அமித் ஷா - இபிஎஸ் சந்திப்பு மூலம் கூட்டணி உறவை தக்க வைக்கிறதா அதிமுக? டெல்லியில் என்ன நடந்தது?

டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் தலைமையை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது மற்றும் அவரது தலைமைக்கு சாதகமாக நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திப்பது இதுவே முதல் முறை. அதிலும், இந்த தலைவர்களை தனியாக சந்திக்காமல் தமது தீவிர ஆதரவாளர்களான அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோருடன் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.
அதிமுகவில் இருந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழுவால் நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தன்னையே அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று அறிவித்து போட்டி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக கடந்த மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்ட பிறகு திருச்சியில் தமது ஆதரவாளர்களின் பலத்தை காட்டும் நோக்கத்துடன் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினார். இத்தகைய சூழலில் டெல்லிக்கு சென்று அமித் ஷா, ஜே.பி. நட்டாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியிருப்பது, தமிழக பாஜக அளவிலும் உற்று நோக்கப்படுகிறது.
தமது டெல்லி சந்திப்பை நிறைவு செய்து விட்டு சென்னை புறப்படும் முன்பாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடனான இணக்கமற்ற நிலைப்பாடு தணிந்து விட்டதா என்று கேட்கப்பட்டது.
ஆனால், தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, ஊடகங்களில்தான் அதிமுக, பாஜக உறவு தொடராது என்பது போல எழுதப்படுகின்றன. நடைமுறையில் எங்களுடைய உறவு எப்போதும் போல தொடர்கிறது என்று பதிலளித்தார்.
"கூட்டணிக்குள் உள்ள கட்சிகள், தங்களுடைய கட்சியை வளர்க்கத்தான் பார்க்கும். அதிமுகவுக்கு உள்ள கொள்கை போல பாஜகவுக்கும் கொள்கை உள்ளது. ஆனால், தேர்தல் கூட்டணி என வரும்போது நாங்கள் ஒற்றுமையாகவே இருப்போம்," என்றும் விளக்கம் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.
"இந்த விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி முதிர்ச்சியாக நடந்து கொண்டாலும், அமித் ஷாவுடனான சந்திப்பின்போது அங்கு நட்டா வரவழைக்கப்பட்டிருப்பதும் அவருடன் மாநில தலைவர் அண்ணாமலை இருப்பதையும் கவனிக்க வேண்டும்," என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன்.
"அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் ஒரே அணியாக இருந்து செயல்படுவதுதான் கட்சிக்கும் நல்லது, இருவரது எதிர்காலத்துக்கும் நல்லது என்ற அறிவுரையை டெல்லி சந்திப்பின்போது அமித் ஷாவும் ஜே.பி. நட்டாவும் வழங்கியுள்ளனர். இதுவும் கவனிக்கத்தக்கது" என்று அவர் தெரிவித்தார்.
அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் உத்தரவு

எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டதுமே, கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும் கர்நாடகா மாநில பாஜக தேர்தல் பரப்புரை பொறுப்பாளருமான அண்ணாமலையும் டெல்லிக்கு உடனடியாக வரும்படி கட்சி மேலிடத்தால் பணிக்கப்பட்டார்.
அதன்படியே டெல்லி வந்த அண்ணாமலை அமித் ஷாவை சந்திக்க வந்த எடப்பாடி பழனிசாமியை முதலில் வரவேற்றார். அமித் ஷாவை சந்திக்கும் முன்பாக எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை சில நிமிடங்கள் பேசினார். அதைத்தொடர்ந்தே அதிமுக குழுவினருடன் அண்ணாமலையும் சென்று அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டாவை சந்தித்துப் பேசினர்.
சமீப காலமாக அதிமுகவுடனான கூட்டணி உறவு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இதையடுத்து அவர் முதிர்ச்சியற்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் கட்சியின் மேலிட தலைமையுடன் தமக்குள்ள உறவு சிறப்பாகவே உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார்.
இந்தப்பின்னணியில் பாஜக மேலிட தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கும்போது அண்ணாமலையையும் அவர்களுடன் இருக்கச் செய்தது அவருக்கு உணர்த்தப்பட்ட கூட்டணியின் உறுதித்தன்மை தொடர்பான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

"இந்த சந்திப்பின் மூலம் அதிமுக-பாஜக தேர்தல் கூட்டணி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது அமித் ஷா, நட்டா முன்னிலையில் பேசப்பட்டுள்ளதால் அதில் மாற்றுக்கருத்து ஏற்பட வாய்ப்பில்லை. தேசிய அளவிலான கூட்டணிக்கு பாஜக தான் தலைமை, மாநில அளவிலான கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. இது மீண்டும் இன்றைய கூட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் இந்த கூட்டணிக்கு எதிராக கருத்து தெரிவித்த அண்ணாமலையை வைத்துக் கொண்டு இரு கட்சி மேலிடமும் பேசி தீர்மானித்திருப்பதாகத்தான் இந்த விஷயத்தை பார்க்க வேண்டும்," என்று லட்சுமணன் குறிப்பிட்டார்.
ஆனால், இந்த விவகாரத்தை வேறு விதமாக பார்க்கிறார் பிரபல ஆங்கில நாளிதழின் அரசியல் ஆசிரியர் ஜெயா மேனன். எடப்பாடி பழனிசாமி குழுவினரை சந்திக்க அழைத்த பாஜக மேலிடம் ஒருபுறத்தில் அவரையும் அவருக்கு எதிராக அண்ணாமலையையும் வைத்துக் கொண்டு மாநில அரசியலைப் பற்றி விவாதித்திருப்பது அண்ணாமலைக்கு கட்சி மேலிடம் கொடுத்திருக்கும் முக்கியத்துவமாகவே பார்க்க வேண்டும் என்கிறார் ஜெயா.
அமித் ஷாவுடனான சந்திப்பின்போது தமிழ்நாட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம், கோடநாடு கொலை வழக்கு போன்றவற்றில் சிபிஐ விசாரிக்க கேட்டுக் கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
ஆனால், இத்தகைய விவகாரங்களில் மாநில அரசோ நீதிமன்றமோ உத்தரவிடாமல் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்த சட்டத்தில் வாய்ப்பில்லை என்கிறார் பத்திரிகையாளர் லட்சுமணன் தெரிவித்தார்.
ஆடியோவில் பேசியது தமது குரல் அல்ல என்று பிடிஆர் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளபோதும், இதுபோன்ற விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், நிரூபிக்கப்படாத ஆடியோக்கள், வீடியோக்களை அடிப்படையாக வைத்து சிபிஐ விசாரணையை கோருவது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றும் லட்சுமணன் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












