இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியால் கோபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் - என்ன விளைவுகள் ஏற்படும்?

பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP VIA GETTY IMAGES
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி, அதன் சுத்தீகரிக்கப்பட்ட பொருட்களை சந்தையில் விற்பனை செய்வதால், ஐரோப்பிய யூனியன் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் கூறியுள்ளார்.
இதில் டீசலும் அடங்கும். ஃபைனான்ஷியல் டைம்ஸுக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, கடந்த ஓராண்டில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் எண்ணெயை வாங்கியுள்ளது.
மலிவான கச்சா எண்ணெய் கிடைப்பதன் காரணமாக இந்தியாவில் அமைந்துள்ள சுத்தீகரிப்பு நிலையங்கள் நிறையவே பயனடைந்துள்ளன. ஐரோப்பாவிற்கு சுத்தீகரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் இந்த நிறுவனங்கள் அதிக பணம் சம்பாதிக்கின்றன.
ஜோசப் பொரெல் என்ன சொன்னார்
இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு வரும் டீசல் அல்லது பெட்ரோல், ரஷ்ய எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றால், அது உறுப்பு நாடுகளுக்கு கவலையளிக்கும் விஷயம் என்றும், அவர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொரெல் கூறினார்.
"ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது இயல்புதான். ஆனால் அது ரஷ்ய எண்ணெயை சுத்தீகரிக்கும் மையமாக மாறி, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை எங்களுக்கு விற்றுக்கொண்டே இருந்தால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்," என்று அவர் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனான உரையாடலில் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து தான் பேசியதாக பொரெல் கூறினார். ஆனால் அவர் ரஷ்ய எண்ணெய் பற்றிக் குறிப்பிடவில்லை.
"இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் பேசும். ஆனால் ’இது கையை நீட்டுவது போல் இருக்கும், விரலைச் சுட்டிக்காட்டுவது போல இருக்காது" என்று ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் மார்கரெட் வெஸ்டேகர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், JOHN THYS/AFP VIA GETTY IMAGES
இந்தியா எவ்வளவு எண்ணெய் இறக்குமதி செய்கிறது
போக்குவரத்துச் செலவு மிக அதிகமாக இருந்ததால், இதற்கு முன் இந்திய சுத்தீகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிடம் இருந்து குறைவான அளவே எண்ணெய் வாங்கி வந்தன. ஆனால் 2022-23 நிதியாண்டில் ஒரு நாளைக்கு 970,000-981,000 பீப்பாய்கள் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இது நாட்டின் மொத்த இறக்குமதியில் ஐந்தில் ஒரு பங்கு.
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ரோஸ் நேப்ட் (ROSN.MM) மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும், (IOC.NS) இந்தியாவிற்கு வழங்கப்படும் எண்ணெயின் தரத்தை கணிசமாக அதிகரிக்கவும் பன்முகப்படுத்தவும் ஒரு டெர்ம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நாயரா எனர்ஜி ஆகிய நிறுவனங்கள், சுத்தீகரிக்கப்பட்ட எரிபொருளின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் ரஷ்ய எண்ணெயை வாங்குபவர்கள் என்று கெப்லரின் கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்களிடமிருந்து இது குறித்து உடனடி பதில் கிடைக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பு இந்தியா ஒரு நாளைக்கு சராசரியாக 1,54,000 பீப்பாய்கள் (பிபிடி) டீசல் மற்றும் ஜெட் எரிபொருளை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்தது என்று கெப்லர் கூறுகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி 5 முதல் ரஷ்ய எண்ணெய் பொருட்களின் இறக்குமதியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்த பின்னர் இது 2,00,000 பீப்பாய்களாக அதிகரித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் வரத்தைத் தடுப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் தேசிய அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என்று பொரெல் கூறினார். ஐரோப்பிய ஒன்றியம், வாங்குபவர்களை குறிவைக்கக்கூடும் என்று அவர் கோடிக்காட்டினார்.
அவர்கள் விற்கிறார்கள் என்றால் யாரோ வாங்குகிறார்கள் என்று அர்த்தம், யார் வாங்குகிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்றார் அவர்.

பட மூலாதாரம், Reuters
இந்திய அரசு கூறியது என்ன
'ஐரோப்பிய யூனியனின் தடை விதிகளின்படி ஒரு மூன்றாவது நாட்டில் கச்சா எண்ணெயின் வடிவம் மாற்றப்பட்டால் அதை ரஷ்ய பொருட்கள் என்று அழைக்க முடியாது' என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
"ஐரோப்பிய யூனியன் கவுன்சிலின் விதிமுறைகளைப் பாருங்கள். ரஷ்ய கச்சா எண்ணெய் மூன்றாவது நாட்டில் கணிசமான அளவிற்கு உருமாற்றம் செய்யப்பட்டால் அது ரஷ்யாவுடையது என்று கருதப்படாது. கவுன்சிலின் ஒழுங்குமுறை விதி 833/2014 ஐப் பார்க்குமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன்," என்று அவர் கூறினார்.
வங்கதேசம், சுவீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கர், தனது சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக திங்களன்று பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம் தலைநகர்) சென்றடைந்தார்.
இதற்கு முன்னதாகவும் ஜெய்சங்கர் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை ஆதரித்தார். யுக்ரேன் மீதான ராணுவ நடவடிக்கையை அடுத்து ரஷ்யாவுடனான வர்த்தகத்தை குறைக்குமாறு புது டெல்லிக்கு அழுத்தம் கொடுத்ததற்காக அவர் மறைமுகமாக மேற்கத்திய நாடுகளை விமர்சித்தார்.
"ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ரஷ்யாவுடனான எங்கள் வர்த்தகம் மிகவும் சிறியது. அது வெறும் 12-13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. நாங்களும் ரஷ்யாவுக்கு சில பொருட்களை கொடுத்துள்ளோம்… மக்கள் இதை வேறு வழியில் பார்க்கக்கூடாது என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் கூறியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்தியாவில் இருந்து பெட்ரோ தயாரிப்புகளை வாங்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் முதலிடத்தில் உள்ளது
2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரிக்கு இடையில் இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கான சுத்தீகரிக்கப்பட்ட பெட்ரோலியம் ஏற்றுமதி 11.6 மில்லியன் டன்களை எட்டியது.
இந்தியாவில் இருந்து சுத்தீகரிக்கப்பட்ட பெட்ரோல் பொருட்களை இறக்குமதி செய்யும் 20 பிராந்தியங்களின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் முதலிடத்தை எட்டியது.
ஐரோப்பிய சந்தைக்கு இந்தியாவின் சுத்தீகரிக்கப்பட்ட பெட்ரோல் பொருட்களின் ஏற்றுமதி விகிதம் 22 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
இங்குள்ள தனியார் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்தான அதிகரித்த எண்ணெய் விநியோகத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. மேலும் அவர்கள் ஐரோப்பாவை தங்கள் சிறந்த சந்தையாகப் பார்க்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு எவ்வளவு கவலை
ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா செயல் உத்தி உறவுகளைக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இத்தகைய அறிக்கை கண்டிக்கத்தக்கது என்று எண்ணெய் நிபுணர் நரேந்திர தனேஜா கருதுகிறார்.
”நாட்டு மக்களை மகிழ்விப்பதற்கான அரசியல் அறிக்கையாக இது இருந்தால் பரவாயில்லை.. ஆனால், எப்படியாவது பொருளாதாரத் தடைகளை விதிப்போம் என்று நினைத்தால், சீனா, துருக்கி உட்பட குறைந்தது 15 நாடுகள் மீது தடைவிதிக்க வேண்டியிருக்கும். மேலும் இது நடந்தால் இந்த நாடுகளால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு எண்ணெய் விலையில் ஏற்றம் ஏற்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
எண்ணெய் விலை ஏற்றம், ஏற்கனவே சிக்கலில் இருக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கு ஆபத்தானதாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் எண்ணெய் வாங்குவதால் உலக சந்தையில் எண்ணெய் தட்டுப்பாடு இல்லை. இந்த அமைப்பில் தலையிட்டால் கொந்தளிப்பு ஏற்படும்" என்றார் அவர்.
"ஐரோப்பாவில் மாசுவைக் காரணம் காட்டி பல சுத்தீகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. ஆனால் அவற்றின் தேவை உள்ளது. இப்போது நீங்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் பொருட்கள் அல்லது டர்பைன் எரிபொருளை வாங்குகிறீர்கள். அவற்றின் மூலக்கூறுகள் ரஷ்யாவில் இருந்து வந்தவை, துருக்கி, அல்லது இராக்கிலிருந்து வந்தவை என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்," என்று தனேஜா வினவினார்.
”இதுபோன்ற அறிக்கை, இந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறைவு. இந்தியா எந்த ஒரு சூழ்நிலையிலும் பயப்பட வேண்டியதில்லை,” என்று தனேஜா குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












