உடல் பருமன்: எடையை அதிகரிக்க செய்யும் 5 காரணிகள்

உடல் எடை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கிர்ஸ்டி ப்ரூவர்
    • பதவி, பிபிசி

உடல் எடையைக் குறைப்பது வெறும் மன உறுதி சார்ந்த விஷயம் என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருப்பதாகக் கூறுகின்றன மருத்துவ ஆய்வுகள்.

உடல் பருமனுக்கான மற்ற ஐந்து காரணங்களை பிபிசியின் ’The truth about obesity’ என்ற நிகழ்ச்சி கண்டறிந்தது. இந்த ஐந்து காரணங்களும் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம்.

குடல் நுண்ணுயிரிகள்

கில்லியனும் ஜாக்கியும் இரட்டையர்கள். ஆனால், இவர்களுக்கு இடையே ஒரு வேறுபாடு உள்ளது.

ஒருவரைவிட மற்றொருவர் 41 கிலோ உடல் எடை அதிகம்.

Twins Research UK என்ற இரட்டையர்கள் குறித்த ஆய்வுக்காக கடந்த 25 ஆண்டுகளாக இந்த இரட்டையரை பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் பின்தொடர்ந்தார்.

உடல் எடை வேறுபாட்டிற்கு குடலில் வாழும் நுண்ணியிரிகள் காரணம் என ஸ்பெக்டர் நம்புகிறார்.

’’ஒவ்வொரு முறை நீங்கள் உணவு உண்ணும் போதும் தனியாக உண்ணவில்லை, பல நூற்று ட்ரில்லியன் நுண்ணுயிரிகளுக்கு உணவு அளிக்கிறீர்கள்’’ என்கிறார் ஸ்பெக்டர்.

இந்த இரட்டையர் இருவரிடமும் மலத்தின் மாதிரி சேகரிக்கப்பட்டது. அதில், உடல் மெலிதான கில்லியன் குடலில் பல வகையான நுண்ணுயிரிகள் இருப்பது தெரியவந்தது. ஜாக்கியின் குடலில் மிகக் குறைந்த வகையான நுண்ணுயிரிகள் மட்டுமே இருந்தன.

'’பல வகையான நுண்ணுயிரிகள் இருக்கும் போது அந்த நபர் ஒல்லியாக இருப்பார். உங்கள் எடை அதிகமாக இருந்தால் உங்கள் குடலில் பல வகையான நுண்ணுயிரிகள் இருக்காது’’ என்கிறார் ஸ்பெக்டர். 5,000 நபர்களிடம் இதே மாதிரியான முடிவை ஸ்பெக்டர் கண்டறிந்தார்.

ஆரோக்கியமான மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது குடலில் பல வகையான நுண்ணுயிரிகள் உருவாக வழிவகுக்கும்.

நுண்ணுயிரிகள்

பட மூலாதாரம், Getty Images

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

முழுமையான தானிய காலை உணவு

பழங்கள்

காய்கறிகள்

பீன்ஸ்

பருப்பு வகைகள்

கொட்டைகள்

மரபணு

ஒரு சிலர் கடினமாக உடற்பயிற்சி செய்தும், முறையான உணவு முறையைக் கடைபிடித்தும் அவர்களால் ஏன் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை?

நம் உடல் எடையில் 40 முதல் 70 சதவிகிதம் மரபணுவின் பங்கு இருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

'’நம் உடல் எடையை முறைப்படுத்துவதில் மரபணு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தற்போது தெளிவாகிவிட்டது. எனவே சில மரபணுவில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அது உடல்பருமனுக்கு வழிவகுக்கும்’’ என்கிறார் பேராசிரியர் சதாப் பரூக்கி.

மரபணு

பட மூலாதாரம், Getty Images

சில மரபணுக்கள் பசி, நீங்கள் சாப்பிடும் உணவின் அளவு மற்றும் நீங்கள் தேர்தெடுக்கும் உணவிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். நம் உடல் கலோரிகளை எப்படி எறித்து ஆற்றலாக மாற்றுகிறது என்பதிலும் மரபணு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

MC4R உட்பட உடல் எடையை பாதிக்கக்கூடிய வகையில் குறைந்தது 100 மரபணுக்கள் உள்ளன.

1,000 பேரில் ஒருவருக்கு MC4R மரபணுவில் குறைபாடு இருப்பதாக நம்பப்படுகிறது. இது பசி மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த மரபணு குறைபாடு உடையவர்கள் அதிக பசியுடன் இருப்பார்கள். மேலும், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் விரும்புவார்கள்.

’’மரபணு விஷயத்தில் நீங்கள் எதுவும் செய்ய முடியாது. ஆனால், உடல் எடை அதிகரிப்பிற்கு மரபணுவும் காரணம் என்பதைத் தெரிந்துகொள்வது அதற்கேற்ப உணவுப்பழக்கத்தை உருவாக்க சிலருக்கு உதவலாம்’’ என்கிறார் பரூக்கி.

உணவு உண்ணும் நேரம்

"காலை உணவை அரசரைப் போலவும், மதிய உணவை இளவரசரைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் சாப்பிடு" என்ற பழமொழியில் சில உண்மைகள் உள்ளன.

இரவு தாமதமாக உணவு உண்பது உடல் எடையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உடல் பருமன் நிபுணரான மருத்துவர் ஜேம்ஸ் பிரவுன் கூறுகிறார்.

இதற்கு இரவு நாம் குறைவாக உழைக்கிறோம் என்பது மட்டும் காரணமல்ல, நம் உடல் செயல்படும் விதமும் காரணம்.

உணவு உண்ணும் நேரம்

பட மூலாதாரம், Getty Images

’’இரவு நேரத்தைவிட காலை நேரங்களில், அதாவது வெளிச்சம் அதிகம் இருக்கும் போதே கலோரிகளை சிறப்பாகக் கையாளும்படி நம் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் ஜேம்ஸ் பிரவுன்.

எனவே தொடர்ச்சியாக மாறுபட்ட நேரங்களில் வேலை செய்பவர்களுக்கு உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

இரவு நேரங்களில் கொழுப்பு மற்றும் சர்க்கரைகளை செரிமானம் செய்வது உடலுக்கு கடினமாக இருக்கும். எனவே இரவு 7 மணிக்கு முன்பாகவே அதிக கலோரிகளை உட்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறைக்கு மத்தியிலும் நாம் சில மாற்றங்களைச் செய்ய முடியும்.

அதற்காக காலை உணவைத் தவிர்ப்பதோ, குறைவாக உட்கொள்வதோ சரியான தேர்வு அல்ல என்று கூறும் ஜேம்ஸ் பிரவுன், மாறாக அதிக புரதம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

மதிய வேளைக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை கணிசமாக எடுத்துக்கொண்டு, இரவு வேளைக்கு மிதமாக உட்கொள்ளலாம்.

மூளையைக் கட்டுபடுத்துதல்

கலோரிகளை எண்ணுவதற்குப் பதிலாக, நம் உணர்விற்கே எட்டாத உணவுப் பழக்கத்தை மாற்ற சில வழிகள் உள்ளன என்கிறார் பிரிட்டிஷ் விஞ்ஞானியான ஹ்யூகோ ஹார்பர்.

அதில், உணவைக் கண்டு மூளை தூண்டப்படுதலை தவிர்ப்பது சிறந்த வழி என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை உங்கள் கைப்பை மற்றும் சமையலறையில் இருக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.

சமையலறையில் எப்போதும் ஒரு குவளை அளவு பழங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை கண்ணில்படும்படி வைக்கலாம்.

மூளையைக் கட்டுபடுத்துதல்

பட மூலாதாரம், Getty Images

நொறுக்குத்தீனி பாக்கெட்டுடன் தொலைக்காட்சி முன்பாக அமர்வதற்குப் பதிலாக, தேவையான அளவு தட்டில் எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை மூடி வைத்துவிடலாம்.

நமக்குப் பிடித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்குப் பதிலாக அதில் குறைந்த கலோரி எடுத்துக் கொள்ளலாம்.

ஹார்மோன்கள்

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் வெற்றி என்பது நோயாளி வயிற்றின் அளவைக் குறைப்பதில் மட்டும் இல்லை, ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் உள்ளது.

நம் பசி ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை வயிறு நிரம்பிய உணர்வைத் தரும் ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்வதாகவும், பசியை ஏற்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

இது வயிற்றின் அளவை 90 சதவிகிதம் வரை குறைப்பதற்கான பெரிய அறுவை சிகிச்சையாகும். குறைந்தபட்சம் 35 உடல் நிறை குறியீட்டெண் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை செய்யப்படும்.

லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பசியில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய குடல் நுண்ணுயிரிகளை மறுஉருவாக்கம் செய்து, அதை ஊசி மூலம் நான்கு வாரங்களுக்கு தினமும் நோயாளிகளுக்குச் செலுத்தி ஆய்வு செய்தனர்.

’’நோயாளிகள் குறைந்த பசியை உணர்ந்தனர், குறைவாக உணவு உண்டனர், 28 நாட்களிலேயே 2 முதல் 8 கிலோவரை உடல் எடை குறைந்தனர்’’ என்கிறார் டிரிசியா டான்.

எந்த விளைவையும் ஏற்படுத்தாத பட்சத்தில், நோயாளி ஆரோக்கியமான எடையை அடையும்வரை இதைப் பயன்படுத்துவதே இந்த ஆய்வின் நோக்கம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: