குஜராத்: ஜூனாகத் நகரில் தர்காவை அகற்றுவது தொடர்பாக எழுந்த வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு

போலீசாருக்கும், வன்முறையாளர்களுக்கும் மோதல்

பட மூலாதாரம், Getty Images

பிபார்ஜாய் புயலின் தாக்கம் காரணமாக குஜராத் மாநிலத்தின் கட்ச் - சௌராஷ்ட்ரா பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மறுபுறம் ஜுனாகத் நகரில் உள்ள ஒரு தர்காவை அகற்றுவது தொடர்பாக காவல்துறையினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மஜேவாடி தர்வாசா பகுதியில் நடந்த இந்த மோதலின் போது ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் பிபிசிக்காகப் பணியாற்றும் ஹனிஃப் கோகர் அளித்த விவரங்களின்படி, 'தர்காவை' அகற்றும் நகர நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக மஜேவாடி தர்வாசா அருகே இரவு நேரத்தில் ஏராளமானோர் கூடினர்.

இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார், கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும், அங்கிருந்த கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 போலீசார் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட தகவலின்படி, தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் அரசு பேருந்துக்கு தீ வைத்ததாகவும், இதில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த மோதல் குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிவருகின்றன.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், இரவு முழுவதும் நடைபெற்ற சோதனையில் 174 சந்தேக நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படைகளை அமைத்து போலீசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாருக்கும், வன்முறையாளர்களுக்கும் மோதல்

பட மூலாதாரம், HANIF KHOKHHAR

படக்குறிப்பு, காவல் கண்காணிப்பாளர் ரவி தேஜா, ஜூனாகத்

மஜேவாடி தர்வாசா அருகே உள்ள சாலையோர தர்காவை 'அகற்ற' நகராட்சி இரண்டு நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்கியது.

குறிப்பிட்ட தர்கா ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நகரமைப்பு அலுவலகம், தர்கா இருக்கும் இடத்திற்கான உரிமைச் சான்றிதழை அளிக்குமாறு கடந்த 14ம் தேதி ஒரு அறிவிப்பாணைையை அளித்திருந்தது.

இதையடுத்து வெள்ளிக்கிழமையன்று இரவு சுமார் 500 முதல் 600 பேர் வரை அங்கு கூடினர்.

ஜுனாகத் நகரில், 'பல வளர்ச்சிப் பணிகள்' மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, நரசிங் மேத்தா சரோவர் மற்றும் உபர்கோட் பகுதியில் பல கட்டடங்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டுள்ளன.

இதே போன்ற ஒரு நோக்கத்தில் மஜேவாடி தர்வாசாவில் உள்ள தர்காவுக்கும் அந்த அறிவிப்பாணை வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த விவரங்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து தர்கா அருகே இது போன்று பெரும் கூட்டம் கூடியதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பான முழுவிவரங்களையும் ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் ரவி தேஜா, “மஜேவாடி ​​தர்வாசா அருகே உள்ள கெபன்ஷா தர்கா அமைந்துள்ள நிலத்தின் உரிமைக்கான சான்று மற்றும் கட்டுமானத்துக்கான அனுமதியை 5 நாட்களுக்குள் அளிக்குமாறு ஜூனாகத் நகராட்சி கடந்த 14ஆம் தேதி ஒரு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், வெள்ளிக்கிழமையன்று அந்த தர்கா உள்ள பகுதியைச் சுற்றி ஏராளமானோர் திரண்டனர்," என்றார்.

வன்முறையில் ஈடுபட ஏற்கெனவே சதியா?

“அங்கு திரண்டிருந்த கூட்டத்தில் மக்கள் முழக்கங்களை எழுப்பினர். பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக ஒரு போலீஸ் வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது. அந்த வாகனத்தில் வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள், முழக்கம் எழுப்பிய மக்களை சமாதானப்படுத்த முயன்றனர். இது தொடர்பாக சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர்கள் போலீசாரின் அறிவுரையை ஏற்காமல் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சாலை மறியலைத் தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீசாரை நோக்கி கல் வீசித் தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர்தான் கூட்டத்தைக் கலைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்," என்றார் அவர்.

ஆனால் அப்போதும் கூட்டம் கலையவில்லை என்றும், தொடர்ந்து கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் மக்கள் கூடியதாகவும், போலீசார் மீது அந்த மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

போலீசாருக்கும், வன்முறையாளர்களுக்கும் மோதல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வன்முறையில் ஈடுபட்ட கும்பல்

மேலும், இப்போராட்டத்தின் போது மக்களோடு மக்களாக கலந்துவிட்ட சில சமூக விரோதிகள் போலீசாரைத் தாக்கி பதற்றத்தை அதிகரிக்க முயன்றதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த மோதல் சம்பவம் குறித்து கூடுதல் விவரங்களை அளித்த காவல் கண்காணிப்பாளர் ரவி தேஜா, “மோதலில் காவல்துறையை சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என்றார்.

காவல் கண்காணிப்பாளர் அளித்த விவரங்களின்படி, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததற்கு, கல்வீச்சு தாக்குதலில் காயமேற்பட்டதே காரணம் எனத் தெரியவருகிறது. உடற்கூறு ஆய்வுக்குப் பின் முழுமையான உண்மைகள் வெளியாகும்.

இந்நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதாகவும், 5 கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த தகவலின்படி, கூட்டத்தைக் கலைத்த பின், இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு, சந்தேக நபர்களை போலீசார் சுற்றிவளைத்ததாகத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை

அடுத்தகட்ட நடவடிக்கையாக குற்றவாளிகளை தேட, உள்ளூர் குற்றப்பிரிவு போலீசாருடன், சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

போலீசார் விரைவில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்வார்கள் என காவல் கண்காணிப்பாள்ர் ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

போலீசாரை தாக்கியதாக குற்றம் சாட்டப்படும் 'சமூக விரோதிகள்,' சிசிடிவி காட்சிகள் மற்றும் உளவுத்துறையினர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் முழுவதுமே திட்டமிட்ட சதியா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையை துவக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, 'சந்தேக நபர்களின் செல்ஃபோன் அழைப்பு விவரங்களை பெறும் நடவடிக்கையை' போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

காவல் துறையினர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜூனாகத் முனிசிபல் கார்ப்பரேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 'வளர்ச்சிப் பணிகள்' மேற்கொள்வதற்காக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது, ​​அப்பகுதி மக்களிடையே வெறுப்பு உணர்வு ஏற்படுவது இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயமாக உள்ளது.

ஏற்கெனவே இப்பகுதியில், உபர்கோட், தார்வாசா ஏரி உள்ளிட்ட பல இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டுள்ளது சிறுபான்மை சமூகத்தினரிடையே 'கோபத்தை' ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: