வாக்னர் ‘கிளர்ச்சி’ – ரஷ்யா மீதான சீனாவின் நம்பிக்கை வலுவிழக்குமா?

ரஷ்யா, சீனா, இந்தியா, புதின், ஷி ஜின்பிங், இந்தியா, வாக்னர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேன் போர் குறித்து சீனா இதுவரை ரஷ்யாவை விமர்சிக்கவில்லை
    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த வெள்ளிக்கிழமை, ரஷ்யாவின் தனியார் ராணுவப்படையான ‘வாக்னர்’ படையின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், அதிபர் புதினுக்கு எதிராக 'கிளர்ச்சி'யொன்றை அறிவித்தார். தனது படையை மாஸ்கோ நோக்கிச் செலுத்தவும் செய்தார்.

ஆனால் ஒரே நாளில், தொடங்கிய வேகத்திலேயே பின்வாங்கினார்.

இருப்பினும் அந்த 24 மணி நேரங்கள் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. சர்வதேச அரசியல் நிபுணர்கள் புதினின் ஆதிக்கம் பலவீனமடைந்து விட்டதாக கருதுகின்றனர்.

அனைத்திற்கும் மேலாக, இது ரஷ்யாவின் நெருங்கிய நண்பனான சீனாவையும் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. இருப்பினும் சீனா, புதினுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஷின் காங் பீய்ஜிங்கில் ரஷ்ய துணை வெளியுறவுத்திறை அமைச்சர் அந்த்ரேய் ருட்யென்கோவைச் சந்தித்துப் பேசினார். இதன்பிறகு இச்சம்பவத்தைச் சீனா ‘ரஷ்யாவின் உள்விவகாரம்’ என்று கூறியது. மேலும் தனது ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க ரஷ்யா எடுக்கும் முயற்சிகளுக்குத் தன் ஆதரவையும் தெரிவித்தது.

சீன-ரஷ்ய உறவு எவ்வளவு வலுவாக இருக்கிறது?

ரஷ்யா, சீனா, இந்தியா, புதின், ஷி ஜின்பிங், இந்தியா, வாக்னர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை, ரஷ்யாவின் தனியார் ராணுவப்படையான ‘வாக்னர்’ படையின் உரிமையாளர் யெவ்கெனி ப்ரிகோஜின், அதிபர் புதினுக்கு எதிராக 'கிளர்ச்சி' யொன்றை அறிவித்தார்

இரு பெரும் வல்லரசுகளான சீனாவும் ரஷ்யாவும் நெருங்கிய நண்பர்கள். இருநாட்டிற்குமான பொதுவான நலன்கள் கருதி சீனா - ரஷ்யா இடையே நட்பும் மூலோபாயக் கூட்டணியும் உருவாகியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினுடன் நீண்ட சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அதன்பின் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், ரஷ்ய-சீன உறவை ‘எல்லைகள் கடந்த நட்பு’ என்று இரு நாடுகளும் வர்ணித்தன.

இதற்கு நான்கு நாட்களுக்கு பிறகு ரஷ்யா யுக்ரேன் மீது போர் தொடுத்தது. ஆனால் இன்றுவரை சீனா இதனை விமர்சிக்கவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றிருக்கிறதே தவிர அதில் எந்த உரசலும் இல்லை.

சீனா - ரஷ்யா உறவு குறித்து பேசிய, ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியர் ஸ்வரண் சிங், '"சீனா ரஷ்யாவுடன் மிகவும் நெருங்கி வந்துவிட்டது. இனிமேல் அதனால் விலக முடியாது," என்கிறார்.

வாக்னர் குழுவின் 'கிளர்ச்சி' சீனாவுக்கு எவ்வளவு பெரிய தலைவலியாக இருக்கும்?

“இது சீனாவுக்கு மிகப்பெரும் கவலையாக இருக்கும், ஏனெனில் புதினோடு சேர்ந்து சீனா சர்வதேச உறவுகளில் மாற்றம் கொண்டுவரப் பார்க்கிறது,” என்கிறார் ஸ்வரண் சிங்.

ஆனால், ஸ்வரண் சிங்கின் கூற்றுப்படி, இதைவிட சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இக்கிளர்ச்சி புதினுக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதுதான். “ஆனால் அதைப்பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை,” என்கிறார் அவர்.

வாக்னர் ‘கிளர்ச்சி’க்குப் பின் புதின் என்ன சொன்னார்?

ரஷ்யா, சீனா, இந்தியா, புதின், ஷி ஜின்பிங், இந்தியா, வாக்னர்

பட மூலாதாரம், RIA NOVOSTI VIA REUTERS

படக்குறிப்பு, இந்த கிளர்ச்சி புதினுடைய பிம்பத்தைச் சற்று பாதித்திருந்தாலும், ரஷ்யாவில் பெரியளவு தாக்கம் இருக்காது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்

இச்சம்பவத்துக்குப் பின் தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், அதனை “மிகப்பெரிய குற்றம், தேசத்துரோகம், மிரட்டல், தீவிரவாதம்,” என்று கடுமையாக எதிர்வினையாற்றினார்.

ஆனால் சில மணி நேரங்களுக்குப்பின், சமரசத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜினுக்கு எதிராக இருந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறப்படுவதக அறிவிக்கப்பட்டது.

இது புதினுடைய பிம்பத்தைச் சற்று பாதித்திருந்தாலும், ரஷ்யாவில் பெரியளவு தாக்கம் இருக்காது என்கிறார், சிங்கப்பூரைச் சேர்ந்த சீன வம்சாவழி அரசியல் விமர்சகரான சுன் ஷி.

“இதன்மூலம் புதினுடைய அதிகாரம் வேண்டுமானால் பலவீனமடைந்திருக்கலாம் ஆனால் ரஷ்யா என்ற நாடு பலவீனமடையவில்லை. ஏனெனில் இந்தக் கிளர்ச்சி 24 மணிநேரத்தில் சரிசெய்யப்பட்டுவிட்டது. இது ஒரு விரும்பத்தகாத நிகழ்வு மட்டுமே,” என்கிறார் அவர்.

சீன ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

சீன செய்தித்தாளான ‘குளோபல் டைம்ஸ்’, புதின் ஒரே நாளில் கிளர்ச்சிக்கான இந்த முயற்சியை அடக்கியதன் மூலம் தன்னை மேலும் வலுவான ஒருவராகக் காட்டியிருக்கிறார் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

“என்னதான் மேற்கத்திய ஊடகங்கள் இக்கிளர்ச்சி புதினின் பலவீனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது என்று கூறினாலும், அவர் தீர்க்கமான நடவடிக்கை எடுத்து அதற்கு ஒரு முடிவு கட்டியிருக்கிறார். இது, உள்நாட்டுக் கிளர்ச்சிகளைச் சமாளிக்கும் ஆற்றல் ரஷ்யாவிற்கு உள்ளது என்பதைக் காட்டுகிறது,” என்று கூறியிருக்கிறது அப்பத்திரிகை.

சீனாவின் அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?

ரஷ்யா, சீனா, இந்தியா, புதின், ஷி ஜின்பிங், இந்தியா, வாக்னர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கிளர்ச்சிக்கு பிறகு ப்ரிகோஜின் பெலாரூசிற்குச் செல்ல அனுமதி தரப்பட்டது. அவர் மீதிருந்த குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டன

கிளர்ச்சிக்கான இந்த முயற்சியைச் சமாளிக்க, புதின், தனது நண்பரும் பெலாரூசின் அதிபருமான லூகாஷென்கோவிடம் உதவிக்குச் செல்லவேண்டி இருந்தது.

லூகாஷென்கோ தலையிட்டுச் சமரசம் செய்தபின், புதின், வாக்னர் நிறுவனத்தின் தலைவரான யெவ்கெனி ப்ரிகோஜினுடைய கோரிக்கையை ஏற்றார். அதாவது ப்ரிகோஜொன் பெலாரூசிற்குச் செல்ல அனுமதி தரப்பட்டது. மேலும் அவர் மீதிருந்த குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

சுன் ஷி, "சீனா, புதினின் உண்மையான அதிகாரத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். இச்சம்பவத்தின் ஒரு நேர்மறையான விளைவு, யுக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவை சீனா வலியுறுத்தக்கூடும். அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து,” என்கிறார் அவர்.

இது இந்தியாவை எப்படி பாதிக்கும்?

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவு நெடுங்காலமாகத் தொடர்கின்ற ஒன்று. இந்தியா ரஷ்யாவிடமிருந்து பல தசாப்தங்களாக ஆயுதங்கள் வாங்கி வருகிறது. மேலும் சென்ற வருடம் யுக்ரேன் போர் துவங்கியதிலிருந்து இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெயையும் வாங்கி வருகிறது.

சீனாவைப்போல் இந்தியாவும் யுக்ரேன் போருக்காக ரஷ்யாவை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை.

இதுகுறித்து பேசிய ஸ்வரண் சிங், இந்தியாவுக்கு ரஷ்யாவுடனான உறவு முக்கியம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா மற்ற நாடுகளுடனான உறவுகளையும் மேம்படுத்தி வந்திருக்கிறது.

கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை, ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் ராணுவத் தளவாடங்களின் பங்கு 68%-லிருந்து 47% ஆகக் குறைந்திருக்கிறது. அதேசமயம் சமீபத்தில் எண்ணெய் இறக்குமதி மட்டும் 44 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது.

ஸ்வரண் சிங்கின் கருத்துப்படி, கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவின் மீது இந்தியாவின் சார்பு குறைந்து, சீனாவின் சார்பு அதிகரித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: