புரோட்டீன் பவுடர்கள் எடுத்துக்கொள்வது ஆபத்தா? – ஆய்வுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கிளாடியா ஹம்மண்ட்
- பதவி, பிபிசி செய்தியாளர்
உள்ளூர் சூப்பர் மார்க்கெட்களில் இன்று பல்வேறு வித பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட புரோட்டீன் பவுடர்கள் (Protein Powder) விற்பனைக்கு வந்துவிட்டதை நம்மால் காண முடிகிறது..
உடற்பயிற்சி கூடங்களுக்கு (Gym) வருவோர் இதன் விலை குறித்தும், இதனை எப்படி பருகுவது என்பது பற்றியும் தங்களுக்குள் சிலாகித்து பேசிக் கொள்வதையும் கேட்க முடிகிறது.
சிலர் தங்களின் உணவு நேரத்துக்கு இடையே புரோட்டீன் பவுடர் கலந்த பாலை நொறுக்குத் தீனிக்கு பதிலாக பருகுகின்றனர். உணவு உட்கொள்ள நேரம் இல்லாதவர்கள் புரோட்டீன் பவுடர் கலந்த நீராகாரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
தாங்கள் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் புரதச்சத்து குறைவாக இருப்பதாக கருதும் சைவ பிரியர்கள், உடம்பில் இந்தச் சத்தை கூட்டுவதற்கு புரோட்டீன் பவுடர் போன்றவற்றை எடு்த்துக் கொள்கின்றனர்.
தானிய விற்பனை நிலையங்கள், ஐஸ்கிரீம் பார்கள் மற்றும் சாக்லேட் விற்பனையகங்களில், “புரதச்சத்து நிறைந்த பொருட்கள் இங்கு விற்பனைக்கு உள்ளன” என்று பெரிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
விலங்கினங்களில் இருந்து பெறப்படும் முட்டை, பால் போன்றவற்றில் இருந்தும், பட்டாணி, உருளைக்கிழங்கு, அரிசி, சோயாபீன்ஸ் போன்ற தாவரங்களில் இருந்து பெறப்படும் பொருட்களில் இருந்தும் புரோட்டீன் பிரித்தெடுக்கப்பட்டு, அதனை பொடியாக்கி, அதில் சுவையூட்டிகள் (flavourings) சேர்க்கப்பட்டு புரோட்டீன் பவுடர்களாக சந்தையில் விற்பனைக்கு வருகின்றன.
பாடி பில்டர்கள், விளையாட்டு வீரர்களை தாண்டி, இன்று வெகுஜன மக்கள் மத்தியில் புரதச்சத்து குறித்து பரவலாக பேசப்பட்டு வருவதால், சந்தையில் விற்பனையில் உள்ள புரோட்டின் பவுடர்கள் குறித்து நாம் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
புரதச்சத்தின் அவசியம்

பட மூலாதாரம், Getty Images
நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவு வகைகளில் புரதச்சத்து இன்றியமையாதது என்பதில் சந்தேகமில்லை. தசைகள் உருவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு, எலும்புகளின் வலிமை, நோய் எதிர்ப்பு மண்டலம், மூளை, இதயம் மற்றும் தோல் பராமரிப்பு என உடல்நலம் மற்றும் வலிமைக்கு புரதச்சத்து முக்கியமானதாக உள்ளது.
முட்டை, பால், தயிர், மீன், பருப்பு, இறைச்சி, சோயா, பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற அனைத்து உணவு வகைகளிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது.
உயர் வருவாய் கொண்ட நாடுகளில் பெரும்பாலான பெரியவர்கள் (Adults) மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அளவுக்கு அன்றாடம் புரதச்சத்துள்ள உணவுகளை உட்கொள்கின்றனர்.
அளவுக்கு அதிகமான புரதம்
இதுகுறித்து 49 பேரிடம் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் தொடக்கத்தில், மக்களின் அன்றாட உணவில் சராசரி புரதச்சத்து உட்கொள்ளும் அளவு, அமெரிக்க மற்றும் கனேடிய பரிந்துரைகளைவிட 75% அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.
புரதத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு அனைவருக்கும் போதுமானதாக இருக்காது என்புது கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டூவர்ட் பிலிப்ஸ் போன்ற நிபுணர்களின் வாதமாக உள்ளது.
ஒரு தனிநபருக்கு அன்றாடம் எவ்வளவு புரதச்சத்து தேவைப்படும் என்பதை அறிவது மிகவும் கடினமானது என கருதும் வல்லுநர்கள், இது ஒருவரின் வயது, உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி வழக்கத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே இதில் நிலையான பரிந்துரைகளை அளிக்க முடியாது என்கின்றனர் அவர்கள்.
உதாரணமாக, வயதான ஒருவர் பசியின்மை காரணமாக குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டால், அதிலிருந்து அவருக்கு கிடைக்கும் புரதத்தின் அளவும் குறைவாகவே இருக்கும். ஆனால் இதுவே ஒரு தடகள விளையாட்டு வீரருக்கு சராசரி மனிதனைவிட அதிக அளவு புரதம் தேவைப்படும்.
புரதம் குறித்த கேள்விகள்
உடல் தசைகளின் கட்டமைப்பு, எலும்புகளின் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு புரதம் தேவை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதேநேரம், நாம் உட்கொள்ளும் புரதச்சத்துள்ள உணவு வகைகள் எந்த அளவு சிறந்தவை? இவற்றை அதிகம் உட்கொண்டால் இன்னும் கொஞ்சம் பயனடைய முடியமா? உடம்பில் கூடுதலாக சேரும் புரதச்சத்தால் ஆபத்துகள் உள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டி உள்ளது.
தசைகளின் உருவாக்கத்திற்கு புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே பெரும்பாலான சோதனைகள் உணர்த்துகின்றன. ஆனால், அதேசமயம் பளு தூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே, உடம்பில் சேரும் புரதத்தால் பயன் உண்டாகும் எனவும், தசைகளை உடற்பயிற்சிக்கு உட்படுத்தாதபட்சத்தில், ஒருவரின் உடம்பில் சேரும் கூடுதல் புரதத்தால் பயனில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
உடற்பயிற்சியும் தேவை
இதுதொடர்பாக 14 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதி பேருக்கு, பாலை பாலடைக்கட்டியாக தயாரிக்கும்போது மீறும் மோர் வகை புரதத்தையும், இன்னும் பாதி பேருக்கு மருந்துவகை புரதமும் உட்கொள்ள கொடுக்கப்பட்டது.
அப்போது, பளு தூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளை செய்து முடிந்த பின்னர் புரதச்சத்து பவுடரை உட்கொண்டபோது அவர்களின் மெலிந்த தேகத்தின் உடல் எடை கூடியது. ஆனால், உடற்பயிற்சி எதுவும் மேற்கொள்ளாமல் வெறும் புரதம் நிறைந்த ஆகாரங்களை பருகியவர்களின் உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை என்பதையே ஆய்வு முடிவுகள் உணர்த்துகி்ன்றன.
ஆனால் உடன் பருமன் உள்ளவர்கள், வயதானவர்கள், இளம் உடற்பயிற்சியாளர்கள் என பலதரப்பினர்களை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுல்ளது. எனவே, இந்த ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டு பார்த்து, அவற்றை பொதுவான முடிவாக கருத இயலாத சிரமம் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
மந்திரப் பொடியா?
மனித உடலில் புரதச்சத்தின் தாக்கம் குறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த ஆய்வுகளை ஒருங்கிணைத்து 2022 இல் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதிக உடல் பருமன் இல்லாத ஆரோக்கியமானவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், புரோட்டீன் பவுடரை உட்கொண்டதுடன், உடற்பயிற்சியிலும் ஈடுபட்டவர்களின் உடல் எடை கூடியதுடன், அவர்களின் உடல் வலிமையும் அதிகரித்திருந்தது. இதன் மூலம் புரோட்டீன் பவுடர், மந்திரப் பொடி அல்ல என்பதும் இதனை உட்கொள்வதுடன் போதுமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போதே இது பலனளிக்கிறது என்பதும் நிரூபணமாகி உள்ளது.
முதியோருக்கு அவசியமா?
இவ்வளவு ஆய்வுகளுக்கு பிறகும் ஒரு மனிதனின் உடம்புக்கு தேவையான புரதத்தின் உகந்த அளவு இதுதான் என்று இன்னமும் தீர்மானமாக கூற இயலவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால், 65 வயதை கடந்தவர்கள், தங்களது உடல் எடை மற்றும் வலிமையை கூட்டும் நோக்கில் அளவுக்கு அதிகமாக புரோட்டீன் பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
புரதமும், உடற்பயிற்சியும்
நமது உணவுமுறைகள் தசைகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, பேராசிரியர் ஸ்டூவர் பிலிப்ஸ், கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு பிபிசி நடத்திய “உணவு திட்டம்” குறித்த கருத்தரங்கில் அவர் பேசியபோது, “ கூடுதல் புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஒருவர், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே உடற்பயிற்சி மேற்கொண்டால், அதனால் அவர் குறைந்த பலனைக் காண்பார்.
அதுவே வாரத்துக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால் சிறிய அளவு பலன் பெறலாம். எனவே புரதச்சத்தை எடுத்துக் கொண்டு, உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், அவர் விளையாட்டு வீரராகவே இருந்தால் கூட அவருக்கு எந்த பலனும் கிடைக்காது” என்று ஸ்டூவர்ட் பிலிப்ஸ் திட்டவட்டமாக கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
நேரம், வகை
தசைகளை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் புரதத்தை எந்த நேரம் மற்றும் வகையில் எடுத்துக் கொள்வது என்பது தொடர்பான விவாதமும் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருப்பதாக பிலிப்ஸ் குறிப்பிடுகிறார்.
அதாவது உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கு முன் அல்லது தசைகள் குணமடைய தொடங்கும்போது இவற்றில் எப்போது புரோட்டீன் பவுடரை எடுத்துக் கொள்வது சிறந்தது என்ற விவாதம் பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இதேபோன்று மோர் வகை புரதப் பொருட்களை எடுத்துக் கொள்வது சிறந்ததா அல்லகு சோயா, பருப்பு என தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதப் பொருட்களை உட்கொள்வது நல்லதா என்பது குறித்த விவாதமும் நடைபெற்று வருகிறது.
ஆனால், 2018 இல் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின்படி, புரதத்தை உட்கொள்ளும் நேரமோ, அதன் வகையோ முக்கியமில்லை என்பதே ஒட்டுமொத்த முடிவாகும் என்கிறார் ஸ்டூவர்ட் பிலிப்ஸ்.
கூடும் பிளட் சுகர்
அதேபோன்று, உடல்நலத்துக்காக புரோட்டீன் பவுடர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் ஒருவர், அதனால் அவரின் உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்துகி்ன்றனர்.
புரோட்டீன் பவுடரின் சுவையை கூட்ட, அதில் சர்க்கரை மற்றும் சில சுவையூட்டும் வைட்டமின்கள் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு சேர்க்கப்படும் சர்க்கரையால், மனிதனின் ரத்த சர்க்கரை அளவும், உடன் பருமனும் கூடும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் அவர்கள்.
ஜிம்மில் மாரடைப்பு
உடற்பயிற்சி கூடங்களில் இளைஞர்களுக்கு திடீரென ஏற்படும் மாரடைப்புக்கு, அவர்கள் எடுத்துக் கொள்ளும் புரோட்டீன் பவுடர் காரணமாக இருக்கலாம் என்பது போன்ற கருத்துகளை ஆன்லைனில் தற்போது காண முடிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில், ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கும் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், அவருக்கு ஏதேனும் இதய பிரச்னைகள் இருந்து வந்ததா என்பதை அறிய வேண்டும் என்கின்றனர் அவர்கள்.
எலிகளுக்கு சோதனை
இதுகுறித்து, எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் 2020 இல், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசனின் “நேச்சர் மெட்டாலிசம்” இதழில் வெளியிடப்பட்டிருந்தன.
அதில், “ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு அளிக்கப்பட்டது. அத்துடன் அவற்றின் தமனியில் (இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்) திசுக்கள் (Plaque) உருவாக அவை தூண்டப்பட்டன.
பாதி எலிகளுக்கு மற்றவற்றைவிட, மூன்று மடங்கு அதிகமாக புரதம் கொடுக்கப்பட்டது.
அதிக கொழுப்பு, அதிக புரதம் கொடுக்கப்பட்ட எலிகளின் உடல் எடை அதிகம் கூடவில்லை. ஆனால், அவற்றின் தமனியில், பிளேக் எனும் திசுக்களின் வளர்ச்சி 30% அதிகரித்திருந்தது” அந்த ஆய்வில் தெரிய வந்தது.

பட மூலாதாரம், Getty Images
சிறுநீரகத்துக்கு பாதிப்பு?
அதிக கொழுப்பு சத்துள்ள உணவை உட்கொள்ளும் எலிகளுக்கு அதிக புரத சத்தை அளிப்பதால் ஏற்படும் பாதிப்பை, புரதச்சத்து பானத்தை அருந்திவிட்டு, உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லும் நபருக்கு ஏற்படும் பாதிப்புடன் ஒப்பிடுவது மிகவும் கடினமான விஷயம்.
ஆனால், நம் அன்றாடம் புரதச்சத்து அதிகம் கொண்ட உணவு வகைகளை எடுத்துக் கொள்வதால், இதயம், சிறுநீரகம் அல்லது வேறு உறுப்புகளுக்கு நாளடைவில் எந்தவிதமான பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து தங்களுக்கு தெரியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
புரதச்சத்தால் தசை வளர்ச்சி மட்டுமின்றி வேறு சில ஆதாயங்களும் இருப்பதாகவும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், புரோட்டீன் பவுடர் உட்கொண்ட நபர்களின் உடல் எடையும் கூட குறையும்; அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்புச் சத்து அதிகரிக்கும் என்பதற்கும் ஆய்வு சான்றுகள் இருக்கின்றன என்கின்றனர் வல்லுநர்கள்.
ஆனால் இந்த ஆய்வுகள் உடல்பருமன் அதிகம் கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்டவை என்பதால், சரியான உடல் பருமன் உள்ள நபர்களுக்கு இந்த ஆய்வு முடிவுகள் பொருந்துமா என்று தங்களுக்கு தெரியாது என்கின்றனர் அவர்கள்.
குறையும் ரத்த அழுத்தம்
புரதம் நிறைந்த கூடுதல் மோரை உட்கொள்வது, சற்று அதிகமாகும் ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்று ரீடிங் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
இதேபோன்று மோர் அல்லது சோயா பவுடரை உட்கொள்வதால், நம் உடம்பில் ஏற்படும் அழற்சி குறைகிறது என்று மற்றொரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உணவே மருந்து
முதுமையில் மனிதனின் தசைகள் பலவீனம் அடைவதால், அவனது கை. கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. புரோட்டீன் பவுடரை கொண்டு இதனை தடுக்க வழி உள்ளதா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.
முறையான உடற்பயிற்சிகளுடன் எடுத்துக் கொள்ளப்படும் புரோட்டீன் பவுடர்கள், தசை வளர்ச்சிக்கு பயன்படுகின்றன என்பதை தாண்டி, இதனால் மனித உடலுக்கு ஆரோக்கிய நம்மைகள் உள்ளனவா என்பதை அறிய, நீண்டகால இடைவெளியில் நிறைய சோதனைகள், ஆய்வுகள் தேவை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
புரதச்சத்தை பெறுவதற்கு, புரோட்டீன் பவுடர்கள் போன்றவற்றை சார்ந்து இருக்காமல், நாம் உட்கொள்ளும் உணவில் இருந்தே அதனை பெறுவதே தற்போதைக்கு சிறந்த வழிமுறை என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












