பாலஸ்தீனம்: அரசு, அரசியல் மீது நம்பிக்கை இழந்து இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் தூக்குவது ஏன்?

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை

பட மூலாதாரம், EPA-EFE

படக்குறிப்பு, பாலிஸ்தீனத்தில் புதிதாக உருவெடுத்துள்ள 'லயன்ஸ் டென் ' போன்ற போராட்டக் குழுக்கள்
    • எழுதியவர், யூசப் எல்டின்
    • பதவி, பிபிசி உலக சேவை

ஒரு பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு கூட இதுநாள்வரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் 30 வயதுக்குட்பட்ட பாலஸ்தீன இளைஞர்கள். பாலஸ்தீன தலைமை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்களில் பலர் கூறுகின்றனர். இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையேயான பிரச்னைக்கு ‘இரண்டு நாடுகளின் தீர்வு’ எனும் யோசனையை அவர்களில் பெரும்பாலானோர் நிராகரிப்பதும், இதுதொடர்பாக பிபிசிக்கு பகிரப்பட்ட பிரத்யேக தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

“பாலஸ்தீனத்தில் நிலவும் உண்மையான சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளாமல், இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு ‘இரு தனி நாடுகள்’ எனும் கவர்ச்சிகரமான தீர்வை மேலை நாடுகள் வலியுறுத்தி வருகின்றன” என்கிறார் 17 வயதான பாலஸ்தீன இளம்பெண்ணான ஜன்னா தமிமி. “இரு தனி நாடுகள் தான் தீர்வு என்றால் அவற்றுக்கான எல்லைகள் எங்கே?” என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட இளம் பத்திரிகையாளர்களில் தானும் ஒருவர் எனக் கூறும் ஜன்னா, ஏழு வயதில் தனது தாயிடம் இருந்து செல்ஃபோனை வாங்கி, அதில் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனது சொந்த ஊரான நபி சலாவில் நடைபெறும் போராட்டங்களை படம்பிடித்து வருவதாக கூறுகிறார்.

“ இரவு, பகல் என்று பாராமல் இஸ்ரேலிய படைகள் இங்கு நடத்திவரும் தொடர் தாக்குதல்கள் குறித்து நான் பதிவு செய்து வருகிறேன். அந்த தாக்குதல் தொடர்பான காட்சிகள் அனைத்தையும் படம் பிடிக்க முடியவில்லை என்றாலும், என்னால் முடிந்தவரை அவற்றை படம்பிடிக்க முயல்கிறேன். ஆனால் எப்போதும் ஏதேனும் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன” என்கிறார் ஜன்னா.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை
படக்குறிப்பு, கடைசியாக பாலஸ்தீனத்தில் தேர்தல் நடைபெற்ற 2006 இல் பிறந்த ஜன்னா

சீர்குலைந்த நம்பிக்கை

கடந்த இரண்டு தசாப்தங்களைச் சேர்ந்த பாலஸ்தீன மக்களுக்கு, அதாவது 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, பாலஸ்தீன அரசியல் தலைமை மீதான நம்பிக்கை குலைந்துள்ளது என்பது பாலஸ்தீன கொள்கை மற்றும் ஆராய்ச்சி மையத்தால் பிபிசிக்கு பிரத்யேகமாக பகிரப்பட்டுள்ள தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இஸ்ரேல் உடனான பாலஸ்தீன பிரச்னைக்கு ‘இரு தனி நாடுகள்’ எனும் சர்வதேச நாடுகளின் பாஷையில் சொல்லப்படும் அமைதி தீர்வுக்கு பாலஸ்தீனர்கள் மத்தியில் ஆதரவு குறைந்து வருவதையும் மேற்கு கரையை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த மையத்தின் தரவுகள் எடுத்துரைக்கின்றன.

“கடந்த 14 ஆண்டுகளாக இங்கு ஒரு அதிபர் இருக்கிறார். தேர்தல் நடத்தப்படாமலேயே தொடர்ந்து அவர் இந்த பதவியில் நீடிக்கிறார். இதுபோன்ற சட்டபூர்வமற்ற நடைமுறைகளால் ஆட்சியாளர்கள் மீது இன்றைய இளம் தலைமுறையினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்” என்கிறார் பாலஸ்தீன கொள்கை மற்றும் ஆய்வு மையத்தின் இயக்குநரான டாக்டர் கலீல் ஷிகாகி.

“பாலஸ்தீனத்திற்கும் அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. ஆனால் அது வெறும் ஏட்டளவில் இருப்பதாகவே தெரிகிறது. நடைமுறையில் பாலஸ்தீன அரசியல் சர்வாதிகாரத்துடன், பெரும்பாலும் தனி நபர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு தான் உள்ளது” என்கிறார் அவர்.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

ஆயுத போராட்டத்திற்கு ஆதரவு

அதேநேரம், 30 வயதிற்குட்பட்ட பாலஸ்தீன இளைஞர்களில் பெரும்பாலோர், இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 56% சதவீதத்திற்கும் மேலான இளைஞர்கள், இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் வடமேற்கு கரை பகுதியில் அமைந்துள்ள நப்லஸ் மற்றும் ஜெனின் நகரங்களில் உருவாகி உள்ள புதிய போராட்டக் குழுக்கள், பாலஸ்தீன அரசு படைகளுக்கு சவால் விடுபவையாக அமைந்துள்ளன.

இந்த போராட்ட குழுக்களில் லைய்ன்ஸ் டென் மற்றும் ஜெனின் பிரிகேடிஸ் ஆகியவை மிகவும் பிரபலமானவை. மேற்கு கரை பகுதிகளில் குடியேறியவர்கள் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு எதிராக இந்த போராட்ட குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்தப் போராட்ட குழுவின் முகாம் அமைந்துள்ள தெருக்களில் ஜெனின் பிரிகேடிஸ் குழு ஒரு நாள் நள்ளிரவு 2 மணிக்கு தாக்குதல் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தது.

பயிற்சி மேற்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் 20 வயதுடைய இளைஞர்களாகவே இருந்தனர். உச்சி முதல் உள்ளங்கால் வரை கருப்பு ஆடையால் தங்கள் உடலை முடியிருந்த அவர்களின் அனைவரது கைகளிலும் ‘M16’ ரக துப்பாக்கிகள் இருந்தன.

வன்முறைக்கு ஆதரவா?

தற்போதுள்ள அரசியல் தலைமை, எங்கள் தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று வருத்தத்துடன் கூறுகிறார் 28 வயது போராளியான முஜாஹத்.

கடந்த 30 ஆண்டுகளாக இங்குள்ள அரசியல் வழிமுறைகள் மீது பாலஸ்தீன இளைஞர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்கிறார் அவர்.

அப்படியானால் இஸ்ரேல் -பாலஸ்தீன பிரச்னையில் வன்முறை தீர்வை அவர் ஆதரிக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

இஸ்ரேல் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இதற்கு பதிலாக குறிப்பிடும் முஜாஹத், இஸ்ரேலின் இந்த அராஜக போக்கிற்கு வன்முறையால் தான் பதிலடி தர முடியும் என்கிறார் அவர்.

மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் மாணவர் தேர்தல்

பல ஆண்டுகளாக, பாலஸ்தீனத்தில் பொதுத் தேர்தல் அல்லது அதிபர் தேர்தல் நடத்தப்படாதது குறித்த அந்நாட்டு இளைஞர்களுக்கு இருந்து வரும் வருத்தம் பல்கலைக்கழகங்களின் மாணவர் தேர்தல்களில் பிரதிபலித்து வருகிறது. மேற்கு கரையில் அமைந்துள்ள பிர்சைட் பல்கலைக்கழகம் மற்றும் அங்கு நடத்தப்பட்டுள்ள மாணவர் தேர்தல்கள் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் நிலவும் அரசியல் மனநிலையை பிரதிபலிப்பதாக பரவலாக கருதப்படுகிறது.

பாலஸ்தீனத்தில் ஆட்சி, அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் கட்சியின் இளைஞர் பிரிவான மாணவர் ஃபதாக் கட்சி தான், பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். இக்கட்சி தமது முக்கிய எதிர்ப்பாளர்களான ஹமாஸ் அமைப்பு உள்ளிட்டவற்றை இந்தத் தேர்தலில் தோற்கடிப்பது தான் வழக்கம். ஆனால் இந்த நடைமுறை கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைகீழாக மாறியது என்கிறார் பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணியின் மாணவர் பிரதிநிதியான முஸ்தபா.

2022இல் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் தங்களின் கட்சியும் போட்டியிட்டதாக கூறும் முஸ்தபா, அந்த தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்த ன என்கிறார்.

“மாணவர் தேர்தலில், ஃபதாக் மற்றும் ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு இடையேயான வெற்றி வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பது தான் வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு தேர்தலில் ஹமாஸ் கட்சியின் வெற்றி வித்தியாசம் அதிகமாக ( 10 இடங்கள்) இருந்தது” என்கிறார் மாணவர் முஸ்தபா.

ஆட்சியாளர்களுக்கு எதிரான பாலஸ்தீன இளைஞர்களின் மனநிலையை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை
படக்குறிப்பு, பாலஸ்தீன அமைப்பின் ஒர் அங்கமாக தான் அங்கீகரிப்படவில்லை என்று கூறும் மஜித்

பொதுத் தேர்தல் முடிவும் இப்படிதான் இருக்குமாம்!

பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் ஹமாஸ் அமைப்பின் அமோக வெற்றி, பாலஸ்தீன அதிகார வர்க்கத்தின் மீதான எதிர்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

“பாலஸ்தீனத்தில் இனி எப்போது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதன் முடிவுகள், கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெளியான முடிவுகளை போலவே அமையும்” என்கிறார் முஸ்தபா.

அரசியல் கைதுகள் போன்ற முக்கியமான விவகாரங்களை பாலஸ்தீன அரசு கையாளும் விதம் மற்றும் பொதுமக்கள் மீது விதிக்கப்படும் வரிகள், கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் போன்ற நடவடிக்கைகளால் பாலஸ்தீன மக்கள், ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்கிறார் அவர்.

முந்தைய தலைமுறையினரின் எண்ணம் என்ன?

இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலில், பாலஸ்தீனத்தை சேர்ந்த இளம் தலைமுறையினரின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க, இந்த விவகாரத்தில் முந்தைய தலைமுறையினரின் எண்ணம், அவர்களின் அடையாளம் என்ன என்பது தொடர்பான கேள்விகளும் எழுந்துள்ளன.

கலை மற்றும் கல்வி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வரும் குவாட்டன் ஃபவுண்டேஷன் எனும் தன்னார்வ அமைப்பில் பணியாற்றி வருபவர் மஜித் நஸ்ரல்லா.

மேற்கு கரை பகுதியில் அமைந்துள்ள ரமல்லா நகரில் இவர் வசித்து வந்தாலும், வடக்கு இஸ்ரேலிய பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரில் தான் இவர் பிறந்தார்.

இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் அரேபிய குடிமக்களாக உள்ளனர். தமது தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலோரை போலவே மஜித் நஸ்ரல்லாஹ் தம்மை 1948 இல் இருந்து அடையாளம் காண விரும்புகிறார். 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின் அந்த நிலத்தில் தங்கியிருந்த பாலஸ்தீனர்களின் தலைமுறை ஒன்று உள்ளது. இந்த தலைமுறையை சேர்ந்த மஜித் நஸ்ரல்லாஹ், பாலஸ்தீன சமூகத்தில் இருந்து தன்னைத் தானே விலக்கி கொள்கிறார்.

“மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீன அமைப்பின் ஒரு அங்கமாக நான் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, பாலஸ்தீனத்தில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது என கருதுகிறேன். இன்னும் சொல்லப்போனால், இஸ்ரேல் சட்டப்படி நான் ரமல்லாவில் வசிக்க கூடாது” என்று கூறுகிறார் மஜ்த் நஸ்ரல்லாஹ்.

பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களின் குடிமக்கள் மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு இஸ்ரேல் சட்டப்படி தடை விதித்துள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'இரு நாடுகள் தீர்வு ' திட்டத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ள பாலஸ்தீன இளைஞர்கள்

மோசமான திட்டம்

இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலுக்கு “இரு நாடுகளின் தீர்வு” என்பது உண்மையில் ஒரு மோசமான அரசியல் திட்டம் எனக் கூறும் மஜித், பாலஸ்தீன மக்கள் மீதான தொடர் ஒடுக்குமுறையை மறைக்கும் நோக்கில் இந்த திட்டம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார். இந்த தீர்வில் முன்மொழியப்படும் இரு நாடுகளின் எல்லைகளை குறிக்கும் வரைபடத்தை ஓர் ஐந்து வயது குழந்தையிடம் காண்பித்தாலே, இத்திட்டம் செயல்படுத்த இயலாதது என்று கூறி விடும் என்கிறார் மஜ்த்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளை உள்ளடக்கிய ‘ஒரு ஜனநாயக நாடு’ உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்தி நீண்ட காலமாக தாங்கள் குரல் கொடுத்து வந்துள்ளோம் என்கிறார் மஜ்த். ஆனால் இந்த விவகாரத்தில் பாலஸ்தீன அரசு நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்த தங்களது அதிருப்தியை பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறோம். ஆனால் எங்களின் குரல்கள் நசுக்கப்பட்டன. எங்களது தலைமுறையை சேர்ந்தவர்களின் குரலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தினர்களின் குரலையும் பாலஸ்தீன அரசு கருத்தில் கொள்ளவில்லை என்கிறார் மஜ்த் மிகுந்த வருத்தத்துடன்.

இந்தக் கட்டுரையில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்க கோரியதற்கு, பாலஸ்தீன அரசு நிர்வாகம் பதில் அளிக்கவில்லை.

1948இல் ஒரு நாடு இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதில் இஸ்ரேல், பிரிக்கப்பட்ட நாள் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரை தனி நாடு என்கிற அங்கீகாரத்திற்காக போராடி வருகிறது.

‘இரு நாடுகளின் தீர்வு’ என்பது வெவ்வேறு சமூகங்கள் மற்றும் மொழிகளைக் கொண்ட இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாட்டு மக்களுக்கு இரண்டு தனித்தனி பிரதேசங்களை வழங்குவது பற்றி பேசுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: