மரக்காணம்: டாஸ்மாக் கடைகள் இருந்தும் சிலர் ஆபத்தான கள்ளச்சாராயத்தை தேடிச் செல்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டின் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம், விஷச்சாராயம் அருந்திய 13 பேர் பலியாகியிருப்பது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக்கிற்கு எதிரான குரல் ஓங்கும் போதெல்லாம், அரசு தரப்பில் முன்வைக்கப்படும் சமாதானங்களில் ஒன்று கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்க அது அவசியம் என்பதே.
ஆனால், டாஸ்மாக் கடைகள் பரவலாக இருந்தும் கூட கள்ளச்சாராய சாவு அதிக எண்ணிக்கையில் நேரிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
டாஸ்மாக் கடைகள் செயல்படுவதை நியாயப்படுத்த அரசு முன்வைத்த வாதங்கள் என்னவாயிற்று? டாஸ்மாக் கடைகளை குடிமகன்கள் தவிர்க்க என்ன காரணம்? ஆபத்து இருக்கலாம் என்று தெரிந்தாலும் கூட கள்ளச்சாராயத்தை சிலர் நாடிச் செல்வது ஏன்? கள்ளச்சாராயத்திற்கும், அதனால் நேரிடும் உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாதா? டாஸ்மாக் கடைகளைத் தவிர அரசுக்கு வேறு தெரிவுகளே இல்லையா?
மது விலக்கு அமலில் உள்ள குஜராத், பிகார் போன்ற மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து கொத்துக்கொத்தாக உயிரிழப்புகள் நேரிடுவதை அவ்வப்போது நாம் செய்திகளில் பார்த்திருக்கிறோம்.
தமிழ்நாட்டை பொருத்தவரை, சமீபத்திய ஆண்டுகளில் அதுபோன்ற உயிரிழப்புகள் இல்லை என்ற நிலையே இருந்து வந்தது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் இருப்பும் அதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டது. டாஸ்மாக்கிற்கு எதிராக பிரச்னை எழும் போதெல்லாம் அதுவே ஒரு சமாதானமாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால், மரக்காணம் சம்பவம் மது பிரச்னை மீதான ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றியுள்ளது.
2016ஆம் ஆண்டில் மதுவிலக்கை அமல்படுத்தியே தீர வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஒரு பொதுக்கருத்து உருவாகியிருந்ததை அந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரதிபலித்தது. தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக மது விலக்கு இருந்தது. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரண்டுமே மதுவிலக்கை கொண்டு வர உறுதியளித்தன.
மது மீதான மக்களின் பார்வையில் மாற்றம்
ஆனால், மதுவிலக்கு குறித்த இன்றைய தமிழ் சமூகத்தின் பார்வை என்ன?. அடுத்து வந்த ஏழே ஆண்டுகளில் ஒட்டுமொத்த சமூகத்தின் மனநிலையுமே மாறியிருப்பதாகக் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் ராஜூ. 2016-ம் ஆண்டில் மதுவிலக்கிற்கு ஆதரவாக மக்களிடையே பொது கருத்தை உருவாக்கியதில் மக்கள் அதிகாரம் அமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு.
பிபிசி தமிழிடம் பேசிய ராஜூ, "2016-ம் ஆண்டு வாக்கில் மதுவுக்கு எதிராக மக்களிடையே பொது கருத்து எட்டியிருந்தது. சசிபெருமாள் மரணம், மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக, அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளுமே மதுவிலக்கை வாக்குறுதியாக அளிக்க வேண்டிய நிர்பந்தம் உண்டானது.
படிப்படியாக மதுவிலக்கு என்று வாக்குறுதி அளித்த அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், மதுவிலக்கு அமலுக்கு வரவில்லை. ஆனால் இன்று மது குறித்த மக்களின் பார்வை மாறிவிட்டது. மதுவை தவறான விஷயமாக பார்க்கும் கலாசாரம் இன்று இல்லை.
ஆகவே, மதுப் பழக்கத்தை ஒழுக்கம் சார்ந்த பிரச்னையாக கற்பிப்பதைக் காட்டிலும், அதனை உடல் நலம், மனநலம் சார்ந்த பிரச்னையாகவே அணுக வேண்டும். மதுவின் தீமைகளை அறிந்து ஒவ்வொரு தனிநபரும் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்." என்றார் அவர்.

டாஸ்மாக்கிலும் போலி மது விற்பனை என குற்றச்சாட்டு
டாஸ்மாக் கடைகள் இருக்கும் போது சிலர் கள்ளச் சாராயத்தை நாடுவது ஏன் கேள்விக்கு விடை தேட முயன்றோம். அதற்காக, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநிலத் தலைவர் செல்லபாண்டியனிடம் பேசிய போது, டாஸ்மாக் நிர்வாகம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
"டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் மீது சில்லரை விற்பனையைக் காட்டிலும் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். அது மட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளிலேயே போலி மது விற்பனை செய்யப்படுகிறது. அது இரண்டு வழிகளில் நடக்கிறது.
மது ஆலைகளில் இருந்து பில் போடாமல் பாட்டில்களைக் கொண்டு வந்து விற்பது ஒன்று. டாஸ்மாக் கடைக்கு வரும் மது பாட்டில்களை ஊழியர்களே பிரித்து, இரண்டு பாட்டில்களில் ஊற்றி, தண்ணீரை கலந்து பாட்டிலை நிரப்பி விற்பது மற்றொரு வகை. இதனால், போதை கிடைக்காமல் மேலும் ஒரு பாட்டிலை வாங்க வேண்டியிருக்கிறது. கூலித் தொழிலாளர்களுக்கு அது கட்டுபடியாகாமல் போகவே போதைக்கு வேறு வழிகளைத் தேடுகிறார்கள்" என்று செல்லபாண்டியன் கூறினார்.

"மதுவை சிறிய பாட்டில்களில் விற்கலாம், கள்ளை அனுமதிக்கலாம்"
மேலும் தொடர்ந்த செல்லபாண்டியன், எலைட் குடிமகன்கள் மீது காட்டும் அக்கறையை ஏழை குடிமகன் மீது அரசு காட்டவில்லை என்று குற்றம்சாட்டினார்.
"எலைட் குடிமகன்களுக்கு தானியங்கி இயந்திரம், ஏ.சி. பார் என்று பார்த்துப் பார்த்து செய்யும் அரசு, டாஸ்மாக்கை நாடி வரும் ஏழை, எளிய கூலித் தொழிலாளிக்கு என்ன செய்திருக்கிறது? மதுவை வாங்க போதிய பணமில்லாமல் 2 தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு குவார்ட்டரை வாங்குவது என்பது டாஸ்மாக் கடைகளில் அன்றாட காட்சி. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களின் விலையை அரசு ஏன் குறைக்கக் கூடாது? அல்லது ஹார்லிக்ஸ், ஷாம்பு போல மதுவையும் குறைந்த அளவில் சிறிய பாட்டில்கள், அல்லது பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து ஏன் விற்கக் கூடாது? அவ்வாறு செய்தால் கூலித் தொழிலாளர்கள் தங்களது சக்திக்கு ஏற்ப வாங்கிக் கொள்வார்கள். கள்ளச்சாராயத்தை நாடிச் செல்லவே மாட்டார்கள்.
கள்ளச்சாராய சாவுகளை அறவேத் தடுக்க வேண்டும் என்று அரசு நினைத்தால் கள் இறக்க அனுமதி வழங்கலாமே? கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் கள் இறக்க அனுமதி இருக்கிறது. அதனால் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை அல்லவா? தென்னங்கள், பனங்கள் போன்றவை மலிவான விலையில் கிடைக்கும் என்பதால் ஏழை, எளிய தொழிலாளர்கள் கள்ளச்சாராயம் பக்கம் போகவே மாட்டார்கள்" என்பது அவரது கருத்து.

பட மூலாதாரம், Getty Images
"கள் இறக்க சட்டம் அனுமதித்தும், தமிழ்நாடு அரசு மறுக்கிறது"
அண்டை மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக போராடி வரும் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியிடம் இதுகுறித்துப் பேசினோம். அவர் கூறுகையில், "கள் ஒரு ஆரோக்கியமான உணவு, மருந்து. உலகில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. இந்தியாவில் கேரளா, ஆந்திரா, புதுச்சேரி என எந்தவொரு மாநிலத்திலும் கள் தடை செய்யப்படவில்லை. இந்திய அரசியல் அமைப்பின் 47-வது பிரிவின்படி பார்த்தால், கள் தடை செய்யப்பட்ட ஒன்று அல்ல. ஆனால், தமிழ்நாடு அரசின் மதுவிலக்குச் சட்டம் கள் இறக்குவதை தடை செய்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், இது மாநில அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் என்று தலைமை நீதிபதி அமர்வு கூறுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில அரசு அளித்த பதிலில், 'கள்ளில் போதை குறைவு என்பதால் கலப்படம் செய்கிறார்கள். அது உயிருக்கு ஆபத்தாகிவிடும். ஒவ்வொரு பனை மரமும் கள்ளுக்கான உற்பத்தி தொழிற்சாலையாக செயல்படும் என்பதால் அதனை கண்காணிப்பது என்பது முடியாத காரியம். அதுவே, மது என்றால் 9 நிறுவனங்கள்தான் உற்பத்தி செய்கின்றன. அவற்றை கண்காணிப்பது எளிது' என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கள் இறக்குவதை கண்காணிக்க முடியவில்லை என்று கூறியே இந்த தடையை மாநில அரசு விதித்துள்ளது. அது மாநில அரசின் கொள்கை முடிவு அல்ல, திறனற்ற தன்மையின் வெளிப்பாடு" என்கிறார்.

"மது ஆலைகளில் தயாராவதும் ஒருவகையில் கள்ளச்சாராயமே"
"டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யும் மது உற்பத்தியாளர்கள் தயாரிப்பதும் கூட ஒருவகையில் கள்ளச்சாராயம்தான். பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா போன்ற மது வகைகள் அவை தயாரிக்கப்படும் மூலப்பொருட்களால்தான் வேறுபடுகின்றன. பிராந்தி திராட்சையில் இருந்தும், விஸ்கி தானியங்களில் இருந்தும், ரம் கரும்பில் இருந்தும், வோட்கா உருளைக்கிழங்கில் இருந்தும் தயாரிப்பதே உலக வழக்கம். அதுவே அவற்றை வேறுபடுத்தக் கூடியது. ஆனால், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற அனைத்து மது வகைகளுக்குமே மூலப்பொருள் ஒன்றே ஒன்றுதான். சர்க்கரை ஆலை கழிவில் கிடைக்கும் மொலாசஸே அந்த மூலப்பொருள். இங்குள்ள மது உற்பத்தியாளர்கள் மொலாசஸில் இருந்து மதுவை தயாரித்துவிட்டு ஆல்கஹால் அளவை வேறுபடுத்தி, வண்ணத்தை மாற்றி, விதவிதமான வடிவ பாட்டில்களை அவற்றை அடைத்து, பல்வேறு பெயர்களில் விற்பனை செய்கிறார்கள்.
பாட்டிலுக்கு வெளியே குறிப்பிடப்பட்டுள்ள பெயருக்கும், உள்ளே இருக்கும் பொருளுக்கும் உண்மையில் என்ன சம்பந்தம்? தமிழ்நாடு அரசு டாஸ்மாக் விற்பனைக்கு நடப்பு ஆண்டில் 52,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க சுமார் 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசுக்கு 52,000 கோடி ரூபாய் வருமானம் தரும் மதுவுக்கு மூலப்பொருளான மொலாசஸை விவசாயிகள் இலவசமாகவே வழங்குகிறார்கள். சர்க்கரை ஆலைகளில் கரும்பில் கிடைக்கும் சர்க்கரைக்கு மட்டுமே பணம் கணக்கிட்டு வழங்கப்படுகிறது. மொலாசஸ் உள்ளிட்ட பிற உப பொருட்களுக்கு கொஞ்சமும் பணம் தரப்படுவதில்லை. 6,500 கோடி ரூபாய் இலவச மின்சாரம் வழங்குவது பளிச்சென தெரிகிறது. ஆனால், 52,000 கோடி ரூபாய் வருவாய்க்கு ஆதாரமான மொலாசஸை விவசாயிகள் இலவசமாக கொடுப்பது யாருக்கும் தெரிவதில்லை" என்கிறார் அவர்.
"மது பாட்டில் அடக்கவிலை ரூ.12, விற்பனை விலை ரூ.350. பணம் யாருக்குச் செல்கிறது?"
டாஸ்மாக்கில் விலை அதிகம் என்பதால்தான் பலரும் போதை தேடி வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய போது, "கள் இறக்க அனுமதி கொடுத்தால் இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஆட்சியாளர்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் மன்றாடிக் கேட்டுக் கொண்டோம். கள் ஒரு போதைப்பொருள் என்று நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு என்று அறிவித்தும் அந்த சவாலை ஏற்க யாரும் முன்வரவில்லை. இன்று டாஸ்மாக்கில் சுமார் 350 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மது பாட்டிலின் அடக்கவிலை வெறும் 12 ரூபாய்தான். இதனால், மது உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் மது ஆலைகளை நடத்துகிறார்கள். அதனால்தான், கள் இறக்க அனுமதி மறுக்கப்படுகிறது. கள் இறக்க அனுமதித்தால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆனால், அது இப்போதைக்கு நடக்க வாய்ப்பு இல்லை. யாரிடம் போய்ச் சொல்வது?" என்று நல்லசாமி வேதனை தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












