புதிய இளம் நாயகன் உதயம்! ஐ.பி.எல். சரவெடி ஆட்டம் இந்திய அணியில் நுழைவதற்கான திறவுகோல் ஆகுமா?

புதிய நாயகன் ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், விதான்ஷு குமார்
    • பதவி, விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக

மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல்.லின் ஆயிரமாவது போட்டியில் தனி ஆவர்த்தனம் செய்த 21 வயதேயான இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் தொடர்ச்சியாக சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், தோனி உள்ளிட்ட ஜாம்பவான்களையும், இந்திய அணி கேப்டன் ரோகித் மற்றும் தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் என்று வர்ணிக்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், தன்னால் 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்து சாதிக்க முடியும் என்பதை நேற்றைய போட்டியில் நிரூபித்துள்ளார். அதுவும், ஒரு புறம் விக்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்து கொண்டிருக்கும் போது, எந்தவொரு நெருக்கடிக்கும் இடம் கொடுக்காமல் சரியான பார்ட்னர்ஷிப் இல்லாமலேயே ஜெய்ஸ்வால் தனி ஆவர்த்தனம் செய்ததன் மூலம் இளம் வீரர்களில் தனித்துவம் மிக்க ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

மும்பைக்கு எதிராக தனி ஆவர்த்தனம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடிய ஷாட்டுகள் அனைத்தும் தரமானவை. சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த அனுபவம் மிக்க வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சுழற்பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லா ஆகியோரின் பந்துகளில் அவர் சர்வசாதாரணமாக சிக்சர்களை விளாசி அசத்தினார். இங்கிலாந்தின் பிரம்மாஸ்திரமாக, எதிரணிகளை கதிகலங்கச் செய்யும் ஜோப்ரா ஆர்ச்சர் ஓவரில் அடுத்த பந்துகளில் மிட் விக்கெட் திசையில் ஜெய்ஸ்வால் சிக்சர்களை விளாசி பிரமிக்க வைத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றுப் போனாலும் கூட, தனி ஒருவனாக களமாடி சதம் கண்ட ஜெய்ஸ்வாலே நேற்றைய ஆடடத்தில் நாயகனாக ஜொலித்தார். ஐ.பி.எல். வாயிலாக தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஜெய்ஸ்வால் இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

திறமைசாலிகளை அடையாளம் காட்டும் ஐ.பி.எல். தொடர்

ஒரு காலத்தில் ரஞ்சிக் கோப்பையும் இரானி கோப்பையும் இந்த நிலையில் இருந்தன. அணியில் அறிமுகமாக வேண்டுமென்றால் ரஞ்சி கோப்பையில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கவேண்டி இருந்தது.

இரானி டிராஃபிக்காக, ரஞ்சி சாம்பியன்களுக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் நடைபெறும் போட்டியில் சிறப்பாக விளையாடி தேர்வாளர்களை ஈர்க்க வேண்டியிருந்தது.

இதில் நாட்டின் சிறந்த மற்றும் ஃபார்மில் உள்ள எல்லா வீரர்களும் விளையாடியதால், அனைவரையும் ஒரே போட்டியில் பார்க்கும் வாய்ப்பு தேர்வாளர்களுக்கு கிடைத்தது.

ரஞ்சி டிராஃபி இப்போதும் நாட்டின் முதல் நிலை நான்கு நாள் போட்டியாக இருக்கும்போதிலும், டி20-ல் இளம் திறமைகளை சோதிக்க ஐபிஎல், ஒரு தனித்துவமான தளத்தை தேர்வாளர்களுக்கு வழங்கியுள்ளது.

ஜஸ்பிரீத் பும்ரா, ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா குணால் பாண்டியா, ரிதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, ராகுல் திரிபாதி ஆகியோர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அணிக்கு வந்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் சில புதிய திறமைசாலிகள் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை கண்டிப்பாகப்பெறுகிறார்கள்.

சென்னைக்கு எதிராக பேட்டின் இடிமுழக்கம், தோனி பாராட்டு

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

ஒரு நல்ல இளம் வீரருக்கு அடையாளம், அவர் எப்போதும் மூத்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முயற்சிப்பதே. ஜெய்ஸ்வாலும் இன்னிங்ஸுக்கு முன் ராபின் ஊத்தப்பாவுடன் ஆலோசனை செய்தார். 'நீங்கள் உங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாடுங்கள், அதாவது ஆக்ரோஷமான பேட்டிங்கை மட்டுமே நம்புங்கள்' என்று ஊத்தப்பா அவரிடம் கூறினார்.

யஷஸ்வி இதே போல் செய்து இன்னிங்ஸின் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி அடித்தார். பின்னர் ஆகாஷ் சிங் வீசிய மூன்றாவது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை விளாசினார்.

யஷஸ்வியின் தரப்பிலிருந்து இதுபோன்ற பவுண்டரி மழை பொழிந்து கொண்டிருந்ததால், மறுமுனையில் 'ஜோஸ் தி பாஸ்' ஜோஸ் பட்லர் ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதையே பார்வையாளர்கள் மறந்துவிட்டனர்.

வர்ணனையாளர் கெவின் பீட்டர்சனும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பாராட்டினார். "ஜோஸ் பட்லருடன் பேட்டிங் செய்துகொண்டு, அவரை விட ஆக்ரோஷமாக இருக்கும் பேட்ஸ்மேனை உலக கிரிக்கெட்டில் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால் இந்த இன்னிங்ஸில், ஜெய்ஸ்வால் அவ்வாறு செய்துள்ளார்," என்று அவர் தெரிவித்தார்.

முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பான 86 ரன்களில், பட்லர் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக அதாவது 27 ரன்கள் மட்டுமே அடித்தார் என்பதை பார்க்கும்போது, யஷஸ்வியின் இந்த வேகமான பேட்டிங்கை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? பட்லர் ஆட்டமிழந்த பிறகும் ஜெய்ஸ்வால் நிற்கவில்லை.

அவர் 26 பந்துகளிலேயே அரைசதத்தை பூர்த்தி செய்தார். 43 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துஷார் தேஷ்பாண்டேயின் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார் மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 179 ஆக இருந்தது.

அவரது இன்னிங்ஸின் உதவியுடன் ராஜஸ்தான் அணி முதல் முறையாக ஜெய்ப்பூரில் 200 ரன்களுக்கு மேல் குவித்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இன்னிங்ஸைப் பாராட்டி, எட்டுவதற்கு சிரமான இலக்கை ராயல்ஸ் அணி நிர்ணயித்ததே சென்னையின் தோல்விக்குக் காரணம் என்று கூறினார்.

இன்னிங்ஸின் தொடக்கத்தில் யஷஸ்வி ஆக்ரோஷமான பேட்டிங் செய்த விதம், போட்டியின் திசையை ராஜஸ்தானை நோக்கித்திருப்பியது என்று அவர் கூறினார்.

ஜெய்ஸ்வாலின் அற்புதமான இன்னிங்ஸுக்குப் பிறகு தென்னாப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்திடம், ஜெய்ஸ்வால் இந்திய அணியின் கதவைத் தட்டுகிறாரா என்று கேட்கப்பட்டது.

"இந்தியாவில் நிறைய திறமையானவர்கள் உள்ளனர். ஆனால் யஷஸ்வி சிறப்பானவர். அவர் அணியில் இடம்பெற வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை, அவர் தொடர்ந்து இதுபோன்ற இன்னிங்ஸ்களை விளையாட வேண்டும்" என்று ஸ்மித் கூறினார்.

சிறந்த ஃபார்ம்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

நடப்பு ஐபிஎல் போட்டிக்கு முன் சையது முஷ்டாக் அலி போட்டியில் மும்பை அணி கோப்பையை வென்றதில் யஷஸ்விக்கு முக்கிய பங்கு உண்டு.

ஒன்பது இன்னிங்ஸ்களில் அவர் 33 ரன் சராசரி மற்றும் 142 ஸ்ட்ரைக் ரேட்டில் 266 ரன்கள் எடுத்தார். மும்பையின் இன்னிங்ஸுக்கு வலுவான அடித்தளம் ஏற்பட இது உதவியது.

இது தவிர அவர் 15 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் 1845 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோரான 265 ரன்களும் அடங்கும்.

அதே நேரத்தில் ஐபிஎல் 2023 இல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எட்டு இன்னிங்ஸ்களில் 38 ரன் சராசரியுடன் 304 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் 3 அரை சதங்கள் அடித்துள்ளார் மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 147.57 ஆகும்.

சீசனில் அதிக ரன்களை எடுத்ததன் அடிப்படையில் அவர் ஆறாவது இடத்தில் உள்ளார். வரும் பந்தயங்களில் அவர் தனது நிலையை மேலும் வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கில் மாற்றம்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது டெக்னிக்கில் சிறிது மாற்றம் செய்துள்ளார். இது அவரது பேட்டிங்கை மேலும் மேம்படுத்தியுள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான தீப் தாஸ்குப்தா கருதுகிறார்.

சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கடந்த சீசனில் ஒரு பந்தை விளையாடுவதற்கு முன் அவரது ட்ரிகர் மூவ்மெண்டு மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் அவர் சற்று நிலையற்றவராக இருந்தார். மேலும் வேகப்பந்துவீச்சை விளையாடுவதில் தாமதமானது," என்று கூறினார்.

"இந்த சீசனில் அவர் ஷாட் ஆடுவதற்கு முன்பு அசைவைக் குறைத்திருப்பதை நாம் காண்கிறோம். இதன் காரணமாக அவர் நேர் பேட்டால் விளையாட முடிகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக டைமிங்கிலும் அவர் ஈடுபடுகிறார்," என்று அவர் கூறினார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், BCCI/IPL

ஜெய்ஸ்வாலின் சவால்கள்

பவர்பிளேயில் வேகமாக பேட் செய்யக்கூடியவராகவும், பின்னர் வேகம் சற்று குறைந்துவிடக்கூடிய பேட்ஸ்மேனாகவும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை கருதப்படுகிறார்.

யஷஸ்வி ஒரு பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் என்ற தனது இமேஜை விட்டுவிட்டு முழு இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்தும் திறன் கொண்டவராக மாற வேண்டும்.

21 வயதான யஷஸ்விக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அவர் இன்னும் தனது உச்சத்தை எட்டவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதாவது யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகி வரும் வீரராக உள்ளார். விரைவில் அவர் அணியில் இடம்பெறும் வாய்ப்பும் உள்ளது.

இதற்கு ஸ்மித் கூறியது போல் அவர் தொடர்ந்து பெரிய இன்னிங்ஸுகளை விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: