பொது சிவில் சட்டம்: திருமணம், விவாகரத்து, சொத்துரிமையை தீர்மானிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, ஒரே நாடு ஒரே தேர்தல் வரிசையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நீண்ட காலமாக முன் வைக்கும் ஒன்று பொது சிவில் சட்டம்.
2014-ம் ஆண்டு மோதி தலைமையில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் குறித்த குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.
அதன் விளைவாக, 21-வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு செய்தது. 2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பொது சிவில் சட்டம் குறித்த கேள்விகளை முன்வைத்து, அதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கருத்துகளையும் அது கோரியிருந்தது. அதேபோன்ற பொதுக் கருத்து கோரும் அறிவிக்கைகள் 2018-ம் ஆண்டு மார்ச் 19, மார்ச் 27, ஏப்ரல் 10 ஆகிய தேதிகளிலும் வெளியிடப்பட்டன.
அவ்வாறு பெறப்பட்ட பதில்கள் அடிப்படையில் 21-ம் சட்ட ஆணையம் "குடும்ப சட்டங்களின் சீர்திருத்தம்" என்ற தலைப்பில் அதே ஆண்டு மார்ச் 31-ம் தேதி ஆலோசனைக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்த கட்டுரை வெளியாகி 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், பொது சிவில் சட்டத்தின் முக்கியத்துவம் கருதியும், அதன் பின்னர் வெளிவந்த பல நீதிமன்ற உத்தரவுகளை கருத்தில் கொண்டும் 22-வது இந்திய சட்ட ஆணையம் அந்த விஷயத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.
பொது சிவில் சட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்க முடிவு செய்து, ஜூன் 14-ம் தேதியன்று அறிவிப்பு ஒன்றை 22வது இந்திய சட்ட ஆணையம் வெளியிட்டுள்ளது.
பொது மக்களும், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளும் பொது சிவில் சட்டம் தொடர்பான தங்களது கருத்துகள், ஆலோசனைகளை 30 நாட்களுக்குள் இமெயில் மூலம் இந்திய சட்ட ஆணையத்திடம் தெரிவிக்கலாம்.
பொது சிவில் சட்டம் - பிரதமர் மோதி பேச்சு
இந்த பின்னணியில், இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ள மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோதியின் பேச்சு பொது சிவில் சட்டத்தை தேசிய அரசியலில் மீண்டும் பேசு பொருளாக மாற்றியுள்ளது.
போபாலில் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோதி, "பொது சிவில் சட்டத்தின் பெயரால் மக்கள் தூண்டி விடப்படுகிறார்கள். ஒரு நாடு 2 சட்டங்கள் மூலம் எவ்வாறு இயங்க முடியும்? இந்திய அரசியல் சாசனம் சம உரிமை பற்றிப் பேசுகிறது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்கள்" என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்திய சட்ட ஆணைய தலைவர் பேச்சு
பிரதமர் மோதியின் பேச்சு பொது சிவில் சட்டத்தை இந்திய அரசியலின் மையப்புள்ளிக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது. பொது சிவில் சட்டத்தை முன்னிறுத்தி அரசியல் களத்தில் வாத, பிரதிவாதங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், இந்திய சட்ட ஆணையத்தின் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக அதன் தலைவர் நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி கூறியுள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்துள்ள நேர்காணலில், "நேற்று வரை 8.5 லட்சம் பதில்கள் கிடைத்துள்ளன. பொது சிவில் சட்டம் என்பது புதிது அல்ல. 2016-ம் ஆண்டு பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் 2018-ம் ஆண்டு ஆலோசனைக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 2018 முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை சட்ட ஆணையம் செயல்படாமல் இருந்தது. 2022-ம் ஆண்டு நவம்பரில் நியமனங்கள் நடந்த பிறகு, பொது சிவில் சட்டம் குறித்த பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன" என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இன்று நாடு முழுவதும் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ள பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அது அவசியமா? அதற்கான கோரிக்கைகள் எப்போது எழுந்தன? என்று விரிவாகப் பார்க்கலாம்.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல் சட்டங்கள் எனப்படும் சிவில் சட்டங்கள் மட்டும் சாதி, மத, இன ரீதியாக கலாசாரத்திற்கேற்ப மாறுபடும். இந்தியாவில் உள்ள பல்வேுறு சமூகங்கள், தங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் திருமணம் , விவகாரத்து, வாரிசு மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் வெவ்வேறு சட்டங்களை பின்பற்றி வருகின்றன.
பொது சிவில் சட்டம் என்றாலே நம்மில் பெரும்பாலானோரின் கவனம் இயல்பாகவே முஸ்லிம்களின் மீது குவிகிறது. ஆனால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, சீக்கியர்கள், ஜெயின்கள் என்று ஒருவர் சார்ந்துள்ள மதத்திற்கேற்ப சிவில் சட்டங்கள் மாறுபடுகின்றன.
உதாரணமாக, சீக்கியர்கள் அவர்கள் மதச்சட்டப்படி, சுய பாதுகாப்பிற்காக எந்நேரமும் குறுவாள் வைத்திருக்கலாம். காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்தாலும் கூட அங்குள்ள விதிகளுக்கு மாறாக சீக்கியர்கள் தாடி வைக்கலாம், துறைசார் தொப்பிக்கு மாற்றாக தலையில் டர்பன் வைத்துக் கொள்ளலாம் என்று அவர்களுக்கான தனி நபர் சட்டம் கூறுகிறது.
இந்து மதத்திலும் சில வகையான தனி சிவில் சட்டங்கள் உள்ளன. இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் வரிச்சலுகைகள் உண்டு. இந்துக்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ஜீவனாம்சம் பெறவும் தனி சட்டங்கள் உண்டு. இதை இந்து தத்து மற்றும் ஜீவனாம்சம் சட்டம்-1956 உறுதிசெய்கின்றது.
அதாவது, சொத்துரிமை, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை போன்றவற்றை தீர்மானிக்கும் தனிநபர் சட்டங்கள் மாறுபட்ட கலாசார வளம் கொண்ட இந்தியாவில் சாதி, மதம், இனம் ரீதியாக மாறுபடும். இந்த வேறுபாடு கூடாது என்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க.. குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைப் போல உரிமையியல் சட்டங்களும் அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும் என்று அக்கட்சி வாதிடுகிறது.
பொது சிவில் சட்டம் கோரிக்கை எப்போது யாரால் ?
பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்து, முஸ்லிம்களுக்கென தனித்தனியே தனிநபர் சட்டங்கள் இயற்றப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்ணுரிமை ஆர்வலர்களால் முதன் முதலில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பெண்ணுரிமை, பாலின சமத்துவம், மத சார்பின்மை போன்றவற்றை அவர்கள் முன்வைத்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் பெண்களுக்கு, குறிப்பாக இந்து விதவைகள் நிலையை மேம்படுத்த சில சட்டங்கள் இயற்றப்பட்டன.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு விரும்பியும் கூட, பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடியவில்லை. பலவாறான சமரசங்களுக்குப் பிறகு இந்து வாரிசுமைச் சட்டம் 1956-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1985-ம் ஆண்டு ஷா பானோ வழக்கில், முஸ்லிம் பெண்ணான பானோ தனது முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில்தான், நீதிபதிகள் 'Uniform' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தனர். அதன் பின்னரே பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் அரங்கில் வலுப்பெற்றது. பாரதிய ஜனதாக் கட்சி அதனை வலுவாக முன்னெடுத்தது.
பொது சிவில் சட்டம் - அரசியல் சாசனம் என்ன சொல்கிறது?
இந்திய அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவில் உள்ள அரசுக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாட்டில், "இந்தியா முழுவதும் உள்ள குடிமக்கள் ஒரே மாதிரியான சிவில் உரிமைகளைப் பெற அரசு முயற்சி செய்யும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 44வது பிரிவு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்யுமாறு அரசுக்கு அறிவுறுத்துகிறது. இது அரசியல் சாசனத்தின் 4-வது பிரிவில் அரசு கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் (DPSP) மற்றும் நாட்டை ஆளும் போது மனதில் கொள்ள வேண்டிய அரசுக்கு அறிவுரைகளாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உச்சநீதிமன்றம், இந்திய சட்ட ஆணையம் என்ன கூறின?
பல வழக்குகளில் அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவு பற்றியும், பொது சிவில் சட்டம் பற்றியும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 4 தசாப்தங்களாக பல்வேறு தீர்ப்புகள் மூலமாக பொது சிவில் சட்டத்தை நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக கொண்டு வரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
2018-ம் ஆண்டு பொது சிவில் சட்டம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த இந்திய சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் இந்த நேரத்தில் தேவையானதாகவோ விரும்பத்தக்கதாகவோ இல்லை என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தில் உள்ள பாரபட்சமான நடைமுறைகள், மற்றும் தனிப்பட்ட சட்டங்களை ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை செய்யலாம் என்றும் பரிந்துரைத்தது.
பொது சிவில் சட்டம் - ஆதரவாளர்கள் கூறுவது என்ன?
பொது சிவில் சட்டத்தை ஆதரிப்போர், அது உண்மையான மத சார்பின்மையை ஊக்குவிக்கும் என்று கூறுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுமே சட்டத்தின் முன் சமமாக ஒரே மாதிரியாக நடத்தப்படுவார்கள் என்பது அவர்கள் வாதம்.
அத்துடன், பொது சிவில் சட்டம் பெண்களுக்கு கூடுதல் உரிமைகளைக் கொடுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். குடும்ப வாழ்க்கையில் ஆணாதிக்கத்தை உறுதிப்படுத்தும் மத ரீதியான பழைய விதிகளை உடைத்தெறிந்து, பொது சிவில் சட்டம் பெண்களுக்கு சம அதிகாரத்தை தரும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
பொது சிவில் சட்டம் - எதிர்ப்பாளர்கள் கூறுவது என்ன?
மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. அதன் அடிப்படையிலான விதிகளுக்கு மாறாக வேறொன்றை பின்பற்ற நிர்பந்திருப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? என்னுடைய மதம் எது என்று தீர்மானிக்க அரசு யார்? என்று எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
"நாங்கள் இந்திய அரசியல் சாசனத்தால் ஆளப்படுகிறோம், என்னுடைய மதத்தை பின்பற்ற அரசியல் சாசனம் முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளது" என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
பொது சிவில் சட்டத்தை அமலாக்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன?
- இந்தியாவில் நிலவும் கலாசார பன்மை பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் பெரும் தடைக்கல்லாக முன்நிற்கிறது. மாநிலத்திற்கு மாநிலம், சமூகத்திற்கு சமூகம், மதத்திற்கு மதம் மாறுபட்டு நிற்பதால் பொது சிவில் சட்டத்தை வரைவதே சிக்கலாக இருக்கிறது.
- அரசியல் சாசனம், இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் விரும்பும் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் வழங்குகிறது. ஆனால், பொது சிவில் சட்டம் அந்த உரிமைகளைப் பறித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
- பல தரப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தனிநபர் சட்டங்களை விடுத்து, மதசார்பற்ற பொதுவான சட்டங்களை ஏற்கத் தயாராக இல்லை. ஒரு குழுவின் மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்களை மற்ற குழுக்களின் மீது திணிப்பது சரியாக இருக்காது.
- ஒவ்வொரு சமூகத்தின் தனிப்பட்ட கலாசாரத்திற்கு ஏற்ப உள்ள தனிநபர் சட்டங்களை அதன் சாரம் குறையாமல், பொது சிவில் சட்டத்தில் இடம் பெறச் செய்வது என்பது சிக்கலானது. ஒரு சமூகத்தின் மரபுகள், பழக்க வழக்கங்கள் பிற்போக்கானவை என்று தீர்மானிக்கும் அளவுகோல் எது?
- அடுத்தபடியாக, இந்திய சமூகத்தில் பெண்களை பலவீனப்படுத்தி பாலின ஏற்றத்தாழ்வு நிலவும் சூழலை பொது சிவில் சட்டம் ஒழிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












