'யார்க்கர்' வீசி கைகொடுத்த நடராஜன்: தோல்வியின் விளிம்பில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மீண்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்த சன்ரைசர்ஸ் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கடந்த வாரத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சென்று சன்ரைசர்ஸ் அணியை வார்னர் படை வென்றது. அதற்கு பழிதீர்க்கும் வகையில் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் தோற்கடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 2020ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்து வந்த சன்ரைசர்ஸ் இந்த வெற்றி மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆக்ரோஷம், வெற்றி அவசியம்
இரு அணிகளுக்குமே இந்த ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. புள்ளிப்பட்டியலில் அடுத்தக் கட்டத்துக்கு நகர்வதற்கு இந்த போட்டியில் வெற்றி அவசியம் என்பதால், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் இடையே தொடக்கம் முதலே கடும் ஆக்ரோஷம் காணப்பட்டது.
இரு அணி வீரர்களும் சளைக்காமல் தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி விளையாடினார்கள். சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா, கிளாசன் பேட்டிங்கில் அசத்தினர், பந்துவீச்சில், மார்க்கண்டே, நடராஜன், புவனேஷ்வர் என பட்டையைக் கிளப்பினர்.
இதற்கு பதிலடியாக டெல்லியின் மார்ஷ், பில் சால்ட் பேட்டிங்கில் மிரட்டி, வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். ஆனால், நடுவரிசை பேட்டிங் சொதப்பலால், சன்ரைசர்ஸிடம் டெல்லி பணிந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
திருப்புமுனையான சால்ட் விக்கெட்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 198 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அதை நோக்கி சீராக நகர்ந்தது. வார்னரை முதல் ஓவரிலேயே புவனேஷ்வர் குமார் வெளியேற்றிய நிலையில் பில் சால்ட், மிட்ஷெல் மார்ஷ் வலுவான அடித்தளம் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இருவரின் அதிரடியால் 11-வது ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 112 ரன்களை எட்டியிருந்தது. பில்சால்ட், மார்ஷ் இருவரும் அதிரடியான ஆட்டத்தால் அரைசதம் அடித்து வலுவான நிலையில்இருந்தார்கள். இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர், கணிப்புகளும் தெரிவித்தன.
ஆனால், பில் சால்ட்(59) ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததுதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 112 ரன் பாட்னர்ஷிப்பை மார்க்கண்டே உடைத்தது சன்ரைசர்ஸுக்கு பெரிய நிம்மதியை அளித்தது.
விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிவு
இந்த விக்கெட்தான் டெல்லி கேபிடல்ஸ் சரிவுக்கு முன்னுரையாக அமைந்து. அடுத்தடுத்து ஒவ்வோர் ஓவரிலும் ஒரு விக்கெட் வீழ்ந்தவாறு இருந்தது. 13-வது ஓவரில் மணிஷ் பாண்டே ஒரு ரன்னில் அபிஷேக் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
14-வது ஓவரில், ஹூசைன் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்று மார்ஷ்(63) விக்கெட்டை இழந்தார். ஹூசைன் வீசிய இந்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த மார்ஷ், 2வது சிக்ஸரையும் அடிக்க முயன்றபோதுதான் மார்க்ரமிடம் கேட்சாகினார். 16-வது ஓவரில் பிரியம் கார்க்(9), 17-வது ஓவரில் சர்பிராஸ் கான் என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்து தோல்வியில் முடிந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
டெல்லி கேபிடல்ஸ் எங்கே சறுக்கியது?
டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வி எப்படி நேர்ந்தது என்பது அந்த அணிக்கே சற்று ஆச்சர்யமாக இருந்திருக்கும். விக்கெட்டுகளை இழக்கிறோம் என்று உணர்வதற்குள் அடுத்த விக்கெட் இழப்பு என சன்ரைசர்ஸ் அளித்த நெருக்கடி வெற்றியை தாரைவார்க்க வைத்தது. ஒரு கட்டத்தில் வெற்றி வாய்ப்பு அதிகமிருந்த டெல்லி கேபிடல்ஸ் ஒரு விக்கெட்டில் பெரிய திருப்புமுனையைச் சந்தித்தது.
புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் விக்கெட்டை இழந்தது டெல்லி கேபிடல்ஸுக்கு அதிர்ச்சியளித்தது. ஆனால், விரைவாக மீண்ட டெல்லி அணிக்கு, பில் சால்ட்டுடன், மார்ஷ் நம்பிக்கையளித்தனர்.
உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார், ஹூசைன் ஓவர்களை மார்ஷ் - சால்ட் இருவரும் வெளுத்து வாங்கினர். குறிப்பாக உம்ரான் மாலிக் வீசிய ஓவரில் மார்ஷ் இரு சிக்ஸர்ளையும், சால்ட் 2 பவுண்டரிகள் என 22 ரன்களைச் சேர்த்தனர்.
இருவரின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேபிடல்ஸ் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பவர் ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப்பும், 29 பந்துகளில் அரைசத்தை எட்டியது.

பட மூலாதாரம், Getty Images
சால்ட் 29 பந்துகளிலும், மார்ஷ் 28 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இருவரின் அதிரடி அரைசதத்தைப் பார்த்து பெவிலியனில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியினர் மிகுந்த ரிலாக்ஸாக இருந்தனர், நம்பிக்கையுடன் காணப்பட்டனர். அனைத்தும் நன்றாகவே சென்றது. 54 பந்துகளில் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 2வது விக்கெட்டுக்கு 100 ரன்களை எட்டியது.
மார்க்கண்டே வீசிய 12வது ஓவரில்தான் அந்த திருப்புமுனை நிகழ்ந்தது. பில் சால்ட் விக்கெட்டுதான் தங்களின் சரிவுக்கான முகவுரை என்பதை டெல்லி கேபிடல்ஸ் உணரவில்லை. பில்ட் சால்ட் நேராக அடித்த பந்தை மார்க்கண்டே அருமையாக கேட்ச் பிடிக்க 59 ரன்னில் வெளியேறினார்.
இதன்பின் ஆட்டம் சன்ரைசர்ஸ் கரங்களுக்கு மாறியது. அடுத்துவந்த மணிஷ் பாண்டே(1) ரன்னில் ஆட்டமிழந்தார், பொறுப்புடன் பேட் செய்த மார்ஷ் 63 ரன்னில்(39 பந்துகள் ஒருபவுண்டரி, 6 சிக்ஸர்) ஹூசைன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மார்ஷ் ஆட்டமிழந்தவுடன் டெல்லி கேபிடல்ஸ் தோல்வி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டது.
அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்கள்
அனுபவம் இல்லாத நடுவரிசை பேட்ஸ்மேன்களால், அழுத்தத்தையும், நெருக்கடியையும் சமாளித்து ஆடத் தெரியவில்லை. பிரியம் கார்க், சர்பிராஸ்கான், மணிஷ் பாண்டே போன்ற பேட்ஸ்மேன்களுக்கு சர்வதேச அனுபவம், நெருக்கடியை சமாளித்து ஆடுதல் குறித்த புரிதல் இல்லாததால் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.

பட மூலாதாரம், BCCI/IPL
அபிஷேக் அற்புத தொடக்கம்
சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகியவை சிறப்பாக இருந்ததே காரணம். பேட்டிங்கில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா(67), கிளாசன்(53) அப்துல் சமது(28) ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது.
குறிப்பாக அபிஷேக் சர்மா தொடக்க வீரராக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்த போதிலும் அபிஷேக் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை மட்டும் கைவிடவில்லை. டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் வீசிய தவறான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸர்களுக்கும் அபிஷேக் சர்மா பறக்கவிட்டார்.
இசாந்த் சர்மா வீசிய தொடக்க ஓவரில் 2 பவுண்டரிகளை அபிஷேக் விளாசினார். மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தோடு இசாந்த் வீசிய 3வது ஓவரில் 4 பவுண்டரிகளை அபிஷேக் பறக்கவிட்டார்.
பவர் ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களை சன்ரைசர்ஸ் சேர்க்க அபிஷேக் சர்மா ஆட்டம் முக்கியக் காரணமாகும். டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்த அபிஷேக் சர்மா 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ரூ.13 கோடி ஹேரி ப்ரூக் என்னாச்சு!
ஆனால் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் யாரும், அபிஷேக் சர்மாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ராகுல் திரிபாதி பொறுப்பற்ற ஷாட் ஆடி (10) ரன்னில் மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம்(8), மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹேரி ப்ரூக் டக் அவுட்டிலும் வெளியேறினர்.
ரூ.13 கோடிக்கு வாங்கப்பட்ட ஹேரி ப்ரூக், ஒரு சதம் அடித்து தனது இருப்பை நிலைப்படுத்தினார். ஆனால், மற்ற இன்னிங்ஸ்களில் ஹேரி ப்ரூக் இதுவரை பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை. ஹேரி ப்ரூக் இந்தமுறையும் சொதப்பிவிட்டதைப் பார்த்து நெட்டிஸன்கள் அவரை வைத்து ஏராளமான மீம்ஸ்களை உருவாக்கி சமூகவலைத்தளதில் வெளியிட்டனர்
அற்புதமாக பேட் செய்த அபிஷேக் சர்மா 67 ரன்னில்(36பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், BCCI/ IPL
“கிளாசிக்” கிளாசன்
பின்வரிசையில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் கிளாசன் “கிளாசிக்”கான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவர்களுக்குப்பின் கிளாசன் தனது அதிரடிபேட்டிங்கை வெளிப்படுத்தி சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசினார். இவருக்குத் துணையாக அப்துல் சமதும், அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார்.
குறிப்பாக அக்ஸர் படேல் வீசிய 16வது ஓவரில் இரு பெரிய சிக்ஸர்களையும், நார்க்கியா வீசிய 17-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும் கிளாசன் பறக்கவிட்டார். அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளாசன் 25 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
கிளாசனின் ஆட்டம் கடைசி நேரத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது, பெரிய ஸ்கோருக்கு உயர்த்துவதற்கு கிளாசனின் பங்களிப்பு முக்கியமானது.
கிளாசன்-அப்துல் சமது இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 33 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தனர். ஹூசைன் கடைசி நேரத்தில் ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விளாசி தனது பங்களிப்பை வழங்கினார். இதனால், கடைசி 5 ஓவர்களில் மட்டும் சன்ரைசர்ஸ் அணி 62 ரன்களை குவித்தது.
கிளாசன் 27 பந்துகளில் 53 ரன்களுடன்(4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹூசைன் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேட் செய்யாவிட்டாலும் கடைசிவரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு, அணியின் குழு செயல்பாட்டுக்கு மிகப்பெரிய உதாரணமாக இருந்தது.
ப்ரூக்கை பாராட்டிய மார்ஷ்
பீல்டிங்கிலும் சன்ரைசர்ஸ் அணி சிறப்பாகச் செயல்பட்டதை குறிப்பிட வேண்டும். இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் வீரர்கள் எந்தவிதமான கேட்சுகளையும் கோட்டைவிட வில்லை. கடைசி நேரத்தில் மார்க்ரம் கேட்சை தவறிவிட்டது என்பது பெரிய முயற்சிக்குப் பின் முடியாமல் போனதாகும்.
அதிலும் சிக்ஸரை தடுத்து 5 ரன்கள் சேமித்துக் கொடுத்த ஹேரி ப்ரூக்கின் பீல்டிங் பாராட்டுக்குரியது. மார்ஷ் அடித்த சிக்ஸரை பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்த ஹேரி ப்ரூக் பவுண்டரி லைனில் கால் வைத்துவிடும்முன் தூக்கி எறிந்துவிட்டார். இதனால் கேட்ச் பிடிக்க முடியாவிட்டாலும், 5 ரன்களை அணிக்காக சேமித்துக் கொடுத்தார். ஹேரி ப்ரூக்கின் பீல்டிங்கைப் பார்த்த மார்ஷ் தனது பேட்டால் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
வெற்றி தொடர வேண்டும்
சன்ரைசர்ஸ் வெற்றிக்குப்பின் கேப்டன் மார்க்ரம் அளித்த பேட்டியில் “ ஒட்டுமொத்த அணியின் உழைப்பால் வெற்றி கிடைத்து. அனைத்து வீரர்களின் பங்களிப்பால் கிடைத்த வெற்றியைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது, குறிப்பாக பேட்ஸமேன்கள், பந்துவீச்சாளர்களின் அணுகுமுறை சிறப்பாக இருக்கிறது.
கிரிக்கெட் களத்தில் சில விஷயங்கள்,கணிப்புகள் தவறாக நடப்பதை நான் பெரிதாகக் கொள்ளவில்லை, ஆனால், சிறந்த பங்களிப்பை வழங்கிட வேண்டும். கிளாசன் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார், அபிஷேக் சர்மா பொறுப்புடன் ஆடி அணியை முன்னெடுத்தார். கடைசி நேரத்தில் கிளாசன், சமதுஆட்டம் நம்பிக்கையளித்தது.
மார்க்கண்டே பிடித்த கேட்ச்தான் ஆட்டத்துக்குள் எங்களை அழைத்துச் சென்றது. பந்துவீச்சாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன், உற்சாகத்துடன் செயல்பட்டனர். அடுத்துவரும் போட்டிகளிலும் இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்

பட மூலாதாரம், BCCI/IPL
நடராஜன் அசத்தல் பௌலிங்க்
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் பந்துவீசும்போது டெத் ஓவர்களில் தமிழக வீரர் நடராஜனின் துல்லியமான யார்க்கர்கள், கட்டுக்கோப்பான பந்துவீச்சு டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்புக்கு பிரேக் போட்டன. புவனேஷ் குமார் கூட டெத் ஓவர்களில் ரன்களை வழங்கினார். ஆனால் நடராஜன் பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்தது. களத்தில் இருந்த அக்ஸர் படேல், சர்பிராஸ் கான், ரிபால் படேலுக்கு தனது துல்லியமான யார்கர்களை இறக்கி நடராஜன் திணறடித்தார்.
கடைசி 4 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டது. அக்ஸர் படேல், சர்பிராஸ்கான் களத்தில் இருந்தனர். 17-வது ஓவரை வீசிய நடராஜன் முதல் பந்தில் இருந்தே துல்லியமான யார்க்கர்களை வீசி அக்ஸர் படேல், சர்பிராஸ்கானை திணறடித்தார். 4வது பந்தில் பவுண்டரி அடித்த சர்பிராஸ் கான், அடுத்தபந்தில் நடராஜன் யார்க்கரில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். இந்த ஓவரில் நடராஜன் 8 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
19-வது ஓவரை நடராஜன் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த சீசனில் துல்லியமான யார்க்கரை வீச முடியாமல், ஃபார்மில்லாமல் நடராஜன் இருந்தார். ஆனால், இந்த ஆட்டத்தில் டெத் ஓவர்களை நடராஜன் பிரமாதமாக வீசி வெற்றிக்கான காரணங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 4 ஓவர்கள் வீசிய நடராஜன் 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
நடராஜனின் பந்துவீச்சில் நேற்று தீர்க்கமும், தெளிவும் காணப்பட்டது. பேட்ஸ்மேன்களுக்கு யார்க்கரையும், வைட் யார்க்கர்களையும் தவிர வேறு எதையும் வீசக்கூடாது என்ற நோக்கில் நடராஜன் தனக்குரிய பங்களிப்பை சிறப்பாகச் செய்தார்.
சிறந்த ஆல்ரவுண்டர் மார்ஷ்
மார்ஷ் பேட்டிங்கில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் கலக்கலாகச் செயல்பட்டார். 4 ஓவர்கள் வீசி, ஒருமெய்டன் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதால் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஆனால், மார்ஷ் உழைப்பு அனைத்தையும் பின்வரிசையில் வந்த வீரர்கள் எடுத்துச் செல்லத் தவறியதால், அனைத்தும் வீணாகி, வெற்றியை சன்ரைசர்ஸிடம் தாரை வார்த்தது டெல்லி கேபிடல்ஸ்.
மார்ஷ் ஆட்டமிழந்தபின் டெல்லி சரிவு வேகமாக இருந்தது, பிரியம் கார்க், சர்பிராஸ் கான் ஜொலிக்காததால் கடைசி நேரத்தில் அக்ஸர் படேல், ரிப்பால் படேல் மீது அழுத்தம் விழுந்தது.
தேவைப்படும் ரன் ரேட் அதிகமாக இருந்ததும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும், டெல்லி கேபிடல்ஸ் தோல்வியை உறுதி செய்தன. அக்ஸர் படேல் கடைசி வரை போராடி 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார், ரிப்பால் படேல் 11 ரன்கள் சேர்த்திருந்தார்.

பட மூலாதாரம், BCCI/ IPL
நொடிப்பொழுதில் நடந்துவிட்டது
டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் “ 9 ரன்னில் தோல்வி என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. பேட்ஸ்மேன்கள் களம்செல்வதும், ஆட்டமிழந்து பெவிலியன் திரும்புவதும் நொடிப்பொழுதில் நடந்துவிட்டது. 9 ரன்னில் தோல்வியடைந்தது வருத்தமாக இருக்கிறது, அருமையான ஆடுகளம்.
மிட்ஷெல் மார்ஷ் பந்துவீச்சு, பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டார். மார்ஷ், சால்ட் ஆட்டம் அருமையாக இருந்தது. பெரிய இலக்கைத் துரத்தினோம், நடுவரிசையில் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். நல்ல பார்ட்னர்ஷிப் அமையாததும் முக்கியக் காரணம். அக்ஸர் படேல் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
சன்ரைசர்ஸ் அணியிடம் 2 இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்து நெருக்கடி அளித்தனர், எங்களிடம் அக்ஸர் மட்டுமே இருந்தார். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் மட்டும் நிலைத்திருந்தால் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும், 80 ரன்களுக்கு மேல் மூத்தவீரர்கள் பொறுப்புடன் நிலைத்து ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருப்போம்” எனத் தெரிவித்தார்.
வார்னர் தலைமை சரியில்லையா?
டெல்லி அணியின் தோல்வியைத் தொடர்ந்து, வர்ணனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், யூசுப் பதான் ஆகியோர் டேவிட் வார்னரின் கேப்டன்சி குறித்து விமர்சனத்தை முன் வைத்தனர். வார்னரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அக்ஸர் பட்டேலை கடைசி நேரத்தில் களமிறக்கியது குறித்தும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
ஹர்பஜன் சிங் பேசும்போது, `வார்னரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அக்சர் பட்டேலை கேப்டனாக நியமிக்கலாம். வார்னர் உருப்படியாக செய்யும் ஒரே விஷயம் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். ஆனால், ஆட்டம் முடிந்த பின்னர் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்க நாம் விரும்பவில்லை. ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதையே நாம் பார்க்கிறோம். அக்சர் பட்டேலை முன்பாக களமிறக்க வேண்டும் அல்லது அவரை கேப்டனாக்க வேண்டும்` என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












