"ஐ.பி.எல் போதும், ரஞ்சி எதற்கு?" - சர்ஃபராஸ் கானுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பும் முன்னாள் வீரர்கள்

சர்பிராஸ் கானுக்கு இடம் இல்லையா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021-ம் ஆண்டு இந்தியா - தென் ஆப்ரிக்கா 'ஏ' அணிகள் மோதிய ஆட்டத்தல் சர்பிராஸ் கான்
    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கடந்த 3 ரஞ்சி சீசன்களிலும் அதிக ரன் குவித்த வீரர், பிராட் மேனுக்கு அடுத்தபடியாக முதல் தர போட்டிகளில் அதிகமான ரன் சராசரி கொண்ட வீரர் போன்ற பெருமைகளை தன் வசம் வைத்திருக்கும் சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இன்னும் வாய்ப்பு கிடைக்காதது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த வலது கை பேட்ஸ்மேனான 25 வயது சர்ஃபராஸ் கான் உள்நாட்டுப் போட்டிகளில் 79.65 ரன்களை சராசரியாக வைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதிலும் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். இது குறித்து முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், ஆகாஷ் சோப்ரா உள்பட பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யார் இந்த சர்ஃபராஸ் கான்?

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சர்ஃபராஸ் நெளசத் கான். வலது கை பேட்ஸ்மேன், சுழற்பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பிங் செய்யும் திறமை கொண்டவர்.

மும்பையில் ஆசாத் மைதானத்தில் பெரும்பகுதியான காலத்தை செலவிட்ட சர்ஃபராஸ் கானுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்தது அவரின் தந்தை நெளசத் கான் தான்.

சச்சின் சாதனை முறியடிப்பு

கடந்த 1988ம் ஆண்டு ஹாரிஸ் ஷீல்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 421 பந்துகளில் 439 ரன்கள் சேர்த்த சாதனையை தனது 12 வயதில் சர்ஃபராஸ் கான் முறியடித்தார். அப்போதுதான் சர்ஃபராஸ் கான் நாடு முழுவதும் வெளிச்சத்துக்கு வந்தார்.

உடனடியாக மும்பை சார்பில் 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாட சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்புக் கிடைத்து பின்னர் இந்திய அணி சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் விளையாட வாய்ப்புப் பெற்றார். 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார்.

சர்ஃபராஸ் கானுக்கு 17 வயதாக இருக்கும்போதே, 2015ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டார். மிக்குறைந்த வயதில் ஐபிஎல் டி20 தொடரில் இடம் பெற்ற வீரர் என்ற பெருமையையும் சர்ஃபராஸ் கான் பெற்றார். அதன்பின் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணியிலும் சர்ஃபராஸ் கான் இடம் பெற்றார்.

சர்பிராஸ் கானுக்கு இடம் இல்லையா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2010-ம் ஆண்டு பள்ளி கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் கான், ஆர்மான் ஜாஃபர், பிரித்வி ஷா

சர்ச்சைக்குரிய தொடக்கம்

சர்ஃபராஸ் கானின் கிரி்க்கெட் வாழ்க்கை சர்ச்சையோடுதான் தொடங்கியது. 2011ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் சர்ஃபராஸ் கான் பங்கேற்றபோது அவருக்கு 15 வயது இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவருக்கு எலும்பு வளர்ச்சி பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன்பின் சர்ஃபராஸ் கானுக்கு நடத்தப்பட்ட எலும்பு வளர்ச்சி பரிசோதனையில் அவர் அதிக வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை அவரின் பயிற்சியாளரும் தந்தையும் ஏற்கவில்லை. எனவே 2வது அதிநவீன பரிசோதனைக்குச் சர்ஃபராஸ் உட்படுத்தப்பட்டார். இதில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சர்ஃபராஸ் கான் சான்றிதழில் அளித்த வயதும், அவரின் எலும்பு வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருப்பதாக உறுதியானது.

சூர்யகுமார், சர்ஃபராஸ் சர்ச்சை

இது தவிர 2015ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. அந்த வெற்றிக்குப்பின், சர்ஃபராஸ் கானும், சூர்யகுமார் யாதவும் சர்ச்சைக்குரிய வகையில் செய்கையில் ஈடுபட்டும், தகாத வார்த்தைகளில் பேசியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவர் மீதான விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, சர்ஃபராஸ் கான், சூர்யகுமார் யாதவ் இருவரும் உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டனர், 2 ஆண்டுகளுக்கு இருவருக்கும் போட்டி ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களின் ஒழுக்கம் கண்காணிக்கப்பட்டது.

திருப்புமுனையான ரஞ்சி சீசன்

சர்ஃபராஸ் கான் ரஞ்சி தொடரில் முதன்முறையாக மும்பை அணிக்காக 2014ம் ஆண்டு மேற்கு வங்க அணிக்கு எதிராக களமிறங்கினார். அதன்பின் 2015-16 சீசனில் உத்தர பிரதேச அணிக்காக சர்ஃபராஸ் கான் ஆடினார். 2019-20ம்ஆண்டு ரஞ்சி சீசனில் மும்பை அணிக்காக ஆடிய சர்ஃபராஸ் கான் உத்தர பிரதேச அணிக்கு எதிராக முச்சதம் விளாசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

34 முதல்தரப் போட்டிகளில் இதுவரை ஆடிய சர்ஃபராஸ் கான் 3,175 ரன்கள் குவித்துள்ளார். இதில் 11 சதங்கள், 9 அரைசதங்கள் அடங்கும். இவரின் சராசரி 77.43 ரன்களாகும்.

2022ம் ஆண்டு நடந்த சயத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் சர்ஃபராஸ் கான் மும்பை அணிக்காக விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார். சிறுவயதில் விக்கெட் கீப்பராக இருந்துள்ள சர்ஃபராஸ் கான், சீனியர் அணிக்காக விளையாட வந்தபோது முதன்முறையாக விக்கெட் கீப்பிங்கில் ஈடுபட்டு புதிய அவதாரமெடுத்தார்.

3 சீசன்களிலும் அபார ரன் குவிப்பு

கடந்த 3 ரஞ்சி சீசன்களிலும் சர்ஃபராஸ் கான், ஏறக்குறைய 2,500 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்த்துள்ளார். ஒவ்வொரு சீசனிலும் 900 ரன்களுக்கு குறையாமல் சேர்த்து முதல் தரப்போட்டியில் புதிய வரலாற்றை சர்ஃபராஸ் கான் படைத்துள்ளார். டான் பிராட்மேனுக்கு அடுத்தார்போல் உள்நாட்டுப் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள இளம் வீரர் எனும் பெருமையும் சர்ஃபராஸ் கானுக்கு இருக்கிறது.

இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படாமல் பிசிசிஐ தேர்வுக் குழுவால் புறக்கணிக்கப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சர்பிராஸ் கானுக்கு இடம் இல்லையா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021-ம் ஆண்டு இந்தியா - தென் ஆப்ரிக்கா 'ஏ' அணிகள் மோதிய ஆட்டத்தல் சர்ஃபராஸ் கான்

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இடம் இல்லை

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அனுபவ வீரர் புஜாரா , உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய கெய்க்வாட், ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறையும் சர்ஃபராஸ் கான் புறக்கணிக்கப்பட்டார்.

சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன், “ பிசிசிஐ ஒரு வீரரை இந்திய அணிக்குள் தேர்வு செய்ய பல்வேறு தகுதி நிலைகளை வைத்துள்ளது. யோயோ டெஸ்ட், மனஉறுதி பரிசோதனை, உடற்தகுதி, எடை உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை வகுத்துள்ளது. அதில் சர்ஃபராஸ் கான் தேர்ச்சியடையவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. வீரர்களுக்கு பிசிசிஐ என்னவிதமான தகுதி வைத்திருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரியாது” எனத் தெரிவித்தார்

"பழைய மே.இ.தீவுகள் அணி அல்ல"

சர்ஃபராஸ் கான் நிராகரிப்பு குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஆகாஷ் சோப்ரா ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

சுனில் கவாஸ்கர் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் சிறப்பாக ஆடினாலே, இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துவிடுகிறது இதுதான் இன்றைய நிலைமை. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி தேர்வைக் கூடப் பாருங்கள், 4 தொடக்க வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். பழைய மேற்கிந்திய தீவுகள் அணி இப்போது இல்லை, அவ்வாறு இருந்தால், 6 தொடக்க வீரரர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

கடந்த 3 ரஞ்சி சீசன்களிலும் சர்ஃபராஸ் கான் சிறப்பாக ஆடி 100 சராசரி வைத்துள்ளார். இதற்கு மேல் இந்திய டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கான் இடம் பெறுவதற்கு என்ன தகுதி தேவைப்படுகிறது. அணியில் தேர்வு செய்வீர்கள், ஆனால் ப்ளேயிங் லெவனில் இருக்கமாட்டார். சர்ஃபராஸ் கானின் பேட்டிங் திறமை பிசிசிஐ-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்பிராஸ் கானுக்கு இடம் இல்லையா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுனில் கவாஸ்கர், கிரிக்கெட் வீரர் (ஓய்வு)

"ரஞ்சி சீசனை நிறுத்திவிடுங்கள்" - கவாஸ்கர் ஆவேசம்

மேலும், "ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக ஆடியும் அவரைத் தேர்ந்தெடுக்காவிட்டால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி என்ன பயன் இருக்கிறது. அந்த தொடரையே நிறுத்திவிடுங்கள். ஐபிஎல் தொடரில் மட்டும் வீரர்களை விளையாடச் சொல்லுங்கள், இதில் சிறப்பாக ஆடுவோர்தான் டெஸ்ட் போட்டிக்கும் சரியாக இருப்பார்கள் என தேர்வுக்குழுவினர் நினைக்கிறார்கள்” என விளாசியுள்ளார்.

ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய ஒரு வீரரை டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுப்பது சரியான அணுகுமுறை அல்ல, இந்திய கிரிக்கெட்டுக்கும் ஆரோக்கியமானது அல்ல என்று சுமந்த் சி ராமனும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் “ ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக ஆடிய வீரர்களைத் தகுதியின் அடிப்படையில்தான் இந்திய ஏ அணிக்குத் தேர்வு செய்து, அதன்பின் பிரதான இந்திய அணிக்குத் தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் முன்பு இருந்த நடைமுறை. ஆனால், இன்று என்ன நடக்கிறது. ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் ஒரு வீரர் சிறப்பாக விளையாடிவிட்டாலே அவர் நேரடியாக இந்திய அணிக்குள் நுழைந்துவிடுகிறார்.

ரஞ்சிக் கோப்பையில் ஒரு சீசனில் 1000 ரன்கள் அடித்த வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை, ஆனால், ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய ஒரு வீரருக்கு இந்திய அணிக்குள் வாய்ப்பு கிடைக்கிறது. இதுதான் இன்றைய நிலை. இந்த அணுகுமுறை தவறானது, இந்திய கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதும் அல்ல.

வெங்கடேஷ் ஐயருக்கு ரஞ்சிக் கோப்பையில் என்ன அனுபவம் இருக்கிறது. ஆனால், ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் நன்றாக விளையாடியதால் இந்திய அணிக்குள் வந்துவிட்டார். ஆனால், பல இளம் வீரர்கள் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக ஆடியும் வரமுடியவில்லை. இதுதான் நிதர்சனம்.

ஐபிஎல் டி20 தொடரையும், டெஸ்ட் போட்டியையும் இணைத்துப் பார்க்க கூடாது. அவ்வாறு ஒப்பிடுவதும் சரியல்ல. ஆனால், ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய ஒரு வீரர் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆட முடியும் என்று பிசிசிஐ தேர்வுக்குழுவினர் நம்புகிறார்கள்.

உதாரணமாக ரஹானே ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதால்தானே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியில் விளையாட முடிந்தது. ஆக, ஐபிஎல் தொடரை ஒரு தகுதி அளவுகோலாக பிசிசிஐ வைத்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

என்னைப் பொறுத்தவரை ரஞ்சிக் கோப்பைக்கான முக்கியத்துவம் மெல்லமெல்ல குறைந்து வருகிறது. அதை பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை, மாறாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்

"டெஸ்ட் புனிதத்தன்மையை இழந்துவிடும்"

அதேபோல, முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ முதல் தரப் போட்டிகளில் ஏராளமான ரன்களை சர்ஃபராஸ் கான் குவித்துள்ள போதிலும் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இந்திய அணிக்குள் அவர் தேர்ந்தெடுக்கப்பட என்ன செய்ய வேண்டும் என சர்ஃபராஸ் கானுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால், இந்தியக் கிரிக்கெட்டின் ஆன்மாவாக, இதயமாக இருக்கும் முதல் தரக் கிரிக்கெட் அதன் புனிதத்தன்மையை இழந்துவிடும்”என ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கு கிரிக்கெட்டைத் தாண்டிய காரணங்கள் பல உள்ளன. அவர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்படுகிறார், அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் அரசியல் விளையாடுகிறது என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சுமந்த் சி ராமன் மறுத்துள்ளார். அவர் பிபிசி செய்திகளிடம் பேசுகையில், “ கிரிக்கெட்டுக்குள் இதுவரை மதம் நுழையவில்லை. இந்தக் குற்றச்சாட்டை ஏற்கமாட்டேன். இந்திய அணிக்காக ஜாகீர்கான் பல ஆண்டுகள் விளையாடியுள்ளார். உம்ரான் மாலிக், சிராஜ், முகமது ஷமி ஆகியோர் விளையாடி வருகிறார்கள். இந்திய அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர்கள் சிராஜ், ஷமி தானே. ஆதலால் இந்திய கிரிக்கெட்டில் வீரர்கள் மதரீதியாக நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதை ஏற்கமாட்டேன், மதரீதியான பாகுபாடுகள் இல்லை.” எனத் தெரிவித்தார்.

கிரிக்கெட்டைத் தாண்டிய காரணங்களா?

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிசிசிஐ தரப்பில் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “ சர்ஃபராஸ் கான் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியும் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் இருப்பதால் எழும் கோபமான வார்த்தைகள், கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சர்ஃபராஸ் கான் தொடர்ந்து வாய்ப்புப் பெறாமல் இருப்பதற்கு, கிரிக்கெட்டையும் தாண்டி சில காரணங்கள் உள்ளன என்பதை உறுதியாகக் கூற முடியும்.

தொடர்ந்து 3 சீசன்களிலும் 900 ரன்களுக்கு மேல் குவித்த ஒரு பேட்ஸ்மேனை தொடர்ந்து புறக்கணிக்க தேர்வுக் குழுவினர் முட்டாள்கள் அல்ல. சர்ஃபராஸ் கான் புறக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று அவரின் உடற்தகுதி.

சர்வதேசத் தரத்துக்கு ஏற்ப அவரின் உடற்தகுதி இல்லை. சர்ஃபராஸ் கான் தொடர்ந்து உடல் எடையைக் குறைக்க முயன்று வருகிறார், பயிற்சி எடுத்துவருகிறார். ஒருவேளை உடற்தகுதி பெற்றால் எதிர்காலத்தில் அணியில் இடம் பெறலாம். இது பேட்டிங்கை மட்டும் அடிப்படையாக வைத்து தேர்வு செய்யப்படுவது அல்ல.” எனத் தெரிவித்தார்

சர்பிராஸ் கானுக்கு இடம் இல்லையா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர்.

ஐபிஎல் மட்டும்தான் காரணமா?

ஐபிஎல் தொடரில் சர்ஃபராஸ் கானின் செயல்பாடுதான் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படாமல் போனதற்கு காரணமா என்று கேட்டதற்கு அந்த அதிகாரி பதில் அளிக்கையில் “ இது ஊடகங்கள் புதிதாக கட்டெழுப்பிய மாயையான குற்றச்சாட்டு.

மயங்க் அகர்வால் 1000 ரன்களை ஒரு மாதத்தில் சேர்த்தபோது அவரை டெஸ்ட் அணிக்குள் தேர்வுக்குழுவினர் கொண்டுவந்தபோது ஐபிஎல் செயல்பாட்டைப் பார்த்தார்களா? ஹனுமா விஹாரியின் ஐபிஎல் செயல்பாட்டை பார்த்துதான் அவரை டெஸ்ட் அணிக்குள் தேர்வு செய்தார்களா.” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

"இதுவும் ஒரு காரணம்"

சர்ஃபராஸ் கானை புறக்கணிக்க கிரிக்கெட்டைத் தாண்டிய காரணங்கள் இருப்பதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படுவது குறித்து அவர் பதில் அளிக்கையில் “ களத்துக்கு வெளியே சர்ஃபராஸ் கானின் நடத்தையும் தேர்வுக் குழுவினரால் கவனிக்கப்படுகிறது. இது மட்டுமே காரணமாக இல்லை என்றாலும் இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.

சர்ஃபராஸ் கானின் செயல்பாடுகள், டெல்லி அணிக்கு எதிராக சதம் அடித்தவுடன் அவரின் செய்கைகள், ஒழுக்கம் போன்றவை கவனிக்கப்பட்டன. களத்தில் ஒழுக்கமற்ற செயல்பாடுகளும் அணித் தேர்வுக்கு உதவும். சர்ஃபராஸ் கானும், அவரின் பயிற்சியாளர் நெளசத் கானும் இதில் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

ஒரு புகழ்பெற்ற வீரர் என்ன செய்தாலும் அது பெரிதாகப் பார்க்கப்படாது, ஆனால், வளர்ந்துவரும் வீரர் சிறிய தவறு செய்தாலும் பெரிதாக்கப்படும் என்று சுமந்த் சி ராமன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில் “ இந்திய அணிக்காக ஒரு வீரர் 5 ஆண்டுகள் விளையாடிவிட்டு அவர் என்ன செய்தாலும், சர்ச்சையில் ஈடுபட்டாலும் பெரிதாகப் பேசப்படாது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஏதேனும் தவறு செய்தால்கூட அது கண்டுகொள்ளப்படாது. அவர்களுக்கு வழங்கப்படும் இடம் அணியில் அதிகம்.

ஆனால், வளர்ந்துவரும் வீரர் ஏதேனும் சிறிய தவறு செய்தால்கூட, ஒழுக்கக் குறைவாக நடந்தால்கூட அது அவரை தேர்ந்தெடுக்காமல் இருக்க ஒரு அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

சர்பிராஸ் கானுக்கு இடம் இல்லையா?

பட மூலாதாரம், FACEBOOK/SUMANT C.RAMAN

படக்குறிப்பு, சுமந்த் சி.ராமன், விளையாட்டு விமர்சகர்

"ரன்கள் மட்டும் தகுதியில்லை"

பிசிசிஐ தேர்வுக் குழுவில் இருந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சர்ஃபராஸ் கான் ஏன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கான தொழில்நுட்ப காரணத்தை விளக்கியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் “அபிமன்யு ஈஸ்வரன், சர்ஃபராஸ் கான் இருவரும் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டதற்கு அவர்கள் சேர்த்த ரன்களை மட்டும் தேர்வுக் குழுவினர் தகுதியாகப் பார்க்க மாட்டார்கள்.

2023 ஐபிஎல் தொடரிலும் சரி மற்ற போட்டிகளிலும் சரி வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்ஸருக்கும் எதிராக சர்ஃபராஸ் கான் தடுமாறுகிறார், அதை எதிர்கொண்டு விளையாட சிரமப்படுகிறார். மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும் போது அதிவேக ஆடுகளங்களில் சர்வதேச தரமுள்ள பந்துவீச்சாளர்களின் பவுன்சர்களைச் சமாளித்து ஆட பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய பொறுமை அவசியம், மனவலிமை தேவை.

ஆனால் “குவிக் பவுலர்ஸ்” க்கு எதிராக சர்ஃபராஸ் கான் சரியாக விளையாடவில்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஈஸ்வரன் பெங்கால் அணிக்கு தொடர்ந்து 7 நாக்அவுட் போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. எத்தனை ரன்கள் சேர்த்தீர்கள் என்பது மட்டும் கருத்தில் கொள்ளப்படாது எவ்வாறு அந்த ரன்களை சேர்த்தீர்கள் என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: