‘கிங்’ கோலி சாதனை சதம்: ஆர்சிபி-யின் வெற்றியால் சிஎஸ்கே, மும்பை பிளேஆஃப் வாய்ப்புக்கு ஆபத்தா?

IPL: RCB vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஹைதரபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்திருந்து. 187 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 187ரன்கள் சேர்த்து 8 வி்க்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல கட்டாய வெற்றி தேவை என்ற நெருக்கடியோடு ஆர்சிபி அணி சேஸிங்கில் இறங்கியது. நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும், வெற்றியும் தேவை என்ற தீர்மானத்தில் கேப்டன் டூப்பிளசிஸும், கோலியும் களமாடினர். இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்புக்கு அருகே சென்றுவிட்டது.

விராட் கோலியின் ஆர்ப்பரிப்பான சதம், டூப்பிளசிஸ் அரைசதம் ஆகியவை ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்து ப்ளே ஆப் சுற்றுக்கு அருகே கொண்டு சென்றுள்ளன.

  • நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் இரு அணியைச் சேர்ந்த வீரர்களும் சதம் அடிப்பது இதுவே முதல்முறை
  • ஐதராபாத் அணிக்காக ஹென்ரிச் கிளாசன் சதம் அடித்தர்.
  • ஐபிஎல் தொடரில் கிளாசனுக்கு இது முதல் சதம் ஆகும்
  • பெங்களூரு அணிக்காக விராட் கோலி சதம் அடித்தார்
  • இரு வீரர்களுமே சிக்ஸர் அடித்து தங்களின் சதத்தை எட்டினர்
  • ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலியின் 6வது சதம் இதுவாகும்.
  • ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் உடன் கோலி இணைந்துள்ளார்
  • விராட் கோலி - டூப்பிளசிஸ் ஜோடி குவித்த 172 ரன்கள் நடப்பு தொடரில் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது

ஹைதராபாத்தா பெங்களூரா!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டம் நேற்று ஹைதராபாத்தில் நடந்ததா அல்லது பெங்களூருவில் நடந்ததா என்று குழம்பிப் போகும் அளவுக்கு மைதானத்தில் பெரும்பாலும் கோலியின் ரசிகர்களும், ஆர்சிபி ரசிகர்களுமே நிரம்பியிருந்தனர். விராட் கோலி சேஸிங்கின்போது அடித்த ஒவ்வொரு ஷாட்டையும் ரசித்த ரசிகர்கள் “கோலி, கோலி” எனவும், “ஆர்சிபி, ஆர்சிபி” எனவும் கோஷமிட்டு உற்சாகப்படுத்தினர். விராட் கோலி சதம் அடித்தவுடன் கோலியின் ரசிகர்கள் அவருக்கு கூட்டமாக தலைவணங்கி வணக்கம் செலுத்தியது அற்புதமான நிகழ்வு.

IPL: RCB vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

சாதனை பார்ட்னர்ஷிப்

விராட் கோலி 63 பந்துகளில 100 ரன்கள்(4சிக்ஸர், 12பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். துணையாக ஆடிய டூப்பிளசிஸ் 71 ரன்கள் (41பந்துகள், 2சிக்ஸர், 7பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ஆர்சிபியின் வெற்றிக்கு அடித்தளமிட்டுச் சென்றனர்.

அதேபோல சன்ரைசர்ஸ் அணியில் கிளாசனின் சதத்தையும் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்திலும் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றும்போது, தனி ஒருவனாக நின்று அணிக்காக பங்களிப்பை கிளாசன் வழங்குகிறார். இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் மட்டும் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகளில் தலா ஒரு வீரர் சதம் அடித்துள்ளார்.

IPL: RCB vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

கோலி, டூப்பிளசிஸ் ராஜ்ஜியம்

இந்த ஆட்டத்தின் ஹீரோக்கள் விராட் கோலி, டூப்பிளிசிஸ் மட்டும்தான். இருவரும் முதல் ஓவரிலிருந்து 18-வது ஓவர்கள் வரை களமாடி சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம், 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பயன் இல்லை. பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி 64 ரன்கள் சேர்த்தது.

பவர்ப்ளே முடிவில் 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்திருந்த கோலி அடுத்த 19 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.

34 பந்துகளில் டூப்பிளசிஸ் அரைசதத்தையும், கோலி 35 பந்துகளில் அரைசதத்தையும் அடித்தனர். 15 ஓவர்களில் ஆர்சிபி அணி 150 ரன்களை எட்டியது.

விராட் கோலி ஃபார்முக்கு வந்து பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கியதும் ஸ்ட்ரைக்கை அவரிடம் வழங்கி அவரின் ஆட்டத்தை டூப்பிளசிஸ் ரசித்தார். சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என அனைத்தையும் கோலி துவம்சம் செய்து, கிளாசிக் கோலியாக உருவெடுத்தார்.

IPL: RCB vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

அபாரமாக ஆடிய கோலி 62 பந்துகளில் ஐபிஎல் போட்டியில் 6-வது சதத்தை நிறைவு செய்து 100 ரன்களில் புவனேஷ்வர் குமார் ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு டூப்பிளசிஸ், கோலி கூட்டணி 172 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி வெற்றிக்கு 13 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. நடராஜன் வீசிய 18-வது ஓவரில் பவுண்டரி அடித்த டூப்பிளசிஸ் 71 ரன்கள் சேர்த்த நிலையில் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் களமிறங்கி அதே ஓவரில் பவுண்டரி விளாசினார்.

கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. கார்த்திக் தியாகி ஒரு வைடு பால் வீச, பிரேஸ்வெல் 2 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

டூப்பிளசிஸுக்கு இரு கேட்ச் வாய்ப்புகளை சன்ரைசர்ஸ் வீரர்கள் நேற்று தவறவிட்டனர். 4வது ஓவரில் டூப்பிளசிஸ் அடித்த ஷாட்டை கார்த்திக் தியாகி கேட்ச் பிடிக்க முயன்று கோட்டைவிட்டார், அதன்பின் கிளென் பிலிப்ஸ் ஒரு கேட்சை தவறவிட்டார். இந்த இரு கேட்சுகளையும் தவறவிட்டதற்கு பெரிய விலையை சன்ரைசர்ஸ் கொடுத்தது.

ஆர்சிபி அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை சிராஜ், பர்னல் இருவரும் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஆனால், மற்ற பந்துவீச்சாளர்கள் பந்துகளை கிளாசன் வெளுத்து வாங்கினார்.

IPL: RCB vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

கவலைக்குரிய சன்ரைசர்ஸ் பேட்டிங்

இந்த சீசன் முழுவதும் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் கவலைக்குரியதாக மாறியுள்ளது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்புவது இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது

அபிஷேக் குமார்(11) திரிபாதி(15), மார்க்ரம்(18) ஆகியோர் சொர்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிலும் அபிஷேக், திரிபாதி தொடக்கத்திலிருந்தே ஆர்சிபி பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினர், ரன் சேர்க்கவும் சிரமப்பட்டனர். இதனால், 3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர்.

அதன்பின் வந்த கிளாசன் வழக்கம்போல் பொறுப்பாக பேட் செய்தார். இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஷாட்களை ஆடும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக கிளாசன் திகழ்கிறார். ஆர்சிபி அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் பிரேஸ்வெல், ஷான்பாஸ் அகமது, கரன் சர்மா பந்துவீச்சை அனாசயமாக எதிர்கொண்ட கிளாசன் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார்.

3வது விக்கெட்டுக்கு கிளாசனுக்கு துணையாக ஆடிய மார்க்ரம் 18 ரன்கள் மட்டுமே சேர்த்தார். பெரும்பாலான ஸ்ட்ரைக்கை கிளாசன் எடுத்துக்கொண்டு ரன்களைச் சேர்த்தார். 3வது விக்கெட்டுக்கு கிளாசன்,மார்க்ரம் ஜோடி 76ரன்கள் சேர்த்தனர்.

கிளாசன் 24 பந்துகளில் அரைசதத்தையும், 29 பந்துகளில் 70 ரன்களையும் குவித்தார். கிளாசன் 49 பந்துகளில் ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து 104 ரன்னில்(6 சிக்ஸர், 8 பவுண்டரி) ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

IPL: RCB vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

சன்ரைசர்ஸ் அணிக்காக இதற்கு முன் வார்னர், பேர்ஸ்டோ, ப்ரூக் ஆகியோர் சதம் அடித்தநிலையில் இப்போது கிளாசனும் சதம் அடித்துள்ளார்.

4-வது விக்கெட்டுக்கு கிளாசன், ப்ரூக் ஜோடி 74 ரன்கள் சேர்த்தனர். ஹேரி ப்ரூக் களமிறங்கினாலும் பெரும்பாலான ஸ்ட்ரைக்கை கிளாசனிடமே வழங்கினார். இதனால்தான் சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது. ஹேரி ப்ரூக் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெற்றியாக மாற்றமுடியவில்லை

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ நன்றாக பேட் செய்தோம், ஆனால், அதை தக்கவைக்க முடியவில்லை. பவர்ப்ளேயில் குறைவான ரன்களே சேர்த்தோம். கிளாசன் பேட்டிங் அற்புதமாக இருந்தும் வெல்ல முடியவில்லை. ஆர்சிபி அணிக்கு ரசிகர்கள் ஆதரவு பிரமாதமாக இருந்தது. ஹைதராபாத் ரசிகர்களுக்கு வெற்றியை எங்களால் வழங்க முடியவில்லை, ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தோல்வியை வெறுத்தாலும், புன்னகையுடன் கடந்து அடுத்த போட்டியை சந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஒருவருக்கொருவர் பரிசு

ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ அற்புதமான சேஸிங். அருமையான பேட்டிங் பிட்ச், 200 ரன்கள் இருந்தாலும் சேஸிங் செய்யலாம். நானும், கோலியும் நேர்மறையான எண்ணத்தில்தான் விளையாடினோம். கோலியும், நானும் ஒருவருக்கொருவர் பரிசுஅளித்துக்கொண்டோம். அடுத்ததாக சின்னசாமி அரங்கில் மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்

IPL: RCB vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

கோலியின் சாதனைகள்

கடந்த ஆண்டு செப்டம்பரில் டி20 போட்டியில் சிக்ஸர் அடித்து சதத்தை கோலி நிறைவு செய்தார், டிசம்பரில் நடந்த ஒருநாள் போட்டியிலும் சிக்ஸர் அடித்து சதத்தை கோலி நிறைவு செய்தார், ஐபில் தொடரின் நேற்றைய ஆட்டத்திலும் சிக்ஸர் அடித்துதான் கோலி சதமடித்தார்.

இந்த சதம் மூலம் டி20 போட்டிகளில் அதிகமான சதம்(6) அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். 6 சதங்கள் அடித்து, கிறிஸ் கெயிலின் சாதனையோடு கோலியும் இணைந்துவிட்டார்.

இந்த சீசனில் விராட் கோலி, டூப்பிளசிஸ் ஜோடி 13 ஆட்டங்களில் களமிறங்கி 854 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இது ஐபிஎல் வரலாற்றிலேயே தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ரன்களாகும்.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் சீசன்களில் 500 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் டேவிட் வார்னர் 5 முறை 500 ரன்களைக் கடந்திருந்தார், அவரோடு தற்போது கோலியும் இணைந்துவிட்டார்.

இந்த ஐபிஎல் சீசன் கோலிக்கு அற்புதமாக அமைந்துள்ளது. 6 அரைசதம், ஒரு சதம் என 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் கோலி இதுவரை 7500 ரன்களை அடித்து சாதனை புரிந்துள்ளார். அதுட்டுமல்லாமல் சேஸிங்கின் போது அதிகமான சதம் அடித்த முதல் இந்திய வீரரும் கோலி என்ற பெருமையைப் பெற்றார்.

ப்ளே ஆப் வாய்ப்பு

ஆர்பிசி அணியின் வெற்றியால் அந்த அணி 13 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டும், 0.180 என பிளஸுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு நெருக்கமாக ஆர்சிபி வந்துள்ளது.

அதேசமயம், மும்பை அணி 14 புள்ளிகளோடு இருந்தாலும், அதன் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸ் 128லேயே இருக்கிறது அந்த அணிக்கு பின்னடைவாகும். ஆர்சிபி அணி கடைசி லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வென்றாலே 16 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றுக்குள் சென்றுவிடும்.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக்கில் வென்று 16 புள்ளிகள் பெற்றாலும், நிகர ரன்ரேட்டில் ஆர்சிபியைவிட குறைவாக இருக்கும்பட்சத்தில் ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்லாது.

அதேசமயம், சிஎஸ்கே அணியும், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்போதுதான் இரு அணிகளும் 17 புள்ளிகளோடு ப்ளே ஆப் சுற்றில் நுழைய முடியும். இதில் எந்த அணி தோற்றாலும், ஆர்சிபி 16 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்துவிடும். 15 புள்ளிகளுடன் இருக்கும் அணி 4வது இடமே பெறும்.

ஒரு வேளை சிஎஸ்கே, லக்னெள அணிகள் இரண்டுமே தோற்றால், ஆர்சிபி 16 புள்ளிகளுடன் ப்ளே ஆப்பில் 2வது இடத்துக்கு முன்னேறிவிடும். ஆதலால், ஆர்சிபி அணிக்கு ப்ளே ஆப் ரேஸில் நெருக்கடியளிக்க மும்பை அணி, கடைசி லீக்கில் சன்ரைசர்ஸ் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால்தான் ரன்ரேட்டை ப்ளஸுக்கு கொண்டு வர முடியும்.

ஐபிஎல் போட்டியின் கடைசி லீக்கில் ஆர்சிபி விளையாடுவது அந்த அணிக்கு சாதகமாகும். ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல ரன்ரேட் எவ்வளவு தேவை, எத்தனை ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைத்துவிடும் என்பதால், ஆர்சிபி அணிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

  • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
  • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
  • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
  • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்