ட பாகங்கள் விபத்தின் மர்மத்தை கண்டுபிடிப்பதில் எப்படி உதவும்?

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம், OCEAN GATE

படக்குறிப்பு, டைட்டன் நீர்மூழ்கி
    • எழுதியவர், ஜோனாதன் ஆமோஸ், அறிவியல் செய்தியாளர்
    • பதவி, பிபிசி நியூஸ்

அட்லான்டிக் கடலோரத்தில் எஞ்சிக் கிடக்கும் டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த எச்சங்களிலிருந்து சேகரிக்க முடிந்த அனைத்து குப்பைகளையும், ’ஹொரைசான் ஆர்க்டிக்’ (Horizon Arctic) என்ற மீட்பு கப்பல் சேகரித்துள்ளது.

கரைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் பொருட்களுடைய அளவுகளின் மூலம், கப்பலின் ஆழ்கடல் ரோபோவால், குறிப்பிடத்தக்க கூறுகளைக் கரைக்கு கொண்டு வர முடிந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

இது 11 நாட்களுக்கு முன்பு, 5 பேருடன் வெடித்துச் சிதறிய டைட்டன் கப்பலின் பேரழிவுக்கான காரணத்தை ஆய்வு செய்து வரும், புலனாய்வாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

நியூஃபவுண்ட்லாந்து பகுதியில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் டைட்டன் பாகங்களை பிபிசி குழு பார்வையிட்டது.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம், CBC

படக்குறிப்பு, நீர்மூழ்கியின் வியூ பாய்ண்ட் (view point) சாளரம்

நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பகுதியில் வேலை பார்த்து வரும் குவாசைட் தொழிலாளர்கள், நீர்மூழ்கியின் எஞ்சியிருக்கும் துண்டுகளை தார்ப்பாய்கள் மூலம் மறைக்க முயன்றனர். ஆனாலும் அங்கே சில துண்டுளைத் தெளிவாக அடையாளம் காண முடிந்தது.

டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபர் கலவையில் உருவாகியிருந்த சிலிண்டர் வடிவ உருளை ஒன்று மிகவும் தெளிவாகத் தெரிந்தது.

அதேபோல் டோனட் (doughnut) வடிவில், உலோகங்களால் ஆன பொருள் ஒன்று கிடந்தது. அதன் நடுவில் பெரிய துளையும் இருந்தது. அது அநேகமாக நீர்மூழ்கியின் வியூ பாய்ண்ட் (view point) சாளரமாக இருந்திருக்கும். அதன் துளை வழியாக கிரேன் அதைத் தூக்கிச் சென்றது.

ஆனால் அதேநேரம், அதன் அக்ரிலிக் ஜன்னல்கள் இப்போது எங்கிருக்கும் என்பது குறித்து நமக்குத் தெரியவில்லை. அதனுடைய வலிமை குறித்தும், 4கிமீ ஆழத்தில் உள்ள அழுத்தத்தை இந்த சாளரங்கள் எப்படி சமாளித்திருக்கும் என்பது குறித்தும் பல கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.

இந்த நேரத்தில் டைட்டானியத்தால் செய்யப்பட்ட விளிம்புகள் போன்ற பொருட்களும் அங்கே கொண்டு வரப்பட்டன.

டைட்டனின், கார்பன் ஃபைபரால் ஆன உருளையான மேற்பரப்பின் இரு முனைகளிலும் ஒட்டப்பட்டிருந்த உலோக வளையங்கள் இவை. இந்த விளிம்புகளின் பின் பகுதியில், தொப்பி போன்ற மற்றொரு உபகரணம் மூலம் இணைக்கப்பட்டிருந்தது.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம், SHUTTER STOCK

படக்குறிப்பு, நீர்மூழ்கியின் டைட்டானிய விளிம்புகள்

இந்த விளிம்புகளும், கார்பன் ஃபைபர் பொருட்களுடன் அதற்கு இருந்த இணைப்பும்தான், அமெரிக்க - கனடா அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணையின் மையப்புள்ளியாக இருக்கும் எனத் தெரிய வருகிறது.

“அக்ரிலிக் சாளரங்களுக்கும், டைட்டானிய அரைகோள குவிமாடங்களுக்கும் இடையே உள்ள இடைமுகத்தையும்; டைட்டானிய விளிம்புகளுடன் கார்பன் ஃபைபர் பிணைக்கப்பட்டிருக்கும் பகுதியையும்தான் இங்கே முதன்மை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்,” என பேராசிரியர் பிளேர் தோர்ன்டன் பிபிசியிடம் கூறினார். இவர் பிரிட்டனின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த இரண்டு முக்கியக் கூறுகளும் மீட்கப்பட்டிருப்பதன் மூலம், இந்த விபத்து குறித்த விசாரணையை இன்னும் துரிதமாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம், SHUTTER STOCK

அங்கு நின்றுகொண்டிருந்த லாரிகளில், குப்பைகள் ஏற்றபட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அந்தக் குப்பைகளில் என்ன இருந்தது என்பது குறித்து எங்களால் யூகிக்க முடியவில்லை. ஒருவேளை அது கார்பன் ஃபைபரின் மேலோடு துண்டுகளாக இருந்திருக்கலாம்.

இந்த விபத்தை விசாரித்து வரும் அதிகாரிகள் அங்கிருந்திருந்தால், அந்தக் குப்பைகளை ஆய்வு செய்ய வேண்டுமெனக் கேட்டிருப்பார்கள். விளிம்புகளுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த கார்பன் அடுக்குகளை, பல வழிகளில் நம்மால் பிரித்தெடுக்க முடியும்.

கரைக்கு வந்து சேர்ந்த மிகப் பெரிய பொருட்களில், பின்பக்கத்தில் உபகரணங்களை வைக்கும் இடமாக இருந்த பாகமும் ஒன்று. நீர்மூழ்கி ஆழ்கடலுக்குள் மூழ்கிப் பயணிக்கும்போது ஒரு கூர்மையான வால் போன்ற கூம்பு மூலம் மூடப்பட்டிருந்தாலும், உபகரணங்கள் வைக்க பயன்படுத்தப்பட்ட பின்புற பாகம் மட்டும் திறந்த கூண்டாகவே இருக்கும்.

தற்போது நீர்மூழ்கி வெடித்து விபத்திற்குள்ளாகி இருப்பதன் காரணமாக இந்தப் பின்புற பாகம்(rear equipment bay) தனியே பிரிந்து வந்துள்ளது. விபத்தின் காரணமாக அது மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம், SHUTTER STOCK

படக்குறிப்பு, உபகரணங்கள் வைக்க பயன்படுத்தப்பட்ட பின்புற பாகம் (Rear equipment bay)

அதேபோல் அங்கே நீட்டமாகத் துருத்திக் கொண்டிருக்கும் கம்பி ஒன்று இருந்தது. அது ஒரு ஆன்டெனா. நீர்மூழ்கி கடலின் மேற்பரப்பில் இருக்கும்போது, இரிடியம் செயற்கைக் கோள் தொலைபேசி நெட்வொர்க்குடன் இணைப்பில் இருப்பதற்கு இந்த ஆண்டெனா பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆன்டெனா சுயாதீனமாக இயங்கக் கூடியது. டைட்டன் நீர்மூழ்கி ஆழ்கடலுக்குள் செல்லத் துவங்கிய பிறகு, இந்த ஆன்டெனாவிலிருந்து எந்தச் செய்தியும் வரவில்லையென்றால், கடலுக்குள் சென்ற நீர்மூழ்கி திரும்பி வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதற்கான வலுவான அறிகுறியாக அது கருதப்படுகிறது.

அங்கேயிருந்த லாரிகளில், தாழ்த்தப்பட்ட நீண்ட மெட்டல் கம்பிகள் காணப்பட்டன. அது டைட்டனின் தரையிறங்கும் சட்டத்தில் இருந்தவற்றின் எஞ்சியுள்ள பகுதிகளாகும்.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தரையிறங்கும் சட்டத்தின் எச்சங்கள்
நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வெள்ளை நிற பேனல்கள்

குவாசைடில் காணப்படும் பெரிய, வெள்ளை நிற பேனல்கள் வெளிப்புற உறைப்பூச்சின் ஒரு பகுதி. கார்பன் ஃபைபர் மேலோட்டத்தின் வெளிப்புறத்தில் செல்லும் கம்பிகள் மற்றும் குழாய்களை மறைப்பதற்கு அவை பயன்படுத்தப்பட்டன.

சிலர் இந்த பேனல்களை ‘ஹல்’ (hull) துண்டுகள் என்று கூறுகின்றனர். ஆனால் கார்பன் ஃபைபரின் அழுத்த பாத்திரத்தின் (Fiber Pressure vessel) துண்டுகள் கருப்பு நிறத்தில், தடித்து சற்று கடினமானதாக இருக்கும்.

தற்போது இந்த வெள்ளை நிற பேனல்கள் லாரிகளின் மீது இறக்கி வைக்கப்பட்டுள்ளதால்தான் சற்று வளைந்து காணப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: