பெண்ணுக்கு வேறொருவரின் விந்தணு மாற்றி செலுத்தப்பட்டதால் குழப்பம்: செயற்கை கருத்தரிப்பில் இப்படி ஏன் நடக்கிறது?

செயற்கை கருத்தரித்தல் முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இயற்கை முறையில் இல்லாமல் செயற்கை முறையில் மருத்துவ உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையே செயற்கை கருத்தரிப்பு என்றழைக்கப்படுகிறது.
    • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
    • பதவி, பிபிசி செய்தியாளர்

செயற்கைக் கருவூட்டல் முறையில் கணவரின் விந்தணுவுக்குப் பதிலாக வேறொருவரின் விந்தணுவைச் செலுத்தி ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததால் அது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. தற்போது அது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி, செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுகொள்ள முடிவெடுத்து கடந்த 2008ல் இதற்காக மருத்துவமனையை அணுகியுள்ளனர். 2008ஆம் ஆண்டு அப்பெண்ணுக்கு விந்தணு செயற்கை முறையில் செலுத்தப்பட்டது. 2009ஆம் ஆண்டு அவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

இந்நிலையில், டிஎன்ஏ பரிசோதனை செய்துபார்த்தபோது, குழந்தைகளின் தந்தை, அந்தப் பெண்ணின் கணவர் இல்லை என்பது தெரியவந்தது. அதாவது, கணவரின் விந்தணுவுக்கு பதிலாக வேறொருவரின் விந்தணுவை அவருக்கு செலுத்தியுள்ளனர்.

அதன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதையடுத்து, தேசிய நுகர்வோர் குறைதீர்த்து ஆணையத்தில் தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை அபராதமாக தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

நாட்டில் புற்றீசல் போல் அதிகரித்துவரும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் குறித்தும் கவலை தெரிவித்த நுகர்வோர் குறைத்தீர்ப்பு ஆணையம், இது சில நேரங்களில் தவறான சிகிச்சைக்கு வழி வகுக்கின்றன என்றும் இந்த சிகிச்சையை மேற்கொள்வோருக்கு அது குறித்து போதிய அறிவு தேவை என்றும் கூறியுள்ளது.

மகப்பேறு மருத்துவர்கள் செயற்கை கருவுருதல் தொடர்பாக ஆழ்ந்த அறிவு இல்லாமல் தவறான நெறிமுறைகளைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்றும் இது தம்பதியினரை உள ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கும் என்பதை உணர வேண்டும் என தெரிவித்திருந்தது.

மேற்கூறிய சம்பவம், செயற்கை கருவுறுதல் முறையின்போது பின்பற்றப்படும் செயல்முறைகள் தொடர்பாக பல்வேறு ஐயங்களை உருவாக்கியுள்ளன.

செயற்கை கருத்தரித்தல் முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை அபராதமாக தர வேண்டும் என்று உத்தரவிட்டது

தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி (NFHS -5), 2020-21ல் இந்தியாவில் கருத்தரித்தல் விகிதம் 2.0 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 2015-16ல் 2.2 ஆக இருந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இது 1.8 ஆக உள்ளது. 2015-16ல் கருத்தரித்தல் விகிதம் 1.7ஆக இருந்தது. பொதுவாக கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் கருத்தரித்தல் விகிதம் குறைவாக காணப்படுகிறது.

இதனால், செயற்கை கருத்தரிப்பு முறையை பலரும் நாடுகின்றனர். அப்படியிருக்கும்போது, செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு எப்படி அனுமதி அளிக்கப்படுகின்றன, அங்கு பின்பற்றும் முறைகள் என்ன போன்றவை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

செயற்கை கருத்தரிப்பு என்றால் என்ன?

இயற்கை முறையில் இல்லாமல் செயற்கை முறையில் மருத்துவ உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையே செயற்கை கருத்தரிப்பு என்றழைக்கப்படுகிறது. ஐவிஎஃப், வாடகைத்தாய் என ஏராளமான முறைகள் இதில் உள்ளன.

“ஒரு தம்பதியினருக்கு குழந்தை இல்லை என்றால் முதலில் அவர்களுக்கு கருமுட்டை உருவாகும் மருந்துகளை கொடுப்போம், அதில் கருமுட்டை உருவாகவில்லை என்றால் பின்னர் ஐவிஒய் சிகிச்சை செய்வோம். அதிலும் கருமுட்டை உருவாகவில்லை என்றால் ஐவிஎஃப் மேற்கொள்வோம்.”என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா

செயற்கை கருத்தரித்தல் முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இன் விட்ரோ ஃபெர்டீலேசன் என்பதன் சுருக்கம்தான் ஐவிஎஃப்.

ஐவிஎஃப் முறை எப்படி செயல்படுத்தப்படுகிறது?

“இன் விட்ரோ ஃபெர்டீலேசன் என்பதன் சுருக்கம்தான் ஐவிஎஃப். நம் உடலின் வெளியே நடைபெறும் கருவுறுதல் என்பது இதன் பொருள். இந்த முறையில், ஒரு கண்ணாடி தட்டில் தாயிடம் இருந்து எடுத்த கருமுட்டையையும், தந்தையிடம் இருந்து எடுத்த விந்தணுவை ஒன்றாக சேர்த்து வைத்து அதற்கேற்ற வெப்பநிலையில் போன்ற சூழ்நிலைகளில் மூடி வைத்துவிடுவார்கள். அடுத்த நாளில் எடுத்துபார்க்கும்போது 5 , 5 கரு முட்டைகள் உருவாகியிருக்கும்.

ஐவிஎஃப்-இன் முன்னேறிய வடிவம் ஐசிஎஸ்ஐ(ICSI).இந்த முறையில், ஆரோக்கியமான ஒரு கருமுட்டையில் ஆரோக்கியமான ஒரு விந்தணுவை செலுத்துவார்கள். இவ்வாறு செய்யும்போது 80 சதவீதம் கரு உருவாகிவிடும். இந்த முறைதான் தற்போது அதிகளவில் செய்யப்படுகிறது. இவ்வாறு உருவான கரு பின்னர் தாயின் கருப்பையில் வைக்கப்படும். கருக்கோளம் என்ற நிலைக்கு சென்ற பின்னர் லேசர் மூலம் முட்டையின் ஓட்டை தட்டிவிடுவோம். இதன் மூலம், கருப்பையில் முட்டை ஒட்டிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது ” என்று ஜெயஸ்ரீ கூறுகிறார்.

“இதேபோல், ஒரு தாயிடம் இருந்து 6 முட்டைகள் கிடைக்கிறது என்றால் சில நேரங்களில் இரண்டு முட்டைகளை பயன்படுத்திக்கொண்டு மீதமுள்ள 4 முட்டைகளையும் சேமித்து வைப்போம். பின்னாட்களில் இரண்டாவது குழந்தையை பெற்றுகொள்ள அவர்கள் திட்டமிட்டால் இந்த முட்டைகளை பயன்படுத்து கருவை உண்டாக்குவோம்” என்றும் அவர் நம்மிடம் கூறினார்.

செயற்கை கருத்தரித்தல் முறை

பட மூலாதாரம், Getty Images

ஐவிஎஃப் முறையில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

டெல்லியில் மனைவிக்கு கணவரின் விந்தணு செலுத்தப்படுவதற்கு பதிலாக வேறொருவரின் விந்தணு செலுத்தப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு இதுபோன்ற தவறுகள் எவ்வாறு நடைபெறுகிறது என்ற கேள்வியை ஜெயஸ்ரீ முன்பு வைத்தோம். அதற்கு அவர், “ஒருவேளை ஆய்வகத்தில் தவறுதலாக லேபிலிங் செய்திருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் கரு சரியாக உருவாகி இருக்காது. வேறு எம்ப்ரியோ மூலம் கருவை வைக்கலாமா என்று மருத்துவர்கள் தரப்பில் கேட்கும்போது தம்பதியினரும் சரி என்று சொல்வார்கள். ஆனால், தம்பதியினர் எழுத்துப்பூர்வ ஒப்புதலை அளித்திருக்க மாட்டார்கள். இதுபோன்றவை நடப்பதற்கு வாய்ப்பு உள்ளன. ” என்றார்.

ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்களுக்கு பின்னர், செயற்கை கருத்தரித்தல் முறையில் விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டே சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் ஜெயஸ்ரீ சர்மா குறிப்பிடுகிறார்.

ஐவிஎஃப் சிகிச்சை செய்வதற்கு ஏற்ற மையங்களை தேர்வு செய்வது எப்படி என்று மருத்துவர் ஜெயஸ்ரீயிடம் கேட்டோம். “ஐவிஎஃப் சிகிச்சையை பொறுத்தவரை எம்ப்ரியோ லாஜிஸ்ட் பணிதான் பிரதானம். எனவே எந்த மையத்தில் அனுபவம் வாய்ந்தவர் இருக்கிறார் என்பதை பார்த்து மையத்தை அணுகலாம். புதிய தொழில்நுட்பங்கள், கருவிகள் உள்ள மையத்தை தேர்வு செய்யலாம். பொதுவாக, ஐவிஎஃப் சிகிச்சையை பொறுத்தவரை வெற்றி சதவீதம் என்பது 40 முதல் 50 சதவீதம் வரை தான் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரே நபர் மூன்றுமுறை ஐவிஎஃப் செய்தால்தான் ஒருமுறையாவது அது வெற்றி அடையும். சில பேருக்கு ஒரேமுறையில் வெற்றி அடையலாம் ” என்றார்.

செயற்கை கருத்தரித்தல் முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டில் இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் திருத்தம், வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாவில் (2020) திருத்தம் மேற்கொண்டது.

மத்திய அரசு கொண்டு வந்த திருத்தம் என்ன?

மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டில் இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் திருத்தம், வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாவில் (2020) திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகள், உயிரணுக்களை தானம் பெற்று சேகரிக்கும் வங்கிகள் போன்றவை தேசிய வங்கிகள் மற்றும் கிளினிக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். திவு செயல்முறையை எளிதாக்குவதற்கு மாநில அரசுகள் பதிவு அதிகாரிகளை நியமிக்கும்.

நிபுணத்துவம் வாய்ந்த நபர்கள், உள்கட்டமைப்பு மற்றும் சிகிச்சையளிக்கும் வசதிகள் தொடர்பாக சில செயல்முறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே செயற்கை ஏ.ஆர்.டி. மருத்துவமனைகள் மற்றும் வங்கிகள் பெயர் பதிவு செய்யப்படும். இந்த பதிவு 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பின்னர் பதிவை மீண்டும் புதிப்பிக்க வேண்டும். மசோதாவின் விதிகளுக்கு முரணாக அவற்றின் செயல்பாடுகள் இருந்தால் பதிவு ரத்து செய்யப்படும் அல்லது சஸ்பென்ட் செய்யப்படும்.

இதேபோல், கருமுட்டை, விந்தணு தானம் பெறப்படுவது தொடர்பாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, 21 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்ட ஆண்களிடம் இருந்து மட்டுமே விந்தணுக்களை பெற வேண்டும். 23 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களிடம் இருந்து மட்டுமே கருமுட்டையை தானம் பெற வேண்டும். கருமுட்டை தானம் செய்யும் பெண்ணுக்கு திருமணம் ஆகி இருக்க வேண்டும், ஒரு குழந்தையாவது உயிருடன் இருக்க வேண்டும். அதேபோல், அவர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கருமுட்டையை தானமாக தர வேண்டும், அவரிடம் இருந்து 7 கருமுட்டைகளுக்கு மேல் எடுக்கக் கூடாது போன்ற விதிகள் விதிக்கப்பட்டன.

செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தையை பெற்றொடுக்கும்போது, தானம் அளித்தவர்களுக்கு குழந்தை மீது எவ்வித உரிமையும் கிடையாது. குழந்தை வேண்டி சிகிச்சைக்கு வந்த தம்பதியினருக்கே குழந்தை மீது உரிமை உண்டு.

செயற்கை கருத்தரிப்பு முறையில் அரசின் உத்தரவுகள் மீறப்படும் பட்சத்தில் முதல்முறை 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் அடுத்த முறை 8 முதல் 12 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

செயற்கை கருத்தரிப்பு முறையோடு குழந்தைகளின் பாலினத்தை அறிந்துகொள்ளும் வகையில் சிகிச்சை வழங்கும் அல்லது விளம்பரம் அளிக்கும் மருத்துவமனைகளுக்கு 5 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 10 முதல் 25 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

செயற்கை கருத்தரித்தல் முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செயற்கை கருத்தரிப்பு முறையில் அரசின் உத்தரவுகள் மீறப்படும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைவது எப்போது?

தனியார் மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்படுவதாகவும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்களை அமைக்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஐந்து கோடி ரூபாய் செலவில் எழும்பூரில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ மையத்திலும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும்" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதன் பின்னர், இந்த விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அரசு சார்பில் கருத்தரிப்பு மையங்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். எனவே, அரசு சார்பில் கருத்தரிப்பு மையங்களை தொடங்குவது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம்.

அதன்படி எழும்பூரில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ மையத்திலும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் கருத்தரிப்பு மையங்களில் கட்டுமானப்பணிகள் நிறைவுற்று, ஆய்வுகள் முடிவுடையும் நிலையில் உள்ளது. ஆகஸ்ட் இறுதியில் பணிகள் முடிவுற்று செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னையிலும் 2ஆம் வாரத்தில் மதுரையிலும் தொடங்கி வைக்க இருக்கிறோம். பல லட்சம் செலவு செய்வதற்கான நிலை இருக்காது” என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: