ஜெய்ஸ்வால் நிர்ணயித்த இமாலய இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டிப் பிடிக்க முக்கியக் காரணம் என்ன?

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் புயல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடித்த அதிரடி சதம் வீணாகிப் போனது.
மும்பை அணியின் வெற்றியில் கேமரூன் கிரீன், 360 டிகிரி பேட்ஸ்மேன் சூர்யகுமார், அதிரடி வீரர் டிம் டேவிட் ஆகிய மும்மூர்த்திகளுக்கு முக்கிய பங்கு உண்டு. வெற்றியை நோக்கி கிரீன், சூர்யகுமார் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடைசியில் டிம் டேவிட் தனது வாண வேடிக்கையால் போட்டியை தித்திப்பாக முடித்துக் கொடுத்தார்.
ஐ.பி.எல். தொடங்கி ஆயிரமாவது போட்டியாக பதிவான இந்தப் போட்டி, வரலாற்றில் அழுத்தமாக இடம் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 3 போட்டிகளில் களம் கண்ட அர்ஜூன் டெண்டுல்கர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பிடித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன் குவிப்பில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பங்கு என்ன? இமாலய இலக்கைத் துரத்துகையில் மும்பை இந்தியன்ஸ் அணி எத்தகைய பாணியை பின்பற்றியது? பரபரப்பான இந்தப் போட்டியின் முக்கியமான தருணங்கள் என்ன? இக்கட்டான சூழலில் இரு அணிகளும் எத்தகைய உத்திகளை கைக்கொண்டன?
இளம் நாயகன் ஜெய்ஸ்வால் விஸ்வரூபம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றாலும் அதில் ஆறுதலாக அம்சாக இருப்பது யாஹல்ஸிவி ஜெய்ஸ்வால் பேட்டிங் மட்டும்தான். இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஸ்கோர் ஏதும் அடிக்கவில்லை.
ஜெய்ஸ்வாலுக்கு அடுத்து ராஜஸ்தான் அணியில் பெரிய ஸ்கோர் என்பது பட்லர் அடித்த 18 ரன்கள் என்பது வேதனைக்குரியது. சாம்ஸன்(14), படிக்கல்(2), ஹோல்டர்(11),ஹெட்மெயர்(8), ஜூரேல்(2) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மண்ணைக் கவ்வினர். ஒட்டுமொத்த ராஜஸ்தான் அணியையும் ஜெய்ஸ்வால் நேற்று தனது தோளில் சுமந்து சென்றும், அனைத்தும் வீணாகியது.
தனி ஒருவனாகக் களமாடிய 21 வயதான ஜெய்ஸ்வால், அனுபவம் மிக்க பேட்ஸ்மேன் போல் நேற்று ஷாட்களை அடித்தார். 32 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், அடுத்த, 21 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
அத்தனையும் தரமான ஷாட்கள்
ஜெய்ஸ்வாலின் தரமான ஷாட்கள் அவரின் பேட்டிங் திறமைக்கு சான்றாகும். ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பந்தில் சிக்ஸர் விளாசியது, அனுபவம் மிக்க பியூஷ் சாவ்லா பந்தில் ஓவர் பாயிண்டில் சிக்ஸர், மெரிடித் ஓவரில் ஃபைன்லெக்கில் சிக்ஸர், கவர் டிரைவ் ஷாட்டில் பவுண்டரி அடித்து அரைசதம், பிரண்ட் ஸ்குயரில் ஃபுல்ஷாட் அடித்து சதத்தை நிறைவு செய்தது என ஜெய்ஸ்வால் ஷாட்கள் அனைத்தும் ஏ-கிளாஸ் ரகம்.
அதிலும் சர்வதேச அரங்கில் பேட்ஸ்மேன்களை அதிரவைக்கும் ஆர்ச்சர் பந்தில் ஜெய்ஸ்வால் சிக்ஸர் அடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. 62 பந்துகளில் 124 ரன்களை விளாசிய ஜெய்ஸ்வால் ஆட்டம், போராட்டம் அனைத்தும் வீணாகினாலும் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

பட மூலாதாரம், BCCI/IPL
மும்பை பந்துவீச்சு எப்படி?
மும்பை அணியின் பந்துவீச்சு நேற்று மிகவும் சுமார் ரகம் என்றுதான் கூற முடியும். குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா தவிர மற்ற எந்த பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாக பந்துவீசவில்லை. குறிப்பாக மெரிடித் 51 ரன்களையும், அர்ஷத் கான் 39 ரன்களையும் வாரிவழங்கினர். அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், 13 ரன்ரேட் அதிகபட்சமாகும். கேமரூன் கிரீனும் 10 ரன்ரேட்டில் ரன்களை வழங்கியதுதான் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய ஸ்கோர் செய்யக் காரணமாகும்.
மும்பை அணியும் ‘மூன்று வீரர்களும்’
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த வெற்றிக்கு கேமரூன் க்ரீன், 360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் ஆகியோரைத் தான் குறிப்பிட வேண்டும். அதிலும் இந்த சீசனில் அற்புதமாக ஆடி வரும் கேமரூன் க்ரீன் 26 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார். இதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும்.
சூர்யகுமார் யாதவ் களத்துக்கு வந்தவுடனே அஸ்வின் பந்தில் லெக் சைடில் சிக்ஸர் விளாசினார். ராஜஸ்தான் வீரர் யார் பந்துவீசினாலும் மைதானத்தின் 360 டிகிரி கோணத்திலும் பவுண்டரி, சிக்ஸராக சூர்யகுமார் பறக்கவிட்டார்.
இவருக்கு எப்படி பந்து வீசுவதென்றே தெரியாமல் நேற்று ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் திகைத்து நின்றனர். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 24 பந்துகளில்அரைசதம் அடித்தார், இந்த அரைசதத்தில் மட்டும் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள். அதாவது, 40 ரன்கள் சிக்ஸர், பவுண்டரியில் வந்தன. சூர்யகுமார் 55 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் மும்பை சேஸிங் இன்னும் வேகமாக இருந்திருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
டிம் டேவிட் நேற்றைய ஆட்டத்தின் ஹீரோ. 14 பந்துகளைச் சந்தித்த டேவிட் 45 ரன்கள்(5 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி) சேர்த்து வெற்றிக்கு காரணமாகத் திகழ்ந்தார். திலக் வர்மா 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டிம் டேவிட் களமிறங்கிய போது, மும்பை அணி வெற்றிக்கு 24பந்துகளில் 57 ரன்கள் தேவை என்ற நெருக்கடியில் இருந்தது. ஹோல்டர் வீசிய 17-வது ஓவரில் டேவிட் ஒரு சிக்ஸர், திலக்வர்மா அடித்த பவுண்டரியால் 14 ரன்கள் கிடைத்தன.
சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் டேவிட் சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்தான் அந்த சம்பவம் நடந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
வரலாற்றுத் தருணம்
கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. டிம் டேவிட், திலக் வர்மா களத்தில் இருந்தனர்.
ஜேஸன் ஹோல்டர் வீசிய பந்தை டிம் டேவிட் எதிர்கொண்டார். முதல் பந்து வைடு ஃபுல்டாசாக வீசப்படவே அதை சிக்ஸருக்கு டிம் டேவிட் அனுப்பினார்.
2வது பந்தும் அவுட்சைட் ஆஃபில் ஃபுல்டாசாக ஹோல்டர் வீச, அந்தப் பந்தையும் மிட்விக்கெட் திசையில் 84 மீட்டருக்கு சிக்ஸராக டேவிட் பறக்கவிட்டார்.
3-வது பந்தையும் ஹோல்டர் ஃபுல்டாசாக வீச, மிட்விக்கெட்டில் மீண்டும் அபாரமான சிக்ஸராக டிம் டேவிட் அடித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரலாற்று வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.
ஆஸ்திரேலிய வீரரான டிம் டேவிட் 14 பந்துகளில் 5 சிக்ஸர், 2பவுண்டரி உள்ளிட்ட 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். திலக் வர்மா 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஹோல்டருக்கு கடைசி ஓவர் கொடுத்தது சரியா?
மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டரான ஜேஸன் ஹோல்டர், பேட்டிங் ஆல்ரவுண்டரேத் தவிர பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அல்ல. டி20 போட்டிகளுக்கும் புதியவர், நெருக்கடி நேரத்தில் பந்துவீசி அனுபவம் இல்லாதவர்.
அதுமட்டுமல்லாமல் டிம் டேவிட் போன்ற உயரமான, வலுவான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக யார்கர்களை துல்லியமாக வீச வேண்டும், யார்கர்கள் சற்று தவறினாலும், பந்தை சிக்ஸரில்தான் பார்க்க நேரிடும். இதே கதைதான் நேற்றும் நடந்தது. யார்கர் வீசுவதற்கும் போதுமான அனுபவமும் ஹோல்டருக்கு இல்லை.
கடந்த 3 ஓவர்களையும் மோசமாக வீசிய ஹோல்டரிடமே கடைசி ஓவரையும் வழங்கியது, கேப்டன் சாம்ஸன் வெற்றியை தூக்கி மும்பையிடம் கொடுத்ததற்கு சமம்.

பட மூலாதாரம், BCCI/IPL
ராஜஸ்தான் தோல்விக்கு யார் காரணம்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேர்த்த 213 ரன்கள், டிஃபெண்ட் செய்யக்கூடிய ஸ்கோர் என நம்பப்பட்டது. அதிலும், வான்ஹடே மைதானம் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியான இந்த ஆடுகளத்தில் கூட 20 ஓவர்களில் இதை சேஸிங் செய்வது கடினம் என நம்பப்பட்டது.
ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 பந்துவீச்சாளர்களால்தான் நேற்றைய தோல்வி எழுதப்பட்டது என்றால் மிகையல்ல. முதலாவது ஜேஸன் ஹோல்டர், குல்தீப் சென், டிரன்ட் போல்ட். இதில் 3.3 ஓவர்களை வீசிய ஜேஸன் ஹோல்டர் 55 ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இதன் மூலம் டெத்ஓவர்கள் வீசுவதற்கு லாயக்கில்லாத பந்துவீச்சாளராகினார்.
சர்வதேச அளவில் சிறந்த பந்துவீச்சாளராக கருதப்படும் டிரன்ட் போல்ட் கூட நேற்று 43 ரன்களை வாரிக்கொடுத்தார். குல்தீப் ஒரே ஓவரில் 20 ரன்களைக் கொடுத்தார். இந்த 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து, 118 ரன்களை வழங்கிய வள்ளல்களாகினர். இந்த 3 பந்துவீச்சாளர்களைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர்.

பட மூலாதாரம், BCCI/IPL
டெத் ஓவரை ஹோல்டருக்குப் பதிலாக சஹல் அல்லது டிரன்ட் போல்ட் அல்லது சந்தீப் சர்மாவுக்கு கேப்டன் சாம்ஸன் வழங்கியிருக்கலாம்.
200க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து, கைமேல் கிடைத்த வெற்றியை ராஜஸ்தான் அணி தாரை வார்த்துவிட்டது. 200 ரன்களை அடித்தும் அதை டிஃபெண்ட் செய்யக்கூடிய முடியாமல் ராஜஸ்தான் அணி தோற்றது என்பது முழுக்கமுழுக்க பந்துவீச்சாளர்களின் தோல்வியாகவும், திட்டமிடப்படாத கேப்டன்ஷிப்பாகவும்தான் பார்க்கப்பட வேண்டும்.
அஸ்வினும் 6 சிக்ஸர்களும்
அதேசமயம் ரவிச்சந்திர அஸ்வின் அற்புதமாக பந்துவீசி 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சஹலும் 3 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளி்ல் மட்டும் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் மைல்கல்லை எட்டினார். இந்த சீசனில் 200 பந்துகளை வீசியுள்ள அஸ்வின் இதுவரை 6 சிக்ஸர்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஐபிஎல் போட்டியில் 10 அணிகளாலும் விலைக்கு வாங்கப்படாமல், பதிலி வீரராக உள்ளே வந்த சந்தீப் சர்மா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து ரோஹித் சர்மா விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த 3 வீரர்களும் தங்களின் பங்களிப்பை சரியாக அளித்தனர்.
கடைசி 4 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது.இந்த ரன்களைக் கூட ராஜஸ்தான் அணியால் டிஃபெண்ட் செய்ய முடியவில்லை என்பது வேதனைதான். இந்த ஆட்டத்தில் மும்பை அணிக்கு திருப்புமுனையாக அமைந்த தருணங்கள் ஹோல்டர் ஓவரில்தான் அமைந்தன என்றாலும் அது மிகையல்ல. ஹோல்டர் வீசிய முதல் ஓவரிலேயே சூர்யகுமார் ஹாட்ரிக் பவுண்டரிகளுடன் 14 ரன்கள் குவித்தார், அவரின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி டிம் டேவிட் வெற்றி பெற வைத்தார்.
800க்கும் அதிகமான ரன்கள்
ஐபிஎல் தொடரில் நேற்றுநடந்த 2 போட்டிகளில் மட்டும் மொத்தம் 800 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய ஆட்டமும் 200 ரன்களை சேஸிங் செய்த ஆட்டமாக அமைந்தது. அதேபோல் இந்த ஆட்டமும் 213 ரன்களை சேஸிங் செய்த போட்டியாக வரலாறு படைத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நேற்று பிறந்தநாள், அவரின் இந்த பிறந்தநாளுக்கு மும்பை வீரர்கள் மிகச்சிறந்த பரிசாக இந்த வெற்றியை அளித்துள்ளனர்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஜெய்ஸ்வாலுக்கு புகழாரம்
வெற்றிக்குப்பின் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் “ சேஸிங்கைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த போட்டியிலும் இதேபோன்று நெருக்கமாக வந்து தோற்றோம். டிம் டேவிட் திறமையான பேட்ஸ்மேன். எங்களின் அணியில் சில மாற்றங்களை செய்தது கடினமானதுதான், சூழலுக்கு ஏற்றார்போல் வீரர்களை சேர்க்கவும் மாற்றங்கள் செய்தோம்.
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் அற்புதமாக இருந்தது. ஜெய்ஸ்வால் ஆட்டத்தை கடந்த ஆண்டே பார்த்தேன், அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த பேட்டிங் பவரை எங்கிருந்து பெற்றீர்கள் என்று அவரிடம் கேட்டிருக்கிறேன், இந்திய அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் சரியானவர்” எனத் தெரிவித்தார்

பட மூலாதாரம், BCCI/IPL
டிம் புயலில் சிக்கிய ஹோல்டர்
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தை திருப்ப எங்களுக்கு நம்பிக்கை கிடைத்தது. ஆனால், டிம் டேவிட் ஆட்டம் ஸ்பெஷலானது. கடைசி நேரத்தில் சிறிது பனிப்பொழிவு இருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த 9 போட்டிகளிலும் நாங்கள் ஆடிய ஆட்டங்கள் வெற்றியோ, தோல்வியோ அனைத்திலும் உயர்ந்த தரத்தை அளித்திருக்கிறோம்.
ஜெய்ஸ்வால் முயற்சி வீணாகியது. தனிப்பட்ட முறையில் அவரைப் பார்த்து மகிழ்கிறேன். அஸ்வின், சஹல் சிறப்பாகப் பந்துவீசனர், இருவரின் ஓவர்களும் விரைவாக முடிந்துவிட்டது. போல்ட், சந்தீப் டெத் ஓவர்களை நன்குவீசினர். ஆனால் ஹோல்டரின் ஓவரால் மும்பைக்கு பெரிய விலை கொடுத்துவிட்டோம், டேவிட்டின் புயலில் ஹோல்டர் சிக்கிவிட்டார்” எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












