விஏஓ படுகொலை: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் மணல் மாஃபியா - யார், யாருக்கு பங்கு? ஓர் அலசல்

மணல் கொள்ளை, தமிழ்நாடு
    • எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை தடுப்பில் ஈடுபட்டதற்காக, விஏஓ அலுவலகத்திலேயே வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

இதுபோன்ற மணல் கொள்ளை, குவாரி முறைகேடு, நீர் கொள்ளை போன்ற விவகாரங்களில், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அரசு அதிகாரிகள், சிவில் துறை அதிகாரிகள், செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பாதிக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

இந்த வரிசையில், தற்போது விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டிருப்பது, சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், அரசியல் ரீதியாகவும் பெரும் எதிர்வினைகளை கிளப்பியிருக்கிறது.

முறைகேடுகளுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு ஏற்படும் இதுபோன்ற அச்சுறுத்தல்களிலும், பாதிப்புகளிலும் தனி நபர்கள், கேங்க்ஸ்டர் கும்பல்கள் மட்டுமல்லாது, காவல்துறை மற்றும் அரசியல் கட்சிகளின் பங்கும் பெருமளவில் இருக்கிறது என்ற பேச்சு சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

தமிழகத்தில் நடக்கும் கனிம வள முறைகேடுகளுக்கு யார் பொறுப்பு?முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் உண்மையில் எத்தகைய எதிர்வினைகளை சந்திக்கிறார்கள்? காவல்துறைக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இதில் பங்கு இருப்பது உண்மையா?

லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது?

மணல் கொள்ளை, தமிழ்நாடு

பட மூலாதாரம், SOCIAL MEDIA

ஏப்ரல் 25ஆம் தேதி, முறப்பநாடு விஏஓ அலுவலகத்தில் வழக்கம் போல தனது பணியில் ஈடுபட்டிருந்தார் லூர்து பிரான்சிஸ். நண்பகல் 12.30 மணிக்கு கையில் அரிவாளுடன், திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்த இரண்டு பேர் லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவரது தலை, கழுத்து, கை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் லூர்து பிரான்சிஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும் அங்கு அவர் உயிரிழந்தார்.

முறப்பநாடு பகுதியில் நடைபெற்று வந்த மணல் கொள்ளையை தடுக்க முயன்றதற்காகவே லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முறப்பநாடு பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் திருட்டில் ஈடுபட்ட ராமசுப்பு என்பவர் மீது லூர்து பிரான்சிஸ் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், இதில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவே லூர்து பிரான்சிஸை ராமசுப்பு தனது உறவினர் மாரிமுத்துவுடன் இணைந்து கொலை செய்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சாமானியர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை

சாமானியர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை தமிழகத்தில் முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு எதிர்ப்புகளையும், பாதுகாப்பற்ற சூழல்களையும் எதிர்கொள்கின்றனர். இதில் சமீப ஆண்டுகளில் நடைபெற்ற சில சம்பவங்களைப் பார்க்கலாம்.

  • 1995 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, இவர் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இவர் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த இவருக்கு, ஒரு டெண்டர் விவகாரத்தில் ஆளும்கட்சி தலைவர்களுடன் மோதல் ஏற்பட்டதாக, அன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக எழுதின. 2020ஆம் ஆண்டு, தன்னுடைய பணியிலிருந்து இவர் ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் பணி காலம் முடிவதற்கு முன்னதாகவே பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பின் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
  • மதுரையில் சகாயம் ஆட்சியராக இருந்தபோது கிரானைட் முறைகேடுகளுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுத்தார். இத்தகைய முறைகேடு காரணமாக, அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு கைத்தறித் துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்ட இவர், பின் அறிவியல் நகரத் துணைதலைவராக 7 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர் 2020ஆம் ஆண்டு தனது விருப்ப ஓய்வை அறிவித்தார். இது குறித்து அவர் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், “சமூகத்திற்கு தான் நேர்மையாக செய்ய வேண்டிய பங்களிப்புக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக” அவர் குறிப்பிட்டிருந்தார்.
  • தமிழக ஆந்திரா எல்லைகளில் நடைபெற்று வரும் M-சாண்ட் முறைகேடுகள் குறித்து ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டதற்காக, தமிழ் ஊடக பத்திரிக்கையாளர் (பெயர் வெளியிட விரும்பாதவர்) ஒருவர், லாரி ஓட்டுநர்களிடமிருந்து மோசமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக பிபிசி தமிழிடம் கூறினார்.
  • தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடுக்கு அருகில் இருக்கும் அகரம் என்ற கிராமத்தில், மணல் கொள்ளையர்களுக்கு எதிராக புகார் அளித்த பாலகிருஷ்ணன் என்ற விவசாயி, கடுமையான அச்சுறுத்தல்களுக்கு ஆளானார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இவருக்கு, 24மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்போதும் காவல்துறை அதிகாரி ஒருவரின் பாதுகாப்போடு சுற்றி வருகிறார் பாலகிருஷ்ணன்.
  • கரூரில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்த, விவசாயி ஜெகன்நாதன் என்பவர், கடந்தாண்டு விபத்து ஒன்றில் இறந்து போனார். ஆனால் இது விபத்து இல்லை என்றும், கல்குவாரியை இயக்கி வருபவர்கள் திட்டமிட்டு நிகழ்த்திய கொலை என போராட்டங்கள் நடைபெற்றன. படுகொலை செய்யப்பட்டது உண்மை என உண்மை கண்டறியும் குழுக்கள் அறிக்கையும் வெளியிட்டன. இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
  • தற்போது தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளைக்கு எதிராக புகார் அளித்ததால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு வேண்டுமென அவர் காவல்துறையினரிடம் முன்னதாகவே முறையிட்டதாகவும், ஆனால் அதனை காவல்துறையினர் அலட்சியம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் விஏஓ லூர்து பிரான்சிஸ் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கோரியிருந்ததாகவும், அது அலட்சியப்படுத்தப்பட்டதாகவும் ஒரு பெண் விஏஓ பேசும் ஆடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

”நாட்டில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தால், அவர்களின் பாதுகாப்பு கேள்விகுரியதாக மாறுவது ஒவ்வொரு சம்பவத்திலும் நிரூபணம் ஆகிறது” என சமூக அர்வலர்கள் தங்களுடைய அதிருப்திகளை தெரிவித்து வருகின்றனர்.

காவல்துறையை சந்தேகிக்கும் அரசியல் தலைவர்கள்

”விஏஓ லூர்து பிரான்சிஸ் துணிச்சல் மிக்க நேர்மையான அதிகாரி” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

“முன்னதாக ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அவர் துணிச்சலுடன் அகற்றினார். அந்த சமயத்திலும் அவர் மீது தாக்குதல்கள் நடத்த சிலர் முயற்சித்தனர். இப்போது மணல் கொள்ளையை தடுக்க முயன்றதற்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்” என்றும் செந்தில்ராஜ் குறிப்பிடுகிறார்.

அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘எழுத்துப்பூர்வமாக காவல்துறையினரிடம் கொடுத்த புகார் குறித்த தகவல்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எப்படி தெரியவந்தது’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

“மணல் கொள்ளை தொடர்பாக விஏஓ லூர்து பிரான்சிஸ் காவல்துறையினரிடம் புகார் அளித்தது குறித்து வெளியே வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எனவே லூர்து பிரான்சிஸ் கொடுத்த புகார் பற்றிய தகவல்கள் கொலையாளிகளுக்கு எப்படி தெரியவந்தது என்பது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கனிம வள திருட்டு குறித்து புகார் அளிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மேலும் கனிமவள கொள்ளையர்களுடன் உறவு வைத்திருக்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற துறைச் சார்ந்த அதிகாரிகள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்” என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“லூர்து பிரான்சிஸின் கொலை சம்பவம், பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு அதிகாரிகளின் மன உறுதியை கடுமையாக பாதிக்கும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை - ரௌடி கும்பல் - அரசியல் கட்சிகள்

மணல் கொள்ளை, தமிழ்நாடு

”சமூக நலனுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரும் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்தித்தே ஆக வேண்டும். ஒவ்வொரு பிரச்னையின் தன்மையை பொறுத்து அச்சுறுத்தலில் ஈடுபடும் நபர்கள் மாறுபடுகிறார்கள். அரசியல் கட்சிகள், காவல்துறை அதிகாரிகள், ரௌடி கும்பல்கள் - இந்த மூன்று தரப்பினரிடமிருந்தும் அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன. சில பிரச்னைகளில் இவர்கள் தனித்தனியாகவும், சில பிரச்னைகளில் மூவரும் இணைந்தும் மிரட்டல்களில் ஈடுபடுகின்றனர்” என்கிறார் சமூக ஆர்வலர் முகிலன்.

மணல் கொள்ளைக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் போராடி வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய இவர், ”தமிழகத்தில் 90களுக்கு முன்னால் இத்தனை பெரியளவில் மணல் கொள்ளைகள் நடைபெறவில்லை. உலகமயமாக்கலுக்கு பின்னர்தான் இதுபோன்ற முறைகேடுகள் அதிகரிக்க துவங்கியது. பொதுவாக பார்த்தால் தமிழகத்தின் மணல் தேவை என்பது ஒரு நாளுக்கு 21,000 லாரி லோடு மட்டுமே. ஆனால் இங்கு கணக்கில் அடங்காத வகையில் 90,000 லாரிகளுக்கு மேல் மணல் கொள்ளைகள் தாராளமாக நடைபெற்று வருகின்றன.

2010ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற மணல் கொள்ளைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள 33 ஆற்று படுகைகளிலும் முறைகேடுகள் இருக்கிறது. இதனை தடுப்பதற்காக தமிழகத்தை நான்கு மண்டலமாக பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. ஆனால் அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழகத்தில் 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை வடதமிழகம் முழுவதும் ஓ.ஆறுமுகசாமி, தென் தமிழகம் முழுவதும் படிக்காசு ராமச்சந்திரன், டெல்டா பகுதிகளில் கே.சி.பியும் தங்களது கட்டுப்பாட்டில் மணல் கொள்ளைகளை நடத்தி வந்தனர். 2016ஆம் ஆண்டிற்கு பின்னர் மொத்த அதிகாரமும் ஆறுமுகசாமியின் கீழ் வந்தது. ஆனால் ஆளுங்கட்சியுடன் ஏற்பட்ட சில மோதல்கள் காரணமாக ஆறுமுகசாமியிடம் இருந்து சேகர் ரெட்டியின் கைகளுக்கு மாற்றப்பட்டது மண்கொள்ளையின் உரிமை. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆட்சிகள் மட்டுமே மாறுகிறது, முறைகேடுகள் நடக்கும் காட்சிகள் மாறுவதில்லை.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் கீழ், கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மணல் கொள்ளைகளுக்கு எதிராக 2016 ஆம் ஆண்டிலிருந்து தீவிரமாக இயங்கி வருகிறோம். நாங்கள் இதற்காக செயல்பட துவங்கியபோதே அந்த பகுதிகளில் இருந்த மக்கள் பெரும் அச்சத்தை வெளிபடுத்தினர். காரணம் முன்னதாக 2010ஆம் அண்டு இந்த முறைகேடுகளுக்கு எதிராக போரட்டத்தில் இறங்கிய 300க்கும் மேற்பட்ட மக்கள் மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பெண்களும் இருந்தனர். மற்றொரு இடத்தில் காவல்துறையினர் அடிதடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இத்தகைய நிலையில்தான் அரசாங்கமும், காவல்துறையும் செயல்படுகிறது. இங்கு தவறுகள் நடப்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் நாம் யாரிடம் சென்று நியாயம் கேட்க முடியும்” என்று கேள்வியெழுப்புகிறார் முகிலன்.

மணல் கொள்ளை, தமிழ்நாடு

“தாது மணல் கொள்ளை - என்று நான் ஒரு புத்தகம் எழுதினேன். வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் குறித்து அதில் எழுதியிருப்பேன். அந்த புத்தகத்தை எழுத வேண்டாமென பலர் என்னிடம் வந்து எச்சரித்தனர். அதேபோல் மதுரை கிரானைட் கல்குவாரி விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு ஆதரவாக சில உதவிகள் செய்தோம். இதன் காரணமாகவே போடி பேருந்து நிலையத்தில் வைத்து காவலர்களால் நான் தாக்கப்பட்டேன். அன்றைய ஆளுங்கட்சி புள்ளியின் உத்தரவின் பேரில் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

கரூர் மணல் கொள்ளை போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சில மர்ம நபர்களால் என் மீது கல் வீசப்பட்டது. இப்படி பல தாக்குதல்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் அநீதிகளுக்கு எதிராக பேச தயங்கும் சமூகத்திற்கு மத்தியில் எங்களை போன்றவர்கள் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று குறிப்பிடுகிறார் முகிலன்.

கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மிரட்டல் விடுத்ததாக கூறுகிறார் சமூக செயற்பாட்டாளர் எஸ்.பி. உதயகுமார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் கம்பெனி ஒன்றின் மூலம் வெளியேறும் கழிவுகளால், அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு வியாதிகள் ஏற்பட்டது. அது தொடர்பாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து ஒரு கும்பல் மிரட்டலில் ஈடுபட்டது.

அதேபோல் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட போதும், நான்கு வகையான குழுக்கள் மூலம் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. முதலில் வந்தவர்கள் எவ்வளவு பணம் வேண்டுமென்று கேட்டார்கள், மற்றொரு குழு நீங்கள் எந்த நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று கேட்டார்கள். இப்படி தொடர்ச்சியாக பல நச்சரிப்புகளை அவர்கள் செய்தனர். எதற்கும் நான் செவிசாய்க்கவில்லை என்பதால் இறுதியில் மிரட்டலில் ஈடுபட தொடங்கினர். ஒருமுறை எங்களது பள்ளியை கூட சேதப்படுத்தினர்.

அரசியல்வாதிகள், ரௌடி கும்பல்கள், அதிகாரிகள் என அனைவரும் இந்த அச்சுறுத்தல்களை மேற்கொண்டனர். நம்முடைய வீட்டிற்குள்ளேயே நுழைந்து உட்கார்ந்துகொண்டு இவர்கள் இதுபோன்ற செயல்களை மேற்கொள்வார்கள். நான் ஓரளவு அறிமுகமான நபர் என்பதால் என்னை அவர்களால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் இதுவே ஒரு சாமானியர் என்றால் நிச்சயம் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும். விஏஓ லூர்து பிரான்சிஸ் வழக்கில் கூட அப்படித்தான் நடந்திருக்கிறது. ” என்று அவர் தெரிவிக்கிறார்.

தேவ சகாயம்
படக்குறிப்பு, தேவ சகாயம் - ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

முறைகேடுகளுக்கு அரசியல் கட்சிகளே முக்கிய காரணம்

நாட்டில் நடைபெறும் அனைத்து கனிமவள முறைகேடுகளுக்கும் அரசியல் கட்சிகளே முதன்மையான காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவ சகாயம்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ அரசு அதிகாரிகள், சிவில் துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் - இவர்கள் மூவருமே அரசின் கீழ் வருகிறார்கள். ஆனால் இதில் அரசு அதிகாரிகள் ஆவதற்கும், சிவில் துறை அதிகாரிகள் ஆவதற்கும் பல்வேறு தகுதிகள் தேவைப்படுகிறது. கடுமையான தேர்வுகள் நடத்தப்பட்டு போட்டியின் அடிப்படையில் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் அரசு இயந்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் எந்தவொரு தகுதியும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஒரு அரசியல் கட்சி தொடங்குவதற்கும் எந்தவொரு தகுதியும் தேவைப்படுவதில்லை. இதுதான் நம் நாட்டில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை” என்கிறார் தேவசகாயம்.

அவர் தொடர்ந்து பேசும்போது,” நம்முடைய அரசியல் சாசனத்திலும் அரசியல் கட்சிகளுக்கான, அரசியல்வாதிகளுக்கான தகுதிகள் குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை.

ஒவ்வொரு பகுதிகளில் இருக்கும் ரௌடி கும்பல்களை ஒன்று திரட்டி, மக்களை அச்சுறுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் யார் அதிகமான முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதே இவர்களுக்கிடையில் நடக்கும் போட்டி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, அதிகமான வழக்குகளில் பெயர் சேர்க்கப்பட்ட எத்தனையோ கேங்க்ஸ்டர் கும்பல் தலைவர்கள் பின்னாளில் முக்கிய அரசியல் புள்ளிகளாக மாறியிருக்கிறார்கள், அல்லது முக்கிய அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் நபர்களாக இருக்கிறார்கள்.

இதில் காவல்துறை மட்டும் நேர்மையான முறையில் இயங்க வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும். அவர்களுக்கு வேறு வழியில்லை, தங்களின் நலனை பாதுகாத்துகொள்ள அவர்களும் அரசியல்வாதிகளுக்கு துணைபோகின்றனர். இங்கு நேர்மையான அதிகாரிகள் இல்லவே இல்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். எத்தனையோ நேர்மையான சிவில் துறை அதிகாரிகள் இங்கே அடங்கி ஒடுங்கி உட்கார்ந்திருக்கிறார்கள்.

இதில் தைரியமாக முன்வந்து குரல் கொடுக்கும் சிலர், பல எதிர்ப்புகளையும், பணியிட மாறுதல்களையும் சந்திக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் ரௌடிக்களின் பாதுகாப்பில்தான் காவல்துறையினரே இருக்கின்றனர்” என்று கூறுகிறார் தேவசகாயம்.

”மக்கள் மனதுகளில் கூட கரைவேட்டிகள் மட்டும்தான் அரசாங்கம் என்று பதிவாகிறது. இங்கு இருக்கும் அரசு அதிகாரிகள், சிவில் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. இங்கு சூழ்நிலைகள் இப்படிதான் இருக்கிறது என்னும் உண்மையை நாம் ஒப்புகொள்ள வேண்டும். இதுபோன்ற முறைகேடுகளை ஒரு சாதாரண கிராம நிர்வாக அதிகாரியோ, தாசில்தாரோ தடுக்க முயன்றால் என்ன ஆகும்? என்று கேள்வியெழுப்புகிறார் தேவசகாயம்.

காலநிலை மாற்றத்தில் கனிமவள கொள்ளையின் பங்கு

மணல் மாஃபியா

”உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலுமே இயற்கை வள கொள்ளைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறார்கள். ஆனால் இதுபோன்ற அச்சுறுத்தல்களும், கொலைகளும் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்பதுதான் நாம் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டிய விஷயம்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ தற்போது வெளியாகியிருக்கும் ஐபிசிசி அறிக்கை, இந்தியா தற்போது எஞ்சியிருக்கும் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. ஏனெனில் இங்கு ஏற்கனவே பல்வேறு இயற்கை வளங்கள் அழிந்துவிட்டது. இப்போது இருக்கும் நிலங்களையும் நாம் பாதுகாக்காவிட்டால், புவி வெப்பமயமாதலையும், காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் மட்டுமே நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் நிலைமை ஏற்படும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

முறைகேடுகளுக்கு தீர்வு இருக்கிறதா?

”மணல் எடுக்க வேண்டாம் என்று மட்டும் நாங்கள் சொல்லவில்லை. அதற்கு மாற்று தீர்வையும் நாங்கள் கூறுகிறோம்.” என்கிறார் முகிலன்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “ஆற்று மணல் மற்றும் M- சாண்ட் ஆகியவற்றிற்கு மாற்றாக வெளிநாட்டு இயற்கை மணல்களை நாம் இறக்குமதி செய்யவேண்டும்.

இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவதால், அவர்கள் தங்களின் ஆறுகளிலிருந்து அதிகமான மணல்களை எடுக்கிறார்கள். இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை, 2017ஆம் ஆண்டு கொள்கை அறிக்கையாக அன்றைய ஆளும் கட்சியே வெளியிட்டது. மாதம் 5லட்சம் மெட்ரிக் டன் மணல்களை இறக்குமதி செய்யவேண்டுமென அதில் குறிப்பிட்டிருந்தது.

இதுபோக, தமிழகத்தில் உள்ள அணைகளை தூர்வாறினாலே தமிழகத்தினுடைய 5 ஆண்டு கால மணல் தேவையை பூர்த்தி செய்ய முடியும். தமிழகத்தின் பொறியாளர் சங்கங்களும் இதனை வலியுறுத்துகிறது. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலே கனிமவள கொள்ளைகளை கட்டுப்படுத்த முடியும்” என்று குறிப்பிடுகிறார் முகிலன்.

“கட்டடங்கள்தான் நாட்டின் வளர்ச்சி என்று நோக்கத்தில் உலகம் சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற சிந்தனைகளில் இருந்து முதலில் நாம் வெளி வர வேண்டும்.

அனைவருக்கும் வீடுகள் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் தேவைக்கேற்ப உற்பத்தி இருக்க வேண்டும். இங்கு செல்வந்தர்கள் மற்றும் அதிகாரமிக்கவர்களின் கைகளில் 40சதவீத இயற்கை வளங்கள் சிக்கியுள்ளது. மற்றொரு புறம் எதுவுமே இல்லாமல் ஏழை எளிய மக்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும்” என்று கூறுகிறார் வெற்றிச்செல்வன்.

அதேபோல் மணல் அள்ளுவதில் வெளிப்படைத்தன்மை உருவாக்க வேண்டும், அரசாங்கம் இதில் கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: