சீனாவின் 'உளவு பலூன்' குறித்து பிபிசி வெளியிட்ட ஆதாரங்கள்

பட மூலாதாரம், SYNTHETAIC/PLANET LABS PBC
சீனாவின் உளவு பலூன் திட்டம் தொடர்பான பல புதிய ஆதாரங்கள், தற்போது பிபிசிக்கு கிடைத்துள்ளது.
ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு மேல் பறந்துகொண்டிருந்த பலூன்கள், சீனாவின் உளவு பலூன்கள்தான் என்பது தெரியவந்துள்ளது.
தங்களது நாட்டின் மேல் இந்த பலூன்கள் பறந்துகொண்டிருந்ததை ஜப்பான் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அந்த பலூன்களை சுட்டு வீழ்த்துவதற்கு தாங்கள் தயாராக இருந்ததாகவும் ஜப்பான் கூறியுள்ளது.
பிபிசி வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து இதுவரை எந்த கருத்தையும் சீனா நேரடியாகக் கூறவில்லை.
ஏற்கனவே இந்த சீன உளவு பலூன் விவகாரத்தில், சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோசமான சூழல் நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில், அமெரிக்கக் கடற்கரை பகுதியில் சுற்றி வந்த சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன், உளவு பலூன் அல்ல என்றும், அது ஒரு சிவிலியன் ஏர்ஷிப் (Civilian Airship) என்றும் சீனா கூறியது. அது வானிலை ஆய்வு போன்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்றும், அது ஒரு திட்டமிடப்படாத நிகழ்வு என்றும் சீனா வாதிட்டது.
சிஐஏ-வின் முன்னாள் கிழக்காசிய ஆய்வாளர் ஜான் கல்வர் பிபிசி பனோரமாவிடம் கூறும்போது, “இது வெறும் ஒரு தடவை மட்டும் நடந்த நிகழ்வு அல்ல. சுமார் 5 ஆண்டுகளாக இதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.
இந்த சீன உளவு பலூன்கள், நீண்ட தூர பயணங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சில பலூன்கள் மிகவும் வெளிப்படையாகவே நாடுகளைச் சுற்றி வந்திருக்கின்றன” என்று அவர் தெரிவித்தார்.
செயற்கைக்கோள்கள் மூலம் கைப்பற்றப்பட்ட பெரிய அளவிலான தரவுகளை ஆய்வு செய்யும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ’ சிந்தடிக்’ (Synthetic) உடன் இணைந்து பிபிசி சில ஆய்வுகளை மேற்கொண்டது.
இதில், கிழக்கு ஆசியாவைக் கடக்கும் சீன உளவு பலூன்களின் பல படங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் நிறுவனர், கோரி ஜஸ்கோல்ஸ்கி, செப்டம்பர் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு பலூன் வடக்கு ஜப்பானைக் கடந்ததற்கான ஆதாரத்தைக் கண்டறிந்தார். ஆனால் இந்தப் படங்கள் இதற்கு முன் வெளியிடப்படவில்லை.
இந்த பலூன் மங்கோலியாவின் தெற்கு பகுதியிலிருந்து ஏவப்பட்டிருக்கலாம் என ஜஸ்கோல்ஸ்கி நம்புகிறார். ஆனால் பிபிசியால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை
ஜப்பான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை கடைப்பிடித்து வருவதால், இந்த விவகாரத்தில் ஜப்பானுடன் துணைநிற்க அதிகமான அமெரிக்கப் படைகள் தற்போது அங்குக் குவிக்கப்பட்டுள்ளன. வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிசியிடம் பேசிய ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த யூகோ முராகாமி, “ இந்த விவகாரத்தில் நாட்டின் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க, அரசாங்கம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் நாட்டு மக்களின் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றுவதற்காக, உளவு பலூன்களைச் சுட்டு வீழ்த்துவதற்கும் ஜப்பான் தயாராக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
சீன பலூன்களின் சிக்னல்கள், உளவுத்துறையை நோட்டமிடும் வகையில் பொருத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை நம்புகிறது.
முன்னதாக அமெரிக்காவில் சுட்டுவீழ்த்தப்பட்ட சீன உளவு பலூனில் பல ஆண்டெனாக்கள் இருந்தது என்றும், அது தகவல்தொடர்புகளை சேகரித்து, புவியியல் நிலைகளை ஆய்வு செய்கிறது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகிறது.

பட மூலாதாரம், Reuters
இதேபோல் சீனா வேறு ஏதேனும் பலூன்களை ஏவியுள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்காக, பிபிசியின் பனோரமா குழு முதலில் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகை அறிக்கைகளை ஆய்வு செய்தது. அதில் மர்மமான முறையில் வானில் ஏதேனும் (UFO) தென்பட்டதா என்பது குறித்த செய்திகளை பிபிசி தேடியது.
அப்போது தைவானின் வானிலை சேவையால் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் கவனத்திற்கு வந்தன. அது தைவானின் தலைநகர் ’தைபே’விற்கு (Taipei) மேல் பலூன் பறப்பதை காட்டுவது போல் தெரிந்தது. இந்த புகைப்படங்கள் செப்டம்பர், 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை.
இந்த செயற்கைக்கோள் படங்கள் குறித்து ஜஸ்கோல்ஸ்கி கூறும்போது, “90 விநாடிகளுக்குள் தைவான் கடற்கரை பகுதியில் இந்த பலூன்களை கண்டுபிடித்தோம்” என்று குறிப்பிடுகிறார்.

சீனா உண்மையிலேயே நோட்டமிடுகிறதா?
உளவு பலூன்கள் முதல் ரகசிய காவல் நிலையங்கள் வரை, சீனாவின் உலகளாவிய கண்காணிப்பு நடவடிக்கையை பனோரமா ஆய்வு செய்து வருகிறது.
”தைவானில் தென்பட்ட பலூன்கள் வானிலை நிலவரத்தை ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்” எனத் தைவான் அரசு நம்புகிறது. ஆனால் இதனை ஜஸ்கோல்ஸ்கி மறுக்கிறார்.
”இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இந்த பலூன்களின் விட்டமும், அவை இயங்கும் முறையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அமெரிக்க, ஜப்பானின் மேல் பறந்த பலூன்களை போலவே இந்த பலூனும் மிகவும் மோசமானதாகத் தெரிகிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஜனநாயக முறையில் இயங்கி வரும் தைவான் நாட்டின் மீது, நீண்டகாலமாகவே சீனாவின் பார்வை இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சீன ராணுவம் முழு அளவிலான தாக்குதலுக்கு ஒத்திகையை தொடங்கியது. சீனா தாக்குதலில் ஈடுபட்டால், தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், SYNTHETAIC/PLANET LABS PBC
பலூன்களை கண்டறிய உதவும் செயற்கை நுண்ணறிவு
பூமியில் பறக்கும் பலூன்கள், விண்வெளியிலிருந்து பார்க்கும்போது எப்படியிருக்கும் என்பதை ஜஸ்கோல்ஸ்கி கற்பனை செய்தார். அதனை ஓவியமாக வரைந்து பார்த்து, அந்த தகவல்களை AI மென்பொருளுக்கு அவர் அளித்தார்.
அது அவருக்கு பயனளித்தது. அத்தகைய தோற்றம் கொண்ட உருவம், பூமியில் கடைசியாக காணப்பட்ட இடங்களின் தோராயமான தொகுப்பை AI ஆய்வு செய்தது.
பலூனின் பாதையைக் கண்டறிந்து அதன் தோற்றத்தைக் கண்டறிய காற்றின் மாதிரிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
பிளானட் லேப்ஸ் (Planet Labs) என்னும் நிறுவனத்தின் மூலம் கிடைத்த செயற்கைக்கோள் புகைப்படங்களை ஜஸ்கோல்ஸ்கி ஆய்வு செய்தார். பலூன்களை கண்டறிவதற்காக அந்த தகவல்கள் அனைத்தையும் அவர் தனது மென்பொருளுக்குள் செலுத்தினார். இந்த தொழில்நுட்பத்தை RAIC (rapid automatic image categorization) என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த கண்காணிப்பு பலூன்கள் அளவில் மிகப்பெரியதாக இருக்கின்றன. சில பலூன்கள் ஒரு பேருந்தின் அளவிற்கு கூட பெரியதாக இருக்கின்றன.
அந்த பலூன்களுக்குள் அதிகளவு தரவுகளை சேமிப்பதற்கான அதிநவீன உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால் விண்வெளியிலிருந்து இந்த பலூன்களை பார்க்கும்போது, வெள்ளை நிறத்தில் சிறிய குமிழ்கள் போலவே தோன்றும்.
”அமெரிக்கா மீது பறந்த பலூன், ஒருகட்டத்தில் மொன்டானா மாநிலத்தில் உள்ள அணுசக்தி விமானப்படை தளத்தில் இருந்து சுமார் 80 மைல் (130 கிமீ) தொலைவில் பறந்துகொண்டிருந்ததாக” ஜஸ்கோல்ஸ்கியின் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த நிலையில் லண்டனில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ”அமெரிக்காவே அதிக எண்ணிக்கையிலான உயரமான பலூன்களை விடுவிப்பதாக குற்றம் சாட்டியது. அந்த பலூன்கள் தொடர்ந்து உலகை சுற்றி வருகின்றன என்றும், அவை சீனாவின் வான்வெளியில் சட்டவிரோதமாக பறந்தன என்றும்” கூறியிருந்தது.
மேலும் சீனா ஒரு பொறுப்புமிக்க நாடு என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
”சீனா, சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு இணக்கமாக செயல்பட்டு வருவதாகவும், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைபாட்டை மதிப்பதாகவும்” சீனா தனது அறிக்கையில் கூறியிருந்தது.
அதேபோல் தங்களது நாட்டை இழிவுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டு வரும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தாங்கள் நிராகரிப்பதாகவும் சீனா கூறுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












