கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்? 10 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது?

கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்?

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் கேப்டனாக கோலியும் இல்லை, லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டனாக கெளதம் கம்பீரும் இல்லை. இருப்பினும் நேற்று ஐ.பி.எல். ஆட்டம் முடிந்தபின் இருவரும் களத்தில் மோதிக்கொண்டனர்.

போட்டி முடிந்தபின் இரு அணி வீரர்களும் கை குலுக்கி வாழ்த்துச் சொல்லும்போது கோலியும், கம்பீரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். அமித் மிஸ்ரா, ஆர்சிபி கேப்டன் டூப்பிளெசிஸ், லக்னெள துணைப் பயிற்சியாளர் விஜய் தய்யா, நடுவர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கிவிட்டனர்.

இந்த மோதலுக்குப்பின் கேஎல் ராகுல், ஸ்டாய்னிஷுடன் கோலி நீண்டநேரம் பேசி, என்ன நடந்தது என்பது குறித்து விளக்கினார்.

போட்டியின் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீருக்கு அவர்களது போட்டிக்கான சம்பளத்தில் 100 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்குப் பின்...

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கம்பீரும், ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியும் மைதானத்தில் மோதிக்கொண்டனர். அதன்பின் இப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.

மோதலுக்கு காரணம் என்ன?

ஐபிஎல் தொடரின் 15-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடந்த போது, ஆர்சிபி அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னெள அணி வீழ்த்தியது. அப்போது, மைதானத்துக்குள் சென்ற லக்னெள அணியின் மென்டர் கெளதம் கம்பீர் ரசிகர்களைப் பார்த்து சத்தம் போடக்கூடாது, வெற்றி பெற்றுவிட்டோம் என்ற தொனியில் வாயில் விரல் வைத்து சைகை செய்தார்.

இதற்கு பதிலடியாக நேற்றைய ஆட்டத்தில் லக்னெள அணியை 108 ரன்களில் ஆர்சிபி அணி சுருட்டியபோதும், ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் விராட் கோலி கூடுதல் உற்சாகத்துடன் மைதானத்தில் வலம் வந்தார். குறிப்பாக குர்னல் பாண்டியா ஆட்டமிழந்தபோது , கோலி ரசிகர்களைப் பார்த்து வாயில் விரல் வைத்து சத்தம் போடாதீர்கள் என்று சைகை செய்து கம்பீருக்கு பதிலடி கொடுத்தார். லக்னெளவில் நேற்று நடந்த ஆட்டத்தில் லக்னெள அணியை விட ஆர்சிபிக்குதான் ஆதரவு அதிகமாக இருந்தது.

கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

கோலி - நவீன் உல்ஹக் வாக்குவாதம் ஏன்?

இரு அணி வீரர்களும் வாழ்த்துக்கூறி கைகுலுக்கியபோது லக்னெள வீரர் நவீன் உல் ஹக், கோலி ஏதோ பேசினர். அப்போது, திடீரென தன்னுடைய அணி வீரர்கள், கேப்டன் கேஎல்.ராகுலுடன் நுழைந்த கம்பீர், கோலியைத் தடுத்தார்.

கோலியும், கம்பீரும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, கம்பீரின் தோள் பட்டையில் கை வைத்து கோலி ஏதோ கூறினார். திடீரென இருவருக்கும் வார்த்தைகள் தடித்ததால் அங்கு நிலைமை மோசமானது, அங்கிருந்த அமித் மிஸ்ரா ஆர்.சி.பி. கேப்டன் டூப்பிளசிஸ், லக்னெள துணைப் பயிற்சியாளர் விஜய் தய்யா, நடுவர்கள் உடனடியாக தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டனர்.

கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

17-வது ஓவரில் நடந்தது என்ன?

ஆட்டத்தின் 17-வது ஓவரின்போது லக்னெள பேட்ஸ்மேன் நவீன் உல் ஹக், கோலி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. சிராஜ் வீசிய அந்த ஓவரின் கடைசிப் பந்தை நவீன் எதிர்கொண்டார், அது பவுன்ஸராகி பேட்ஸ்மேன் தோள்பட்டைக்கு உயரை சென்றது. இதற்கு நடுவர் நோபால் அளித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆர்சிபி 3வது நடுவரிடம் ரிவியூ செய்தது.

ஆனால், நோபால் என்று அறிவித்து 3வது நடுவர் தீர்ப்பளித்தார். அப்போது கோலி, நவீன் இடையே நடந்த மோதலையும், அமித் மிஸ்ரா, நடுவர் தலையிட்டு பிரித்தனர். இதுவே போட்டிக்குப் பிந்தைய நவீன் உல்ஹக் - கோலி வார்த்தை மோதலுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

100 சதவிகிதம் அபராதம்

போட்டியின் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீருக்கு அவர்களது போட்டிக்கான சம்பளத்தில் 100 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின்படி இரண்டாம் நிலை குற்றம் புரிந்ததாக இருவரும் ஒப்புக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதே போல லக்னோ பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்குக்கு 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

கோலி - டூப்பிளசிஸ் மந்தமான தொடக்கம்

கோலி, டூப்பிளசிஸ் மெதுவாகத் தொடங்கி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே அடித்தனர். அதன்பின் நவீன் உல் ஹக் ஓவரில் டூப்பிளசிஸ் ஒரு சிக்ஸரும், கோலி பவுண்டரியும் அடித்த ஸ்கோரை விரைவுப்படுத்தினர். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி 42 ரன்களைச் சேர்த்திருந்தது. இருவரும் 9 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.

ஆனால், அதன்பின் சுழற்பந்துவீச்சாளர்களான ரவி பிஷ்னாய், அமித் மிஸ்ரா, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரை குர்னல் பாண்டியா பயன்படுத்தியபின் ஆர்சிபி ரன் வேகமும் குறைந்தது, விக்கெட்டுகளும் சீராக விழுந்தன.

கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பவுண்டரிகளுக்குப் பஞ்சம்

ரவி பிஷ்னாய் வீசிய 9வது ஓவரில் விராட் கோலி இறங்கி அடிக்க முயன்று 31 ரன்னில் கூக்ளி பந்தில் ஏமாந்து பூரனால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். அதன்பின் வந்த அனுஜ் ராவத்(4) கிருஷ்ணப்பா பந்துவீச்சிலும், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பலவீனமாக இருக்கும் மேக்ஸ்வெல்(4) பிஷ்னாய் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை இழந்தார்.

சுயாஷ் பிரபுதேசாய்(6) மிஸ்ரா சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். 62 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த ஆர்சிபி அணி, அடுத்த 28 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதிரடி ஆட்டக்காரரும், இந்த சீசனில் அதிக சிக்ஸர், பவுண்டரிகள் அடித்த டூப்பிளசிஸ் களத்தில் இருந்தபோதும், ஆர்சிபி அணியால் 6 ஓவர்களுக்கும் மேலாக பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை. பவுண்டரிகள், சிக்ஸர் இல்லாததால் ஸ்கோரையும் விரைந்து உயர்த்தவும் முடியவில்லை.

கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஏமாற்றம் தந்த கேஜிஎப்

போட்டியின் நடுவே சிறிதுநேரம் மழைக் குறுக்கிட்டதையடுத்து 25 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தினேஷ் கார்த்திக் இந்த முறையும் ஏமாற்றி, 16 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய டூப்பிளசிஸ் 44ரன்னில் மிஸ்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 109 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆர்சிபி அணி, அடுத்த 17 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஆர்சிபி அணியில் கேஜிஎப்(KGF) எனச் சொல்லப்படும் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஃபா டூப்பிளசிஸ் ஆகிய 3 பேரும் ஸ்கோர் செய்யாவிட்டாலே அந்த அணிக்கு ஸ்கோர் பெரிதாக வராது என்பது இந்த ஆட்டத்திலும் உறுதியானது. இந்த சீசனில் மிகக்குறைந்த ஸ்கோரான 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் என ஆர்சிபி அணி பதிவு செய்தது.

கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஆர்.சி.பி.க்கு இந்த விஷப்பரீட்சை ஏன்?

ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் 3வது வீரராக அனுஜ் ராவத்தையும், 4வது வீரராக பிரபு தேசாயையும் களமிறக்கி பரிசோதித்தது. ஆனால், கடந்த சில போட்டிகளில் மகிபால் லாம்ரோர் 3வது வீரராக களமிறங்கி அருமையாக பேட் செய்துவரும் நிலையில் அவரை 7-வது வீரராக களமிறக்கினர்.

அதுமட்டுமல்லாமல், அனுஜ் ராவத், பிரபுதேசாய் இருவரின் டிராக் ரெக்கார்டும் பெரிதாக இல்லை, இருவரும் ஃபார்மில் இல்லாத நிலையில் இந்த பரிசோதனையைச் செய்தது.

இந்த சீசனில் மட்டும் 3வது வீரர் இடத்துக்கு மட்டும் தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல், பிரேஸ்வெல், லாம்ரோர், ஷாபாஸ், அனுஜ் ராவத் ஆகியோரை ஆர்சிபி அணி களமிறக்கி பரிசோதித்துள்ளது. ராஜ் பட்டிதார் காயத்தால் விலகியதால் அந்த இடத்துக்கு சரியான வீரர் ஆர்சிபிக்கு அமையவில்லை.

கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பவர் ப்ளேயில் பாதி கதை முடிந்தது

முதல் ஓவரில் ஆபத்தான பேட்ஸ்மேன் மேயர்ஸ் டக்அவுட்டில் வெளியேறியதில் இருந்து அடுத்தடுத்து சீராக லக்னெள அணி விக்கெட்டுகளை இழந்தது.

குர்னல் பாண்டியா அதிரடியாக 3 பவுண்டரிகளை சிராஜ் ஓவரில் விளாசினாலும், மேக்ஸ்வெல் பந்துவீசிய 3வது ஓவரிலேயே குர்னல் பாண்டியா லாங்-ஆனில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்னில் வெளியேறினார்.

அப்போது ரசிகர்களைப் பார்த்த கோலி, வாயில் விரல் வைத்து சத்தம் போடவேண்டாம் என்று சொல்லவில்லை, உற்சாகப்படுத்துங்கள் என்று ஆர்வத்துடன் தெரிவித்தார்.

கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

அதன்பின் ஆயுஷ் பதோனி(4) ரன்னில் ஹேசல்வுட் பந்திலும், தீபக் ஹூடா(1) ஹசரங்கா பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர். பவர்ப்ளேயில் லக்னெள அணி, 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதிலிருந்து லக்னெள அணி கடைசி வரை மீளவில்லை.

ஒருவரும் நிலைக்கவில்லை

ஸ்டாய்னிஷ்(13), நிகோலஸ் பூரன்(9) இருவரும் அதிரடியாக சிக்ஸர் அடித்தநிலையில் கரன் சர்மா ஓவரில் விக்கெட்டை இழந்தனர். இருவரும் ஆட்டமிழந்தவுடனேயே லக்னெளவின் வெற்றி மூழ்கத் தொடங்கியது. கடைசி நேரத்தில் கிருஷ்ணப்பா கவுதம்(23) ரன்கள் சேர்த்தார்.

கடைசிவரிசை பேட்ஸ்மேன்களான ரவி பிஷ்னாய்(5), அமித் மிஸ்ரா(19), நவீன் உல்ஹக்(13) என வரிசையாக வீழ, 19.5 ஓவர்களில் 108 ரன்களில் லக்னெள அணி சுருண்டு 18 ரன்னில் தோல்வி அடைந்தது.

லக்னெள வென்றிருக்க முடியுமா?

இந்த ஆட்டத்தில் லக்னெள அணி எளிதாக வென்றிருக்க முடியும். லக்னெள அணி இந்த குறைந்த ஸ்கோரை அடிக்க பெரிதாக மெனக்கெடத் தேவையும் இல்லை. தொடக்கத்தில் இருந்து அடித்து ஆடாமல் நிதானமாக, விக்கெட்டை இழக்காமல் ஆடினாலே ஆட்டத்தின் போக்கு திரும்பி இருக்கும், ஸ்கோர் எளிதாக வந்திருக்கும்

ஆனால், களத்துக்கு வந்த புதிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆடுகளத்தின் தன்மையை அறியாமல், செட்டில் ஆகாமல் பெரிய ஷாட்களுக்கு முயற்சித்தது தோல்விக்கான முதல் காரணமாகும்.

அதுமட்டுமல்லாமல் தொடக்கம் முதல் கடைசிவரை லக்னெள அணியில் பெரிய ரன்களுக்கான பார்ட்னர்ஷிப் ஏதும் இல்லை. ஆர்சிபி அணியில் டூப்பிளசிஸ்-கோலி கூட்டணி அமைத்த பார்ட்னர்ஷிப் கூட லக்னெள அணியில் அமைக்கவில்லை என்பது தோல்விக்கான காரணமாகும்.

இதன் மூலம் எந்த புதிய பேட்ஸ்மேனும் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து செட்டில் ஆகி பேட் செய்யவில்லை என்பதே நிதர்சனம்.

கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

டி20 போட்டிக்கு இப்படி ஒரு ஆடுகளமா?

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் 2வது முறையாகத் தோற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 137 ரன்களை எட்ட முடியாமல் இதேபோன்று லக்னெள அணி பரிதாபமாகத் தோற்ற நிலையில் குறைந்த ஸ்கோரை எட்டமுடியாமல் தோற்ற 2வது போட்டி இதுவாகும்.

லக்னெள ஆடுகளம் மிகவும் மந்தமான ஆடுகளம். பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்காத, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றது என்பதால், இங்கு 130 ரன்கள் சேர்த்தாலே முதலில் பேட்டிங் செய்த அணி தரமான பந்துவீச்சாளர்களை வைத்திருந்தால் ஸ்கோரை டிபெண்ட் செய்துவிடலாம்.

அது மட்டுமல்லாமல் பந்து பேட்ஸ்மேன்களைப் பார்த்து வேகமாக வராது என்பதால் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதும் கடினம். இந்த ஆட்டத்தில்கூட இரு அணிகளும் சேர்ந்து 6 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டு இருந்தன.

கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஆடுகளம் குறித்து ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ இந்த ஆடுகளம் பெங்களுரு ஆடுகளத்துக்கு நேர் எதிராக இருக்கிறது. முதல் 6 ஓவர்களில் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் வெற்றிக் கூட்டணியாக இருந்தது. இதுபோன்ற ஆடுகளத்தில் முதலில் பேட் செய்வது முக்கியம். சுழற்பந்துவீச்சை ஆடுவது இந்த ஆடுகளத்தில் கடினம். ஆனால் பெங்களூருவில் எளிதாக இருக்கும்.

135 ரன்கள் வரும் என எதிர்பார்த்தேன். இருப்பினும் எங்களால் ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடி்தது. இதுபோன்ற ஆடுகளத்தில் ஸ்கோர் செய்வது மிகக்கடினம். தொடக்கத்திலேயே 3 அல்லது 4 விக்கெட்டுகளைவீழ்த்திவிட்டால், எதிரணி மீள்வது கடினம் என்று எங்கள் பந்துவீச்சாளர்களிடம் தெரிவித்தேன். கரண் சர்மா பந்துவீச்சு அருமையாக இருந்தது” எனத் தெரிவித்தார்

லக்னௌ கேப்டன் ராகுலுக்கு என்ன ஆயிற்று?

லக்னெள கேப்டன் கே.எல்.ராகுல் பீல்டிங் செய்தபோது திடீரென தொடைதசைப் பகுதியில் பிடிப்பு ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். இதனால் குர்னல் பாண்டியா கேப்டன் பொறுப்பைக் கவனித்தார்.

லக்னெள அணியின் தற்காலிக கேப்டன் குர்னல் பாண்டியா கூறுகையில் “ ஆட்டத்தின் முதல்பாதியில் நாங்கள் ஆர்சிபியை சுருட்டினோம், அது அணியின் ஒட்டுமொத்த உழைப்பு. எங்களின் பந்துவீச்சு மகிழ்ச்சியளிக்கிறது. 126 ரன்கள் என்பது அடைந்துவிடக்கூடியதுதான் ஆனால், திட்டங்களை சரியாகச் செயல்படுத்தவில்லை. ராகுலின் காயம் வருத்தத்துக்குரியது. அவரின் காயம் குறித்து விரைவில் மருத்துவக் குழு தெரிவிக்கும்” எனத் தெரிவித்தார்.

கோலி - கம்பீர் திடீர் மோதல் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

5-வது இடத்தில் ஆர்.சி.பி.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி 6-வது இடத்துக்கு சரிந்துள்ளது. 5 அணிகள் 10 புள்ளிகளுடன் உள்ளதால், ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது.

இனிவரும் ஒவ்வொரு ஆட்டங்களிலும் அணிகள் வெற்றி பெறுவதைவிட எப்படி வெற்றி பெறுகின்றன, தோற்கும் அணிகள் எவ்வாறு தோற்கின்றன என்பது முக்கியமாகக் கருதப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: