"என் மகளை கருணைக்கொலை செய்ய சொன்னார்கள்" - சிறப்பு குழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்க்கும் ஒரு தாயின் கதை

- எழுதியவர், ஹேமா ராகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
"நான் 2 முறை தற்கொலைக்கு முயன்றேன். என் குழந்தையை கருணை கொலை செய்து விடுமாறு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். அழுது அழுதே என் வாழ்க்கை தீர்ந்து விடுமோ என பயந்திருக்கிறேன்.
விவாகரத்து ஆன வலியும், என் குழந்தை குறித்து மற்றவர்களின் புரிதலும் மனச்சோர்வை அதிகரித்த காலத்தில், என்னிடம் துணையிருந்தது என் நம்பிக்கை மட்டுமே.
அந்த நம்பிக்கை மட்டுமே என் வாழ்வில் சிறு வெளிச்சத்தை தந்தது. அந்த சிறு நம்பிக்கை வாழ்வதற்கான உந்துதலை அளித்தது. அந்த நம்பிக்கை மட்டுமே இன்று எனக்கு முழு துணையாக இருக்கிறது," என கண்களில் நம்பிக்கையோடு தெளிவாக பேசுகிறார் பார்கவி.
சென்னையை சேர்ந்தவர் பார்கவி. ஆன்லைனில் நகை விற்பனை செய்யும் தொழில்முனைவோராக இருக்கிறார். பார்கவிக்கு 14 வயதில் ஒரு பெண் குழந்தை. பெயர் லாமியா.
லட்டு என செல்லமாக அழைக்கிறார்கள். சிறப்பு குழந்தையாக அறியப்படும் லட்டு, பிறக்கும் போதே பேசும் திறனையும், கேட்கும் திறனையும் இழந்திருக்கிறார்.
தாயின் வயிற்றில் இருக்கும்போதே தலையில் நீர் கோர்த்து இருந்ததால் பிறக்கும் போதே தலை பெரிதாக இருந்தது.
மருத்துவரீதியாக இன்னும் பல பிரச்னைகள் இருந்ததால் இந்த குழந்தையை கருணை கொலை செய்து விடுமாறு உடன் இருந்தவர்கள் வலியுறுத்த அதை முற்றிலும் மறுத்திருக்கிறார் பார்கவி.
கடவுள் இந்த குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை எனக்கு கொடுத்திருக்கிறார். அதை பார்த்துக் கொள்வது என கடமை என்று கூறி இன்று தன் பெண்தான் தன்னுடைய முழு உலகம் என மகிழ்ச்சியாக வாழ்க்கையை கடத்துகிறார் பார்கவி.
"நான் சமையல் கலை நிபுணராக படித்து முடித்து வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு 2007 ஆம் வருடம் 28 வயதில் திருமணம் ஆனது. 2009 ஆம் வருடத்தில் எனக்கு லட்டு பிறந்தாள்.
அவள் வயிற்றில் இருக்கும் போது நாங்கள் 5 வது மாதத்தில் எடுக்க வேண்டிய ஸ்கேன் எடுக்கவில்லை. எங்களுக்கு யாரும் அதை வலியுறுத்தவில்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டோம். அதனால் அவளுக்கு தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலை பெரிதான பிரச்சனை குறித்து எங்களுக்கு முன்பே தெரியாமல் போய் விட்டது.
அவள் பிறக்கும் போது தலை பெரிதாக இருந்ததால் சிசேரியன் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்த, அதன் பிறகு தான் அவளுக்கு தலையில் இப்படி குறையாடு இருந்தது தெரிய வந்தது.
அவள் பிறந்த 15 நிமிடங்களுக்கு அழவும் இல்லை. எந்த சத்தமும் போடவில்லை. அதன் பிறகு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு மேலும் மருத்துவ ரீதியிலான பிரச்சனைகள் இருப்பதாக சொன்னார்கள்.

கணவர் கைவிட்டு சென்றார்
'என் குழந்தை நீண்ட நாட்கள் உயிர் வாழாது என சொன்னார்கள். ஒரு தாயாக எனக்கு பிரசவத்தில் ஏற்பட்ட வலியை விடவும் அவர்களின் வார்த்தைகள் அதிக வலியை கொடுத்தது' என சொல்லும் போது கண்கள் கொஞ்சம் ஈரமாகி போனது.
திருமண வாழ்வில் ஒரு பெண்ணிற்கு பிரச்சனை ஏற்பட்டால் அவளுடைய கணவனும், கணவரின் வீட்டாரும் தான் பக்கபலமாக இருக்க வேண்டும். ஆனால் பார்கவிக்கு இப்படி பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் கணவர் வீட்டிலும் பிரச்சனை தொடங்கி இருக்கிறது.
அதிலும் உடன் இருந்த சில நண்பர்களும் உறவினர்களும், இந்த குழந்தையை கருணை கொலை செய்து விடுமாறு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.ஆனால் ஒரு போதும் பார்கவி கருணைக்கொலைக்கு சம்மதிக்கவில்லை. சில கசப்பான அனுபவங்களுக்கு பிறகு அவருடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் போய் முடிந்திருக்கிறது.
"லாமியா இப்படி பிறந்த பிறகு என் திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. இந்த உலகில் நான் இத்தனை கஷ்டங்களை அனுபவித்து கொண்டு வாழ வேண்டுமா என்ற எண்ணம் எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது.
ஏனென்றால் நான் கல்லூரி காலம் தொட்டே மிகவும் மகிழ்வான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பியவள். ஆனால் அது நடக்காமல் போய், எனக்கு மட்டும் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டுருப்பதாக எண்ணினேன்.
இனி எதற்காக நான் வாழ வேண்டும் என நினைத்து 2 முறை தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் நான் காப்பாற்றப்பட்டேன். இப்போது நினைத்தால் அது விளையாட்டாக தோன்றுகிறது.
நான் அப்படி செய்திருக்க கூடாது என்று தோன்றுகிறது. ஆனால் இன்று எனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. என் குழந்தைக்கு என்னால் முழு ஆதரவாக இருக்க முடிகிறது," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பார்கவி.
14 வயதானாலும் மனதளவில் ஒன்றரை வயது குழந்தைதான்
பார்கவி தன்னுடைய பெண்ணை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே முழு நேர வேலைக்கு செல்லவில்லை. அவர் இப்போது ஆன்லைனில் நகைகள் விற்பனை செய்யும் தொழில் முனைவோராக செயல்படுகிறார்.
லட்டுவிற்கு காலை எழுவது முதல் இரவு உறங்குவது வரை யாராவது உதவி தேவைப்படுகிறது. அது போல அவர் தினமும் 3 மணி நேரம் சிறப்பு பள்ளி வகுப்புகளுக்கு செல்கிறார். அங்கு பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி என பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் குழந்தைக்கு அளிக்கப்படுகிறது.
"லட்டுவிற்கு 14 வயது ஆனாலும் அவர் மனதளவில் இன்னும் ஒன்றரை வயது குழந்தையின் வளர்ச்சியில் தான் இருக்கிறார். கடந்த வருடம் தான் அவர் பருவம் எய்தியிருக்கிறார்.
என் குழந்தைக்கு நேரத்திற்கு சாப்பாடு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது, கதைகள் சொல்வது என அனைத்தையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன்.
3 நாட்களுக்கு ஒரு முறை தான் அவள் அதிக நேரம் தூங்குவாள். சில நாட்களில் 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே அவள் தூங்குவாள். நானும் அவளோடு சேர்ந்தே விழித்திருப்பேன்," என்றார்.
தன் பெற்றோர் தனக்கு பெரும் உதவியாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடும் அவர், "அவர்கள் தான் அப்போதில் இருந்து இப்போது வரை எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள்.
நான் சில சமயங்களில் மனம் சோர்ந்தாலும் எல்லா நேரங்களிலும் எனக்கு தன்னம்பிக்கை ஊட்டுவது அவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதேபோல் இந்த நேரத்தில் என்னுடைய குடும்ப நண்பர் சங்கீதா சுந்தரம் அவர்களையும் நான் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
ஏன் என்றால் எனக்கு வாழ்க்கையில் சற்று பிடிப்பு ஏற்படுவதற்கும், என்னுடைய பிரச்சனைகளை நான் உறுதியோடு கடந்து வருவதற்கும், என் வாழ்க்கை பயணத்தில் சில தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கும் துணை நின்றிருக்கிறார்.
இவர்கள் இருவரும் இல்லை என்றால் நான் இவ்வளவு தூரம் நம்பிக்கையோடு பயணிப்பேன் என்ற எண்ணம் எனக்கு வந்திருக்காது" என கூறுகிறார் பார்கவி.

"வாழ்வின் அனைத்து கடினங்களையும் கடந்துவிட்டேன்"
பார்கவி தன்னுடைய பெண் குழந்தையை பார்த்துக் கொள்வதில் மிகக் கவனமாக செயல்படுகிறார். காரணம் என்ன தெரியுமா? லட்டுவிற்கு தினமும் 4 முறை வலிப்பு வரும்.
அப்போது தலையில் கனம் கூடியது போல் இருப்பதால் அவர் தானாவே சுவரில் போய் முட்டிக்கொள்வார். முடியை பிடுங்கிக் கொள்வார். வலி அதிகமானால் தரையில் படுத்து புரண்டு அழுவார்.
அதனால் பார்கவி தினமும் 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார். இந்த பிரச்சனைக்கு முழுவதுமாக தீர்வு இல்லாததால் இதை தினமும் அவர் சமாளித்தாக வேண்டும்.
"நான் வாழ்நாளுக்குமான அழுகையை சில ஆண்டுகளிலேயே அழுது முடித்தவள்... ஆனால் இப்போதெல்லாம் கண்ணீர் சுரப்பது நின்றுவிட்டதோ என்று தோன்றுகிறது. வாழ்வின் அனைத்து கடின நிலைகளையும் நான் கடந்து விட்டதாகவே உணர்கிறேன்.
என் மகளுக்கு நினைவு இல்லை என்றாலும் கடந்த பல ஆண்டுகளாக கொடுத்து வரும் பயிற்சியின் மூலம் சில வார்த்தைகளை புரிந்து கொள்கிறாள். பல கேள்விகளை புரிந்து கொண்டு, சத்தம் மூலமும், செய்கை மூலமும் அவ்வப்போது பதிலும் சொல்வாள். அப்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். "
"லட்டு சிறப்பு குழந்தையாக இருந்தாலும் அவர் பெரிதாக தொந்தரவு செய்யமாட்டார். விதவிதமான வெளிச்சங்கள், சத்தங்கள், பொம்மைகள் அவருக்கு மிகவும் பிடிக்கும்.
சாலைகளில் அவரை வீல் சேரில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டே சுற்றி இருக்கும் சூழல் குறித்தும், மனிதர்கள் குறித்தும் கதைகள் சொல்லிக் கொண்டே போகும் போது அவளின் பார்வை விரிவடையும்.
இந்தக் கதைகள் அவளுக்கும் எனக்கும் என்றைக்கும் சலிப்பை ஏற்படுத்தியதில்லை," என்று புன்னகைக்கிறார் பார்கவி.
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே அளவுகோலை வைப்பதில்லை. அவரவருக்கு என்ன இருக்கிறதோ அதை எதிர் கொண்டு மகிழ்வான வாழ்வை வாழ்வதே நிறைவான வாழ்க்கை என்பதை உணர்த்துகிறது பார்கவியின் கதை
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












