"தலித்துகளிடம் பேசவே மாட்டோம், செருப்புகூட அணிய மாட்டோம்" - திருப்பதி அருகே இப்படியும் ஒரு கிராமம்

ஆந்திரா வேமனா இண்டுலு கிராமம்

பட மூலாதாரம், BBC/TULASI PRASAD REDDY

    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி நங்கா
    • பதவி, பிபிசிக்காக

இந்தக் காலத்திலும் இப்படிபட்ட கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

இந்த கிராமத்தில் யாரும் செருப்பு அணிவது இல்லை. கலெக்டரே வந்தாலும், கிராமத்திற்கு வெளியே செருப்பை கழற்றி வைத்துவிட்டு, வெறும் காலில் வரும்படி அவரிடம் அறிவுறுத்தப்படுகிறது. திருப்பதியில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள பாகல மண்டலத்துக்கு உட்பட்ட உப்பரப்பள்ளி பஞ்சாயத்தைச் சேர்ந்த வேமனா இண்டுலு கிராமத்தின் நிலைதான் இது.

தங்களது தாத்தா- பாட்டி ஆகியோர் பின்பற்றிவந்த இந்தப் பழக்க வழக்கங்களை தாங்கள் மதிப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். கிராமத்தில் மட்டுமல்ல, கிராமத்தை விட்டு எவ்வளவு தூரம் பயணித்தாலும் வேமனா இண்டுலு கிராம மக்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை.

இந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களை பாலவேக்கரி சாதியைச் சேர்ந்தவர் என்றும் துறைமார்கள் என்றும் கூறிக் கொள்கின்றனர். அவை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலின் கீழ் வருகின்றன. இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் சொந்த சாதியினருடன் மட்டுமே பழகுகிறார்கள்.

இந்த கிராம மக்கள் வெங்கடேஸ்வர ஸ்வாமியை வணங்குகின்றனர். இதேபோல், லட்சுமி நரசிம்ம ஸ்வாமி, கங்கம்மா ஆகிய தெய்வங்களையும் அவர்கள் வழிபடுகின்றனர். வெங்கடேச பெருமாளின் மீதுள்ள பக்தியின் காரணமாக செருப்பு அணிவதை நிறுத்திவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

ஆந்திரா வேமனா இண்டுலு கிராமம்

பட மூலாதாரம், BBC/TULASI PRASAD REDDY

செருப்பை கிராமத்துக்கு வெளியே கழற்றி வைத்துவிட்டு வந்தாலும், கிராமத்திற்குள் எல்லோரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை.

பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் கல்லூரி செல்பவர்கள் வரை வெறுங்காலுடன்தான் செல்கின்றனர் என பிபிசியிடம் தெரிவித்தார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த எர்ரப்பா.

“என் மகனும் டிகிரி வரை படிச்சிருக்கார். செருப்பு அணியும்படி கல்லூரியின் முதல்வர்கூட கூறினார். அதற்குப் பின்னர் என் மகன் பெங்களூருவில் சில காலம் வேலை செய்து வந்தார். அப்போதும் அவர் செருப்பு அணியவில்லை.

அதுவும் நாங்க பாலவேக்கரி சாதியைச் சேர்ந்தவர்கள். நாங்கள் வேங்கடேஸ்வர ஸ்வாமியை வணங்குகிறோம். லட்சுமி நரசிம்ம ஸ்வாமி, கங்கம்மா ஆகியோரும் இங்குதான் இருக்கிறார்கள், நாங்கள் அவர்களையும் வணங்குகிறோம்.

வெளியே சென்றால் குளித்துவிட்டுதான் வீட்டுக்குள் வரவேண்டும் என்பதை பள்ளி, கல்லூரிகளில்கூட சொல்லித் தரமாட்டார்கள். ஆனால், நாங்கள் எங்கள் குலம் தோன்றியதில் இருந்து இந்தப் பழக்கத்தை பின்பற்றி வருகிறோம்," என்றார் எர்ரப்பா.

ஆந்திரா வேமனா இண்டுலு கிராமம்

பட மூலாதாரம், BBC/TULASI PRASAD REDDY

படக்குறிப்பு, எர்ரப்பா

வெளி ஆட்கள் தங்களைத் தொடுவதற்கு அனுமதி இல்லை

வெளி ஆட்கள் தங்களைத் தொடுவதற்கு இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அனுமதிப்பதில்லை. எதாவது வேலை விஷயமாக வெளி ஊர்களுக்குச் சென்றால்கூட, எத்தனை நாட்கள் ஆனாலும், வெளி உணவுகளை அவர்கள் உண்பதில்லை.

`கிராமத்தை விட்டு வெளியே சென்றால் எங்கும் சாப்பிடுவதில்லை, தண்ணிகூட குடிப்பதில்லை` என்று எர்ரப்பா கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ` நீங்கள் என்னைத் தொட்டால்கூட, நான் குளித்துவிட்டு, உடைகளை மாற்றிய பின்னரே வீட்டுக்குள் செல்வேன். நீதிமன்ற வேலையாக ஒருமுறை ஹைதராபாத்துக்கு சென்றபோதுகூட வெளியே எதுவும் சாப்பிடவில்லை. ஊர் திரும்பியதும் குளித்துவிட்டே சாப்பிட்டேன்` என்றார்

வெங்கடேஸ்வர பெருமாளின் தீவிர பக்தர்களாக இருந்தபோதிலும், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அருகில் இருக்கும் திருப்பதி கோவிலுக்குச் சென்றதில்லை.

வேமனா இண்டுலு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்குச் செல்வதில்லை. அதற்கு பதிலாக கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் வழிபாடு செய்கின்றனர். கிராமத்தைச் சேர்ந்த யாரும் கொரோனா தடுப்பு ஊசியைக்கூட போட்டுக்கொள்ளவில்லை.

"பாம்பு கடித்தால்கூட கடவுள் எங்களை காப்பாற்றுவார் என்பது எங்களின் நம்பிக்கை. பாம்பு கடித்தால் மருத்துவமனைக்கு போவதற்கு பதிலாக இங்குள்ள பாம்பு புற்றை சுற்றி வந்து வழிபட்டால், எங்களுக்கு குணமாகிவிடும்," என்று எர்ரப்பா கூறினார்.

ஆந்திரா வேமனா இண்டுலு கிராமம்

பட மூலாதாரம், BBC/TULASI PRASAD REDDY

இந்தக் கிராமத்தில் உள்ள குடும்பத்தினர் தினமும் வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.

ஒரே ஒரு குடும்பத்தோடு உருவானதாகக் கருதப்படும் இந்த கிராமத்தில் தற்போது 25 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 80 பேர் உள்ளனர். இவர்களில் 52 பேருக்கு வாக்குரிமை உள்ளது.

மொத்த மக்கள் தொகையில் ஒருவரோ, இரண்டு பேரோ தான் பட்டப்படிப்பு வரை படித்துள்ளனர். படித்தவர்கள்கூட வெளியில் சென்று வேலை செய்வதற்கு மாற்றாக கிராமத்திலேயே விவசாயம் செய்து வருகின்றனர்.

கிராமத்தில் உள்ள சின்னஞ்சிறு குழந்தைகள்கூட கிராம பழக்க வழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். அவர்கள்கூட செருப்பு அணிவதில்லை. பள்ளிகளில் வழங்கும் உணவுகளை அவர்கள் சாப்பிடுவது இல்லை. வெளி ஆட்களைத் தொட்டுவிட்டால், குளித்த பின்னரே அவர்கள் வீட்டுக்குள் நுழைய முடியும்.

ஆந்திரா வேமனா இண்டுலு கிராமம்

பட மூலாதாரம், BBC/TULASI PRASAD REDDY

படக்குறிப்பு, பவித்ரா

பக்கத்து கிராமத்தினர் என்ன நினைக்கின்றனர்?

சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தங்களின் காலணிகளை கழற்றிவைத்துவிட்டே இந்த கிராமத்திற்குச் செல்கின்றனர். தங்கள் வீடு வரைக்கும் அவர்களை அனுமதிக்கும் கிராமத்தினர், வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.

பக்கத்து கிராமமான மல்லேல செருவுப்பல்லே-வை சேர்ந்த பவித்ரா பிபிசியிடம் பேசுகையில், வேமனா கிராமத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு எதாவது வேலையாகச் சென்றால்கூட, அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் தருவதில்லை என்றார்.

`நீங்கள் ஏதாவது வேலை விஷயமாகச் சென்றால்கூட, அவர்களின் வீட்டுக்கு வெளியே இருந்தபடியே அவர்களிடம் பேச வேண்டும்.

வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளாக இந்தப் பழக்கத்தை அவர்கள் பின்பற்றி வருகின்றனர். மகப்பேறு காலத்தில்கூட அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மாட்டார்கள்` என்று பவித்ரா கூறினார்.

தலித் மக்கள் இந்தக் கிராமத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களிடம் பேசவும் கிராம மக்கள் விரும்புவதில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்களை கிராமத்திற்கு வெளியே தங்க வைக்கும் சடங்கும் இங்கு பின்பற்றப்படுகிறது.

ஆந்திரா வேமனா இண்டுலு கிராமம்

பட மூலாதாரம், BBC/TULASI PRASAD REDDY

இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனி ரேஷன் வழங்கப்படுவதாக ரேஷன் பொருட்களை வழங்கி வரும் பாபு ரெட்டி கூறுகிறார்.

`4 ஆண்டுகளாக ரேஷன் முகவராக இருக்கிறேன். எம்.எல்.ஏ ஆக இருந்தால்கூட செருப்பைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் கிராமத்திற்குள் வர முடியும்.

பிற சமுதாயத்தினர் இந்த கிராமத்திற்குள் வரலாம். ஆனால், தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களைத் தொடுவது இல்லை. சொல்லப்போனால், அவர்களிடம் பேசக்கூட மாட்டார்கள்.

வேமனா இண்டுலு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்தால்கூட எங்களின் வீட்டுக்குள் வர மாட்டார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் வசிப்பதற்காக அறை ஒன்றைக் கட்டியுள்ளனர். மாதவிடாய் நாட்களில் அந்த அறையில்தான் பெண்கள் தங்குவார்கள்` என்று பாபு ரெட்டி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் கூறுவது என்ன?

பக்கத்து கிராமத்தில் இருந்து தனது அக்காவை பார்க்க வந்திருந்த மகேஷ் என்பவர் பிபிசியிடம் பேசுகையில், இந்த கிராமத்திற்குள் வரும் உறவினர்களும் அவர்களின் பழக்க வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் பண்டைய கால பழக்க வழக்கத்தை கிராம மக்கள் தற்போதும் பின்பற்றி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

` என் அக்காவை பார்க்க வரும்போது, கிராமத்திற்கு வெளியே என் செருப்பைக் கழற்றி முட்புதர்களுக்குள் ஒளித்து வைத்துவிடுவேன். இங்குள்ளவர்கள் வித்தியாசமான முறையைப் பின்பற்றுகின்றனர். இந்த கிராமத்திற்கு வரும்போது நாமும் அதை பின்பற்றித்தான் ஆக வேண்டும்` என்று மகேஷ் தெரிவித்தார்.

வேமனா இண்டுலு கிராமம் குறித்து திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடரமனா ரெட்டியிடம் பிபிசி பேசியபோது, `மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அந்த கிராமத்தில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். மக்கள் மத்தியில் மாற்றம் கொண்டுவரப்படும்` என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: