அமைதியாக ஆளைக் கொல்லும் ஹைப்பர் டென்ஷன் - எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
உயர் ரத்த அழுத்தம் எனப்படும் ஹைப்பர் டென்ஷன், இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
மருத்துவ உலகில் ஹைப்பர் டென்ஷனை, 'சைலண்ட் கில்லர்' என்று அழைக்கிறார்கள். ஏனென்றால் உயர் ரத்த அழுத்தம் இருக்கும் பெரும்பாலான நபர்களுக்கு எந்த அறிகுறியும் ஏற்படாமல், திடீரென மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துவதால் இதை 'சைலண்ட் கில்லர்' என்று அழைக்கின்றனர்.
இந்தியாவில் வாழும் இளம் மற்றும் மத்திய வயது நபர்களில் 20 கோடி பேருக்கு ஹைப்பர் டென்ஷன் இருப்பதாக IHCI (இந்திய உயர் இரத்த அழுத்த கட்டுப்பாட்டுக்கான முன்னெடுப்பு) தெரிவித்துள்ளது. ஆனால் இதில் 2 கோடி பேர் மட்டுமே உயர் ரத்த அழுத்ததை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பு, 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தொற்றா நோயினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை 25% ஆக குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை 63% ஆக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைவரையும் உயர் ரத்த அழுத்த பரிசோதனைக்கு உட்படுத்தி, ஹைப்பர் டென்ஷனை கட்டுப்பாட்டில் வைப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொர் ஆண்டும் மே 17 ஆம் தேதி உலக ஹைப்பர் டென்ஷன் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பொது மருத்துவரான அமலோற்பவநாதன் ஜோசப், ஹைப்பர் டென்ஷன் தொடர்பான பிபிசி தமிழின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஹைப்பர் டென்ஷன் என்றால் என்ன?
இதயம் துடிக்கும்போது, ரத்த குழாய்களின் வழியே பாயும் ரத்ததின் அழுத்தம், ரத்த அழுத்தம் என கணக்கிடப்படுகிறது. இந்த ரத்த அழுத்தம் பாதுகாப்பான அளவைவிட அதிகரிக்கும்போது அதை மருத்துவ மொழியில் உயர் ரத்த அழுத்தம் அல்லது 'ஹைப்பர் டென்ஷன்' என்று அழைக்கிறோம்.
ரத்த அழுத்தத்தை கணக்கிடும் கருவியில் பாதரசத்தின் நகர்வு மில்லிமீட்டர்களில் அளவிடப்பட்டு, சிஸ்டாலிக் அழுத்தம் மற்றும் டயஸ்டாலிக் அழுத்தம் ஆகிய இரண்டு அளவீடுகளைக் காட்டும்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
- சிஸ்டாலிக் அழுத்தம் - இதயத் துடிப்பின் போது அதிகபட்ச அழுத்தம்
- டயஸ்டாலிக் அழுத்தம் - இதயத் துடிப்புக்கு இடையே உள்ள மிகக் குறைந்த அழுத்தம்.
இதன் அளவுகள் டயஸ்டாலிக்கிற்கு மேலே சிஸ்டாலிக் என குறிப்பிடப்படுகின்றன. அதாவது 130/90 mmHg என்பதை விட அதிகமாக இருந்தால் அதிக ரத்த அழுத்தம் என்று கூறப்படுகிறது.
அதாவது, BP எனப்படும் ரத்த அழுத்தம் கீழ்நிலையில் 90 mmHg அதிகமாகவும், மேல்நிலையில் 130 mmHgயை விட அதிகரிக்கும் போது மருத்துவர்கள் அதை உயர் ரத்தம் அழுத்தம் என்று கூறுகின்றனர்.
இதை அளவிடும் போது இரண்டு முறை சோதனை செய்து உறுதி செய்து கொள்ளவேண்டும்.
ஹைப்பர் டென்ஷன் எதனால் ஏற்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
ரத்த குழாய்களின் வழியே ரத்தம் அதிக அழுத்ததுடன் செல்வதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், ரத்த குழாய்களின் அகலம் சுருங்கி, குறுகிய பாதையில் ரத்தம் பாயும் போது இதயத்திற்குள் அதிக ரத்த அழுத்தத்துடன் பாயும். இப்படி அதிக ரத்த அழுத்தம் ஏற்படுதை நாம் 'ப்ளட் ப்ரஷர்' என்று அழைக்கிறோம்.
உயர் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணங்களாக இருப்பவை புகைப்பழக்கம், அதிக சர்க்கரை, உப்பு எடுத்துக் கொள்வது என்று மருத்துவர் அமலோற்பவநாதன் விளக்கினார்.
இது தவிர வயதாகும் போது ரத்த குழாய்கள் சுருங்கி, ரத்த அழுத்தம் ஏற்படும்.
சிலருக்கு குடும்பத்தினரின் மரபு வழியே அல்லது இயற்கையாக ரத்த குழாய் சுருங்கி ரத்த அழுத்தம் ஏற்படும்.
அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது, வேலை செய்யாமல் சும்மா இருப்பது போன்ற காரணங்களாலும் ரத்த அழுத்தம் ஏற்படும்.
ஹைப்பர் டென்ஷனின் அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் பொதுவாக அறிகுறிகள் ஏற்படாது. ஆனால் சில சாத்தியமான அறிகுறிகள் மூலமாக அதைக் கண்டறிய முடியும்.
- கடுமையான தலைவலி
- சுவாசிப்பதில் சிக்கல்
- ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
- நெஞ்சு படபடப்பு
- குழப்பம்
- பார்வை பிரச்னைகள்
- மூக்கில் இரத்தம் வடிதல்
- சோர்வு
- அசாதாரண மார்பு வலி
- கழுத்து மற்றும் காதுகளில் வியர்வை
ஹைப்பர் டென்ஷன் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பட மூலாதாரம், Getty Images
உயர் ரத்த அழுத்தம் என்பது ஒரு சைலண்ட் கில்லர். இது ஏற்பட்டால் உடலில் எந்த அறிகுறியும் வெளிப்படாது. அதனால் 25 வயதைக் கடந்த அனைவரும் 6 மாதத்திற்கு ஒருமுறை ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
இந்த சோதனையை செய்வது மிகவும் எளிதானது. ரத்த அழுத்த பரிசோதனை செய்யும் போது சேர் அல்லது பெஞ்சில் அமர்ந்த நிலையில் சோதனை செய்யவேண்டும்.
ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது தெரியவந்தால், இரண்டு முறை சோதனை செய்து உறுதி செய்து கொள்ளவேண்டும்.
உயர் ரத்த அழுத்த பாதிப்பு கண்டறியப்பட்டால், மருத்துவரை அணுகி உப்பு, சர்க்கரை உள்ளிட்ட தேவையான சோதனைகளை செய்து கொள்ளவேண்டும்.
ஹைப்பர் டென்ஷனுக்கு என்ன சிகிச்சை?
வழக்கமான மருத்துவ பரிசோதனை மூலமாக உயர் ரத்த அழுத்தம் இருப்பது பற்றி அறிந்து கொள்ளமுடியும்.
அதன்பிறகு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை எடுத்துக் கொள்லவேண்டும்.
ஹைப்பர் டென்ஷன் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை சோதனையின் மூலம் கண்டறிந்த பிறகு அதை தவிர்க்க வேண்டும்.
புகைப்பழக்கம், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், உணவில் அதிக உப்புச்(சோடியம்) சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிலும் ஹைப்பர் டென்ஷன் பாதிப்பு அதிகமாக இருப்பதாக மருத்துவர் அமலோற்பவநாதன் கூறினார்.
ஹைப்பர் டென்ஷனை கட்டுக்குள் வைக்க உதவும் சில வழிகள்

பட மூலாதாரம், Getty Images
- வாரத்திற்கு 3-4 முறை உடல் பயிற்சி, நடைபயிற்சி செய்யவேண்டும்
- உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
- மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்
- ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணுதல்
- உணவில் குறைவான உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்
- 25 வயதுக்கு பிறகு 6 மாதத்திற்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












