'விலை குறைவு, வேலை பெரிது' - ஐபிஎல் போட்டிகளில் ஆப்கன் வீரர்களின் சிறப்புக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், YEARS
- எழுதியவர், விதான்ஷு குமார்
- பதவி, விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக
இது சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. காபூலில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியின் போது ரஷீத் கான் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார்.
இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரரான ரஷீத் கானைப் பார்த்து, ஆப்கானிஸ்தானின் பல இளைஞர்கள் கிரிக்கெட்டை தங்கள் விருப்பமாக ஏற்றுக்கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சுழற்பந்து வீச்சை தேர்வு செய்தனர்.
அன்று ரஷீத் கான் சுமார் 250 இளம் வீர்கள் சுழற்பந்து வீசுவதைப் பார்த்தார். பின்னர் ரஷீத் இதை வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவிடம் கூறினார்.
இப்போது ஆப்கானிஸ்தானில் எத்தனை மர்ம சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள் என்று போக்லே இந்த வெள்ளிக்கிழமை மீண்டும் அவரிடம் கேட்டபோது, ரஷீத் கான் மிகவும் அமைதியான தொனியில், 'ஆயிரம் பேராவது இருப்பார்கள்' என்று பதிலளித்தார்.
சரியான எண்ணிக்கை நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஆப்கானிஸ்தானில் இருந்து ஐபிஎல் போட்டியில் தங்கள் முத்திரையை பதித்த சுமார் அரை டஜன் வீரர்கள் இருக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் லீக்குகள் அவர்களை தங்களுக்காக விளையாட அழைக்கின்றன.
ரஷீத் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உலகளவில் அங்கீகாரம் அளித்துள்ளனர். இவர்களில் ரஷீத், நூர், குர்பாஸ், நவீன் ஆகியோர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் வெவ்வேறு அணிகளில் விளையாடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் 'மர்ம சுழற்பந்து வீச்சாளர்'
இவர்களில் நான்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறந்த சுழற்பந்து வீச்சுக்கு பெயர் பெற்றவர்கள். ரஷீத் கான் கடந்த பத்து ஆண்டுகளாக டி20யில் நம்பர் ஒன் ஸ்பின்னர். 18 வயதான நூர் அகமது இந்த சீசனில் குஜராத் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஒருவர் பின் ஒருவராக தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உருவாகும் அளவுக்கு காபூலில் என்ன நடக்கிறது என்று போட்டியின் நடுவே கேள்வி எழுப்பினார் ஆகாஷ் சோப்ரா.
இந்த ஸ்பின்னர்கள், ஒரு வகையில், மர்ம ஸ்பின்னர்கள். அவர்களின் வேகமான ஆர்ம் ஆக்ஷனை பேட்ஸ்மேன்களால் 'படிக்க' முடிவதில்லை.
ரஷீத் கான் ஒரு முழு தலைமுறையையே ஊக்குவித்துள்ளார் என்று அனில் கும்ப்ளே பதிலளித்தார். இவரைப்பார்த்து மற்ற இளைஞர்களும் இவரைப்போல் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதுதான் ஆப்கானிஸ்தானில் சுழல்பந்து புரட்சிக்கு காரணம்.
பிரக்யான் ஓஜா ஒரு சுவாரசியமான பகுப்பாய்வு செய்தார். ”பொதுவாக ஒரு இளம் சுழற்பந்து வீச்சாளர் பயிற்சி பெற்ற பயிற்சியாளரிடம் செல்லும்போது பயிற்சியாளர் அவரது ஆக்ஷனில் கண்டிப்பாக சில மாற்றங்களைச் செய்வார். ஆனால், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் கோச்சிங் சிஸ்டம் அவ்வளவு வலுவாக இல்லாததால் அங்கு அந்த இளம் பந்துவீச்சாளர் எந்த ஆக்ஷனை பழகுகிறாரா அந்த ஆக்ஷனுடனேயே சர்வதேச கிரிக்கெட்டிலும் வந்துவிடுகிறார் மற்றும் மர்ம ஸ்பின்னராக ஆகிவிடுகிறார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பின்னால் குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை என்பது வெளிப்படையான விஷயம். காரணங்களின் கலவையானது இளம் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களை வடிவமைத்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் இடத்தைப்பிடிக்கிறார்களா ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்?
ஐபிஎல் மற்றும் பிற பெரிய டி20 லீக்குகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அதிக கிராக்கி உள்ளது. ஒன்று, அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் மிக இயல்பான முறையில் விரைவான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள், இரண்டாவதாக, தேசிய அணியை விட்டு வெளியேறி டி20 லீக்கில் விளையாட அங்குள்ள வீரர்கள் தயங்குவதில்லை.
இந்த ஆண்டு ஐபிஎல்லில் மேற்கிந்திய தீவுகள் வீரர்களின் ஆட்டத்தை பற்றி பேசினால், கைல் மேயர்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் தவிர வேறு யாரும் பெரிதாக நம்மை ஈர்க்கவில்லை. ஐபிஎல் ஜாம்பவான்களான கெய்ல், பொல்லார்ட், பிராவோ போன்றோர் ஓய்வு பெற்ற நிலையில், இந்த சீசனில் ஆண்ட்ரே ரஸ்ஸலின் பேட் பெரும்பாலும் அமைதியாக இருந்தது.
அல்ஜாரி ஜோசப், சுனில் நரைன், ரோவ்மன் பவல் போன்ற வீரர்களாலும் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை.
இவர்களை ஆப்கானிஸ்தான் வீரர்களுடன் ஒப்பிட்டால், கொல்கத்தா அணிக்காக ரெஹ்மானுல்லா குர்பாஸ் இரண்டு சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார், நவீன்-உல்-ஹக் தனது சிக்கனமான பந்துவீச்சுடன் லக்னெள அணியில் முக்கிய பங்கு வகிக்கிறார். அதே நேரத்தில் குஜராத் தரப்பில் ரஷீத் கான் மற்றும் நூர் அகமது தலா 15 மற்றும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மறுபுறம், ஃபசல் ஹக் ஃபரூக்கி ஹைதராபாத் அணியில் தனது இடத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பட மூலாதாரம், YEARS
குறைந்த பணத்தில் அதிரடி ஆட்டம்
ஆப்கானிஸ்தான் வீரர்களின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இவர்களில் பெரும்பாலான வீரர்கள் மிகக் குறைந்த பணத்திற்கு வாங்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் குர்பாஸ், ஃபரூக்கி, நவீன் உல் ஹக் ஆகியோர் வெறும் 50 லட்சத்துக்கு அணியில் இணைந்துள்ளனர். நூர் அகமது கடந்த சீசனில் பெஞ்சில் இருந்தார். இந்த சீசனில் அவர் ஐந்து போட்டிகளில் விளையாடி அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். அவரது விலை 30 லட்சம் மட்டுமே.
குறைந்த பணத்திற்கு வாங்கப்பட்டு, ஐபிஎல் தொடரில் எல்லா அணிகளுக்கும் விருப்பமானவர்களாக மாறியுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் விரைவில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் இடத்தை பிடிக்கக்கூடும்.
இந்த வீரர்கள் பற்றிய ஒரு பார்வை
நூர் அகமது

பட மூலாதாரம், YEARS
18 வயதான நூர் அகமது 56 டி20 போட்டிகளில் 26.3 சராசரியில் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில் அவர் ஐபிஎல் தொடரின் 6 பந்தயங்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில், இந்தியாவுக்கு எதிராக கேப்டன் திலக் வர்மா மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரின் விக்கெட்டுகள் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நூர் அகமது 2018 இல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பார்வைக்கு வந்தார். 2019 ஆம் ஆண்டில், வெறும் 14 வயதில், அவர் ஐபிஎல் ஏலத்தில் வந்தார். ஆனால் அவரை யாரும் வாங்கவில்லை. அதே ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக கேப்டன் திலக் வர்மா மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரின் விக்கெட்டுகள் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
16 வயதில், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அங்கு அவர் லியாம் லிவிங்ஸ்டனின் விக்கெட்டை வீழ்த்தினார். கடந்த ஆண்டு குஜராத் அணியால் வாங்கப்பட்ட அவருக்கு இந்த சீசனில் ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
ரஹ்மானுல்லா குர்பாஸ்

பட மூலாதாரம், YEARS
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸிடம் இருக்கும் சில சாதனைகள்,அவருக்கு எவ்வளவு திறமை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பர்கள் அடித்த அதிக ரன்கள் பட்டியலில் 582 ரன்களுடன் இவர் 10வது இடத்தில் உள்ளார்.
அவர் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் (127 ரன்கள்) அடித்தார். ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.
2019ல் அறிமுகமான குர்பாஸ், இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 582 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில், அவர் 41 டி20 சர்வதேச பந்தயங்களில் 1019 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில், ஐபிஎல்லின் ஏழு பந்தயங்களில் அவர் 26 சராசரியில் 183 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் குர்பாஸ் கொல்கத்தா அணிக்காக இரண்டு அரைசதங்களை அடித்தார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோரான 81 ரன்களும் அடங்கும்.
நவீன் உல் ஹக்
1999 செப்டம்பரில் காபூலில் பிறந்த நவீன்-உல்-ஹக் ஆப்கானிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். லங்கா பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், பிக் பாஷ் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக் உள்ளிட்ட உலகின் பல லீக்களிலும் நவீன் விளையாடியுள்ளார்.
நவீன் இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை 27 சர்வதேச டி20 பந்தயங்களில் விளையாடி 34 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
இந்த வீரர்கள் அனைவரும் இப்போதும் இளமையானவர்கள்தான். அவர்களிடமிருந்து இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். மேலும் ரஷீத் கான் கூறிய 'ஆயிரம்' என்ற எண்ணிற்கு அருகில் அவரது குறி பட்டாலும்கூட, உலகம் முழுவதும் உள்ள லீக்களில் ஆப்கானிஸ்தான் வீரர்களின் வெள்ளம் கண்டிப்பாக பெருக்கெடுத்து ஓடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












