இளம் வயதினருக்கு திடீர் மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? இந்த அறிகுறி உங்களுக்கு இருந்தால் சிகிச்சை அவசியம்!

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த வாரம், கரூர் மாவட்டத்தில் நடந்த கபடி போட்டியின் போது 26 வயது விளையாட்டு வீரர், போட்டிகளுக்கு நடுவே சரிந்து விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்.
திடகாத்திரமான இந்த இளைஞருக்கு திடீரென்று எப்படி மாரடைப்பு ஏற்பட்டது? அண்மைக்காலங்களில் இப்படி இளம் வயதினரிடையே ஏன் அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறது?
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆந்திரா, தெலங்கானாவில் 4 இளைஞர்கள் வரை மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
உடலின் அனைத்து பாகங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தைக் கொண்டு செல்வது இதயத்தின் பிரதான பணி. இப்படி ரத்தத்தை உடலுக்கு கொண்டு செல்லும் வேலையை ரத்த குழாய்கள் செய்கின்றனர்.
இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதனால் இதயத்தில் இருந்து உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்துடன் செல்லும் ஆக்சிஜன் நிற்பதால் ஏற்படும் விளைவே மாரடைப்பு எனப்படுகிறது.
மாரடைப்பு ஏற்படும் போது இதயத்தில் கடினமான வலி உருவாகும். சில நேரங்களில் வாயுத் தொல்லையால் ஏற்படும் வலியும், மாரடைப்பின் வலியை ஒத்திருக்கும்.
மாரடைப்பு ஏன் வருகிறது?

பட மூலாதாரம், Getty Images
மாரடைப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னை மருத்துவ கல்லூரியில் இதய நோய் பிரிவு பேராசிரியரான மனோகர் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.
மனிதர்கள் பிறக்கும் போது உடலில் 60 மில்லி கிராம் அளவு கெட்ட கொழுப்புடன்(cholestrol) பிறக்கின்றனர்.
நாளடைவில் மனிதர்களின் வாழ்வியல், உணவு பழக்கம், மன அழுத்தம் என பல காரணிகளின் விளைவுகளால் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.
இப்படி அதிகரிக்கும் கெட்டக் கொழுப்பு மனிதர்களின் ரத்த குழாயில் சென்று படிகிறது. இந்த ரத்தக் கட்டிகள்(thrombus) ரத்த ஓட்டத்தை பாதித்து மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைகிறது.
திடீரென மாரடைப்பு ஏற்படுவதற்கு மன அழுத்தம் அல்லது அதீத உடல் செயல்பாடு காரணமாக அமைகிறது.
இதுமட்டுமின்றி நமது பரம்பரை மரபணு மூலமாக குடும்ப உறுப்பினர்களுக்கும் மாரடைப்பு வருவதற்காக அபாயமும் காணப்படுகிறது.
இளம் வயதினருக்கு ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
அண்மைக்காலமாக இளம் வயதினருக்கு திடீரென்று மாரடைப்பு(cardiac arrest) ஏற்படுவது அதிகமாகி வருகிறது.
இது தொடர்பாக அறிந்து கொள்ள சென்னை மருத்துவ கல்லூரி சார்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு வருகிறது என்று மருத்துவர் மனோகர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் மூலம், சில முடிவுகள் தெரிய வந்துள்ளதாக கூறிய அவர், 2019ஆம் ஆண்டுக்கு பிறகு 25 வயது முதல் 40 வயது வரை இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி இருக்கிறது, என்றார்.
அதிலும் பெண்களை விட ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு ஆண்கள் மத்தியில் காணப்படும் சிகரெட், குடி பழக்கம் காரணமாக இருக்கிறது என தெரிவித்தார்.
கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் நபர்களும், குடும்ப உறுப்பினர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு உள்ள நபர்களுக்கும் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருக்கிறது.
தீவிர உடற்பயிற்சி, உடல் சதையை அதிகரிக்க எடுத்துக் கொள்ளப்படும் புரதச் சத்து மருந்துகள் மூலம் இந்த நபர்களுக்கு மாரடைப்பு திடீரென்று ஏற்படுகிறது.
சீரான அளவில் உடற்பயிற்சி, மருந்துகள் எடுத்துக் கொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
குடி பழக்கம், போதை பழக்கம், மன அழுத்தமும் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைகிறது என்று மருத்துவர் கூறினார்.
"இதுமட்டுமின்றி, இளம் தலைமுறையினரின் உடல் செயல்பாடு(Physical activity) குறைந்து காணப்படுகிறது. வீடுகளுக்கு அருகில் இருக்கும் இடங்களுக்கு கூட நடந்து செல்லாமல், பைக்கில் செல்லும் பழக்கம் இளைஞர்களிடம் இருக்கிறது. இதனால் உடலில் சேரும் கெட்டக் கொழுப்பு அதிகரிக்கிறது" என்று அவர் விளக்கினார்.
மாரடைப்புக்கு கோவிட் தொற்றுக் காரணமா?

பட மூலாதாரம், Getty Images
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கோவிட் தொற்றின் பிந்தைய அறிகுறிகளாக மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.
மாரடைப்பு ஏற்படும் இளம் வயதினரை பார்க்கும் போது 10இல் எட்டு பேர் தீவிர கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டதனால் மாரடைப்பு அவர்களுக்கு ஏற்படுகிறது.
கோவிட் தொற்றின் போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நபர்களின் ரத்தக் குழாயில் சுருக்கம் ஏற்பட்டு, இதனால் ரத்தக் கட்டி உருவாகிறது என மருத்துவர் மனோகர் விளக்கினார்.
கோவிட் தொற்றுக்கு உடலை தேற்ற வேண்டும் என சிலர் அதிக உணவுகளை உட்கொள்கின்றனர். இதனால் ரத்தக் கட்டி உருவாக சாதகமான சூழல் உருவாகி அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிரது.
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதிக உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை விளைவிக்காது என்றார்.
"கோவிட் தொற்றுக்கு பிறகு, செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இளம் வயதினரிடையே அதிகமாகி இருக்கிறது. அதனால் செல்போனில் பெறும் தகவல்களை உண்மை என எடுத்துக் கொண்டு தவறான வழிமுறைகளை பின்பற்றுவதும் இளம் வயதினருக்கு ஏற்படும் மாரடைப்புக்கு ஒரு காரணமாக இருக்கிறது" எனத் பிபிசி தமிழிடம் பேசிய ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வரும் அடையாளம் தெரியாத நபர்கள் வழங்கும் வாழ்க்கை முறை ஆலோசனைகளை உண்மை என நம்பி தவறான உணவு முறை, தவறான உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.
உடற்பயிற்சி செய்வது மாரடைப்பை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images
அளவான உடற்பயிற்சி செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை எனக்கூறும் மருத்துவர் மனோகர், "சிலர் உடலை குறைக்கிறேன் என்ற பெயரில் முதல் நாளிலேயே உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் உடல்பயிற்சியை செய்கின்றனர். இப்படி செய்வது தவறானது" எனத் தெரிவித்தார்.
"நடைபயிற்சியில் ஈடுபடும் நபர்கள், 5 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிடங்களில் கடக்க வேண்டும். ஆனால் முதல் நாளில் இருந்தே இப்படி நடக்கத் தொடங்கக் கூடாது. முதல் ஒரு வாரம் 1 கிலோ மீட்டரில் தொடங்கி படிப்படியாக அதிகரித்து 5 கிலோ மீட்டர் தூரத்தை எட்ட வேண்டும். பின்புதான் 5 கிலோ மீட்டர் என்ற இலக்கை 45 நிமிடங்களில் நடக்க முயல வேண்டும். இப்படி செய்யும் போது நமது உடலுக்கு அதிக அழுத்தம் ஏற்படாது" என்று மருத்துவர் கூறினார்.
ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா, சராசரி மனிதர்கள் 8 மணி நேர தூக்கம். வாரத்திற்கு 4 முதல் 5 முறை உடற்பயிற்சி செய்தால் போதுமானது. ஆனால் சமூக ஊடகங்களின் தாக்கத்தால் 'சிக்ஸ் பேக்', 'சைஸ் ஸீரோ' பெற வேண்டும் என அதிக உடற்பயிற்சி செய்கிறார்கள். இது போல செய்வதாலேயே ஜிம்மில் மாரடைப்பு ஏற்படுவது போன்ற சம்பவம் நடக்கிறது," என்றார்.
மாரடைப்பை எப்படி தடுப்பது?

பட மூலாதாரம், Getty Images
மாரடைப்பு வருவதற்கான காரணத்தை கண்டறிந்து அதை தவிர்க்க சில பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். முதலில் உணவு முறை. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை முடிந்தளவுக்கு குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம், அதிக கெட்டக் கொழுப்பு, நீரழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவரை அணுகி பிரத்யேக உணவு முறையை வகுத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் காரணத்தை குறைக்க முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா.
25 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கெட்டக் கொழுப்பு பரிசோதனையை தவறாமல் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். உடலில் கெட்டக் கொழுப்பின் அளவை அறிந்து அதற்கு ஏற்ற மருத்து, உணவை எடுத்துக் கொண்டால் மாரடைப்பு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும் என மனோகர் கூறினார்.
மேலும் குடும்ப உறுப்பினர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு உள்ள நபர்கள், உடற்பயிற்சி செய்வது கட்டாயம். இதன்மூலம் உடலில் சேரும் கெட்டக் கொழுப்பின் அளவை குறைக்க முடியும் என்று மருத்துவர் மனோகர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












