பிளேஆப் சுற்றில் எஞ்சியுள்ள 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி: சி.எஸ்.கே. அணி இன்று தோற்றால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
(பஞ்சாப் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்ற பிறகு பிறகு இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.)
ஐபிஎல் சீசன் லீக் ஆட்டங்கள் இன்னும் 2 நாட்களில் முடிகின்றன. ஆனாலும், ப்ளே ஆப்பில் இடம் பெறும் 3 அணிகள் யார் என்பதை இதுவரை முழுமையாக ரசிகர்களால் அறிய முடியவில்லை.
இப்போதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் ப்ளே சுற்றுக்கான போட்டியில் இல்லை.
பிளேஆஃப் சுற்றில் எஞ்சியுள்ள 3 இடங்களுக்காக மற்ற 6 அணிகள் போராடுகின்றன.
குஜராத் டைட்டன்ஸ் முதலிடம் (13 போட்டிகள், 18 புள்ளிகள்)

பட மூலாதாரம், BCCI/IPL
நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில், 4 தோல்விகள், 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
வரும் 21ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக முதல்முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.
லீக் சுற்றில் முதலிடத்தை உறுதி செய்து, இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்றில் விளையாடுவதை உறுதி செய்துவிட்டாலும், உத்வேகத்தை தக்க வைக்கும் பொருட்டு வீறுநடையை தொடர குஜராத் டைட்டன்ஸ் அணி முயலும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் செல்வதில் என்ன சிக்கல்? (13 ஆட்டங்கள், 15 புள்ளிகள்)

பட மூலாதாரம், BCCI/IPL
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடந்த முக்கிய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்வதில் சிஎஸ்கேவுக்கு, கொல்கத்தா பிரேக் போட்டுள்ளது.
சிஎஸ்கே அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றிகளைப் பெற்றுள்ளது, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி வழங்கப்பட்டதால் 15 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே நிகர ரன்ரேட் 0.493 என்று பிளசில் இருந்தநிலையில் தோல்வியால், 0.381 ஆகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து 7 வெற்றிகளுடன் சிஎஸ்கே அணி கம்பீரமாக ப்ளே ஆஃப் சுற்றை எதிர்நோக்கிய நிலையில் கொல்கத்தாவிடம் தோல்வி நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. சிஎஸ்கே அணிக்கு போட்டியாக லக்னெள அணி உருவெடுத்துள்ளது.
லக்னௌ அணி அடுத்த போட்டியிலும் வென்றால், 17 புள்ளிகள் பெற்று சிஎஸ்கேவுக்கு மீண்டும் போட்டியாக வரும். அப்போது இரு அணிகளுக்கும் இடையே நிகர ரன்ரேட் முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கும்.
கடைசி ஆட்டத்தில் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் வென்றால், 16 புள்ளிகளுடன் இருக்கும்.
ஆதலால், மும்பை அணியினாலும், லக்னெள அணியிலானும் சிஎஸ்கே ப்ளே ஆப் சுற்றில் 2ஆவது இடத்தைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி 17 புள்ளிகள் பெற்றால்கூட அந்த இடத்துக்கு லக்னெள அணியால் நிகர ரன்ரேட்டால் ஆபத்து வரலாம். அதற்கு சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் விளையாடி வெல்ல வேண்டியது கட்டாயமாகும்.
இன்று டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது. சென்னையில் வைத்து டெல்லி கேபிடல்ஸை துவைத்து எடுத்த சிஎஸ்கே அணி, டெல்லியில் அந்த அணியை எதிர்கொள்கிறது.
சிஎஸ்கே, லக்னெள அணிகள் தலா 15 புள்ளிகளுடன் சமமாக இருப்பதால், இரு அணிகளுக்கும் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இதில் ஒரு அணி தோற்றாலும், ஒரு அணி வென்றால், வெற்றி பெறும் அணி ப்ளே ஆப் சுற்றில் 2வது இடத்தைப் பெறும். கடைசிப் போட்டி முடிவுவரை 15 புள்ளிகள் எடுத்த அணி காத்திருக்க வேண்டும்.
ஒருவேளை ஆர்சிபி, மும்பை அணிகள் தலா 16 புள்ளிகள் பெறும்பட்சத்தில் 15 புள்ளிகளுடன் இருக்கும் அணி ப்ளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறும். ஆதலால், லக்னெள, சிஎஸ்கே அணிகளுக்கு கட்டாய வெற்றி தேவை. ஒருவேளை சிஎஸ்கே, லக்னெள அணிகள் வென்றால், நிகர ரன்ரேட் பார்க்கப்பட்டு 2வது இடம் முடிவு செய்யப்படும்.
சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றால், லக்னெள அணி கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு மேல் சேர்த்து, கொல்கத்தா அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு நடந்தால், லக்னெள அணியின் நிகர ரன்ரேட்அதிகரித்து, ப்ளே ஆப்பில் 2வது இடத்தைப் பிடிக்கலாம்.
லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பிளே ஆப் வாய்ப்பு என்ன? (13 போட்டிகள், 15 புள்ளிகள்)

பட மூலாதாரம், BCCI/IPL
லக்னெளவில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றதன் மூலம், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
சிஎஸ்கே அணியும் 13 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே 0.381 என்று இருப்பதால் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால், லக்னெள அணியின் நிகர ரன்ரேட் 0.304 ஆக சிஎஸ்கேவைவிட குறைந்திருப்பதால், 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் நிகர ரன்ரேட்தான் ப்ளே ஆப் சுற்றில் இடத்தை தீர்மானிக்கப் போகிறது.
லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு வரும் 20ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான கடைசி லீக் ஆட்டம் மிக முக்கியமானதாகும். இந்த ஆட்டத்தில் லக்னெள அணி வெல்லும் பட்சத்தில் 17 புள்ளிகள் பெற்று ப்ளே ஆப் சுற்றில் 2வது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. 2வது இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால், லக்னெள அணி ரன்ரேட்டை சிஎஸ்கே அணியைவிட உயர்த்த மிகப்பெரிய வெற்றி பெறுவது அவசியம்.
அதேநேரம், 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி 20ம்தேதி கடைசி லீக் ஆட்டததில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் சிஎஸ்கே அணி மிகப்பெரிய வெற்றி பெற்று, லக்னெள அணியால் தொட முடியாத அளவுக்கு ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். அவ்வாறு சிஎஸ்கே செய்தால், 17 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றில் 2வது இடத்தைப் பிடிக்கலாம்.
இரு அணிகளும் 17 புள்ளிகளுடன் இருக்கும் பட்சத்தில் நிகர ரன்ரேட்டில் உயர்வாக இருக்கும் அணி ப்ளே ஆப் சுற்றில் 2வது மற்றும் 3வது இடத்தைப் பிடிக்கும்.
ஒருவேளை கடைசி லீக் ஆட்டத்தில் லக்னெள அணி, அல்லது சிஎஸ்கே அணிகள் தோற்கும் பட்சத்தில் தோற்கும் அணி 15 புள்ளிகளுடனே நின்றுவிடும்.
ஒருவேளை லக்னெள அணி தோற்றால், சிஎஸ்கே அணி கடைசி லீக்கில் வென்றாலே போதுமானது, ப்ளே ஆப்பில் 2வது இடத்தைப் பிடித்துவிடலாம்.
இரு அணிகளும் கடைசி லீக்கில் வெல்லும்பட்சத்தில்தான் நிகர ரன்ரேட் அடிப்படையில் இடம் முடிவு செய்யப்படும். ஏதாவது ஒரு அணி தோற்கும் பட்சத்தில் மற்றொரு அணிக்கு வழி திறக்கும். தோற்கும் அணி 15 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடிக்கும்.
15 புள்ளிகள் பெறும் அணிக்கு 3வது இடம் கிடைக்குமா அல்லது4-வது இடம் கிடைக்குமா என்பதும் கடைசியில்தான் தெரியவரும்.
சிஎஸ்கே, லக்னெள அணிகள் தலா 15 புள்ளிகளுடன் சமமாக இருப்பதால், இரு அணிகளுக்கும் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இதில் ஒரு அணி தோற்றாலும், ஒரு அணி வென்றால், வெற்றி பெறும் அணி ப்ளே ஆப் சுற்றில் 2வது இடத்தைப் பெறும். கடைசிப் போட்டி முடிவுவரை 15 புள்ளிகள் எடுத்த அணி காத்திருக்க வேண்டும்.
ஒருவேளை ஆர்சிபி, மும்பை அணிகள் தலா 16 புள்ளிகள் பெறும்பட்சத்தில் 15 புள்ளிகளுடன் இருக்கும் அணி ப்ளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறும். ஆதலால், லக்னெள, சிஎஸ்கே அணிகளுக்கு கட்டாய வெற்றி தேவை. ஒருவேளை சிஎஸ்கே, லக்னெள அணிகள் வென்றால், நிகர ரன்ரேட் பார்க்கப்பட்டு 2வது இடம் முடிவு செய்யப்படும்.
சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றால், லக்னெள அணி கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு மேல் சேர்த்து, கொல்கத்தா அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு நடந்தால், லக்னெள அணியின் நிகர ரன்ரேட்அதிகரித்து, ப்ளே ஆப்பில் 2வது இடத்தைப் பிடிக்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் வாய்ப்பு என்ன? (13 ஆட்டங்கள், 14 புள்ளிகள்)

பட மூலாதாரம், BCCI/IPL
மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 13 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகள் பெறும். ஒருவேளை தோல்வி அடைந்தால், 14 புள்ளிகளுடனே மும்பை அணி லீக் சுற்றை முடிக்கும்.
ஆர்சிபி அணி 13 ஆட்டங்களில் ஆடி 14 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் அந்த அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் லீக் ஆட்டம் உள்ளது. ஒருவேளை இந்த ஆட்டத்தில் ஆர்சிபி வென்றால், 16 புள்ளிகள் பெறும்.
மும்பை அணி கடைசி லீக்கில் வென்று 16 புள்ளிகள் பெற்று, ஆர்சிபி அணியும் இரு லீக்கிலும் வென்று 16 புள்ளிகளுடன் இருந்தால், ஆர்சிபி, மும்பை இடையே யார் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்வது யார் என்பதை நிகர ரன்ரேட் முடிவு செய்யும்.
நிகர ரன்ரேட்அடிப்படையில் ஆர்சிபி, மும்பை அணிகள் ப்ளே ஆப் சுற்றில் கடைசி இரு இடங்களைப் பிடிக்கும்.அவ்வாறு இரு அணிகளுமே 16 புள்ளிகள் பெற்று மல்லுக்கட்டும் போது, நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கும் அணி ப்ளே ஆப்சுற்றில் 3வது இடத்துக்கும், அடுத்த இடத்தில் இருக்கும் அணி 4வது இடத்தையும் பிடிக்கும்.
அதேசமயம் 15 புள்ளிகளுடன் இருக்கும் லக்னெள சிஎஸ்கே அல்லது லக்னெள அணிகளில் ஏதாவது ஒன்று வெளியேறும்.
ஒருவேளை மும்பை அணி கடைசி லீக்கில் வென்று, ஆர்சிபி அணி, இரு லீக் ஆட்டங்களில் ஒன்றில் தோற்றாலும 14 புள்ளிகள் பெறும் ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல முடியாது. அப்போது 15 புள்ளிகளுடன் இருக்கும் அணிக்கு ப்ளே ஆப் சுற்றில் கடைசி இடம் கிடைக்கும்.
ஆதலால் மும்பை அணியின் தோல்வி ஆர்சிபிக்கு வழி கொடுக்கும். மும்பை அணி கடைசி லீக்கில் வென்றால், ஆர்சிபி அணியும் கடைசி இரு லீக்கிலும் வெல்ல வேண்டும்.
ஒரு வேளை மும்பை அணி கடைசி லீக்கில் தோற்று, ஆர்சிபி அணி கடைசி இரு லீக்கிலும் வெல்லும்பட்சத்தில் 16 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றில் 3வது இடத்தைப் பிடிக்கும், 15புள்ளிகளுடன் இருக்கும் அணி 4ஆவது இடத்தைப் பிடிக்கும்.
ஒரு வேளை மும்பை அணி கடைசி லீக்கில் தோற்று, ஆர்சிபி அணியும் கடைசி இரு லீக்கில் ஒன்றில் தோற்று, ஒன்றில் வென்றால் 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடிக்கும். அப்போது, ப்ளே ஆப் சுற்றில் 4வது இடத்துக்கு கடும் போட்டி ஏற்படும்.
இதற்கிடையே பஞ்சாப் கிங்ஸ் அணி 12 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் டெல்லி, ராஜஸ்தான் அணிகளுடன் ஆட்டங்கள், மீதம் உள்ளன. இந்த இரு ஆட்டங்களிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும்பட்சத்தில், 16 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றுப் போட்டிக்குள் வரும். ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸ் 268ல் இருப்பதால், இரு ஆட்டங்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால்தான் ரன்ரேட்டை உயர்த்த முடியும்.
ஒருவேளை பஞ்சாப் அணி 16 புள்ளிகள் பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்று உறுதியாகும். ஒருவேளை ஒன்றில் தோற்று, ஒன்றில் வென்றால், 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடிக்கும். லீக்சுற்றில் கடைசி ஆட்டத்தின் முடிவுவரை காத்திருக்க வேண்டியதிருக்கும்.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முக்கியமாகும். இதில் கட்டாயம் வென்றால்தான் ப்ளே ஆப் சுற்றை உயிர்ப்புடன் வைக்க முடியும், தோற்றால் 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் லீக் சுற்றை முடிக்கும். 14 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினம் என்பதால் லீக் சுற்றின் கடைசி ஆட்டம்வரை காத்திருக்க வேண்டும்.
இந்த குழப்பத்தில் இருந்து தப்பிக்க, தவிர்க்க மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால் 16 புள்ளிகள் பெற்று ப்ளே ஆப் சுற்றில் 3வது இடத்தைத் தக்கவைக்க வாய்ப்பு கிடைக்கும்.
ஆர்சிபி அணியும் 16 புள்ளிகள் பெறும்போதுதான் நிகர ரன்ரேட் சிக்கல் உருவாகும். ஆர்சிபி அணி அடுத்த ஓர் ஆட்டத்தில் தோற்றாலே மும்பை ப்ளே ஆப் சுற்றுப்பயணம் தெளிவாகிவிடும்.
ஆர்சிபி அணி ஒரு லீக் ஆட்டத்தில் தோற்றாலே, 15 புள்ளிகளுடன் இருக்கும் அணி அது லக்னெள அல்லது சிஎஸ்கே இதில் ஏதாவது ஒன்று ப்ளே ஆப்பில் கடைசி இடத்தைப் பிடித்துவிடும்.
ஆதலால், ஆர்சிபி அணியின் தோல்வியில்தான் மும்பை அணியின் ப்ளே ஆப் சுற்று பயணம் தீர்மானிக்கப்படும்.
அதேசமயம், ஆர்சிபி அணி தோல்வி அடைந்து, மும்பை அணி வென்றால், ப்ளே ஆப் சுற்றில் வாய்ப்புக் கிடைக்கும். இரு அணிகளும் வென்றால், நிகர ரன்ரேட் துருப்புச் சீட்டாக மாறும். இதில் ஆர்சிபி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றாலே ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்லலாம், ஆனால், மும்பை அணி செல்ல கொல்கத்தாவை 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால்தான் நிகர ரன்ரேட்டில் ஆர்சிபையைவிட அதிகமாகி ப்ளேஆப் சுற்றுக்குள் செல்ல முடியும்.
கடைசிஒரு இடத்துக்காக ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, கொல்கத்தா, மும்பை ஆகிய 4 அணிகள் போட்டியிடுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ்(14 ஆட்டங்கள் 14 புள்ளிகள்)

பட மூலாதாரம், BCCI/IPL
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் தோல்வியில்தான் அந்த அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு இருக்கிறது. இதனால், கடைசிவரை ராஜஸ்தான் அணி காத்திருக்க வேண்டும்.
ஆர்சிபி அணி தனது கடைசி லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒருவேளை 181 ரன்கள் சேர்த்திருந்தால், அதை சேஸிங் செய்யும்போது 6 ரன்கள் அதற்கு அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். அவ்வாறு தோற்றால் ஆர்சிபி நிகர ரன்ரேட் தற்போது 0.180 என பிளஸில் இருப்பது குறையும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது 0.148 என பிளசில் இருப்பதால், ப்ளே ஆப் செல்ல வாய்ப்புக் கிடைக்கும். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோற்க வேண்டும். ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் நிகர ரன்ரேட் மைனஸில் இருப்பதால், தானாகவே போட்டியிலிருந்து வெளியேறும்.
இவையெல்லாம் நடந்தால் 3 அணிகளும் 14 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது, ராஜஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றில் செல்லலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(13 ஆட்டங்கள் 14 புள்ளிகள்)

பட மூலாதாரம், BCCI/IPL
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் 7 வெற்றி, 6 தோல்விகள் என 14புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் ஆர்சிபியின் ப்ளே ஆப் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
ப்ளே ஆஃப் சுற்றில் இடத்தை உறுதி செய்ய ஆர்சிபி அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஆட்டம் முக்கியமானது. தற்போது 14 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி அணி அடுத்த போட்டியில் வென்றால் அதன் புள்ளிகள் எண்ணிக்கை16 ஆக உயரும். ரன்ரேட்டும் பிளசில் 0.180ஆக இருப்பதால், ப்ளே ஆப் வாய்ப்பு உறுதியாகும்.
சிஎஸ்கே, லக்னெள அணிகளும் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அவ்வாறு வென்றால்தான், 17 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றில் 2 அல்லது 3வது இடங்களைப் பிடிக்க முடியும்.
ஒருவேளை சிஎஸ்கே, லக்னெள அணிகளில் ஏதாவது ஒன்று தோல்வி அடைந்தால் 15 புள்ளிகளாக இருக்கும். ஆர்சிபி கடைசி லீக்கில் வென்றால் 16 புள்ளிகளுடன் 3வது இடத்தில் ப்ளே ஆப்பில் இடம் பெறும். ஒருவேளை இரு அணிகளும் வென்றால் ப்ளே ஆப்பில் 4வது இடத்தில் ஆர்சிபி வரலாம்.
அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணியும் கடைசி லீக்கில் வென்று 16 புள்ளிகளாக இருந்தால், ஆர்சிபி, மும்பை இடையே நிகர ரேட் துருப்புச் சீட்டாக இருக்கும். தற்போதுள்ள சூழலில் மும்பை இந்தியன்ஸ் ரன்ரேட் மைனஸில் 128ல் இருக்கிறது. ஆா்சிபி ரன்ரேட் பிளசில் 0.180 ஆக உயர்ந்துள்ளது.
ஆதலால் ஆர்சிபி அணி தனது கடைசி லீக் கில் சாதரண வெற்றி பெற்றாலே நல்ல ரன்ரேட்டை பெற்று ப்ளே ஆப்பில்வர முடியும். இதில் ஆர்சிபிக்கு சாதகமாக, ப்ளே ஆப் சுற்று தொடங்கும் முன், நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி-குஜராத் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல ஆர்சிபிக்கு தேவையான ரன்ரேட் நிலவரம் தெரிந்துவிடும் என்பதால் அதற்கு ஏற்றார்போல் ஆட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி, தனது கடைசி லீக்கில் சன்ரைசர்ஸ் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அப்போதுதான் ஆர்சிபி அணியைவிட நிகர ரன்ரேட்டில் உயர்வாக இருக்க முடியும்.
பஞ்சாப் கிங்ஸ் (14 ஆட்டங்கள், 12 புள்ளிகள்)

பட மூலாதாரம், BCCI/IPL
பஞ்சாப் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ந்து 7-வது முறையாக ப்ளேஆப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறியது. இதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப்கிங்ஸ் அணிகள் வெளியேறியுள்ளன.
அதேசமயம், பஞ்சாப் அணி தோல்வி மற்ற அணிகளுக்கு சாதகமான அம்சமாகும். 15 புள்ளிகளில் இருக்கும் லக்னௌ, சிஎஸ்கே அணிகள் இனிமேல் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணியைத் தவிர்த்து ஆர்சிபி, மும்பை அணிகள் மட்டுமே இனிமேல் 16 புள்ளிகள்வரை எடுக்க சாத்தியம் இருக்கிறது. கொல்கத்தா அணி கடைசி லீக்கில் வென்றாலும் ரன்ரேட் பிளசுக்கு வருவது கடினம். ஆக ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி இடையே ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த கணக்குகள் ஊகத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டவை, களத்தில் அணிகளின் செயல்பாட்டுக்கு ஏற்ப இவை மாறுபடும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (13 போட்டிகள், 12 புள்ளிகள்)

பட மூலாதாரம், BCCI/IPL
சென்னையில் நடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றதன் மூலம் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் நீடிக்கிறது.
கொல்கத்தா அடுத்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் லக்னெள அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமானது. லக்னெள அணி வென்றால் ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பாக அமையும்.
ஒருவேளை கொல்கத்தா அணி வென்றால், 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடிக்கும். கொல்கத்தாவுக்கு ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு மறுக்கப்படாது என்றாலும், லீக் சுற்று முடிந்தபின் மற்ற அணிகளின் புள்ளிகள் அடிப்படையில் வாய்ப்பு குறித்து தெரியவரும், அதுவரை காத்திருக்க வேண்டும்.
கொல்கத்தா அணி நிகர ரன்ரேட்டில் மைனஸ்256 என்று 12 புள்ளிகளுடன் இருக்கிறது. கொல்கத்தா அணி தனது கடைசி லீக்கில் லக்னெள அணிக்கு எதிராக 180 ரன்களுக்கு மேல் சேர்த்து 102 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும் பட்சத்தில் ப்ளே ஆப் சுற்று வாய்ப்புக் கிடைக்கும்.
சிஎஸ்கே அணியை வென்ற கொல்கத்தா அணி ஒருவேளை லக்னெள அணியையும் வென்றால் அது லக்னெள அணி ப்ளே ஆஃப் செல்வதை கீழே இழுத்துவிடும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (13 போட்டிகள், 8 புள்ளிகள்)

பட மூலாதாரம், BCCI/IPL
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அகமதாபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடந்தது. இதன் மூலம், 13 போட்டிகளில் 4 வெற்றி, 9 தோல்விகள் என 8 புள்ளிகளுடன்10வது இடத்தில் இருக்கிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் 1ஆட்டம் இருக்கும்நிலையில் அதில் வென்றாலும் 10 புள்ளிகள்தான் கிடைக்கும். அது ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல உதவாது.
வரும் 18ம் தேதி சன்ரைசர்ஸ் அணி ஹைதராபாத் மைதானத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. 21ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடனும் சன்ரைசர்ஸ் மோதுகிறது.
இரு இரு போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் வென்றால், ப்ளே ஆப் சுற்றில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்த முடியும். சன்ரைசர்ஸ் அணியால் ப்ளேஆப் சுற்றுக்குள் செல்ல முடியாவிட்டாலும், ப்ளே ஆப் ரேஸை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு வெற்றி அவசியம்.
தற்போது சன்ரைசர்ஸ் நிகர ரன்ரேட் மைனசில் 0.575 ஆக இருக்கிறது. ஏற்கெனவே ப்ளே ஆப் சுற்றில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணி கணக்கீடு ரீதியாக வெளியேறிய நிலையில் 2வது அணியாக சன்ரைசர்ஸ் அணியும் வெளியேறியது.
டெல்லி கேபிடல்ஸ் (13 போட்டிகள், 10 புள்ளிகள்)

பட மூலாதாரம், BCCI/IPL
டெல்லி கேபிடல்ஸ் அணி தரம்சலாவில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 10 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு உயர்ந்தது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம், அதாவது சிஎஸ்கே அணியுடன் மட்டும் இருக்கிறது. ஏற்கெனவே ப்ளே ஆப் சுற்றில் இருந்து டெல்லி அணி வெளியேறியநிலையில் இந்த வெற்றி, தோல்வி அந்த அணியைப் பாதிக்காது. ஒரு வேளை சிஎஸ்கே அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றால், அது சிஎஸ்கே அணி ப்ளே ஆப் செல்வதில் சிக்கல் ஏற்படும்.
மற்றவகையில் டெல்லி அணி தோற்றால் பெரிதாக புள்ளிப்பட்டியலில் மாற்றம் வராது. ஒருவேளை சிஎஸ்கே அணி டெல்லி அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்றால் லக்னௌ அணியைவிட ரன்ரேட்டில் உயர்வாக இருக்கும் அது ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல உதவியாக இருக்கும்.
ஆர்சிபி அணி கடைசி லீக்கில் 30 ரன்களில் தோற்றால், கொல்கத்தா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் நிகர ரன்ரேட் அதிகரித்து ப்ளே ஆப் செல்லலாம். பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி லீக்கில் 94 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்த வேண்டும்.
ஆர்சிபி அணி கடைசி லீக்கில் தோற்றாலும் ப்ளே ஆப் சுற்றில் இடம் பெறலாம். அதற்கு மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் கடைசி லீக் ஆட்டங்களில் தோற்க வேண்டும்.
ராஜஸ்தான், மும்பை, ஆர்சிபி அணிகளுக்கான ப்ளே ஆப் வாய்ப்பு என்பது இருவரின் தோல்வி ஒருவருக்கான வாய்ப்பாக மாறியுள்ளது. ஆனால் கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கான வாய்ப்பு குறைவுதான்.
ஆர்சிபி தோற்றாலே சிஎஸ்கே, லக்னெள ப்ளே ஆப் இடங்கள் உறுதியாகிவிடும். ஆனால் ஆர்சிபி அணி வென்றால், சிஎஸ்கே, லக்னெள அணிகள் கடைசி லீக்கில் கட்டாயம் வெல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். ஆர்சிபி, மும்பை அணிகள் கடைசி லீக்கில் வென்று 16 புள்ளிகளுடன் இருந்தால், சிஎஸ்கே, லக்னெள அணிகள் கடைசி லீக்கில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஆர்சிபி, மும்பை இருஅணிகளில் ஒரு அணி தோற்றால்கூட, சிஎஸ்கே, லக்னெள ப்ளே ஆப் உறுதியாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












