அமெரிக்க - சீன உறவு: சீன அதிபருடனான அமெரிக்க வெளியுறவுச் செயலரின் சந்திப்பு பலன் தருமா?

அமெரிக்கா, சீனா, ஜோ பைடன், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க வெளியுறவுச் செயலளர் ஆண்டனி பிளிங்கென், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை திங்கட்கிழமையன்று (ஜூன் 19) சந்தித்தார். சீன தலைநகர் பீஜிங்கில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.

சந்திப்பிற்குப் பிறகு, ஜின்பிங், “இருதரப்பும் சில குறிப்பிட்ட விஷயங்களில் முன்னேற்றத்தையும் ஒப்புதலையும் எட்டியிருக்கின்றன. இது மிக நல்ல விஷயம்,” என்று கூறியிருக்கிறார்.

மேலும், ஜின்பிங், “இச்சந்திப்பின் மூலம் அமெரிக்கா-சீனா உறவுகளை ஸ்திரப்படுத்துவதற்கு பிளிங்கென் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளைச் செய்வார் என்று நம்புகிறேன்,” என்றார்.

நாடுகளுக்கிடையிலான உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், என்று கூறிய ஜின்பிங், சீனா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளதாகவும், கடந்த நவம்பர் மாதம் இந்தோனீசியாவின் பாலி நகரத்தில் நடந்த G20 கூட்டத்தின்போது ஏற்பட்ட புரிதலை இரு நாடுகளும் முன்னெடுத்துச் செல்லத் தீர்மனித்துள்ளதாகவும் கூறினார்.

'உளவு பலூன்' சர்ச்சையால் முன்னர் ரத்தான சந்திப்பு

அமெரிக்கா, சீனா, ஜோ பைடன், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இப்போது பிளிங்கென் சீனா சென்றிருப்பதும், ஜின்பிங்கை சந்தித்ததும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

ஐந்து மாதங்களுக்குமுன் சீனாவுக்குச் சொந்தமானது என்று கூறப்பட்ட உளவு பலூன் ஒன்று அமெரிக்காவின் முக்கிய வான்பரப்பில் காணப்பட்டது சர்ச்சையானது. அமெரிக்கா அதனைச் சுட்டுவீழ்த்தியது.

ஆனால், அது உளவு பலூன் அல்ல எனவும் வானிலை ஆராய்ச்சிக்கான பலூன் எனவும் சீன அதிகாரிகள் அப்போது தெரிவித்திருந்தனர்.

இவ்விவகாரம் அமெரிக்க-சீன உறவில் ஒரு விரிசலை ஏற்படுத்தியது. அதனால் அப்போது திட்டமிடப்பட்ட பிளிங்கெனின் சீனப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில்தான் இப்போது பிளிங்கென் சீனா சென்றிருப்பதும், ஜின்பிங்கை சந்தித்ததும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பிளிங்கெனின் இந்தச் சீனப்பயணம் இரு வல்லரசு நாடுகளுக்கிடையே இருக்கும் நீண்டநாள் பிரச்னைகளையும், ஒத்துழைப்புக்கான விஷயங்களையும் விவாதிப்பதற்கான சந்தர்ப்பமாகப் பார்க்கப்படுகிறது.

ராஜிய உறவைச் சீராக்கும் முயற்சி

அமெரிக்கா, சீனா, ஜோ பைடன், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 2018ஆம் ஆண்டிற்குப்பின் சீனாவிக்குச் செல்லும் முதல் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்கென் தான்

வேறெதையும்விட பிளிங்கெனின் பயணம் ராஜிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுப்பதை நோக்கி இருக்கும்.

2018ஆம் ஆண்டிற்குப்பின் சீனாவிக்குச் செல்லும் முதல் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்கென் தான்.

பயணத்திற்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்காவின் இந்திய-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளார் கர்ட் கேம்ப்பெல், ‘மோதலுக்கான ஆபத்தினைக் குறைக்க வல்லதால், இப்பயணம் ஒரு நல்ல சந்தர்ப்பம்,’ என்று கூறியிருந்தார்.

ஆனால் பிளிங்கெனின் பயணத்திற்கு சீனா அவ்வளவு ஆர்வமாக எதிர்வினையாற்றவில்லை.

சீனாவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பிளிங்கெனுடனான தொலைபேசி உரையாடலில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் காங் இருதரப்பிற்கிடையான உறவில் விழுந்திருக்கும் விரிசலுக்கு ‘யார் காரணம்’ என்று அனைவரும் அறிந்ததே என்று கூறியிருந்தார்.

மேலும் அவர், “போட்டியின் பெயரில், அமெரிக்கா சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது, அதன் இறையாண்மையை, பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சியைக் குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது,” என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது.

தனது பங்குக்கு அமெரிக்காவும், இச்சந்திப்பிலிருந்து பெரிய மாற்றங்கள் ஒன்றும் நிழந்துவிடப்போவதில்லை என்றும், சந்திப்பு நிகழ்வதே பெரிய விஷயம் என்றும் கூறியிருக்கிறது.

மோசமான நிலையிலிருக்கும் வணிக உறவு

அமெரிக்கா, சீனா, ஜோ பைடன், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Reuters

சீனாவுடனான அமெரிக்க அதிபர் பைடனின் உறவு ஆரம்பத்திலிருந்தே மோசமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.

தனக்குமுன் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த வணிகத் தடைகளை விலக்க பைடன் ஆர்வம் காட்டவில்லை.

இது பலநூறு கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சீனப் பொருட்களின் இறக்குமதியை பாதிக்கிறது.

சில விஷயங்களில், பைடன் இன்னும் கடுமையாக நடந்துகொண்டிருக்கிறார். கணினி தயாரிப்பில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை உறுதிப்படுத்த, சீனாவுக்கு கணினி சிப்களின் ஏற்றுமதியை நிறுத்தினார். இதற்கு பதிலடியாக, சீனாவும் அமெரிக்க நிறுவனமான மைக்ரானின் கணினி சிப்களை சீனாவில் விற்கத் தடை விதித்தது.

இதுதவிர, ஃபென்டனில் எனப்படும் ஒரு செயற்கை போதைப்பொருள் தயாரிப்பதற்கான ரசாயனங்களை சீனா ஏற்றுமதி செய்வதைத் தடுக்கவும் அமெரிக்கா முனைப்பாக உள்ளது. இந்த போதைப்பொருள் பயன்பாட்டால் அமெரிக்காவில் பல மரணங்கள் நிகழ்ந்திருப்பதுதான் காரணம்.

போரைத் தவிர்க்கும் முயற்சிகள்

அமெரிக்கா, சீனா, ஜோ பைடன், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்காவில் காணப்பட்ட 'உளவு பலூன்'

உளவு பலூன் விவகாரத்தைத் தொடர்ந்து, இச்சந்திப்பில் ரஷ்ய-யுக்ரேன் போர், சீனா-அமெரிக்காவுக்கு இடையிலான மறைமுக யுத்தமாக மாறாமல் தடுப்பதும் ஒரு முக்கிய விஷயமாக இருக்கும்.

முன்பு, ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் அதன்பிறகு அக்கூற்றிலிருந்து பின்வாங்கியது.

ஆனால், ரஷ்யாவுக்கு ராணுவம் மற்றும் நிதி சார்ந்து உதவினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா சீனாவை முன்னர் எச்சரித்திருந்தது.

தெற்கு சீனக் கடலில் அமெரிக்க மற்றும் சீனப் போர்க்கப்பல்கள் மோதலுக்குத் தயாரான நிலையிலேயே இருந்துவருகின்றன. தெற்குச் சீனக் கடலை, சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அமெரிக்காவோ அதனை சர்வதேசக் கடற்பரப்பென்று கூறுகிறது.

என்ன எதிர்பார்க்கப்படுகிறது?

பிளிங்கெனும் அவரது குழுவும், இச்சந்திப்பின் நோக்கம் இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பதும் பேச்சுவார்த்தைகளைத் துவங்குவதும் தான் என்று கூறியிருந்தனர்.

இவை நடந்தால் மட்டுமேகூட, இச்சந்திப்பு திருப்திகரமான ஒன்றாக அமையும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: