இந்தியாவில் முஸ்லிம், கிறிஸ்துவர்கள் மீது 'அதிகரிக்கும் வன்முறை': கவலை தெரிவித்த அமெரிக்கா - கடுப்பான இந்தியா

சர்வதேச மத சுதந்திர அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
    • பதவி, பிபிசி தமிழ்

2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை அமெரிக்கா அரசு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொர் ஆண்டும் சர்வதேச நாடுகளில் மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையை அமெரிக்கா அரசு வெளியிட்டு, அதன் நிலைபாட்டைத் தெரிவிக்கும். அந்த வகையில் 2022ஆம் ஆண்டுக்கான இந்தியா தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.

அதில் இந்தியாவில் நடைபெற்ற மதம் சார்ந்த வன்முறைகள் குறித்து நீண்ட பட்டியலை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டு தனது கவலையைத் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த அறிக்கையில் கூறப்படும் தகவல்கள் சார்பு நிலை கொண்டதாகவும், உள்நோக்கம் கொண்டுள்ளதாகவும் இருக்கிறது எனக் கூறி இந்த அறிக்கையை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த அறிக்கை அமெரிக்க தூதரகத்தின் நேரடி ஆய்வு, ஊடகத்தில் வெளியான செய்திகள், மனித உரிமை அமைப்புகளின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையை உருவாக்கிய மத சுதந்திர அமைப்பு தெரிவித்துள்ளது.

அறிக்கையில் என்ன இடம்பெற்றுள்ளது?

சர்வதேச மத சுதந்திர அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மத சிறுபான்மையினர் மீது காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முஸ்லிம், கிறிஸ்துவர் போன்ற மத சிறுபான்மையினர் மீது நடக்கும் வன்முறை தாக்குதல் இந்த ஆண்டு அதிகமாகி இருக்கிறது.

மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு இந்தியாவில் அதிகமாகியுள்ளது.

மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

  • வட அமெரிக்காவில் உள்ள இந்திய - அமெரிக்க கிறிஸ்துவ அமைப்புகளின் கூட்டமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் 2022ஆம் ஆண்டு கிறிஸ்துவர்களுக்கு எதிராக 761 வன்முறை சம்பவங்கள் நடந்ததாக அமெரிக்க அரசின் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஐக்கிய கிறிஸ்துவர்கள் சங்கம் வெளியிட்ட 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்தியாவில் கிறிஸ்துவர்களுக்கு எதிராக நடைபெற்ற 511 வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்தது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு 505 ஆக இருந்தது. இந்தச் சம்பவங்களில் பெரும்பான்மையானவை உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 13 மாநிலங்களில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்கள் உள்ளது. மேலும் இதை மீறும் நபர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகின்றன.
  • கட்டாய மதமாற்ற சட்டங்களின் உதவியுடன் மத சிறுபான்மையினர் அச்சுறுதலுக்கு உள்ளாக்கப்படுவதாக அமெரிக்க அரசின் மத சுதந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு வன்முறை சம்பவத்தில் சாதாரண உடையில் இருந்த காவல்துறை, இந்து மதத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கியதாகக் கூறி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபர்கள் மீது பொதுவெளியில் சவுக்கடி கொடுக்கப்பட்டது.
  • மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் வாழும் 16 வீடு, 29 கடைகளை அங்கு நடந்த வன்முறைக்குப் பிறகு அரசு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.
  • மாட்டுக்கறி சாப்பிடதாகக் கூறி உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரை ஒரு கும்பல் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதேபோல பல சம்பவங்களில் பசு குண்டர்கள் ஈடுபடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஜார்கண்ட் மாநிலத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டார்.
  • பாஜகவை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் முகமதி நபி குறித்து தொலைக்காட்சியில் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகின. ஐநாவின் பொதுச்செயலாளர், மற்றும் 11 நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் இந்தக் கருத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.
  • தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் சகாய மேரி, மாணவர்களை மதமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்தச் சம்பவத்தில் மாணவி ஒருவரின் தற்கொலை, பிரச்னையை இன்னும் பெரிதாக்கியது.
  • தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த உத்தமன் என்பவர் 3 கிறிஸ்துவ மத போதகர்களைத் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
  • பத்திரிகையாளர் முகமது ஜுபைர், மாணவர் உமர் காலித் உள்ளிட்டோரின் கைது தொடர்பாகவும், அவர்களுக்கு நீதிமன்றங்கள் பிணை மறுத்தது தொடர்பாக இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
  • இதுபோல மத சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக பல்வேறு சம்பவங்கள் அமெரிக்க அரசின் சார்பாக வெளியிடப்பட்ட மத சுதந்திர அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
  • மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளைப் போல அவர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, பாகுபாடும் அதிகமாகி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • குறிப்பாக இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளில் இருந்தோ, அல்லது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களாவோ, அந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலத்திலோ நடப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மத சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கவலை அளிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்ய இந்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

சில சந்தர்ப்பங்களில், மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகளை அரசு மன்னித்து விடுகிறது, சில நேரங்களில் வன்முறையை ஊக்குவிப்பதாக அரசின் நடவடிக்கைகள் இருப்பதாகத் தோன்றுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக அரங்கில் அவமானம்

சர்வதேச மத சுதந்திர அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

மத சுதந்திரம் தொடர்பாக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் உண்மை எனப் பேராசிரியரான முனைவர் ஹாஜாகனி தெரிவித்தார்.

”உலக அரங்கில் இந்தியா சகோதர உணர்வுக்காக அறியப்பட்ட ஒரு நாடு. காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி அனைவரும் சம உரிமையுடன் வாழ்வது மட்டுமே இந்தியாவின் பெருமை.

ஆனால் காந்தியைக் கொன்றவர்கள் வழியில் வந்தவர்கள் பள்ளிவாசல், தேவாலயம் முன்பாக கவலவரங்களை உருவாக்கின்றனர். இது உலக அரசிங்கில் இந்தியாவிற்குப் பெரிய அவமானத்தைத் தேடித் தந்துள்ளது,” என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலளாரும், பேராசிரியருமான ஹாஜாகனி பிபிசி தமிழிடம் பேசினார்.

தொடர்ந்து பேசும்போது, சர்வதேச அரங்கில் காந்தியின் கொள்கைகளை இந்தியா முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதுதான் இந்தியாவின் அடையாளத்தை, பெருமையைக் காக்கும் என்றார்.

‘பாரபட்சமான அறிக்கையை நிராகரிக்கிறோம்’

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அரசு ஒரு சார்பாக வெளியிடப்பட்ட மத சுதந்திர அறிக்கையை இந்தியா புறக்கணிக்கிறது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

”உள்நோக்கம் கொண்ட பாரபட்சமிக்க சில அமெரிக்க அதிகாரிகளால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அதன் மீதான நம்பிக்கையை நிலைகுலையச் செய்கிறது.

தவறான தகவல்கள் மற்றும் பல்வேறு குறைபாடுகளுடன் வந்துள்ள இந்த அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது,” என்று அறிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: