ஆப்கன் போர் குறித்த ஹாலிவுட் சித்தரிப்புகள் உண்மையா? மேற்கத்திய வணிக பார்வையா?

பட மூலாதாரம், Alamy
- எழுதியவர், கரின் ஜேம்ஸ்
- பதவி, பிபிசி கலாசாரம்
கை ஸ்டார்ட் ரிட்ச்சீ (Guy Stuart Ritchie)யின் ஹாலிவுட் திரைப்படமான 'தி காவெனன்ட் (The Covenant)' கடந்த ஏப்ரல் 21ல் வெளியானது. படம் முழுவதும் துப்பாக்கி சத்தமும், குண்டு வெடிப்பும் கலந்த காட்சிகள் பெருமளவு இடம்பெற்றுள்ள நிலையில், இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு திகில் அனுபவம் கிடைக்கும் என்பதே உண்மை.
இப்படத்தில் ஜேக் கில்லென்ஹால் ஜான் கின்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமெரிக்க ராணுவ அதிகாரியான ஜான் கின்லி, ஆஃப்கானிஸ்தானில் போர் நடைபெற்ற போது 2018ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆஃப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய போது ஜான் கில்லியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தது. அப்போது ஆஃப்கானிஸ்தான் வழிகாட்டியான அகமது (டார் சலீம்) என்பவர் தான் அவரைக் காப்பாற்றினார்.
ராணுவ பணிகளை முடித்துக்கொண்டு கின்லி தாய்நாடு திரும்பிய பின், ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களுக்கு உதவியதற்காக தாலிபான்கள் அகமதுவையும், அவரது குடும்பத்தினரையும் குறிவைத்துள்ளது அவருக்குத் தெரியவருகிறது. எனவே அவர் அகமதுவைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் ஆஃப்கானிஸ்தான் திரும்புகிறார்.
இத்திரைப்படம் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படமாகும். ஆஃப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் நடந்த தாக்குதல்கள் குறித்த தகவல்களை திரைக்குக் கொண்டு வர முயன்ற மற்ற படங்களைப் போன்ற ஒரு படமாகவே இதுவும் இருக்கிறது. ஆஃப்கானிஸ்தானிலிருந்து கடந்த 2021ல் அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெற்றது.
இதே போல் வியட்நாமில் இருந்து அமெரிக்க ராணுவம் தாய்நாடு திரும்பிய போதும் 'அபோகாலிப்ஸ் நவ் (Apocalypse Now -1879), டீர் ஹன்ட்டர் (Deer Hunter-1978)' போன்ற திரைப்படங்கள் வெளியாகின.
தற்போதைய திரைப்படமான தி காவெனன்ட் அல்லது இனிமேல் இதே போன்ற கதையம்சத்துடன் வெளியாகவுள்ள திரைப்படங்களில் ஆஃப்கானிஸ்தான் போர் குறித்த தகவல்களை வெளிக்கொண்டுவர படத் தயாரிப்பாளர்கள் விரும்பினாலும், அந்தப் படங்களும் வெற்றிபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போதைய திரைப்படத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் அமெரிக்கர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
அண்மையில் பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் ஆஃப்கானிஸ்தான் மீதான அரசியல் கட்சிகள் மற்றும் ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறு விதத்தில் இருந்தன.
அமெரிக்க வரலாற்றில் ஆஃப்கானிஸ்தான் போர் என்பது மிக நீண்ட காலமாக நடந்த போர் என்றாலும், அது அந்நாட்டு மக்களை பெரிதும் பாதித்த விஷயமாகத் தெரியவில்லை.
9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் தீவிரவாதிகளை அழிப்பதாகக் கூறி அமெரிக்க ராணுவம் 2001ல் ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்தது. ஆனால் இப்பிரச்சினை உலகின் வேறு சில நாடுகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னணியாகவும் அது அமைந்துவிட்டது. முதலில் இராக் போரில் தொடங்கி தற்போது உக்ரைன் போர் வரை பல பிரச்சினைகளை இங்கே நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியும்.
தி காவெனன்ட் திரைப்படம் வெளியானது முதல் தற்போது வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

பட மூலாதாரம், Alamy
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் எப்போதும் கூட்ட நெரிசலாகவே இருந்தது. பல்லாயிரக்கணக்கான ஆஃப்கானிஸ்தானியர்கள் நாட்டை விட்டுத் தப்பியோட முயன்றனர்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் அங்கிருந்து வெளியேறி ஒரு சில வாரங்களுக்குள் தாலிபான்கள் அந்நாட்டு ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றினர். பொதுமக்களின் பல்வேறு உரிமைகளுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள் உலக அளவில் ஆஃப்கானிஸ்தான் அகதிகள் பிரச்சினை உருவாகும் ஆபத்தை ஏற்படுத்தின.
பை ரிட்சீயின் தி காவனென்ட் திரைப்படம் இந்தக் கருவை மையப்படுத்தித் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே கருவை மையமாக வைத்து ஏற்கெனவே பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. உதாரணமாக அமெரிக்க ராணுவத்தினருக்கு ஆஃப்கானிஸ்தான் வழிகாட்டிகள் உதவியது போல் பல படங்களில் கதைகள் இடம்பெற்றுள்ளன.
இதே போல் செய்திகளில் இடம்பெறும் மற்றொரு படம் கந்தகர்(அமெரிக்காவில் மே 26ல் திரையிடப்பட்டது). ஜெரார்டு பட்லரின் இந்த அதிரடிப் படம் சிஐஏ (CIA) அதிகாரி ஒருவர் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் ஒரு தொலைவான பகுதியில், அவருக்கு உதவியவருடன் இணைந்து பொறிவைத்துப் பிடிக்கப்பட்டார்.
இத்திரைப்படத்தின் ட்ரெய்லரில், "எங்களைக் காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை" என பட்லர் சொல்வது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசனம் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொண்டு எதிரிகளுடனும் சண்டையிட வேண்டும் என்ற நிலையைக் காட்டியது.
2021-22ல், அமெரிக்க கடற்படையினர் அவர்கள் நாட்டில் உள்ள அவர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கு ஆஃப்கானிஸ்தான் வழிகாட்டி ஒருவர் உதவியது குறித்து சிபிஎஸ் நெட்வொர்க் 'தி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் ஏஐ (The United States of AI') என்ற நகைச்சுவைப் படத்தைத் தயாரித்தது.
டினா ஃபே மற்றும் அமெரிக்க கிறிஸ்டோபர் ஆகியோர் நடிப்பில் 2016ல் வெளியான விஸ்கி டாங்கோ ஃபாக்ஸ்ட்ராட் என்ற படத்தில், அமெரிக்க கிறிஸ்டோர் ஆஃப்கானிஸ்தான் வழிகாட்டியாக நடித்துள்ளார்.
இந்த விஷயத்தில் அதைவிட சென்சிட்டிவாக எடுக்கப்பட்ட படம்தான் தி காவெனன்ட்.
ஒரு படத்தயாரிப்பாளராக ரிட்ச்சீ பிரிட்டிஷ் கேங்ஸ்டரான டிஸ்னியின் அலாதீனில் தொடங்கி, தற்போது தி காவெனென்ட் வரை பயணித்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து வெளியான ஒரு அறிக்கையில் போர்க்காட்சிகள் அடங்கிய ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும் என ரிட்ச்சீ நீண்ட நாட்களாக விரும்பியதாகத் தெரியவந்துள்ளது. "ஆஃப்கானிஸ்தான் குறித்து நான் பல கதைகளைக் கேட்டுள்ளேன். ஒவ்வொரு கதையும் மிகுந்த அச்சமூட்டும் விதத்தில் இருந்தன," என்றார்.

பட மூலாதாரம், Alamy
இத்திரைப்படத்தின் கதையம்சத்தை உருவாக்கியதில் பல உண்மைகளும் அடங்கியுள்ளன. படத்தின் இறுதியில், அமெரிக்காவுக்கு உதவும் பணியில் சுமார் 300 ஆஃப்கானிஸ்தானியர்கள் உயிரிழந்ததாகவும், பல்லாயிரக்கணக்கானோர் தாலிபான்களிடமிருந்து மறைந்து வாழ கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
2017-18ம் ஆண்டுகளில் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ நடவடிக்கையை கண்காணித்து வந்த துணைச் செயலர் அன்னி ஃபார்ஜீமர் பிபிசியிடம் பேசிய போது, இது போன்ற தகவல்கள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதாகத் தெரிவித்தார். "இது தொடர்பான தற்போதைக்குத் தேவையான புள்ளி விவரங்கள் இல்லாவிட்டாலும், மனித உரிமை ஆர்வலர்களும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் இது போன்ற பல சம்பவங்கள் குறித்து புகார் தெரிவித்துள்ளன," என்றார் அவர்.
தி காவெனன்ட் படத்தில் வரும் கின்லி மற்றும் அகமது கதாபாத்திரங்களுக்கு இடையே நிலவும் உணர்வுப்பூர்வமான உறவுகள் தமக்கு நன்றாகப் புரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
"ஆஃப்கானிஸ்தான் வழிகாட்டிகளுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும், ராணுவத்தினருக்கும் 20 ஆண்டுகள் பணியாற்றிய போது அவர்களுக்கு இடையே ஒரு ஆழமான உணர்வுகளுடன் கூடிய பந்தம் ஏற்பட்டது. தி காவெனன்ட் போன்ற திரைப்படங்கள், ஆஃப்கானிஸ்தானில் இப்படி உதவியின்றித் தவித்து வருபவர்களின் உண்மையான உணர்வுகளைத் தொடுகின்றன," என்கிறார் அவர்.
அமெரிக்காவுக்கு வர அகமதுவுக்கு விசா கிடைத்த போதும், அவர் ஆஃப்கானிஸ்தானிலிருந்து தப்புவதற்கு முன் தாலிபான்களிடம் சிக்கியது குறித்து தி காவெனன்ட் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் ஒரு விமர்சனமாகவே தென்படுகின்றன.
இது குறித்து ஒரு ராணுவ அதிகாரியிடம் கோபமாகப் பேசும் கின்லி, "அகமதுவுக்கும், அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்பு தருவதாக நாம் உறுதியளித்துவிட்டு, பின்னர் அந்த பாதுகாப்பு அவருக்குக் கிடைப்பதை உறுதி செய்யத் தவறிவிட்டோம்," எனச் சொல்கிறார்.
ஆனால், அரசியல் மற்றும் திரைப்பட வசனங்களைக் கடந்து, ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு உதவிய வழிகாட்டிகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு விசா அளிப்பது குறித்து அமெரிக்க அரசு அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்ற மிக நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது என்பதை ராணுவ வீரர்களும், அரசு சாரா அமைப்புகளும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன.
ரெட்ரோகிரேடு (Retrograde) என்ற மேத்யூ ஹீனிமேனின் ஆவணப்படம் ஆஸ்காரின் சிறந்த ஆவணப்பட விருது பெறப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் முன், மேத்யூ தமது கேமரா குழுவினரை அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை முழுவதுமாக காட்சிப்படுத்தப் பயன்படுத்திக் கொண்டார். இக்காட்சிகளில் தான் அமெரிக்க ராணுவத்தினர் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் அவர்களுக்கு உதவியவர்களின் உணர்வுப்பூர்வமான உறவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்காட்சியில் தோன்றும் ராணுவ அதிகாரி ஒருவர், திடீரென தங்களைத் திரும்பப் பெற அமெரிக்க அரசு முடிவெடுத்தது குறித்து கவலை தெரிவித்ததுடன், "நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் நன்றி," என அவர்களைப் பார்த்துச் சொல்கிறார்.
போர் தொடர்பான திரைப்படங்களைத் தயாரிப்பதில் இரண்டாம் உலகப் போர் தான் பெரும் உத்வேகமாக அமைந்தது என நம்பப்படுகிறது. 1940ம் ஆண்டு முதல் 1998 வரை இது போல் ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளன. 1975ல் வியட்நாம் போர் முடிவுக்கு வந்த போது, அந்நாட்டுக்கு அமெரிக்கா சென்றது தவறானது என விமர்சனங்கள் எழுந்தன. இந்த எண்ணங்களின் விளைவாகவே ப்ளாட்டூன் (1986) உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டன.

பட மூலாதாரம், Alamy
இராக் மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாடுகள் குறித்து தயாரிக்கப்பட்ட பெரும்பாலான படங்களில் பேரழிவுகள், வீரர்களை ஹீரோக்களாகப் புகழ்தல் போன்ற காட்சிகளே இடம்பெற்றன. ஆனால், போரின் மோசமான பக்கங்களை இப்படங்கள் வெளிக்கொணரவில்லை.
ஜேக்கப் பெஞ்சமின் கிலென்ஹாலின் மற்றொரு படமான ஜார்ஹெட்(2005)ல் 1990களின் தொடக்கத்தில் நடந்த வளைகுடா போர் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் ஒரு ராணுவ வீரர் தன்னுடைய சக வீரரிடம், "அரசியலை மறந்துவிடுங்கள். சரியா? இப்போது நாம் இங்கு இருக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்," என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "மற்றவற்றைப் பற்றி சிந்திக்க ஒன்றுமே இல்லை," என்கிறார்.
போருக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்ற ஆராய்ச்சியை விட, அல்லது அது பற்றிய கேள்விகளிலிருந்து தப்பும் நோக்கில் தான் அந்த வீரர் இப்படிப் பேசுகிறார் என்பதை அந்த வசனம் படம்பிடித்துக் காட்டுகிறது.
அவுட்போஸ்ட் (2020) என்ற படத்திலும் இதே போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற போரின் போது ஒரு ராணுவ வீரர், "சும்மா கிடைக்காது சுதந்திரம்," எனப் பேசுவது போன்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த படம் முழுக்க இடம்பெற்ற வசனங்களில் அரசியல் சார்ந்த வசனம் இது ஒன்றே ஆகும். அதுவும் எந்த வித ஆதாரமும் இன்றி போகிற போக்கில் பேசும் வசனம் போலவே இது காட்டப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக திரைப்படங்கள் குறித்து விமர்சித்து வருபவரான டேவிட் தாம்ப்சன், தனது 'தி ஃபேட்டல் அலையன்ஸ்: சென்ச்சுரி ஆஃப் வார் ஆன் பிலிம்' என்ற விமர்சனப் புத்தகத்தை வரும் நவம்பர் மாதம் வெளியிடவுள்ளார்.
போர் குறித்த திரைப்படங்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கான காரணமே வன்முறை எண்ணங்கள் தான் என்கிறார் அவர்.
பிபிசி கலாச்சாரத்திடம் பேசிய அவர், "போருக்கு எதிரான படம் என எதுவும் கிடையாது. படத்தயாரிப்பாளரின் நோக்கம் எதுவாகினும், படத்தில் போர்க்காட்சிகளைக் காட்ட வேண்டியுள்ளது. துப்பாக்கி சூடுகளும், படுகொலைகளும் ஆர்வமூட்டுபவையாகவும், மனதைத் தூண்டுபவையாகவும் இருக்கின்றன," என்கிறார் அவர்.
போர் குறித்து வெளியாகும் மிக அருமையான ஹாலிவுட் திரைப்படங்கள் மேற்கத்திய உலகத்தின் பார்வையைத் தான் பிரதிபலிக்கின்றன. அதே நேரம் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள் நிராகரிக்கப்படுகின்றன. சாரா கரீமியின் 'ஹவா, மரியம், ஆயிஷா' (2019) திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
ஆஃப்கானிஸ்தானில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மூன்று கர்ப்பிணிகள் குறித்த கதைக் களத்தைக் கொண்ட படம் அது. 2021ம் ஆண்டில் கரீமி ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.
தனது சொந்த தாய்நாட்டிலிருந்து தப்பி வந்துள்ள நிலையில், 'ஃபைட் ஃப்ரம் காபூல்' (Fight from Kabul) என்ற படத்தை அவர் தற்போது தயாரிக்கவுள்ளார்.
பிபிசி கலாச்சாரத்திடம் பேசிய அவர், "காபூலில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதற்கு முன்பு இரண்டு மாத காலத்தின் கதைகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன," என்றார். "காபூலில் எங்களுக்கு என ஒரு வாழ்க்கை இருந்தது. எங்களுக்கு என கனவுகள் இருந்தன. எங்களுக்கு என பிரச்சினைகள் இருந்தன. போதுமான பாதுகாப்பு இல்லாத காலத்திலும் ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் தொடங்கினோம் என்பதை உலகுக்குக் காட்ட நான் விரும்புகிறேன்."
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர்கள், ஆஃப்கானிஸ்தானின் கதைகளை மலைகளுக்குப் பின்னால் இருந்து காட்டுகின்றனர். அந்தக் கதைகள் தனித்தன்மையுடன் இருக்கும் என்பது மட்டுமல்லாமல் ஆர்வத்தையும் தூண்டும். ஆனால் உண்மைகள் இத்திரைப்படங்களில் காட்டப்படுவதில்லை என்றார் அவர். மேலும் பேசிய அவர், பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரைக் காப்பாற்றியவர் என்ற அடிப்படையில் பார்த்தால் நாம் பேச இன்னும் ஏராளமான கதைகள் உள்ளன என்றார்.
உள்ளூர் மொழிகளில் தயாரிக்கப்படும் படங்கள் வினியோகிக்கப்படுவதில் இருந்த சுணக்கமே இது போன்ற பிரச்சினைகள் மறைக்கப்படக் காரணமாக இருந்தது. 'தி வீல்'(2009) என்ற படம் தற்போது எங்கு போனது எனத் தெரியவில்லை. இதே போல் மற்றொரு ஆஃப்கானிஸ்தான் பெண் தயாரிப்பாளரான ரோயா சாதரின் 'எ லெட்டர் டூ தி பிரசிடென்ட்' (2003) படமும் எங்கு போனது என்றே தெரியவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












