டைட்டானிக் மூழ்கிய மர்மத்தை அறிய தற்போது வெளியாகியுள்ள படங்கள் உதவுமா?

டைட்டானிக் கப்பல்

பட மூலாதாரம், ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் கப்பலின் முகப்புப் பகுதி தெளிவாகத் தெரிகிறது
    • எழுதியவர், ரெபெக்கா மோரெல் மற்றும் அலிசான் ஃப்ரான்சிஸ்
    • பதவி, பிபிசி பருவநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர்கள்

கடலில் மூழ்கி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய டைட்டானிக் கப்பல் குறித்து இதுவரை வெளியில் வராத அளவில் முழுமையான படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அட்லான்டிக் கடலில் 3,800 மீட்டர் (12,500 அடி) ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை முழு அளவில் படம் பிடித்துக் காட்ட ஆழ்கடல் வரைபட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக வெளியாகியுள்ள இந்த முப்பரிமாண காட்சிகள், கடல் தண்ணீரை அகற்றி விட்டு கப்பலை மட்டும் படம் பிடித்ததைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றன.

1912ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த விவரங்கள் இக்காட்சிகளின் மூலம் ஓரளவுக்கு நன்றாகத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சௌதாம்டனிலிருந்து நியூ யார்க் நகருக்கு தனது கன்னிப் பயணத்தைத் தொடங்கிய இக்கப்பல் கடலில் மூழ்கிய போது 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

"டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து பல அடிப்படைக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை," என இக்கப்பல் குறித்து ஆய்வு நடத்திவரும் பார்க்ஸ் ஸ்டீபென்சன் பிபிசியிடம் பேசிய போது தெரிவித்தார்.

மேலும் அவர், "டைட்டானிக் கப்பல் விபத்து குறித்த சந்தேகங்களுக்கு வெறும் யூகங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வு நடத்துவதை விட, இந்த காட்சிகளை வைத்துக் கொண்டு, சான்றுகளின் அடிப்படையில் பல ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்," எனத்தெரிவித்தார்.

ஆழ்கடலில் மூழ்கிக் கிடந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1985-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின், அது குறித்து பெரிய அளவில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் கடலின் மிக ஆழமான, இருள் சூழ்ந்த பகுதியில் இருக்கும் கப்பலின் சுமாரான படங்களை மட்டுமே கேமராக்கள் மூலம் காட்சிப்படுத்த முடியும். கப்பல் முழுவதையும் எப்போதும் படம் பிடித்துக் காட்ட முடியாது.

ஆனால் தற்போது ஆழ்கடல் வரைகலை தொழில்நுட்பம் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்கள், டைட்டானிக் கப்பலை முழுமையாக காட்டியுள்ளன. அது இரண்டு பிரிவுகளாக உடைந்து கிடக்கிறது.

கப்பலின் முகப்பு ஒரு இடத்திலும் அதன் கீழ் பகுதி மற்றொரு இடத்திலும் கிடக்கிறது. இவை இரண்டுக்கும் இடையில் சுமார் 800 மீட்டர் (2,600 அடி) தொலைவு உள்ளது. கப்பலின் உடைந்த மேலும் பல பகுதிகள் அப்பகுதியில் குவிந்துகிடக்கின்றன.

இக்காட்சிகளை படமாக்கும் பணிகளை ஆழ்கடல் வரைகலை தொழில்நுட்ப நிறுவனமான மேகெல்லன் லிமிடெட்டும், அட்லாண்டிக் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் மேற்கொண்டன.

டைட்டானிக் கப்பல்

பட மூலாதாரம், ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு, நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் 7,00,000-த்துக்கும் மேற்பட்ட படங்கள் எடுத்து தற்போதைய படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கப்பலில் இருந்த ஒரு குழுவினர், தொலைவிலிருந்து இயக்கக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் 200 மணிநேரத்தைப் பயன்படுத்தி டைட்டானிக் கப்பலின் நீளம் மற்றும் அகலத்தைக் கண்டுபிடித்தனர்.

இந்த குழுவினர் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் 7,00,000-த்திற்கும் மேற்பட்ட படங்களை எடுத்து, அவற்றைக் கொண்டு முப்பரிமாண காட்சிகளை தயாரித்துள்ளனர்.

டைட்டானிக் கப்பல்

பட மூலாதாரம், ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு, கப்பலின் மேல்தளத்தின் வலது புறத்தில் உள்ள மிகப்பெரிய துளையில் தான் படிக்கட்டுகள் இருந்துள்ளன

டைட்டானிக் கப்பலை இப்படி படமெடுக்கும் செயலை வடிவமைத்த, மேகெல்லன் நிறுவனத்தைச் சேர்ந்த ஜெரார்ட் சீஃபெர்ட், தமது வாழ்நாளில் இதுவரை இவ்வளவு ஆழத்தில் கடலுக்குள் சென்று படம் பிடிக்கும் செயலில் ஈடுபட்டதில்லை என்றார்.

"அதன் ஆழம், அநேகமாக 4,000 மீட்டர் என்பது ஒரு சவாலைத் தரும் ஆழமாகவே இருந்த நிலையில், ஆழ்கடலில் நீர்ச்சுழல்களும் இருந்தன. மேலும், கப்பலின் உடைந்த பாகங்கள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில் அவற்றைத் தொடுவதற்குக் கூட எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை," என அவர் விளக்கினார்.

டைட்டானிக் கப்பல்

பட மூலாதாரம், ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு, கப்பலின் முகப்பு பகுதியிலிருந்து பிரிந்து கிடக்கும் அடிப்பகுதி உறுதியான உலோகத்தால் உருவாக்கப்பட்டது

"மேலும், அந்த கப்பலின் ஒவ்வொரு அங்குலத்தையும் காட்சிப்படுத்தவேண்டும் என்பது மற்றொரு சவாலாக இருந்தது. ஆழ்கடலுக்குள் சிதறிக்கிடந்த பாகங்களையும், அவை நமக்கு முக்கியமில்லாத பாகங்களாக இருந்தாலும், அவற்றையும் படமாக்கினால் தான் தற்போது கிடைத்துள்ள காட்சிகளை போல் மிக சரியான தோற்றத்தை உருவாக்க முடியும்."

இக்காட்சிகளில் கப்பலின் முழு அளவும், உடைந்த பாகங்களில் இருந்த வரிசை எண்ணைப் போல சில நுணுக்கமான தகவல்களும் நமக்கு கிடைத்திருக்கின்றன.

டைட்டானிக் கப்பல்

பட மூலாதாரம், ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு, கப்பலின் அடிப்பகுதி கடலின் நிலப்பரப்பில் மோதி மண்ணில் புதைந்துள்ளது

கப்பலின் முகப்பு பகுதி, அதில் படிந்திருந்த துரு போன்ற பல்வேறு பொருட்களையும் கடந்து 100 வருடங்களுக்குப் பின்னும் எளிதில் அடையாளம் தெரியுமளவுக்கு இருந்தது ஆச்சரியமளிப்பதாகவே இருந்தது. கப்பலின் மேற்புறத்தில் இருந்த தளத்தில் உள்ள மிகப்பெரிய துளை, அங்கே நீண்ட படிக்கட்டுகள் இருந்திருக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறது.

பல்வேறு உலோக கலவையால் செய்யப்பட்ட கப்பலின் பின்பகுதி ஆழ்கடலின் நிலப்பரப்பில் மண்ணுக்குள் புதைந்து கிடந்தது.

கப்பலின் அலங்கரிக்கப்பட்ட சட்டம், சிறிய சிலைகள், பல்வேறு பானங்களுடன் கூடிய திறக்கப்படாத புட்டிகள் என ஏராளமான பொருட்கள் சிதறிக்கிடந்தன. அவற்றில் ஏராளமான காலணிகளும் ஆங்காங்கே தென்பட்டன.

டைட்டானிக் கப்பல்

பட மூலாதாரம், ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு, உடைந்த கப்பலின் தோற்றம் மிகச்சரியாகத் தெரிகிறது
டைட்டானிக் கப்பல்

பட மூலாதாரம், ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு, கப்பலை உந்தித் தள்ளும் பாகத்தின் வரி எண் கூட தெளிவாக தெரியும் காட்சி

டைட்டானிக் குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்துவரும் பார்க் ஸ்டீஃபென்சன், தற்போது வெளியாகியுள்ள காட்சிகளை முதன்முதலில் பார்த்த போது பெரிய அளவில் பிரமிப்படைந்ததாக தெரிவித்தார்.

"நீர்மூழ்கிக் கப்பல்களில் சென்று பார்க்க முடியாத அளவுக்கு இக்காட்சிகளின் மூலம் டைட்டானிக் கப்பலை உங்களால் பார்க்க முடியும். உடைந்த பாகங்கள் அனைத்தையும் உங்களால் பார்க்க முடியும். உடைந்த கப்பலின் உண்மையான நிலையை இந்த படங்கள் தான் காட்டுகின்றன."

இந்த படங்களை ஆய்வு செய்வதன் மூலம், 1912-ம் ஆண்டில் விதியால் வீழ்த்தப்பட்ட அந்த இரவில் டைட்டானிக் கப்பலுக்கு உண்மையில் என்ன நேர்ந்தது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என அவர் கூறினார்.

"பனிப்பாறையின் மீது மோதி டைட்டானிக் கப்பல் மூழ்கியது தொடர்பான விவரங்களை நாங்கள் இதுவரை சரியாக புரிந்துகொள்ளக்கூட முடியவில்லை. திரைப்படங்களில் காட்டப்பட்டுள்ளது போல, கப்பலின் வலது பக்கம் தான் மோதியதா அல்லது வேறு எப்படி டைட்டானிக் கப்பல் தண்ணீரில் மூழ்கியது என்பது பற்றிய முழுமையான தகவல்கள் எங்களுக்குத் தெரியாது," என்றார் அவர்.

தற்போதைய படங்களில் பதிவாகியிருக்கும் கப்பலின் கீழ் பகுதியை ஆய்வு செய்யும் போது, அது கடலின் நிலப்பரப்பில் எப்படி மோதியது என்பது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.

டைட்டானிக் கப்பல்

பட மூலாதாரம், ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு, தற்போது வெளியாகியிருக்கும் முப்பரிமாணக் காட்சிகள், டைட்டானிக் கப்பல் கடலில் எப்படி மூழ்கியது என்பது குறித்து மேலும் பல விவரங்களை அளிக்கும்

கடல் இயல்பாகவே டைட்டானிக் கப்பலை மெதுவாக அழித்து வருகிறது. ஏராளமான நுண்ணுயிர்கள் கப்பலை அரித்துக்கொண்டுள்ளன. சில பாகங்கள் உருக்குலைந்து, தமது உருவங்களை இழந்து வருகின்றன. டைட்டானிக் விபத்து குறித்து முழுமையாக அறிந்து கொள்வதில் இனிமேலும் காலம் தாமதிக்கக்கூடாது என்பதை வரலாற்று அறிஞர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.

தற்போது புதிதாக வெளியாகியுள்ள படங்கள், சரியான நேரத்தில் கப்பலின் தோற்றத்தை காட்சிப்படுத்தியுள்ளன. எந்த ஒரு சிறிய விவரத்தையும் இந்த படங்களில் இருந்து நிபுணர்கள் பெற முடியும். டைட்டானிக் குறித்து இன்னும் வெளிவராத பல விவரங்கள் வெளியாகும் என்பதே அனைவரது நம்பிக்கையாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: