பொன்னியின் செல்வன் பாகம் - 2 எந்த அளவுக்கு நாவலுக்கு நெருக்கமாக இருக்கிறது?

பட மூலாதாரம், @trishtrashers
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பொன்னியின் செல்வன் பாகம் - 2 இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கும் இந்தப் படத்திற்கும் இடையில் பல வித்தியாசங்கள் உள்ளன. அவை என்ன?
மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' நாவல் இரண்டு பாக திரைப்படங்களாக வெளியாகிவிட்டது. முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில், இரண்டாம் பாகம் 2023 ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.
'பொன்னியின் செல்வன்' நாவல் மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்டது. அதில் வந்தியத்தேவனும் அருள்மொழிவர்மனும் கடலில் மூழ்குவது இரண்டாம் பாகத்தின் இறுதியில் நடக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், அந்தக் காட்சியோடு முடிவுக்கு வந்தது. மீதமுள்ள மூன்று பாகங்களின் கதை தற்போது இரண்டாவது பாகமாக வெளியாகியுள்ளது.
நாவலோடு ஒப்பிட்டால் முதல் பாக திரைப்படத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கதையின் துவக்கம், கடம்பூர் மாளிகைச் சதி, கந்தமாறன் மீதான கொலை முயற்சி, பூங்குழலியின் அறிமுகம், சிற்றரசர்களுடன் குந்தவையின் சந்திப்பு ஆகியவை வேறுவிதமாக மாற்றப்பட்டிருந்தன. மேலும் குடந்தை ஜோதிடர் போன்ற பாத்திரங்கள் நீக்கப்பட்டிருந்தன.
இந்த இரண்டாம் பாகத்திலும் இதுபோல கதையிலும் பாத்திரப் படைப்பிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
1. ஆதித்த கரிகாலன் - அருள்மொழி சந்திப்பு:
'பொன்னியின் செல்வன்' ஒட்டுமொத்த நாவலிலும் சகோதரர்களான ஆதித்த கரிகாலனும் அருள்மொழியும் சந்திக்கும் தருணங்களே கிடையாது. கதையின் பெரும் பகுதியில் ஆதித்த கரிகாலன் காஞ்சிபுரத்திலேயே இருப்பான். கதையின் பிற்பகுதியில் நந்தினியின் அழைப்பின் பேரில் கடம்பூர் மாளிகைக்கு வந்து, சதியால் கொல்லப்படுவான். ஆனால், திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனும் அருள்மொழியும் சந்திக்கும் காட்சிகள் உள்ளன. புயலில் இருந்து தப்பி, நாகப்பட்டனம் சூடாமணி விகாரையில் சிகிச்சை பெறும் அருள்மொழியை ஆதித்த கரிகாலன் வந்து சந்திப்பதாக படத்தில் வருகிறது. நாவலில், குந்தவையும் வானதியும் மட்டுமே நாகப்பட்டனம் விகாரையில் அருள்மொழி வர்மனைச் சந்திப்பார்கள்.
2. கடம்பூர் மாளிகைக்கு வந்தியத்தேவனின் வருகை
ஆதித்த கரிகாலனின் கொலைச் சதி நடக்கும் கடம்பூர் மாளிகைக்கு வந்தியத்தேவன் வந்து சேர்வது மாற்றப்பட்டுள்ளது. நாவலைப் பொறுத்தவரை, கடம்பூருக்கு ஆதித்த கரிகாலன் வந்து நந்தினியைச் சந்திக்கவிருப்பதை அறியும் அநிருத்த பிரம்மராயரும் குந்தவையும் அந்தச் சந்திப்பு நிகழக்கூடாது எனக் கருதுகின்றனர். இதனால் வந்தியத்தேவனையும் ஆழ்வார்க்கடியானையும் ஆதித்த கரிகாலனைச் சந்திக்க காஞ்சிபுரத்திற்கு அனுப்புகின்றனர். வந்தியத்தேவன் தன்னைத் தேடி வருவதே தெரியாமல், ஆதித்த கரிகாலன் கடம்பூருக்கு வந்து சேர்ந்துவிடுகிறான்.

ஆனால், படத்தில் நாகப்பட்டனம் விகாரையில் வைத்து, தான் கடம்பூருக்குப் போவதை குந்தவை, அருள்மொழி, வந்தியத்தேவன் ஆகியோரிடம் சொல்கிறான் ஆதித்த கரிகாலன். மேலும் வந்தியத்தேவன் அங்கே வரவேகூடாது என்றும் அதை மீறி வந்தால் விளைவுகளுக்கு அவனே பொறுப்பு என்றும் கூறுகிறான். குந்தவை, வந்தியத்தேவன், அருள்மொழி ஆகியோரின் பேச்சை மீறியும் அவன் கடம்பூருக்குச் செல்வதாகக் காட்டப்படுகிறது.

பட மூலாதாரம், @iamVikramPrabhu
3. ராஷ்டிரகூடர்களுடன் பார்த்திபேந்திரப் பல்லவனின் கூட்டணி
பொன்னியின் செல்வன் நாவலில் பார்த்திபேந்திரப் பல்லவனும் வந்தியத்தேவனும் ஆதித்த கரிகாலனின் நெருங்கிய நண்பர்கள். ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டபோது, அந்த இடத்தில் வந்தியத்தேவன் இருந்ததால், அவன்தான் அந்த மரணத்திற்குக் காரணம் என பார்த்திபேந்திரன் கருதி, அவன் மீது விரோதம் கொள்கிறான். மேலும், குந்தவை வந்தியத்தேவனைக் காதலிக்கிறாள் என்ற பொறாமையும் அவனுக்கு இருக்கிறது. கதை முடிந்த பிறகு, சுதந்திர பல்லவ சாம்ராஜ்ஜியத்தை காஞ்சியில் உருவாக்க நினைத்து போரிட்டு மாண்டுபோவதாக கல்கி சொல்கிறார்.
ஆனால், படத்தில் அருள்மொழியையும் வந்தியத்தேவனையும் பழிவாங்குவதற்காக ராஷ்டிரகூடர்களுடன் பார்த்திபேந்திர பல்லவன் சேர்ந்து கொண்டு படையெடுப்பதாகக் காட்டப்படுகிறது.

பட மூலாதாரம், @iamVikramPrabhu
4. மதுராந்தகனின் மனமாற்றம்
இந்தப் படத்தில் மதுராந்தகன் என்ற உத்தம சோழனின் பாத்திரம் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. திரைப்பட ரசிகர்களுக்கு குழப்பமின்றி புரிய வேண்டும் என்பதற்காக இது செய்யப்பட்டிருக்கலாம்.
நாவலில், சோழ தேசத்து அரியணைக்கு ஆசைப்படும் மதுராந்தகன் வீர பாண்டியனின் மகன் என்றும் உண்மையான மதுராந்தகன் சேந்தன் அமுதன்தான் என்றும் காட்டப்படும். ஆனால், இந்தப் படத்தில் ஒரே ஒரு மதுராந்தகச் சோழனே வருகிறார். அவருக்கே முடிவில் பட்டம் சூட்டப்படுகிறது.
இதற்கிடையில், மதுராந்தகன் ராஷ்டிரகூட இளவரசியை மணம் செய்ய ஒப்புக்கொண்டு, அவர்களின் துணையோடு சோழ நாட்டின் மீது படையெடுக்க முயல்வதாகவும் காட்டப்படுகிறது. ஆனால், நாவலில் அதுபோன்ற பகுதிகள் கிடையாது.
5. ராஷ்டிரகூடர்களின் படையெடுப்பு
ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட பிறகு, பார்த்திபேந்திரப் பல்லவன் ராஷ்டிரகூடர்களுடன் சேர்ந்துகொண்டு சோழ நாட்டின் மீது படையெடுப்பதாக படத்தில் வருகிறது. அந்தப் படையெடுப்பை வந்தியத்தேவன், அருள்மொழி, மதுராந்தகன் ஆகியோர் சேர்ந்து முறியடிக்கின்றனர். ஆனால், நாவலில் அம்மாதிரி படையெடுப்பு ஏதும் கிடையாது. ஏன், எவ்விதமான போர்க்களக் காட்சியும் விரிவாக நாவலில் கிடையாது. திரைப்படத்தில் காட்சி அனுபவத்திற்காக இந்தப் போர் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

6. பழுவேட்டரையரும் நந்தினியும்
நாவலில் பெரிய பழுவேட்டரையர், ஆதித்த கரிகாலனை தானே கொன்றதாகக் கூறிவிட்டு கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு மாய்ந்துவிடுவார். ஆனால், படத்தில் அவர் இறுதிவரை உயிரோடு வருவதுபோலக் காட்டப்படுகிறது. நாவலில் நந்தினி குதிரை மீது ஏறி மறைந்துவிடுவாள். பிற்காலத்தில் ஏதாவது ஒரு தருணத்தில் அவள் மீண்டும் எங்காவது வரக்கூடும் என்றும் கல்கி சொல்வார். ஆனால், படத்தில் அவள் நீரில் மூழ்கி இறந்துவிடுவதாகக் காட்டப்படுகிறது.
7. மணிமேகலை
பொன்னியின் செல்வன் நாவலில் சம்புவரையரின் மகளாகவும் கந்தமாறனின் சகோதரியாகவும் மணிமேகலை என்ற பாத்திரம் உண்டு. மணிமேகலையை வந்தியத்தேவனுக்கு மணம் செய்துகொடுக்க விரும்புவதாக ஒரு கட்டத்தில் கந்தமாறனே சொல்வான். அந்தப் பாத்திரம் மிகப் பெரிய தியாகத்தைச் செய்து உயிரிழப்பதோடுதான் நாவல் முடிவுக்கு வரும். ஆனால், அந்தப் பாத்திரமே இந்தப் படத்தில் கிடையாது.
பொன்னியின் செல்வன் படத்தைப் பொறுத்தவரை, நாவலில் வந்த பல காட்சிகள் சுருக்கப்பட்டிருக்கின்றன. எழுத்தில் சொல்லப்படும் காட்சிகளும் எண்ணிலடங்கா பாத்திரங்களும் திரையில் வந்தால் குழப்பம் ஏற்படும் என்பதால், பல பாத்திரங்களும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய காட்சிகளும் படத்தில் நீக்கப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும், படத்தின் பிற்பகுதியில் சில காட்சிகள் துண்டு, துண்டாகத் தெரிகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












