மணிப்பூர் வன்முறை: இன மோதலுக்கு என்ன காரணம்? மோதி அரசால் ஏன் தடுக்க முடியவில்லை?

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பிரபாத் பாண்டே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மணிப்பூரில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். மக்களின் வீடுகள், கடைகள் போன்றவை தீக்கிரையாகி உள்ளன. தேவாலயங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

வன்முறையால் தகிக்கும் மணிப்பூரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரிடையாக சென்று பார்வையிட்டுள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு மெய்தேய் மற்றும் குகி சமூகங்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது, ஆனாலும் மணிப்பூரில் வன்முறைகள் குறையாமல் தொடர்கின்றன.

இம்பாலில் உள்ள மத்திய இணையமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதன்கிழமை, ஒரு கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தாலும் வன்முறை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்கிறது.

மணிப்பூரைச் சேர்ந்த 10 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோதியை சந்திக்க காத்திருப்பதாகவும், ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பிரதமர் மோதி அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், `முதலில் பிரதமர் மணிப்பூர் செல்லட்டும், பின்னர் வெளி நாட்டுக்கு செல்லட்டும்` என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் வன்முறையையும் பதற்றத்தையும் ஏன் மாநில மற்றும் மத்திய அரசுகளால் தணிக்க முடியவில்லை?

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி, முதலமைச்சர் பீரேன் சிங் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளதை இது காட்டுகிறதா?

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், ANI

அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையா?

உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் சுற்றுப்பயணத்தின் போது, அனைத்துக் கட்சிகளுடன் பேசி, 15 நாட்களுக்குள் அமைதி திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது.

நிலைமையை சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எடுக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நம்போலின் சனோய் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிங்கோம்பம் ஸ்ரீமா பிபிசியிடம் பேசுகையில், “மக்களே தங்களை தற்காத்துக் கொள்ளும்படி அரசாங்கம் விட்டுவிட்டது. குகி மற்றும் மெய்தேய் ஆகிய இரு சமூகத்தினரும் அரசாங்கம் தங்களுக்காக எதையும் செய்யாததால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதன் காரணமாக, வன்முறையைச் சமாளிக்க மக்களே வன்முறையில் ஈடுபடுவதால், நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது” என்கிறார்.

நம்பிக்கை தகர்ந்தது

இரு சமூகங்களுக்கிடையில் நீண்டகால வேறுபாடுகள் இருந்தபோதிலும், குகி மற்றும் மெய்தேய் சமூகங்கள் மாநிலத்தில் நிம்மதியாக வாழ்ந்து வந்ததாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரு சமூகத்தினருக்கு இடையே வணிக உறவும் இருந்துள்ளது. ஆனால், தற்போது ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

குகி மக்களின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் காலடி எடுத்து வைக்க தற்போது எந்த மெய்தேய் மக்களுக்கும் தைரியம் இல்லை. மறுபுறம், மெய்தேய் மக்களின் பகுதிகளுக்கு செல்லும் ஆபத்தான முடிவை எடுக்க எந்த குகி மக்களும் விரும்பவில்லை.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் முழு மூச்சியில் தலையிடும்வரை, மாநில அரசு சாமானியர்களின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யாத வரை, வன்முறை நிற்காது என்கிறார் நீங்கோம்பம் ஸ்ரீமா.

மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைகளை கையாள்வதில் காட்ட வேண்டிய தீவிரத்தை மத்திய அரசு காட்டவில்லை என்று அம்மாநிலத்தில் பணியாற்றும் மனித உரிமை ஆர்வலர் கே.ஓ.நீல் கூறுகிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மணிப்பூர் பயணமும் வெறும் உணவு விநியோகம் தொடர்பானதாகவே இருந்தது, உறுதியான நடவடிக்கைகள் பற்றி எதுவும் பேசவில்லை என்றார் நீல்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், ANI

அமைதி குழு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகள்

மணிப்பூர் கவர்னர் அனுசுயா உய்கே தலைமையில் மத்திய அரசு அமைத்த 51 பேர் கொண்ட அமைதிக் குழு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஒருபுறம், குகி பழங்குடியினரின் உச்ச அமைப்பான குகி இம்பி இந்த அமைதிக் குழு அமைப்பதை நிராகரித்துள்ளது. அதே நேரத்தில், மெய்தேய் சமூகத்தை வழிநடத்தும் மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு, இந்த அமைதிக் குழுவில் சேர வேண்டாம் என்று அறிவித்துள்ளது.

"நிலைமையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அமைதிக் குழுவில் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மக்கள் சேர்க்கப்பட்டனர். இந்தக் குழுவில் மணிப்பூர் மற்றும் இந்தப் பகுதியின் நிலவரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் கூட இல்லை. மாநிலத்தை சரியாகப் புரிந்துகொள்ளும் நபர்கள் குழுவில் இருந்திருக்க வேண்டும். எனவே இதிலிருந்து அரசாங்கத்தின் நோக்கம் புரிகிறது" என்று கே.ஓ.நீல் கூறுகிறார்,

ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது அதிருப்தி?

மாநிலத்தில் உள்ள மெய்தேய் சமூகம் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையேயான இனப் பிளவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிப்பூரில் பலருக்கு அதில் மகிழ்ச்சி இல்லை.

ஹிமந்த பிஸ்வா சர்மா வடகிழக்கு மாநிலங்களின் குரலின் பிரதிநிதி அல்ல என்பதை மத்திய தலைமை புரிந்து கொள்ள வேண்டும் என்று மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

"ஹிமந்தா பிஸ்வா சர்மா இங்கே என்ன செய்வார்? அவர்களுக்கு இங்குள்ள பிரச்சனைகள் புரியவில்லை. யாரும் அவரை நம்பவில்லை" என்கீறார் நீல்

இருப்பினும், அமைதிக் குழுவிடம் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியதாக நிங்கோம்பம் ஸ்ரீமா கூறுகிறார். அவர்கள் தங்கள் தரப்பிலிருந்து முயற்சி செய்கிறார்கள், ஆனால் உண்மையான நடவடிக்கையை மாநில மற்றும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், ANI

பாஜக என்ன சொல்கிறது?

ஹிமந்தா பிஸ்வா சர்மா வடகிழக்கு மாநிலத்தின் பெரிய தலைவர் என்றும், இந்த பிராந்தியத்தின் பிரச்னைகளை அவர் புரிந்து கொண்டுள்ளார் என்றும் பாஜக கூறுகிறது.

பிபிசி நிருபர் திலீப் குமார் சர்மாவிடம் பேசிய மணிப்பூரில் உள்ள பாஜக மூத்த எம்எல்ஏ கே இபோம்சா, “ஹிமந்தாவைப் பற்றி சிலர் தவறாகப் பேசலாம், ஆனால் அவர் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், வடகிழக்கு மாநிலத் தலைவர்கள் அவர் சொல்வதைக் கேட்கிறார்கள்” என்கிறார்.

மாநிலத்தில் நிலவும் வன்முறைகள் காரணமாக, சாதாரண மக்கள் தங்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் மற்றும் பணவீக்கத்தை எதிர்கொள்கின்றனர். உணவுப் பொருட்களின் விலையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மருந்துகள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். பல இடங்களில் ஒரு கிலோ அரிசி 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பிரதமர் மோதியின் மௌனம்

ஒரு மாதமாக வன்முறை நீடித்து வரும் நிலையில், இதுவரை பிரதமர் நரேந்திர மோதி இது குறித்து வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.

குகி பழங்குடியினரின் உச்ச மாணவர் அமைப்பான குகி சத்ரா சங்கதனா, பிரதமரின் மௌனத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாததால் மெய்தேய் மற்றும் குகி ஆகிய இரு சமூகத்தினரும் வேதனை அடைந்துள்ளனர் என்று கே ஓ நீல் கூறுகிறார்.

"ஆம், பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தால் ஏமாற்றம் இருக்கிறது, ஆனால் மக்கள் மாநில அரசு மீது அதிக கோபத்தில் உள்ளனர்" என்கிறார் நீங்கோம்பம் ஸ்ரீமா.

நிங்கோம்பம் ஸ்ரீமா மேலும் கூறுகையில், “முதல்வர் பீரேன் சிங் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இங்குள்ள எம்எல்ஏக்கள் பிரதமரிடம் சரியாக தொடர்பு கொள்ளவில்லை"

வன்முறை எப்படி தொடங்கியது?

மே 3 அன்று மாநிலத்தின் குகிகள் உட்பட பிற பழங்குடி சமூகங்கள் மெய்தேய் சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கான கோரிக்கைக்கு எதிராக நடத்திய பேரணி வன்முறையாக மாறியது.

அவர்கள் மெய்தேய் சமூகத்தைத் தாக்கினர். இதற்கு மெய்தேய் சமூகத்தினரும் பதிலடி கொடுக்கத் தொடங்கினர், மெய்தேய் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் வசிக்கும் குகி சமூகத்தின் வீடுகள் எரிக்கப்பட்டு தாக்கப்பட்டன.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, மெய்தேய் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் வசிக்கும் குகிகளும், குகி ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் வசிக்கும் மெய்தேய்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளைச் சேர்ந்த குகி கிளர்ச்சியாளர்கள் மெய்தேய் வசிக்கும் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி, ஏராளமான மெய்தேய் மக்களைக் கொன்று குவிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், ANI

சமீபத்தில் மணிப்பூரில் இருந்து திரும்பிய பிபிசி செய்தியாளர் நிதின் ஸ்ரீவஸ்தவா, மணிப்பூரில் நிலைமை மிகவும் பதட்டமாக உள்ளது என்று கூறினார்.

நிதின் கூறுகையில், “தலைநகர் இம்பாலில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சிஆர்பிஎஃப் வீரர்கள் காரை விட்டு இறங்கக் கூடாது என்று எங்களிடம் கடுமையாக அறிவுறுத்தினர். வன்முறையின் அளவைப் பார்க்கும்போது, குகி மற்றும் மெய்தேய் சமூகங்களுக்கு இடையே பரஸ்பர பகை இருப்பது போல் தெரிகிறது, அதே போல் வெளியில் இருந்து வரும் வன்முறையாளர்களும் வன்முறையில் ஈடுபடுவது போல் தெரிகிறது. அவர்களிடம் அதிநவீன ஆயுதங்களும் இருக்கலாம்’’ என்றார்.

தற்போது மாநிலத்தில் 40 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலைமை எவ்வளவு மோசமானது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

குகி மற்றும் மெய்தேய் மக்களிடையே என்ன சர்ச்சை

மணிப்பூரில் மூன்று சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அவர்கள் மெய்தேய், பழங்குடியினரான குகி மற்றும் நாகா.

குகி, நாகா உள்ளிட்ட பிற பழங்குடியின மக்கள் மலைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையான மெய்தேய் மக்கள் வாழ்கின்றனர். மெய்தி சமூகத்தின் பெரும்பாலான மக்கள் இந்துக்கள்.

அதே சமயம் நாகா மற்றும் குக்கி சமூகத்தினரில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.

மக்கள்தொகையில் அதிகமாக இருந்தாலும், மணிப்பூரின் 10 சதவீத நிலப்பரப்பில்தான் மெய்தேய்கள் வாழ்கின்றனர், மீதமுள்ள 90 சதவீத பகுதிகளில் நாகாக்கள், குகிகள் மற்றும் பிற பழங்குடியினர் வசிக்கின்றனர்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், ANI

மணிப்பூரின் தற்போதுள்ள பழங்குடியினக் குழுக்கள் மெய்தேய் மக்கள்தொகை மற்றும் அரசியல் செல்வாக்கைக் கொண்டுள்ளனர் என்று கூறுகின்றனர். இது தவிர, வாசிப்பு, எழுத்து ஆகியவற்றுடன், மற்ற விஷயங்களிலும் முன்னோடியாக உள்ளனர்.

மணிப்பூரின் மொத்தமுள்ள 60 எம்எல்ஏக்களில் 40 எம்எல்ஏக்கள் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 20 பேர் நாகா மற்றும் குகி இனத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை 12 முதல்வர்களில் இருவர் மட்டுமே பழங்குடியினர்.

அத்தகைய சூழ்நிலையில், இங்குள்ள பழங்குடியின குழுக்கள் மாநிலத்தில் மெய்தேய் மக்கள் ஆதிக்கம் செலுத்துவதாக உணர்கிறார்கள்.

மேலும் மெய்தேயர்களும் ஒரு பழங்குடி அந்தஸ்தைப் பெற்றால், தங்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்துவிடும் என்றும் மலைகளில் கூட மெய்தேய்கள் நிலம் வாங்கத் தொடங்குவார்கள். அத்தகைய சூழ்நிலையில், தாங்கள் மேலும் ஓரங்கட்டப்படுவோம் என்று பழங்குடியினர் நினைக்கின்றனர்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், ANI

வடகிழக்கு பற்றிய கூற்றுகளும் உண்மைகளும்

திரிபுரா, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்கிறது. மற்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்தது முதல் வடகிழக்கு இந்தியாவில் நிலவும் பாகுபாடுகளை அகற்றுவேன் என்று கூறி வருகிறார்.

ஒரு காலத்தில் வன்முறை மற்றும் அமைதியின்மைக்கு பெயர் பெற்ற வடகிழக்கு, தற்போது அனைத்து இடங்களிலும் வளர்ச்சி கண்டு வருவதாக அவர் கூறினார்.

ஆனால் உண்மை நிலை வேறுவிதமாக இருக்கிறது. மணிப்பூர் மட்டுமின்றி அசாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன.

ஆகஸ்ட் 2021 இல், அஸ்ஸாம்-மிசோரம் எல்லையில் நடந்த வன்முறையில் ஐந்து அசாம் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 2021 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் திரிபுராவில் இந்து-முஸ்லிம் வன்முறை வெடித்தது.

நவம்பர் 2022 இல், அசாம்-மேகாலயா எல்லையில் வன்முறை வெடித்தது, இதில் 6 பேர் இறந்தனர்.

இத்தகைய கூற்றுகளுக்கு மத்தியில் வடகிழக்கில் முழுமையான அமைதியை ஏற்படுத்த மோதி அரசு தவறிவிட்டதா?

“வடகிழக்கில் வாழும் பல்வேறு சாதி மற்றும் பழங்குடியின மக்களின் உணர்வுகளை பாரதிய ஜனதா கட்சி புரிந்து கொள்ளவில்லை. அவரது இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் இங்கு வேலை செய்யாது" என்று கே.ஓ.நீல் கூறுகிறார்.

குஜராத், உ.பி. மாதிரியை இங்கும் நடத்த விரும்புகிறார். ஆனால், இது அது வேலைசெய்யாது. வடகிழக்கு இந்து சமூகமும் இந்தி பேசும் மற்ற மாநிலங்களின் இந்து சமூகத்தைப் போல சிந்திக்கவில்லை என்றும் நீல் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மேகாலயா கவர்னர் ஃபகு சவுகான் இந்தியில் தனது உரையை தொடங்கியபோது, எதிர்க்கட்சியான மக்கள் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.க்கள் சபையை புறக்கணித்தனர்.

மாநிலத்தில் முக்கியமாக காசி, கரோ, ஜெயின்டியா மற்றும் ஆங்கிலம் பேசப்படுவதாகவும், பெரும்பாலான மக்களுக்கு இந்தி புரியவில்லை என்றும் எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.

இச்சம்பவத்தை உதாரணம் காட்டி பேசும் கே.ஓ.நீல்., "வடகிழக்கு மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல் உங்கள் நிகழ்ச்சி நிரலைத் திணித்துக்கொண்டே இருந்தால், இங்குள்ள பிரச்சனைகளை எப்படி தீர்ப்பீர்கள்" என்று கேள்வி எழுப்புகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: